தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்

அழகி.காம் விஷி (எ)விஸ்வநாதன்


" ஒரு கொடிய வியாதியைத் தந்து அதையே ஒரு தூண்டுகோலாக / பாலமாக / வரமாக ('அழகி' தமிழ் மென்பொருள் செய்ய) அமைத்த இறைவனுக்கு நன்றி. இல்லையென்றால், 'Also went to USA. Also settled in USA' என்றே என் வாழ்க்கை அமைந்திருக்கும்."

காலத்திற்குக் காலம் தமிழன்னை தன் வளர்ச்சியைக் கொண்டு சிறப்பான தமிழ் மைந்தர்களை தமிழ் உலகிற்கு ஈவதுண்டு. அத்தகைய ஒரு சிறப்பு மைந்தனைப் பேட்டி காணுவதில் நிலாச்சாரல் பெருமை யடைகிறது .
விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிட மிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது.தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இந்தத் தமிழன்னையின் சிறப்பு மைந்தன், தஞ்சாவூர் மாவட்டதைச் சேர்ந்த கண்ட மங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். பொறியியற் பட்டத்தோடு முதுகலை டிப்ளமோவும் முடித்த கையோடு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திலும், அதைத் தொடர்ந்து டாட்டா கன்சல் டன்ஸி யிலும் பணியாற்றியவர்.
இப்படி பணியாற்றிக் கொண்டிருந்தபோது கலாயிட்டிஸ் (Colitis)எனும் நோயினால் இவர் பாதிக்கப்பட, பணியிலிருந்து விலகும் கட்டாயம் ஏற்பட்டது. காலம் தனக்குக் கொடுத்த இந்த நோயால் தளர்ந்து போகாமல் தனக்கு வந்த தடைக்கற்களைப் படிக்கற்களாக்கிட, கணிணித் துறையில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார் விஷி. மென்பொருளாக்கத்தில் மேதையாகினார். தமிழ் சமூகம் பயன் பெற "அழகி" எனும் தமிழ் மென்பொருள் தொகுப்பை உருவாக்கினார்.
தமிழகத்தின் சன் டி.வியினால் "நம்ம ஊர் விஞ்ஞானி"என்று புகழ்மாலை சூட்டப்பெற்றார் , இவரைச் சிறப்பிக்காத தமிழ் ஊடகங்கள் இல்லை எனலாம். தனது இந்த வளர்ச்சிக்கு மிகவும் தன்னடக்கத்தோடு, தெய்வ துணையும், தனது அற்புதமான மனைவியின் பக்கபலமும், மற்றைய நண்பர்களின் உதவியும், உந்துதலுமே காரணம் என்று குறிப்பிடும் விஷி நிச்சயமாக தமிழ் உலகிற்கு கிடைத்த ஒரு மாமணியே !
பாரதியைப் போன்ற ஒரு மாமணியைப் போற்றி உதவத் தயங்கினோமே என அன்றைய நமது சமுதாயத்தின் பின்வாங்கலுக்குத் தலைகுனியும் நாம், இந்தத் தலைமுறையில் இப்படிப்பட்ட ஆற்றல் நிறைந்தவருக்கு தேவையான உதவிகளைப் புரிந்து அவரின் திறமையினால் தமிழின் சிறப்பும், நமது இளைய தலைமுறையின் தமிழ் கற்கும் ஆர்வமும் மேலும் பெருக , உலகத் தமிழர்கள் அனைவரும் உறுதுணை புரிவார்கள் எனும் நம்பிக்கையில், உங்களுக்காக இதோ விஷி விஸ்வநாதன் !
Q. சிறுவயது முதலே தமிழார்வம் இருந்ததா அல்லது அது பிந்தைய வாழ்வில் ஏற்பட்ட ஒன்றா?

சிறு வயது முதலே இருந்த ஆர்வம்தான். ஆர்வம் மட்டுமின்றி ஆக்கமும் இருந்தது. எப்பொழுதும் (எனக்கு நினைவு தெரிந்து 3-ஆம் வகுப்பு முதல்) தமிழில் எப்பொழுதும் முதல் மதிப்பெண்தான், எந்த நிலையிலும். பல போட்டிகளில் - பேச்சு, கட்டுரை, பாட்டு, நடிப்பு ... என்று பல பரிசுகளை வென்ற அனுபவமும் உண்டு. என் தமிழாசிரியர்கள் திரு.ஜெகதீசன் (சென்னை) மற்றும் கவிஞர் திரு.கோ.பெ.நா (மேட்டுர்) - இந்த ஆசிரியர்கள் இருவரையும் என்னால் மறக்கவே முடியாது. 20 வருடங்கள் ஓடிய பின்பும்,இன்றும் நல்ல தொடர்பு வைத்துள்ளேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் !!

Q. கணினித்துறையில் இருந்த திறமையைப் பயன்படுத்த தமிழ் மென்பொருளாய்வு செய்தீர்களா? அன்றி தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் அதன் முன்னேற்றத்திற்கான ஓர் படி என்பதாலா?

இரண்டும் சேர்ந்த ஒரு கலவைதான் என்று சொல்ல வேண்டும்.ஆனால்,அதற்குரிய வாய்ப்பு அமைந்தது. ஏனென்றால், உண்மையில், நானாகவே ஒரு மென்பொருள் செய்வேன், அதுவும் தமிழின் முன்னேற்றத்திற்காகச் செய்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை 'Blessing in Disguise' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே - அது போல நானே மென்பொருள் செய்ய ஒரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று இறைவன் நிர்ணயித்ததில் மகிழ்ச்சி.

ஒரு கொடிய வியாதியைத் தந்து அதையே ஒரு தூண்டுகோலாக / பாலமாக / வரமாக ('அழகி' தமிழ் மென்பொருள் செய்ய) அமைத்த இறைவனுக்கு நன்றி. இல்லையென்றால், 'Also went to USA. Also settled in USA' என்றே என் வாழ்க்கை அமைந்திருக்கும். ஒரு மென்பொருள் சிற்பியாக இன்று பரிணமித்து, நானே தனிமனிதனாய்க் கண்டுபிடித்து உருவாக்கிய ஒன்று மற்றவருக்கு மிகுந்த பயனை அளிக்கும்பொழுது, அதற்காக அவர் நம்மை மனமாரப் பாராட்டி உள்ளத்து பேரன்பைத் தெரிவிக்கும் பொழுது ஏற்படும் 'ஓர் உணர்வு' (a special feeling), அது படைப்பாளிகளுக்கு மட்டுமே தெரியும். வார்த்தைகளால் என்றுமே விவாதிக்க முடியாது. எப்படி ஞானிகளால் தங்கள் நிலையை முழுமையாக எடுத்துச் சொல்ல முடியாதோ, அது போல.
உங்களின் தமிழ் மென்பொருளாக்கத்திற்கு "அழகி"எனப்பெயரிட்டதற்கு ஏதாவது பின்னணி உண்டா ?
'அழகு' என்பது புறத்தில் அல்ல அகத்தில்தான் என்று சிறு வயதிலேயே நாம் கேட்டதுண்டு. படித்ததுண்டு. ஆனால், படிப்பதும் கேட்பதும் சிறு விஷயம். அதை வாழ்க்கையில் உணர்ந்து பார்ப்பது என்பது மிகப் பெரிய விஷயம். அவ்வாறு உணரும் பாக்கியத்தை அளித்த என் மனைவியின் அழகான உள்ளத்தைக் கௌரவிக்கும் வகையில்தான் என் மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயரிட்டேன்.
இதுதான் குறிப்பிட்ட பின்னணி என்றாலும், பொதுவாக பார்க்கையிலும்,அது என் மென்பொருளுக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே உள்ளது. இதற்கு, 'அழகி' உபயோகிப்பாளர்கள் பலரின் விமர்சன இ-மெய்ல்களையே சான்றாகச் சொல்லலாம்.

என் மென்பொருளின் அடிப்படை எழுத்துருவான SaiIndira என்பதில் Indira என் அன்னையின் பெயர் என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விழைகிறேன். Sai எதைக் குறிக்கின்றது என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், பொதுவாக அது உணர்த்துவது Universal Love என்ற பரந்த எண்ணத்தையே ஆகும்.

Q. தமிழ் இலக்கியத்தின் மீது உங்களுக்கு உள்ள ஆர்வம் எத்தகையது?

நான் பள்ளியில் இலக்கிய மன்றச் செயலாளராக (தமிழ், ஆங்கிலம் இரண்டிற்கும்) இருந்தபொழுது இலக்கியங்கள் சில படித்ததுண்டு. ஆனால், பொறியியல் மற்றும் பி.ஜி.டிப். படிப்பு முடித்து விட்டு Bajaj Auto Ltd., Tata Consultancy Services போன்ற நிறுவனங்களில் மென்பொருள் பணியில் இறங்கிய பிறகு, பாரதியார் கவிதைகள், திருக்குறள் இவை இரண்டும் மட்டுமே அவ்வப்போது படிப்பவை. மற்றபடி, ஞானிகள் பலரின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில்தான் ஈடுபாடு அதிகம். கவிதை எழுதும் திறன் உண்டு - 14 வயது முதல். நேரம் கிடைக்கும்பொழுது இப்பொழுதும் எழுதுவதுண்டு.
செந்தமிழில், மிக அழகாக கவிதை எழுதும் மற்ற சிலரின் தொடர்பும் இப்பொழுது உண்டு. அந்த நவீன இலக்கியங்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

Q. உடல்நலம் குன்றியிருந்தும் உற்சாகத்தோடு சமுதாய நலத்தை முன்வைத்து அரிய தமிழ் மென்பொருட்களை கணினி உபயோகிப்பதற்காக உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு, மனத்திடத்திற் கான உந்து சக்தியாக விளங்கியது எது ?

நிறைய.
1. தன்னம்பிக்கை (self-confidence). கடின உழைப்பிற்கு (hard work) உதவுவது இது ஒன்றே.
2. இறை நம்பிக்கை (faith in god). விடாமுயற்சிக்கு தூணாக இருப்பது இது ஒன்றே. 'Hard work ever pays' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 'கடின உழைப்பு' எப்பொழுதும் பலன் அளிக்குமா என்பது ஐயமே என் அனுபவத்தில் நான் கற்றது :
'Hard work with perseverance ever pays'. 'விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு என்றும் பலன் தரும்'.
3. பொறுமை.'பொறுமை பெருமை தரும்' என்று ஆராய்ந்து சொல்லியுள்ளனர் முன்னோர். அது முற்றிலும் உண்மை
4. ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற பாரதியின் ஞானப்பாடல். அதுவும் இசைஞானியின் இசையில் (இசைஞானியின் மெலடி[melody] பாடல்கள் தரும் ஒரு அமைதிப் பரவசம் [quietening effect] மகத்தானது). எண்ணிலடங்கா முறை, இந்தப் பாட்டை தனியே பாடிக் கொண்டதுண்டு.
5. 'நாம் வெற்றி பெற்றே தீர்வோம்' என்ற அசைக்க முடியாத 'Positive mental attitude'
6. Visualisation என்ன சாதனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை நெஞ்சத்தின் அடியாழத்திலிருந்து அடிக்கடி அடிக்கடி அடிக்கடி எண்ணிப்பார்த்தல். (இது மிகவும் சக்தி வாய்ந்தது. இதைப் பற்றி விவேகானந்தர் பெரிய அளவில் சொல்லியுள்ளார்)
7. Hope the very best but be prepared for the very worst too. இது மிகவும் அவசியம். நாம் நினைத்ததே நடக்கும் என்ற தீவிர நம்பிக்கை இருந்தாலும், அது நடக்காமல் போகும்பொழுது அதை எளிதாக உதறித் தள்ளி விட்டு 'எல்லாம் நன்மைக்கே' என்று எப்பொழுதும் போல் இயல்பாய் இருக்கும் மனப்பக்குவம் வேண்டும்.

மொத்தத்தில், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் மேல் "முழு" நம்பிக்கை (total faith and surrender) வைத்து, நம் கடமையை நாம் செவ்வனே (ஆற்றலுடன், பொறுமையுடன்) செய்து கொண்டிருந்தால், அதுவே போதும். எது எப்பொழுது நடக்கும் என்று இறைவன் அறிவான். அவன் வீட்டில், "ஏன்? எதற்கு?" என்ற கேள்விகளுக்கே இடம் இல்லை. 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே' என்ற வார்த்தைகளின் உன்னதத் தன்மையை, அதன் வலிமையை, அனுபவத்தின் மூலம் உணர்ந்தவன் நான். அதன்படியே எப்பொழுதும் நடக்கவே பெரிதும் “முயன்று” வருகிறேன்.

Q. தொடர்ந்தும் பல அரிய சாதனைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் தமிழ்க் கணினி உலகிற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

நிறைய எதிர்பார்க்கும் அளவிற்கு நிறைய ஊக்கமும் (பல்வேறு பரிமாணங்களில்) அளியுங்கள், தொடர்ந்து. அதுதான் தேவை. அது இருந்தால் போதும். எது ஒன்றுமே யாருக்கும் கடினமில்லை. எல்லாமே முடியும். ஒரு கால கட்டத்தில், வியாதியின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்தது. புதிதாய் ஒன்றைக் கண்டுபிடித்து, அதற்குரிய designing / coding / testing மற்றும் website creation/ enhancement என்று எல்லாவற்றையும் ஒரே நபராகச் செய்வது மிகவும் கடினமான ஒன்று. அதையே ஒரு தீவிர வியாதியின் நடுவில், சாதாரண கம்ப்யூட்டர்/இன்டெர்னெட் வசதிகளின் நடுவில் செய்வ தென்பது இன்னமுமே இன்னல்கள் நிறைந்த ஒன்று. அப்பொழுதெல்லாம் மிகப்பெரிய பலமாக இருந்தது users எழுதிய எழுச்சியூட்டும் இ-மெய்ல்கள் மற்றும் அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் தான். காலம் உள்ளவரை மறக்க முடியாது அவர்களை. அவர்கள் எழுதிய அனைத்து அன்பு இ-மடல்களும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. பல users இன்று என் குடும்ப நண்பர்களே ஆகி விட்டார்கள். அப்படி கடினப்பட்டு உருவாக்கிய மென்பொருள் இன்று உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குவதில், அவர்களுக்கே முதற்பெருமை.

உங்களுடைய மனைவியும் ஒரு மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer) என்று அறிகிறோம், உங்களுக்கு அவரின் திறமையும் உதவியாக இருந்ததா?

என் மனைவியின் knowledge domain வேறு (Oracle and Java certified Developer அவர்கள்). என்னுடையது வேறு. ஆதலால், நேரடி உதவி எதுவும் இல்லை. ஆனால், மென்பொருள் மற்றும் அழகி.காம் இவற்றின் interface அமைத்துக் கொண்டிருக்கும்பொழுது எல்லாம் அவரிடமே காட்டுவ துண்டு. ஒரு user என்ற முறையில், website visitor என்ற முறையில் வண்ணம்/அமைப்பு எல்லாம் எப்படி இருக்கின்றது என்று சொல்வார். மற்றபடி, அவரின் அன்பு, பரிவு, பொறுமை இவையே பெரிய உதவியாக எனக்கு இருந்தது அவர் இப்பொழுது ஒரு பிரபலமான software கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாலும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல, செய்த தியாகங்கள் பல. அவர் அடிப்படையில் ஒரு Msc graduate. பொறியியலாளர் அல்ல.

Q. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் கடந்த வருடம் சுதந்திர தினத்தையொட்டி நடந்த விசுவின் "அரட்டை அரங்கம்"உங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதாக அறிகிறோம். அதைப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

இதற்கு பல முறை யோசித்தும் எப்படி ஒரு ஐந்து பத்து வரிகளில் பதில் எழுத முடியும் என்று தெரியாமல் திணறுகிறேன். இதைப் பற்றி தனியாகவே (சில காலம் கடந்து), ஒரு அனுபவமாக எழுதி விட்டால் என்ன என்றே தோன்றுகிறது. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். 'உண்மையாக'க் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஒன்றை பெரிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து காட்ட யாருமே கிடையாதோ என்று இளைஞர்கள் துவண்டு விட வேண்டாம். திரு.விசு அவர்களும், அவர் குழுவும், அரட்டை அரங்கமும் உள்ளது என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். மற்றபடி, இதுவரை என்னை பேட்டி கண்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி அன்பர்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் உண்டு.

Q. உங்களுடைய உடல்நலம் தற்போது எப்படியுள்ளது? அதைப்பற்றி உங்கள் அபிமானிகளுடன் ஏதாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

என் உடல் நலம் இப்பொழுது முன்பை விட எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. மிக மிக மோசமான நிலையில் இருந்தது. அதற்கு ஒப்பிடும்பொழுது, நன்றாகவே இருக்கிறேன் என்று சொல்லலாம். உணவுக் கட்டுப்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. சாப்பிட முடியாது. பொதுவாகவே, வெளியில் (சென்னைக்குள்ளே மட்டுமே) செல்வது - மிகவும் முக்கியமாக இருந்தால் மட்டுமே. சென்னையை விட்டு வெளியே செல்வதென்பது மிக அபூர்வமே!நெய்வேலி (அரட்டை அரங்கத்திற்காக) சென்றது, கடந்த 7 வருடங்களில் இரண்டாவது முறையாக சென்னையை விட்டு வெளியே சென்றது. அதன் முன் - வைத்தீஸ்வரன் கோயில் - 2001-இல்.

Q. உங்களுடைய கண்டுபிடிப்புகள் முழுமைத்துவம் பெற தமிழ்க் கணினி உலகு எத்தகைய ஒரு வடிவம் பெற வேண்டுமென்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது?

தமிழ்க் கணினி உலகம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன மென்பொருளாய் வடிவம் பெற.
ஆயிரக்கணக்கில் பணியாட்கள் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் பல இருந்தும் நான் கற்பனை செய்து வைத்திருக்கும் பல மொழி-வளர்ச்சி மென்பொருள்கள் ஏன் இன்னும் வெளிவரவில்லை என்று ஆச்சரியமாக இருக்கின்றது.

இந்த மென்பொருள்கள் தமிழில் மட்டுமல்ல, உலக மொழிகள் எல்லாவற்றிலும் திறம்பட இருக்க வேண்டும் என்றே மனம் ஆசைப்படுகின்றது. இந்த மென்பொருள்கள் எல்லாம், மிகவும் நேர்த்தியாக, பரந்த அம்சங்களுடன், மிகச் சுலபமாக செயலாக்கும் வகையில் வந்து விட்டால், அது உலகளவில் ஒரு மகத்தான சமூக சேவையாக அமையும். கணினி தொழில்நுட்பம் வளர வளர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள், ஒலி உணர் மென்பொருள்கள் போன்றவை கூட தமிழில் நிச்சயம் சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிக்க வைத்திருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தையே பலரும் பல இடங்களிலிருந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் மிகப் பெரிய நேர விரயம் அது.

வேறு வழி இருக்கிறதா என்று யோசித்தால், என் அநுபவங்களின் அடிப்படையில், இருப்பதாகத் தெரியவில்லை என்றுதான் சொல்ல முடிகிறது. சூழ்நிலை அப்படி. இந்நிலை மாறுமா?
இறைவனுக்கே வெளிச்சம்.எது எப்படியோ,இறைவன் யாரை எதைச் செய்ய நிர்ணயித்திருக்கிறானோ , அவர்களே அதைச் செய்வார்கள். அதை யாராலும் மாற்ற முடியாது. யார் எந்த தரமான மென் பொருளைச் செய்தாலும், செய்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள் என்றென்றும் உண்டு.

Q. உங்களது உழைப்பு , நம்பிக்கை , இறையன்பு , சாதனை இவைகளை இன்று இளம் தமிழுலகு உதாரணமாகக் கொண்டுள்ளது. இளம் தலைமுறைக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

நான் இளைஞர்களுக்கு உதாரணமாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் மகிழ்ச்சி. நான் அவர்களுக்கு அறிவுரை கூறத் தகுந்தவனா தெரியவில்லை. ஏனென்றால் என்னுள் பல குறைபாடுகள் உண்டு. ஆதலால், நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட சிலவற்றைச் சொல்கிறேன். அதில் எது அவர்களுக்கு உடன்பட்டதாகத் தெரிகிறதோ அதை எடுத்துக் கொள்ளட்டும்.

1. அன்பு.பணம் தேவை. ஆனால், அதுவே வாழ்க்கை அல்ல. பல தலைமுறைகளுக்கு சம்பாதித்து வைத்தாலும், இறுதியில் அந்த பணம் கூட வரப் போவதில்லை. ஆனால், ஒன்று நிச்சயம் கூட வரும். நீங்கள் சம்பாதித்து வைக்கும் 'அன்பு'. எனவே அதை நிறைய சம்பாதியுங்கள். பாரதி சொல்கிறார் :

" ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்! "

2. அடக்கம்.என்றும் எப்பொழுதும் அடக்கத்துடன் இருத்தல் வேண்டும். பால் ப்ரன்டன் (Paul Brunton), Author of ‘Search in Secret India’, சங்கர பெரியவரிடம் : “கடவுளை நான் காண வேண்டும். சுலபமான ஒரே ஒரு வழி சொல்லுங்கள்” என்கிறார். அதற்கு பெரியவர் : “அடக்கமாக இருங்கள். அது ஒன்றே போதும்.” என்கிறார். அடக்கத்தின் வலிமை அவ்வளவு.

3. மறத்தல்.சாயி கூறுவது போல், "மற்றவர் நமக்குச் செய்யும் கெடுதலை மறந்து விடுவோம். நாம் மற்றவர்களுக்குச் செய்யும் நல்லதை மறந்து விடுவோம்" (பி.கு. மற்றவர் செய்யும் கெடுதலையாவது மறந்து விடலாம். நாம் செய்யும் நல்லதை முற்றிலும் மறக்கவே முடியாது. Ego அதை எப்படியாவது ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லிக் காட்டும்)

4. குறை சொல்தல் வேண்டாம்.யாரையும் எதற்கும் எப்பொழுதும் குறை சொல்ல வேண்டாம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" - சொல்கிறது நம் பண்டை இலக்கியம்.
5. பாராட்டுதல்.ஒருவர் ஒரு நல்ல விஷயம் செய்தால், அதை மனதா...........ரப் பாராட்டுங்கள். அதில் தயக்கத்திற்கு (பல காரணங்களை மனதில் வைத்து) இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் சொல்லும் ஒரே ஒரு பாராட்டு வார்த்தை பெரிய திருப்புமுனை (turning-point)-ஆக ஒருவர் வாழ்க்கையில் அமையலாம்.
6. பொறாமை வேண்டாம்'பொறாமை மனத்தின் மலம்' - வைரமுத்து சொன்னதாய் என் ஆத்ம நண்பரின் மனைவி எழுதினார்கள் ஒரு முறை
7. கோபம் வேண்டாம்.கோபத்தினால் யாரும் எதையும் சாதித்ததாய் நினைவில்லை.
8. நன்றி மறப்பது நன்றன்று.நாம் வந்த பாதையை மறந்து விடக் கூடாது. மற்றவர் செய்த சிறு உதவியையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிதுஅல்லவா?
9. நீங்கள் உயரும்பொழுதே, மற்றவர்களும் உயர உங்களால் முடிந்த அளவு 'வழி செய்யுங்கள்' (ஆதாயம் பார்க்காமல்). முடியவில்லையா, 'வழி விடுங்கள்'.
10. மதம், மொழி, நாடு - இந்த குறுகிய வட்டம் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - சொல்கிறது நம் இலக்கியம்.
அதாவது, "யாதும் நம் இடம்தான். யாவரும் நம் உற்றார்தான்".
நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த உலகம் தோன்றியபொழுது இந்த மூன்றும் (மதம், மொழி, நாடு) இல்லை. நாம் தோன்றியபொழுதும் இவை மூன்றும் நாம் அறியவில்லை.

எனவே, Love all Serve All என்ற பரந்த எண்ணத்துடன் என்றும் இருப்போம். மதம், மொழி, நாடு இவையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய எல்லையற்ற சக்தி நாம். நாம் உடலும் அல்ல. எண்ணமும் அல்ல (We are neither body nor mind). ரமண மஹரிஷி போன்றோர் அந்த நிலையில் இருந்தவர் தாம். அன்றாட வாழ்க்கையில், நமக்கு எல்லையாக நம்மையே வைத்துக் கொள்வோம்.
'பில் கேட்ஸையோ 'அப்துல் கலாமையோ அல்ல. ஒவ்வொரு நாளும் நம்மை நாமே முன்னேற்றி ஓர் உண்மையான மனிதனாக முழுமைத்துவம் பெற முயன்றால் அதுவே போதுமானது.
முயற்சியின் முடிவில், நாம் 'எல்லையற்ற சக்தி' என்பதை உணர்ந்து விடலாம். மேற்கூறியவற்றில் எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் விஷி கடைப்பிடிக்கிறாரா என்று உங்கள் மனதில் இயற்கையாக ஒரு கேள்வி எழலாம்.
அதற்கு பதில் : "இல்லை." என்பதுதான். நானும் வாழ்க்கைப் பாடத்தில் மாணவன்தானே! சில சமயங்களில், மேற்கூறியவற்றைக் கடைப்பிடிப்பதில் "படுதோல்வி" அடைகிறேன் (I fail miserably) . ஆனால், "முயற்சி" செய்கிறேன் - தோல்விகளைக் குறைக்க, தவிர்க்க. நம் கடமையைச் செவ்வனே செய்து, மேற்கூறியவற்றை எல்லா நேரத்திலும் கடைப்பிடித்து விட்டோம் என்றால், நாமும் ஞானி அல்லவா? மொத்தத்தில், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வாழ்க்கையில் "டையப் பெறுவதற்கான "உன்னத ஆசை"என்று ஒன்றிருந்தால் அது 'ஞானம் அடைய வேண்டும்' என்பதுதான். அதற்கு வயது, கால, நேர தடைகள் வைத்துக் கொள்ள வேண்டாம்.

Q. உங்களுடைய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் விரிவடைய உலகத் தமிழன்பர்களிடமிருந்து நீங்கள் எத்தகையதொரு தரவை எதிர்பார்க்கிறீர்கள்?

'Tip of the iceberg' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 'அழகி'-யும் அவ்வளவே. இன்னும் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. மற்றும், மற்ற துறைகளில் என்னை விட பன் மடங்கு பெரும் கஷ்டங்களுக்கிடையில் மற்றவர்கள் ஆற்றியிருக்கும் சாதனைகளைப் படிக்கும்பொழுது, கேட்கும்பொழுது, பார்க்கும்பொழுது, நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் எனக்கு தோன்றும். தலால், எனக்காக மட்டும் என்று என்னால் தனிப்பட்ட முறையில் எந்த ஆதரவும் கேட்க மனம் ஒவ்வவில்லை. எனவே, சில விஷயங்களை மட்டும் முன் வைக்கின்றேன். படிக்கும் வாசகர்கள் பின் என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும்.
1. எல்லா மென்பொருள்களின் (அது தமிழோ அல்ல வேற்று மொழி மென்பொருளோ, இலவசமோ அல்ல விலைக்கான மென்பொருளோ) பின்பும் இரவு பகல் பாராத பல மணி நேர அயராத உழைப்பு உள்ளது. ஒரு மென்பொருள் இலவசமாக இருப்பதற்கும் மற்ற மென்பொருள் விலைக்கு விற்பதற்கும் பல சூழ்நிலை காரணங்கள் உண்டு. ஆனால், உழைப்பு இரண்டிற்கு பின்னாலும் உண்டு. பல மென்பொருள்களின் பின்னால், மிகப் பெரிய அளவில் பணச் செலவும் உள்ளது. எனக்கு மட்டும் அல்ல, மென்பொருள் சமுதாயத்திற்கே நீங்கள் செய்யும் பெரிய உதவி, மென்பொருள் செய்தவர் களையும் அவர்கள் செலவிட்ட/செலவிடும் நேரம்/பணம்/உழைப்பு (time/ money/ energy) இவற்றையும் "முழுமையாக" புரிந்து கொள்ளுதலே அகும். புரிந்து கொண்டால், எத்தகையதோர் ஆதரவு தர வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.
2. உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தும் இன்னும் பல பரவசமூட்டும் கண்டுபிடிப்புகள் [அவற்றின் முன் 'அழகி' மிக மிக மிகச் சாதாரண கண்டுபிடிப்புதான்], நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன என்று நிச்சயமாக சொல்லலாம். இதற்கு காரணங்கள் பல - விரிவாகச் சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளே.

எதிர்காலத்தில், இப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களுக்கு, எல்லா வகையிலும் உதவும் வகையில், "Inventors' Club" என்று ஒன்று பெரிய அளவில் உலகெங்கும் பல கிளைகளுடன் இருக்க வேண்டும் என்று ஆசை. வெளிநாட்டில் உள்ள நல்ல பண வசதி உள்ளவர்கள் யார் இதை ஆரம்பிக்க முன் வந்தாலும், அது கண்டுபிடிப்பாளர்கள் பலருக்கும் ஒரு பெரிய பாலமாக அமையும். (ஒவ்வொரு நாளும் புதுப் புது பெயரில் பொது நல நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுவதையே கேட்க நேரிடுகிறது). கண்டுபிடிப்பாளர்களுக்கும் கூட அவர்கள் கண்டுபிடிப்பைச் சார்ந்த வசதிகள் பற்பல தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவ்விதமான வசதிகள் எத்தனை அவர்களுக்கு கிடைக்கிறதோ, அத்தனை சீக்கிரம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் அவர்களிடமிருந்து வெளி வரும் என்பதை தயவு செய்து நெஞ்சத்தின் அடி ழத்தில் (very deep inside your heart) அழிக்க முடியா வண்ணம் பதிந்து கொள்ளுங்கள்.
3. http://www.azhagi.com/jana என்ற வலைப்பக்கம் சென்று பாருங்கள். எனக்கு இருக்கும் நேரத்தில், இந்த சாதனைச் சிறுவனுக்கு மட்டுமே என்னால் வலைப்பக்கம் வைக்க இயன்றது. ஆனால், இது போன்ற சாதனையாளர்கள் எத்தனையோ பேர். இவர்களையெல்லாம் வளர்த்தெடுப்பது யார்? யார் இவர்களைப் பற்றி உலகுக்குச் சொல்வது?

எத்தனையோ பொதுநல நிறுவனங்கள் இருந்தாலும் சாதனையாளர்களை அடையாளம் காட்டி வளர்த்தெடுக்க எந்த நிறுவனமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை (இருந்தால் சொல்லுங்கள். தொடர்பு கொள்ள மிகுந்த ஆவல்). பணமும் நேரமும் இருக்கிறதா? மீண்டும் மீண்டும், கதை/ அரசியல்/சினிமா என்றில்லாமல்,சாதனையாளர்(களு)-க்கு ஒரு வலைத்தளம் வையுங்களேன். நிறுவனமும் தொடங்குங்களேன். இதை மட்டும் செய்தாலே, அதுவே நீங்கள் 'அழகி'க்கு தரும் பேராதரவாக நினைத்துக் கொள்கிறேன். என் எண்ணங்களை இந்த அளவிற்கு விரிவாகப் பகிர்ந்து கொள்ள,நுட்பமான கேள்விகளைக் கேட்டு வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் என் நன்றிகளை 'நிலாச்சாரலுக்கு' (என்ன அழகான பெயர்!) தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.
தம்பி விஸ்வநாதன் நிறைந்த வாழ்வு பெற்று தமிழ்ப் பணியாற்றிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்
இரவா

தில்லை


பிச்சாவரம் போயிருக்கிறீர்களோ? குறைந்தது அரை நாளாவது பார்க்க வேண்டிய இடம்; குறிப்பாக அங்கே உள்ள கழிக்கானல் (`=mangrove). அது அசையாத நீர்ச் சேர்க்கையால் ஆன வெறும் உப்பங்கழி அல்ல. அதற்கும் மேலானது. ஓயாத அசைவு இருக்கும் "ஓதக் கழி" (tidal backwaters) என்றுதான் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஓதம் என்ற சொல்லைக் கண்டு மருள வேண்டாம். உயர்ந்து வருவது ஓதம்.

உயர் ஓதம் (high tide) இருக்கும் போது, கழியில் (backwaters) நீர் பெருகும். தாழ் ஓதத்தில் (low tide) நீர் வடிந்து போகும். இந்தக் காலத்தில், கழிக் கானலை, அலையாத்திக் காடுகள் என்று சொல்லுகிறார்கள். (கேட்பதற்குக் கொஞ்சம் செயற்கையாய், அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்லிப் பழகுவதைப் போல, எனக்குத் தோன்றுகிறது. பழைய பெயரை மீட்டுக் கொண்டுவரலாம்.

தலையாலங் கானம் (கானம் = காடு), ஆலங் கானம், கானப்பேர் போல இதைக் கழிக் கானம் என்றும் சொல்லலாம். மாமல்லைக்கும் தெற்கே மரக்காணம் என்று சொல்லப்பட்டு வரும் மரக் கானமும் ஒருகாலத்தில் கழியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னென்ன மரங்கள் அங்கிருந்தன என்று தான் சொல்லத் தெரியவில்லை; ஆய்ந்து பார்க்க வேண்டும். சங்க காலத்து எயிற் பட்டினம் தான் (சிறுபாணாற்றுப் படை) மரக் கானம் ஆயிற்று என்று சொல்லுவார்கள். பார்த்தீங்களா, வரலாற்றைச் சொல்லத் தொடங்கி எங்கேயோ போய்விட்டேன்.

பொதுவாகக் கானலில் நிறைந்து கிடக்கும் புன்னை மரம் பற்றிப் பலருக்கும் தெரியும்; [ஓடங்கள், நாவாய்கள், கப்பல்கள் எனப் பலவும் நாவலந்தீவிலும், சுமேரிய நாகரிகத்திலும் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தப் புன்னை ஒரு முகன்மையான மரம் தான். ஆனால் அதை இன்னொரு முறை பார்க்கலாம்.] இப்பொழுது, தில்லை பற்றி முதலிற் பார்க்கலாம்

பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அந்தப் பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று.

பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்து கொள்ளாமல், சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெல்லாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்து முதல்வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.



தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என்பவை தமிழரை எப்பொழுதுமே கட்டிப் போடுபவை. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேல் ஒரு பட்டியல் உண்டு. (நடிகர் சிவகுமார் அடுத்தடுத்து அந்தப் பூக்களின் பெயரை அப்படியே ஒப்பித்துப் பல மேடைகளில் பெயர் வாங்குவார்.) அந்தப் பட்டியலில் தில்லைப் பூவும் உண்டு.

ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் 2.5-7.0 நுறு மாத்திரி (centi meter; நூறு என்பதின் குறுக்கம் நுறு. தென்மொழி ஆசிரியர் இறைக்குருவன் இதை அறிமுகப் படுத்தினார்.) அளவுக்கு பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயை (shade) உடைய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர் - சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகசுடு - அக்டோபர் மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.

அந்த மரத்தின் இரண்டு செய்திகள் தமிழரை ஈர்த்தவை. ஒன்று அச்சம் தரும் மரம் என்ற செய்தி; இன்னொன்று மனத்தைக் கவரும் குழல் போன்ற பூந்தளிர் பற்றிய செய்தி; குறிப்பாக ஆண்பூந்தளிர். ஆண்மயிலின் தோகை போலத் தில்லையின் ஆண் பூந்தளிர்கள் நம்மை ஈர்க்கும். சற்றுத் தொலைவில் இருந்தும் நம்மைக் கவர்ந்து, அகவை கூடிய முனிவரின் நரைத்த சடை போல இந்தப் பூங்கதிர்கள் தோற்றமளிக்குமாம். தில்லைத் தளிருக்கு முனிவர்சடை உவமையா, முனிவர்களின் திரண்டு கிடந்த
சடைக்குழல்களுக்குத் தில்லைப் பூந்தளிர் உவமையா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. புறநானுறு 252ல் மாரிப் பித்தியார் என்ற பாடினி பாடுகிறார். இந்தப் பாடலை 251ம் பாடலோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்டு, பிள்ளைகளோடும், சுற்றத்தாரோடும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வீடுபேறு பற்றிய கருத்தில் ஆட்பட்டுத் தவம் மேற்கொண்டு, காட்டில் உறைகிறான். அவன் துறவு நிலை பற்றி வியக்கின்ற புலவர், இந்தப் பாடலில் தில்லையை உள்ளே கொண்டு வருகிறார்.:

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூடன்னு புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூட இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினாதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறி போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி டால் அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை வுழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."

இதுவரைக்கும் சரி, இனி மூன்றாவது வரியில் தான் இந்தக் கவிதைக்கே ஆன முரண் இருக்கிறது; தில்லையின் தளிர் போல விளங்கும் சடை கொண்ட இந்த முனிவர் என்ன இலை பறிக்கிறார் தெரியுமோ? "அள்ளிலைத் தாளி." மூலிகை அறிவு இருந்தால் தான் இங்கு பொருள் விளங்கும். அல் என்றால் "நெருங்கிய" என்று அருத்தம். "நெருங்கிய இலை கொண்ட தாளி" என்னும் செடியில் இருந்து முனிவர் இலை பறிக்கிறார்; சிரிப்பு வருகிறது மாரிப் பித்தியாருக்கு.

ஏனென்றால் "தாளிச பத்திரி" என்று இன்று சொல்லப் படும் (Flacourtia Calaphracia) அள்ளிலைத் தாளி பொதுவாகப் பசியைத் தூண்டுவதற்கும், கழிச்சல், சுரம், நாட்பட்ட இருமல் போன்றவற்றைப் போக்குவதற்குமாக உள்ள மூலிகை; கருப்பினிப் பெண்கள் நல்ல மகப் பேறு (சுகப் பிரவசம்) ஏற்படுவதற்காக உட்கொள்ளும் மூலிகையும் இதுவாகும்.

வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பினி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார். (முனிவர் பசியில்லை என்று பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஊறால் பறித்திருக்கலாம்; நமக்குக் காரணம் தெரியாது. பாடினியாரும் காரணம் சொல்லவில்லை. உரையாசிரியரும் முரணைப் போட்டு உடைக்கவில்லை; பொதுவாக, முரண் என்பது இப்படித்தான். ஒன்று கிடக்க இன்னொன்றாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது.

அடுத்த இரண்டுவரிகளில் பாடினியின் கேலி இன்னும் கூடுகிறது. "துறவு கொள்ளுவதற்கு முன்னால், வீட்டுக்கார அம்மா பேச்சை அப்படியே கேட்டு, வேண்டப் பட்டதைத் தேடிக் கொண்டுவந்த ஆள்தானே இவருன்னு" ஒரு போடு போடுகிறார்..

கவிதை ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கு முகன்மையான செய்தி தில்லைப் பூந்தளிரை முனிவர்களின் புரிசடைக்கு இணையாக ஒப்பிட்டது.

தில்லை என்ற மரத்தின் பெயரே அந்தத் தளிர் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டது. துல்லுதல் என்பது தோன்றுதல்; தோன்றுவது கொஞ்சம் மஞ்சளாய்த்தான் தெரியும். துலங்குதல் என்ற சொல் கூட துல் என்னும் வேரில் தோன்றியது தான். மஞ்சளாய் ஒளி நிறைந்ததாய், தெரிவதைத் துலங்குதல் என்று சொல்கிறோம். ஏனத்தின் கழிம்புகளையும், கறைகளையும் போக்கி விளக்குவதைத் துலக்குதல் என்று சொல்லுகிறோம். துல்லுவது துள்ளுவது என்றும் ஆகும். துள்ளுவது பின் துளிர்க்கும்; அது சற்றே திரிந்து தளிர்க்கும். துல்லுவது தில்லையானதும் இதே போல் தான்.

அந்தப் பூந்தளிர் ஒன்றே தில்லை மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று காண்பவர் மனத்தில் தைக்கும் காட்சி.
"தளிர்க்குழல் - முனிவர் சடை" என்ற இரட்டைப் பிணை, நெய்தல் நிலத் தமிழனை அப்படியே ஈர்த்திருக்க வேண்டும். கலித்தொகை 133 ல் முதலைந்து வரிகள் இன்னொரு காட்சியைக் காட்டுகின்றன.

(நெய்தற் கலி; ஆசிரியர் நல்லந்துவனார்; அந்துவன் = அப்பன்; இந்தக் காலத்தில் அப்பன் என்று எத்தனை பெயர்கள் முடிகின்றன; அது போல அந்துவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்தன் = தலைவன், பெரியவன், பெருமான். மலையாளத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரை அச்சன் என்று சொல்லுகிறார்களே, குமரியில் ஆசான் என்று சொல்லுகிறார் களே, அது போலப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தனர் = பெருமானர். அந்தனர்>அந்தணர் என்று ஆகும். ஆக அந்தனர் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். அது ஒரு குலத்தை, சாதியைச் சுட்டும் சொல் அல்ல. பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட இந்தச் சொல் பற்றி நிறையச் சொல்லலாம். எனினும் விடுக்கிறேன்.)

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

நெய்தலில் காற்று அடித்துக் கொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாய் மணல் மேடுகள் மாற்றி மாற்றி ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த மணல் மேடுகளை எக்கர் என்று சொல்லுவார்கள். இந்த மணல் மேடுகளுக்கு அருகில் கடலோதக் கழி இருக்கிறது. கழியின் கரையில் இருக்கும் முள்ளியின் மலர் கருப்பு. மா நிறம் என்பது கரிய நிறம் தான். (அதே பொழுது மிகக் கருப்பு என்று பொருள் கொள்ளக் கூடாது.)

மாமலர் முண்டகம் என்பது அந்த முள்ளியைத் தான் குறிக்கிறது. கூடவே அருகில் தில்லை மரங்கள்இருக்கின்றன; முனிவன் சடை போலப் பூந்தளிர்கள் தொங்குகின்றன; கொஞ்சம் தள்ளினாற் போலக் கல்லால மரமும் (Ficus tomentosa) இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டில் அது நேரடியாகக் கூறப் படவில்லை. பொதுவாக, நெய்தற் கழியில், வறண்ட உதிர்புக் காடுகளில், பெரும் பாலும் பாறை விரிசல்களுக்கு நடுவில்) இருப்பது இயற்கையே.

கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லைமரமும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்தக் கடற்கரைச் சோலையில், மணல் மேட்டில், தோற்றம் எப்படித் தெரிகிறதாம்? சீர்மிகு சிறப்பினோன் உடகார்ந்திருப்பது போல் தெரிகிறதாம். "யார் அந்தச் சீர்மிகு சிறப்பினோன்?" பொதுவாகப் பார்த்தால் தென்னாட்டு முனிவன்; விதப்பாகப் பார்த்தால் "தக்கண முகத்தோன்". என்ன இது புதுச்சொல் என்று மருள வேண்டாம். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்கிறோம் அல்லவா? தக்கணத்தில் தோன்றியவன் தக்கண முகத்தோன். (தக்கு = தாழ்வு. இமைய மலையைப் பார்த்தால் நாவலந்தீவின் தென்பகுதி தாழ்ந்து கிடக்கிறது. தாழ்ந்து கிடக்கும் பகுதி, தக்கிக் கிடக்கும் பகுதி, தக்கணம் எனப்படுகிறது; மேலே கிடக்கும் மலையைப் பார்த்தால் கீழே கிடக்கும் பகுதி கிழக்குப் பகுதி ஆனது போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தக்கணம் என்ற சொல் தமிழ் தான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். முகத்தோன் = தோன்றியவன்; முகத்தோனை மூத்தோனாகிப் (மூத்தோர் என்பவர் நமக்கு முன்னால் தோன்றியவர் என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா?) பின் வேறு ஈற்றால் மூத்தி என்று சொல்லி, பின்னால் வடமொழிப் பலுக்கிற்காக, ரகரத்தை நுழைத்து மூர்த்தி ஆக்குவர். தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷ¢ணா மூர்த்தி ஆவார். நாம் அதன் தொடக்கமே தெரியாமல் மருளுவோம். தென்னாடுடைய சிவனுக்கு வடபுலத்துப் பெயரா இருக்கும்?) இந்தத் தக்கண மூத்தியின் மயிர்க்குழல்கள் நரை தட்டிப் போய் தில்லைப் பூந்தளிர் போலக் காட்சியளிக்கின்றன. முண்டக மலர் அவன் கண்டம் (கழுத்து) போலக் காட்சியளித்திருக்கலாம். மறுபடியும் தொண்டைக்குள் நஞ்சு என்ற உருவகத்தை இங்கு பொருத்திப் பாருங்கள்.

இவன் முனிவன் என்றால், இந்த முனிவனுக்கு அருகில் ஒரு குண்டிகை (கலசம் அல்லது செப்புக் கலம்) இருக்க வேண்டுமே? எங்கும் நாம் தேட வேண்டாம். கழியில் உள்ள வளைந்து கிடக்கும் தாழையின் பழம், குடம் எனத் தொங்குகிறது. தாழையின் வளைசலைக் குறிக்க, கொக்கின் கழுத்தையும் நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் உவமை சேர்க்கிறார். இந்த வரிகள் முழுக்க ஒரே உவமை மயம். ஆனாலும் காட்சி தெளிவாகப் புலப்படுகிறது. சொல்லுக்குள் சிவனை, தக்கண முகத்தனை, முழுதாகக் கொண்டுவந்து விடுகிறார் இந்தப் பாடலாசிரியர். "இப்பேர்ப்பட்ட துறைவனே! நான் சொல்லுவதைக் கேள்" என்று மேற்கொண்டு போகிறார்.

"தக்கண முகத்தோனை முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் தில்லையோடு தொடர்வுறுத்திப் பதிவு செய்த இடம்" நானறிந்த வரை இது தான். இந்த நெய்தற் கலிதான். அதுவரை அவன் "ஆல் அமர் செல்வன், நுதல்விழியோன், கொன்றை விரும்பி" இப்படித்தான் பலவாறாக சங்க இலக்கியங்களில் வழுத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த வெவ்வேறு தோற்றங்கள் என்ற கேள்வி நமக்குள் இனி அடுத்ததாக
எழும்.

இன்றைய மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் என்பது முன்னாளில் பெரும்புலியூர் தான் என்றாலும், சிவநெறி பற்றிக் குறித்தது இன்னொரு பெரும்புலியூராம். இந்தப் பெரும் புலியூரானது, திருவையாறு - கல்லணை, திருக்காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் தில்லைத் தானத்திற்கு வலப்புறமாகப் பிரியும் கிளைச் சாலையில் 4 கி.மீ சென்றால் இருக்கின்ற ஊர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

{பெரும்புலியூர்க் குழப்பத்தை மேலும் ஆய்ந்து, நான் தெளிவு பெற வேண்டும்.]

பெரும்பற்றப் புலியூரோடும், பெரும் புலியூரோடும் சேர்த்து காவிரியின் வடகரைப் பகுதியில் இருக்கும் இன்னொரு புலியூர் ஓமாம் புலியூர். (அது என்னமோ தெரியவில்லை எல்லாப் புலியூர்களும் காவிரிக்கு வடபாலே இருக்கின்றன. கொள்ளிடக் கரையில் ஓமாம் புலியூர் உள்ளது.] காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச் சாலை உள்ளது. இங்கு தக்கண மூத்தியாய் உமாதேவிக்கு ஓங்காரப் பொருளை இறைவன் உரைத்ததாய் ஒரு தொன்மம் இருக்கிறது. ஓமம் என்பது வேள்வி தான்; ஓமம் நடக்கின்ற, ஓமம் ஆகின்ற புலியூர் = ஓமம் ஆம் புலியூர். ஒமமாம் புலியூர் என்பது ஓமாம் புலியூர் என்று திரிந்திருக்கிறது.

இனி நடுநாட்டில் இருக்கும் புலியூர்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று கடலூரின் ஒரு பகுதியாய் இன்று இருக்கும் திருப்பாதிரிப் புலியூர். [வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. குழலி சட்டென்று சொன்னார். அது முற்றிலும் சரி. கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியது தான். கடையாழல் ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் > கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம். சிவனுக்கு வேண்டிய மரம். கடை என்பது கொல்லை என்பதைக் குறிக்கும்; புழைக்கடை என்று சொல்லுகிறோம் அல்லவா?] "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற அப்பர் பாடல் இங்கு தான் எழுந்தது. அப்பருக்குச் சிறப்பான தலம். சமணம் பெரிதும் ஓங்கி இருந்து பின் அழிந்த தலமும் இது தான்.

நடுநாட்டில் இன்னொரு புலியூர், எருக்கத்தம் புலியூர்; இன்றைய மக்கள் வழக்கில் இது இராசேந்திரப் பட்டணம் என்று அழைக்கப் படுகிறது. விருத்தாசலம் - செயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.

சென்னை - தஞ்சை நெடுஞ் சாலையில் சேத்தியாத் தோப்பை அடுத்து திரு முகிழ்நம் (ஸ்ரீ முஷ்ணம்) - விருத்தாசலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள ஊர். வெள்ளெருக்கம் இங்கு தல மரம்.

"வெள்ளெருக்கந் தலைமுடியான் வெப்பெடுத்த திருமேனி" என்ற பாடலை நினைவு கொள்ளுங்கள்.

இந்த ஐந்து புலியூர்களையும் இணைப்பது இறைவனின் தக்கண மூத்தித் தோற்றம். நரைத்த சடை (தில்லைப் பூந்தளிர், பாதிரிப் பூ, வெள்ளெருக்கம் பூ என எல்லாமே இதைக் குறிப்பது தான்.) இந்த ஐந்து புலியூர்களிலும் வேள்வி என்பது பெரிதாகப் பேசப்படுகிறது.

இவை போகத் தொண்டை நாட்டில் உள்ளதாகச் சென்னைக் கோடம்பாக்கத்தைப் பற்றி நண்பர்கள் கமலும், KVR-உம் தில்லை - 1 என்ற வலைப்பதிவுக்கு வந்த பின்னூட்டில் சொல்லியிருந்தார்கள். அது தொண்டைநாடு என்பதாலும், அங்கு பாடல் பெற்ற சிறப்பான சிவன் கோயில் இல்லாது போனதாலும், கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன்.

இறைவன் என்பவன் ஒருவன் தான்; ஆனாலும் அவனைப் பலவாறாக உருவகம் செய்து அழகு பார்ப்பது நாவலந்தீவில் பலருக்கும் உள்ள பழக்கம். சேயோனும், மாயோனும் இன்னபிற உருவகங்களும் ஒன்றுதான் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் சேயோனை நுணுகிப் பார்த்து ஒரு காலத்தில் அப்பன், மகன் என இருவராய் உருவகம் செய்வர்; பின் அவர்களின் தோற்றங்கள் பலவகை வடிவங்களைக் காட்டும்; கூடவே இன்னொரு ஆனைமுகன் வந்து சேருவான். கொற்றவை என்பவள் தாய் ஆவாள்; இது போல மாயோனும் பல்வேறு தோற்றரவுகள் (அவதாரங்கள்) கொள்ளுவான்; இப்படி எல்லாமே நம்மை ஈர்க்கும் பல்வேறு கருத்தீடுகள்; ஒன்றை, ஈராக, நாலாகப் பலவாக விதப்பிப் பரவுவது (பரவுதல் = to pray) தமிழரில் பலரும்
செய்யும் ஒன்று. அந்த வகையில் நடவரசன் என்று கருத்தீடு, தென்னாடுடைய சிவன் என்ற கருத்தீட்டில் இருந்து, களப்பிரர் காலத்திற்கு அப்புறம் உருவாக்கப் பட்டது என்றே ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இது எதில் இருந்து குறிப்பாக எழுந்தது என்னும் போது தான் தில்லை வனம்.
இன்றையக் கோயிலின் உள்ளே இருக்கும் மூலத் தானமும் [நடவரசன் பொன்னம்பலத்திற்கு வெளியே வடக்கில் (ஆனால் கிழக்குப் பார்த்தாற் போன்ற திருமுகம்) உள்ளது] நம் சிந்தனைக்கு வருகின்றன.

இறை பற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகளும் தான்.
சிவச் சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம் : பதி - பசு - பாசம்), சரணாகுதி மெய்யியல் (விண்ணெறிச் சிந்தனை), அல்லிருமை [அத்வைதம் - குறிப்பாக மரபாளர்கள்(ஸ்மார்த்தர்) பின்பற்றுவது], இருமை (துவைதம் - மாத்வர்கள் பின்பற்றுவது), விதப்பு அல்லிருமை (விசிஷ்ட அத்வைதம் - பெரும்பாலான விண்ணவர்கள் பின்பற்றுவது) போன்ற புரிந்துணர்வுகள் எல்லாம் மிக நெடுங்காலம் தமிழர்கள் எண்ணிப் பார்க்காதவையே. அந்நாளில், சமயம் பற்றிய கேள்விகளைக் கொள்கை வழியாகக் கேட்கத் தொடங்கியவர்கள் உலகாய்தர்களே (உலகை ஆய்பவர்கள் உலகாய்தர்கள் = materialists, rationalists. பலரும் தவறாக லோகயுதர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆயுதம் என்பதும் ஆய்தல் என்பதும் வெவ்வேறானவை. ஆய்தல் = தேடுதல்) பின்னால் உலகாய்தச் சிந்தனையின் எழுச்சியில் கேள்வி கேட்கத் தொடங்கியவர்கள் சாங்கிய நெறியாளரும், விதப்பிய (விஷேசிஷம்) நெறியாளரும், ஆசீவக நெறியாளரும், செயின நெறியாளரும், புத்த நெறியாளரும் தான். இந்த மாற்றுச் சிந்தனையாளரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லும் முகத்தான் வடபுலத்தில் உபநிடதங்களும், மீமாஞ்சையும் (பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை) எழுந்தன. நம்மூரில் ஆகம வழி சாற்றங்கள் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) எழுந்தன (குறிப்பிடத் தக்க எடுத்துக் காட்டு திருமூலரின் திருமந்திரம்; இந்தக் கருத்துக்கள் முளைவடிவில் திருவாசகத்திலும் இருக்கின்றன.).

பொதுவாக நம்பா மதங்களின் எதிர்வினைகள் கி.மு.6ம் நூற்றாண்டில் மிகுந்து இருந்தது மகதப் பேரரசில் தான். தமிழகம் சற்று காலம் இந்த மெய்யியல் உரையாடல்களில் உள்நுழையாமல் தொய்வில் இருந்தது உண்மையே. இந்தக் கேள்விகள் கேட்பதற்கு முன்னால், வட புலத்தில் வேத நெறிப் பழக்கங்கள் இருந்தன; சடங்குகள் இருந்தன; கூட்டம் கூட்டமாக விலங்குகள் வேள்விகளுக்கு ஆகுதிகள் ஆக்கப் பட்டன. ஆனால் மெய்யியல் என்பது அப்போது ஏற்படவில்லை. என்னதான் இன்றைய வேத நெறிக் காரர்கள் காலத்தைக் குழப்பி உபநிடதங்களை முன்கொண்டு போக முயற்சித்தாலும், அவை பெரிதும் ஏற்பட்டது நம்பா மதங்களின் எதிர்வினைக்கு மறு மொழியாகவே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்பும் மதங்களை, நம்பா மதங்களும், மரபு எதிர்ப்பு மதங்களும் கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், அரசனையும் பொதுமக்களையும் தங்கள் பக்கம் பெருத்த அளவில் அணி திரட்டத் தொடங்கினார்கள். பேரரசுகளும், குடியரசுகளும் வேத நெறியில் இருந்து மாறத் தொடங்கின. இதனால், அதுவரை அரசச் சார்போடு இருந்த வேத நெறி பெரிதும் ஆடி போயிற்று. சாரி, சாரியாக வேத நெறியாளர்கள் இடம் பெயரத் தொடங்கினார்கள். இனி வேத நெறியாளர் தெற்கே வந்த வழியைப் பார்ப்போம்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதுமாய் ஆட்கொள்ளவில்லை. அந்த மாநிலங்கள் எல்லாம் பெருங்காடுகளாய்த் தான் அன்று இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் மக்களின் நகர்ச்சியும், வணிகமும் நடந்தன. முகன்மையாக இருபாதைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகத்தில் (Rajgir) இருந்து பாடலி, வேசாலி, குசிநாரா, கபிலவத்து, சாவத்தி, அத்தினாபுரம், தக்கீலம் (= தக்கசீலம் = பெஷாவர்) வரை போகின்ற பாதைக்கு உத்தர பாதை என்று பெயர். இதே போல கிட்டத்தட்ட நேபாள எல்லையில் இருக்கும் சாவத்தியில் (saavatthi) இருந்து அயோத்தி, கோசம் (kosam), பில்சா (Bhilsa), விஞ்சை (Ujjain - உச்சயினி), எல்லோரா (இந்தப் பாதையில் இருந்து அசந்தா வெகு தொலைவு
இல்லை.) வழியாக கங்கை, தொழுனை (=யமுனை), நருமதை, தபதி ஆகிய ஆறுகளைக் கடந்து, கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானம் (prathisthana>paithan) வரை வந்து சேருவது தக்கணப் பாதை. (இந்தி, மற்றும் மராத்தியில் படித்தானம் என்பது பைத்தான் என்றே சொல்லப் பெறும்; வடமொழியில் இது பிரதித்தானம் ஆகும். இந்தக் கால அவுரங்காபாதிற்கு அருகில், கிட்டத்தட்ட 50 கி.மீ.யில் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஊர் படித்தானம். சிலம்பில் வரும் நூற்றுவர் கன்னர் - சதகர்ணி - களின் தலைநகர். இன்றைக்கும் சுற்றுலா முறையில் அவுரங்க பாத், தவளகிரி, பைத்தான், எல்லோரா, அசந்தா போன்றவற்றை பார்ப்பது நன்றாக இருக்கும்.)

இது தவிர கங்கைக் கரையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசியின் வழி கோசத்தை அடைய முடியும். இதே போல இன்னொரு நீட்சி, தெற்கே படித்தானத்திற்கு நேர் மேற்கே இருக்கும் துறைமுகமான சோபாரா. [இன்றைய மும்பைக்கு மிக நெருக்கமாய்ச் சற்று வடக்கே வந்து சேரும்.

சோபாராவுக்குச் சற்று முன்னே வட மும்பையில் இருப்பது கன்னேரிக் குகைகள்.] மகதத்தின் துறைமுகங்களில் சோபாராவும், நருமதையின் புகர் முகத்தில் இருக்கின்ற பாருகச்சையும் (Bhaarukaccha>Broach) முகன்மையானவை. நாவலந்தீவின் வடபுல அரசியல், வணிக, பண்பாடு, கலை, மொழி மற்றும் மெய்யியல் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மேலே சொன்ன இரு பெரிய பாதைகளையும், பாடலியில் இருந்து வாரணசி போகும் சிறு தொலைவையும், படித்தானத்தில் இருந்து கடல்நோக்கி சோபாரா / பாருகச்சை செல்லும் வழியையும் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். படித்தானத்தின் முகன்மை நமக்கும் பெரிது தான். நம் சிலப்பதிகாரத்திலும் நூற்றுவர் கன்னரைப் பார்த்து, உதவி பெற்றுச் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்றதும் முடிவில் கங்கையின் தென்கரையை முட்டியதும் தக்கணப் பாதை வழியே தான்.

மகதமும், அதைச் சுற்றியுள்ளவர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வேத நெறியில் இருந்து மற்ற நெறிகளுக்கு மாறியதால், வேத நெறியாளர் பலரும் தக்கண பதம் (தெற்குப் பாதை) வழியாக தக்கணம் வரத் தொடங்கினார்கள். தென்னகத்திற்குள் வேத நெறியாளர் படித்தானம் வழியாகத் தான் நுழைந்தனர். (படித்தானத்திற்கு அருகில் சிலகாலம் தங்கி வாழ்க்கையைக் கழித்த காரணமாகத் தான், கங்கைக்கு அடுத்து கோதாவரி நம்மூர்ப் பெருமானர்களின் பரவுதலில் நிறைந்திருக்கும். கோதாவரியும் அவர்களால் மிகப் புனிதமான ஆறாகக் கொள்ளப் படும். இன்றைக்கும் வேத நெறியாளர்களின் பெண்களின் புடவைக் கட்டு, மாராட்டியக் கட்டிற்கு ஒப்பாகத்தான் அமைந்திருக்கும். படித்தானத்திற்கு அருகில் ஓரிரு நூற்றாண்டுகளாவது தங்கியிருந் திருக்க வேண்டும். விசுவாமித்திரர் கதை, பரசுராமர் கதை, சுக்கிராச்சாரியர் கதை, அகத்தியர் தெற்கே மக்களைக் கூட்டி வந்த கதை போன்றவை, வேத நெறியாளர் தக்கணத்திற்கு வந்து சேர்ந்து தென்குமுகாயத்தில் ஒன்று கலந்த செய்திகளைத் தொன்மங்கள் வழியாக உறுதி செய்கின்றன.)

படித்தானத்தில் இருந்து கருநாடக மாநிலம் (கடம்பர்களின் அரசு - முதல் அரசன் மயூர சன்மன்; இவனே நம்பூதிகளைத் தெற்கே கொண்டுவர உறுதுணையாக இருந்தவன்.) வழியாகத் தகடூர் வந்து சேரும் பாதையையும், தகடூரில் இருந்து காஞ்சி வரும் பாதையையும், அதே போலத் தகடூரில் இருந்து கரூர் வரும் பாதைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரை தொடங்கும் போதே தயங்கித் தயங்கித் தான் எழுதத் தொடங்கினேன். படிப்பவர்கள் தயவு செய்து சொல்லும் பொருளைத் தவறாகப் புரிந்து திசை திருப்பாமல், பொதுநலம் நோக்கிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் சொன்னது போல பெருமானர்கள் மூன்று பெரும் அலையாய் தக்கணத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்களின் உட்பிரிவுகளும் தமிழர் வரலாற்றைப் புரிந்து கொள்ளத் தேவையானவையே.
பெருமானர்களின் மூன்று அலைகளைப் பற்றியும், தக்கண மூத்தி என்னும் கருத்தீடு, ஆடலரசனாய் மாறியிருக்கக் கூடிய வாய்ப்பையும் இனி அடுத்துப் பார்ப்போம்.

பெருமாள் கோயிலுக்குப் போகிறோம்; மாயவனைச் சேவித்த பின்னால், அங்குள்ள பட்டர், நாம் குனிந்து ஏற்றுக் கொள்ள, சடாரியையை நம் தலையில் வைக்கிறார்; பின்னர் துழாயும், நீரும் தருகிறார். நீரை என்ன செய்கிறோம்? கொஞ்சம் போல வாய்க்குள் குடித்து விட்டு, மிஞ்சியதை நாமே நம் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம். சிவன் கோயிலுக்குப் போனாலும், அங்கே சிலபோது கொடுக்கும் திருநீரை (தெளிநீர் = ஆராதனை செய்யப்பட்ட தூய்மையான நீர்) தலையில் தெளித்துக் கொள்ளுவது உண்டு. (சிவனை முழுக்கு விழைந்தோன் - அபிஷேகப் பிரியன் - என்று கூடச் சொல்லுவார்கள்.) சிவன் கோயிலில் ஏன் இப்படித் திரு நீர் (திரு நீறு அல்ல) போன்றவற்றைத் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம் என்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

வீட்டில் பூசை செய்கிறோம். பூசை முடிவதற்குச் சற்று முன்னால், இறைப் படிமத்திற்கு முன் வைத்திருந்த பூசை நீரை நம் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம். அது ஏன்?

கோயில் குட முழுக்கு நடக்கிறது; கும்பத்தில் சொரிந்தது போக மீந்த தெளிநீரை, குருக்கள் மேலே கோபுரத்தில் இருந்த வாக்கில் தெளிக்கிறார். கூட்டம் அந்தத் துளிகள் தம் மேல் படாதா என்று முட்டி, மோதி, வாங்கிக் கொள்ளப் பார்க்கிறது. அது என்ன அந்தத் தெளிநீரைத் தம்மேல் பெற்றுக் கொள்ள அவ்வளவு முனைப்பு?

இப்படி வழிபாடு ஒட்டிய பல நிகழ்வுகளில் நீருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?

இந்தக் கால வேத - ஆகமக் கலவை நெறியில் (இதை இந்து மதம், சனாதன தருமம் என்றே பலர் சொல்லுகிறார்கள்; நான் வேதாகம நெறி என்றே சொல்ல விழைகிறேன்.), வேத நெறிப் பழக்கங்களும், ஆகம நெறிப் பழக்கங்களும் பிரித்துப் பார்க்க இயலாத வகையில், பின்னிப் பிணைந்து, கிடக்கின்றன. எவை ஆகம நெறியில் இருந்து வந்த பழக்கங்கள், எவை வேத நெறியின் வழி வந்தன என்று நாம் அடையாளம் காண முடியும் என்றாலும், முற்றிலும் செய்வது சரவல் தான்.

பொதுவாக (வேத நெறி மதங்களுக்கு மாறாக இருக்கும்) சிவநெறி, விண்ணெறி போன்ற ஆகம வழி மதங்களில் நீருக்கு மேலான உரிமை கொடுப்பார்கள். ஆனால், ஊற்றுகை (original) வேத நெறிக்காரர்களோ, தெய்வத்திற்குப் படைக்க வேண்டும் என்றால், வேள்விக் குண்டத்தில் "ஆகுதி" யாகப் போட்டு விடுவார்கள். (இன்றைய மரபாளர்களில் - ஸ்மார்த்தர்களில் - ஊற்றுகை வேத நெறிக் காரர்களாய் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. பலரும் ஏதோ ஒரு கலவை நெறியைத்தான் பின் பற்றுகிறார்கள். பழம் போக்கில் பார்த்தால், ஊற்றுகை மரபாளர்கள் சிவன் கோயில், விண்ணவன்
கோயில் என எந்தக் கோயிலுக்குள்ளும் வர மாட்டார்கள். இவர்கள் உத்தர மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்கள்; கேரளத்து நம்பூதிகள் பூருவ மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்கள்.) (ஆகுதி = ஆகியது, ஆகிப் போனது = ஹோ கயா; வேறு எந்தப் பொருட்பாடும் இதற்கு இல்லை. துருவித் துருவி வடமொழிக்குள் அருத்தம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.) நெருப்பு என்னும் இடையாளி, நாம் வேண்டும் தெய்வத்திடம் அதைக் கொண்டு செல்வதாக வேதக்காரர்கள் விளக்கம் சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாமே நெருப்புத் தான். நெருப்பே எல்லாவற்றையும் தூய்மை செய்கிறது என்பது அவர்களின் புரிதல்.

ஐம்பூதங்களில் நெருப்புக்குக் கொடுக்கும் முதன்மை வேத நெறிக்கே உள்ளது.

ஆகம நெறியிலோ, நெருப்போடு மற்ற பூதங்களும் வழிபாட்டில் புகுந்து வரும். ஐம்பூதங்களையும் விடாமல் அவர்கள் வழிபாட்டில் கொண்டு வருவார்கள். குறிப்பாக நீர் என்னும் பூதம். ஒரு படையல் செய்தால் அதைத் தெய்வப் படிமத்தின் முன்னே காட்டி கொஞ்சமாய் நீரைத் தெளித்து வைத்து விடுவார்கள். நாம் விழையும் அந்தத் தெய்வம் நம் ஈடுபாட்டைப் பார்த்து அதை மனப் பூருவமாய் எடுத்துக் கொள்ளுவதாய் ஆகமக் காரர்களுக்கு ஓர் ஐதீகம். பிறகு அந்தப் படையலை பத்தர்கள் (ஒன்றைப் பற்றி நிற்பவர்கள் பற்றர்கள்> பத்தர்கள்> பக்தர்கள். இந்தச் சொல்லின் தமிழ்வேரைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது போல இது இறைப் பற்று.) எல்லோரும் பங்கு போட்டுக் கொள்ளுவார்கள்.

கருப்பர் சாமிக்கு ஆடு வெட்டினாலும் கூட ஆட்டைப் பலிபீடத்திற்கு (பலி பீடங்கள் உண்மை யிலேயே நம் கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதற்குத் தான் இருந்தன. இன்றைக்குச் சில கோயில்களில் கால மாற்றத்தால், விலங்குகளைப் பலியிட வேண்டாம் என்ற எண்ணத்தால் உந்தப் பட்டு, சோற்றையும், மற்றவற்றையும் வைத்துப் "பலி" தருகிறோம்; அவ்வளவு தான். சில நாட்டுப் புறக் கோயில்களில் இன்றைக்கும் விலங்குகளைப் பலிகொடுக்கும் பழக்கம் உண்டு.) முன் கொண்டு வந்து காட்டி சற்று நீரைத் தெளித்து அது சிலிர்த்துக் கொண்டவுடன், பலி கொடுப்பார்கள். பலிகொடுத்த விலங்குக் கறியை பின் வெட்டி வேகவைத்து, கூடவே கூட்டாஞ்சோறும் வடித்துக் கருப்பருக்கோ, சூலாயுதத்தின் முன்னோ, படையல் செய்து, பின் படையல் கொடுத்த எல்லோருமாய்ப் பங்குபோட்டுச் சாப்பிடுவார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளியும் சென்னைக்கு வடமேற்கே, பெரிய பாளையத்தில், ஆரணி ஆற்றுப் படுகையில், கிடா வெட்டிப் பவானி அம்மனுக்குப் பலியிட்டுக் கூடியாக்கி உண்ணும் காட்சி பரவலாக நடப்பது தான். [கூட்டம் கொள்ளாது; ஒரு தடவை போய்ப் பாருங்கள். நாட்டாரியல் பழக்கங்கள், பண்பாடுகள் என்ன, என்று விளங்கும். பெருமானப் பழக்கம் (braminized practices) இல்லாத கோயில்கள் நாளாவட்டத்தில் பெருமான ஆக்கத்துள் வந்து சேருகின்ற நடைமுறைகளைக் காணலாம். திருவேற்காடும், மாங்காடும் இப்படியாக முழுதும் மாறி விட்டன. பெரிய பாளையம் மிக விரைவில் மாறிக் கொண்டிருக்கிறது. கிடா வெட்டுவது
இப்பொழுது கோயிலுக்கு வெளியில் வெகு தொலைவில் தான்; இன்னும் சிறிது நாளில் இந்தப் பழக்கம் நின்றே போகக் கூடும். யாருக்குத் தெரியும்?] அது ஏன் ஆட்டின் மேல் நீரைத் தெளிக்கிறார்கள்? (ஒரு சிலர் குறும்புத் தனமாய் ஆட்டின் ஒப்புதல் கேட்பதற்காக தண்ணீர் தெளிப்பதாகச் சொல்லுவார்கள்.

வேறொன்றும் இல்லை; இறை வழிபாட்டில், ஆராதனை (ஆலுதல் = மேலும் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றுதல்; தீவம், நீர், இன்னும் மற்ற பொருட்களை இப்படித்தான் இறைப்படிமம் முன்னால் வட்டமாய்ச் சுற்றிக் காட்டுகிறோம். ஆலாதனை>ஆராதனை ஆகும். இசைக் கச்சேரியில் ஆலாவனை செய்பவரும் இப்படி ஏற்றி இறக்கி வட்டமாய்ச் சுரங்களைப் பாடுகிறார். கோயில்களில் நாம் கருவறையைச் சுற்றிவரும் வழி சுற்றாலை - சுற்றும் வட்டம் - ப்ரகாரம் - எனப்படும்.) செய்யப் பட்ட நீரைத் தெளித்தால், அது இறைவனுக்கு நேர்ந்து கொண்டதாக அருத்தமாம். அவன் அருளுக்கு நாம் ஆளாகி விடுகிறோமாம்.

இறைப்பணியில் ஈடுபடும் போது, நீர் தெளிப்பது என்பது ஒரு குறியீடு. சில போது, எதற்கும் ஒப்பாமல், விட்டேற்றியாக இருப்பவரைப் பார்த்து "அவரைத் தெளிச்சுவிட்டாச்சுப்பா?" என்று சொல்லுகிறோம் அல்லவா? அதன் உட்பொருளைக் கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

இறைமையை ஒட்டி ஒரு பொருளுக்குப் புனிதம் கற்பிக்க நீர் தெளிப்பது முழுக்க முழுக்கத் தென்னாட்டுப் பழக்கம். [இன்றைக்கு வடபுலத்திலும் இது பரவிக் கொண்டு வருகிறது. காட்டாக வடநாட்டு இலிங்கங்களின் மேல் இடைவிடாது நீர் ஒழுகிக் கொண்டு இருப்பதாக வைத்திருப்பார்கள்.] கோயிலுக்கு அருகில் குளம் வெட்டுவது, கோயில் குளத்தில் முழுகி எழுந்திருப்பது, நீரில் குளித்துப் பின் சாமியைக் கும்பிடுவது, ஈரத்தோடு கோயிலுக்குள் போவது, என இறை வழிபாட்டில் நீருக்கு நாம் மிகவும் முகன்மை கொடுப்போம்.

நீரின் குணங்கள் பல. நீருக்கு அமைந்த பெயர்ச் சொற்களும் கூட ஒவ்வொரு குணத்தால் தான் அமைந்தன.

காட்டாக, நீர் என்ற சொல் ஈர்க்கின்ற குணத்தால், ஈரம் என்ற சொல்லின் நீட்சியாய் ஏற்பட்ட சொல். (இதே போலப் பல குணங்களால் எழுந்த நீர்ப்பெயர்களைச் சொன்னால் நான் சொல்ல இங்கு வருவது தவறிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.) ஒரே ஒரு விலக்காய், நீரின் இன்னொரு குணத்தால் ஏற்பட்ட சொல்லை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

நீரின் மேற்பரப்பு என்பது ஏனத்தின் வடிவத்திற்குத் தகுந்தாற் போல் உருவம் கொள்ளும்; தவிர அது மேலே ஏற்படும் அசைவிற்குத் தக்கவும் துள்ளும்; துள்ளல் கூடினால் தளும்பும்; பின் தெறிக்கும். துள்ளுவது என்பது குதிப்பது. துள்ளும் போது துள்ளித்ததால், பரப்புத் தந்த விசையால் (பரப்புத் தந்தம் = surface tension; தந்து = நூல், கயிறு. தந்தித்தல் = நூற்றல்; நூற்கும் போது கொடுக்கும் இழுவிசையைத் தந்த விசை - tensile force - என்கிறோம். tensile force என்பதை மிக எளிதாகத் தந்த விசை என்று கூறலாம். compressive force = அமுக்கு விசை.) நீரைத் தெளிக்கும் போது பல்வேறு பரப்பு விசை, ஈர்ப்பு விசைகளால் அது துளியாகிப் போகும். துள்ளுவதில் இருந்து துளி பிறக்கும் கதை இது தான்.

துள்ளுவது தளும்புவதற்கும், பின் தொள தொளப்பதற்கும் வழி வகுக்கும். தந்த விசை கூடக் கூட இழுபடும் கம்பி, நூல், இன்னும் இது போன்றவை, தொளுங்கிப் போகும். எப்படி நெகிழ்வது நீளுதற்குக் காரணம் ஆகுமோ, அதே போல தொள்ளுவதும் இந்த தந்த விசையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுவது தான். துளித்தம்>தெளித்தம் என்ற ஆக்கம் ஒரு இருபிறப்பிச் சொல். துளிக்கக் கூடிய பொருள் என்று பொருள்.

துளுத்தம்>தூள்த்தம்>தூத்தம் என்று பலுக்கப் படும். பொத்தகம் புஸ்தகம் ஆனது போல், மீத் திருத்தத்தில் (hyper correction)அது தூத்தம்>தீத்தம்>தீர்த்தம் என்று ஆகும்

தெளிப்பது என்பது பிறவினை; தெறிப்பது என்பது தன்வினை. (தெறி என்பதன் வேர் துல்>துறு> தெறு என்றும், தெளி என்பதன் வேர் துல்>துள்>தெள்>தெளி என்றும் விரியும்.) இப்படித் துண்டு துண்டாகப் பிரிவுதும், பின் பிரிந்தவை கூடி பெரியதாய் ஆவதும் நீருக்கும், நீரைப் போன்ற நீர்மங்களுக்கும் உள்ள குணம்.

இன்றைக்குத் தீர்த்தம் என்றால் தான் பலருக்கும் புரிகிறது. அதன் தமிழ் ஆழம் முற்றிலும் புரிபடாமல் போகிறது. வேத நெறியில் தெளிக்கின்ற பழக்கமே கிடையாத போது, தெளித்தம்>தீர்த்தம் என்று அல்லாது, வேறு எப்படித் தீர்த்தம் என்ற சொல் தோன்றியிருக்க முடியும்?

தீர்த்தம் கிடைத்தால் இறைவனின் அருள் பெற்றவராய், அவன் பணியில் இணைகிறவராய் ஆகிவிடுவதாய், நம்மூர்த் தொன்மம் நவில்கிறது. எனவே consecrete பண்ன வேண்டுமானால், (மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலியில் வெறுமே consecrete என்று மட்டுமே போட்டிருக்கும். அதன் மரபுவழித் தொடக்கங்கள் தென்னாட்டில் அல்லது இந்த நாவலந்தீவில் எங்கணும் கிடையாது.) தெளித்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆகம வழியில், எல்லாச் சடங்குகளிலும் தெளிப்பது இல்லாமல் இல்லை. ஒரு குருவிடம் மாணக்கன் படிப்பு முடிந்தவுடன் தெளிவிக்கப் பெற்று (இங்கே உள்ள இரண்டு பொருட்பாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.) தெளிவிக்கை (தீக்ஷை) பெறுகிறான். தெளிவிக்கப் பட்டவன் தீக்ஷிதன் ஆகிறான். தெளிவித்த பின்னால் தான் எல்லாச் சடங்கும் உரைகளும் முற்று முழுதாகின்றன.

தீர்க்கம் என்ற சொல்லிற்கு "முற்று முடிவு" என்ற பொருள் சடங்குகளை ஒட்டியே எழுந்தது. (கவனிக்க: தீர்க்க சந்தி, தீர்க்க விராமம் என்ற வடமொழிச் சொற்கள்.)

இவ்வளவு தூரம் தீர்த்தம் பற்றிச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. தீக்ஷிதர்கள் என்பவர்கள் வேத நெறியையும் ஆகம நெறியையும் கலந்த சமய நெறியில் உருவானவர்கள். அந்தக் கலவை வடபுலத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது தென்புலத்தில் எல்லை நகரான படித்தானத்தில் உருவாகி இருக்கலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அதன் வளர்ச்சியின் உச்ச கட்டம் தில்லையில் தான். அந்த வளர்ச்சியின் முகடு (mode) நடவரசன் என்ற கருத்தீடு ....... நாம் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும்.

"தென்னாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை, குறிப்பாகத் தில்லையில் பலரும் கூறும் வாசகத்தின் உட்பொருளைப் பார்த்தால், "அது என்ன, எந்நாட்டவர்க்கும்? யார் அந்த எந் நாட்டவர்?" என்ற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறது. இதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,
இராம.கி.



பாவாணர் வாழ்க்கை குறிப்பு


தோற்றம்: 1902 - மறைவு: 1981

பாவாணர் வாழ்க்கை குறிப்பு (Courtesy:
Tamil Neri Kazhagam )


"தமிழ்ச் சொற்கள் அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அயன்மொழிகளில் சென்று வழங்கினும் அவற்றின் (சொற்களின்) மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச்சொற்களாலும் அவை தமிழ் என்றெ அறியப்படும்," -- பாவாணர், வேர்ச்சொற் கட்டுரைகள், பக்10


7.2.1902 சங்கரநயினார் கோயிலில் ஞானமுத்தர்-பரிபூரணத்தம்மையார் ஆகிய பெற்றோருக்குக் கடைக்குட்டிப் பத்தாம் மகவாகத் 'தேவநேசன்' பிறப்பு.


1918 பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழிய (CMS) உயர் நிலைப்பள்ளியில் பயின்று பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறல். பின்னர் முகவை மாவட்டச் சீயோன் மலை உயர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராதல்.


1921 ஆசிரியர் பண்டிதர் மாசிலா மணி அவர்களால் 'தேவ நேசக் கவிவாணன்' என்ற பாராட்டுப் பரிந்துரையுடன் தமிழாசிரியப் பணியை மேற்கொள்ளல். 1921 முதல் 1944 வரை பணி புரிந்த இடங்கள்.


1.வடார்க்காட்டு ஆம்பூர் உயர்நிலைப்பள்ளி
2.சென்னைக் கிறித்துவக் கலாசாலை
3. மன்னார்குடிப் 'பின்லே' கல்லூரி.
4. திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளி.
5. சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி.
1924 மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் தேர்வில் வெற்றி பெறல்.
1926 தென்னிந்தியத் தமிழ்ச்சங்கப் 'புலவர்' தேர்வில் வெற்றி பெறல். பின்னர் சென்னைப் பல்கலைக் கழக 'வித்துவான்' கீ.க.தே. (B.O.L) தேர்ச்சி பெறல்.
1930 எசுதர் அம்மையாரை மணந்து கொள்ளல்.
1931 'மொழியாராய்ச்சி -ஒப்பியன் மொழிநூல்' எனும் முதல் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வி இதழில் வெளியாதல். சை.சி.நூ.ப. கழகத்துடன் அணுக்கத் தொடர்புண்டாதல்.
1935 'திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே' என்னும் தலைப்பில் கீ.க.மு. (M.O.L.) பட்டத்திற்கான இடுநூலை எழுதத் தொடங்கல்.
1939 அவ் இடுநூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளி விடுதலும், இனிமேல் இந்தியாவுக்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை என்று பாவாணர் முடிவு செய்தலும்.
1944 சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பொறுப்பேற்றுப் பன்னிரண்டாண்டுகள் (1956 வரை) பணிபுரிதல்.
1949 சொல்லாராய்ச்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் பாவாணர் என்று மறைமலையடிகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்.
1952 சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழி தாமே தமித்துப் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெறல்.
1956-1961 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறை வாசகராகப் பணியாற்றுதலும் தமிழ்ப்பகைவர் சூழ்ச்சியால் அங்கிருந்து வெறியேறிக் காட்டுப்பாடியில் குடிபுகலும்.
27.10.1963 மனைவியார் நேசமணி அம்மையார் மறைவால் பாவாணர் வடக்கிருக்கத் துணிதல். நண்பர்கள் பலரும் சூழ்ந்து தடுத்துத் தமிழாய்வுப் பணியில் ஈடுபட்டுத் தமிழை உய்விக்குமாறு வேண்டிய வேண்டுகைக்கு இசைதல்.
1968 உலகத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தல். உ.த.க. தொண்டர்களுக்கான பண்புகளாக எளிமை, உண்மை, தன்னலமின்மை, தொண்டு, ஈகம் ஆகியவற்றை வலியுறுத்தல்.
1974 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியமர்தல்.
15.1.1981 மதுரையில் மாரடைப்பால் பேராவியற்கை எய்துதல்.


இல்லறமும் மக்கட்பேறும்


பாவாணர் தம் ஐந்தாம் அகவையிலேயே பெற்றோர் இருவரையும் இழந்து விட்டாராதலால் அவருக்கு அன்னையாக இருந்து காத்தவர் அவர்தம் தமக்கையார். அவர் மணமுடித்து வைத்த எசுதர் அம்மையார் ஓர் ஆண் மகவை ஈன்றார். அம்மகவுக்கு மணவாளதாசன் என்று பெயர் சூட்டப்பட்டது. சில திங்களில் அவ் அம்மையார் மறையவே தம் தமக்கையார் மகளாகிய நேசமணியம்மையாரைப் பாவாணர் மணந்து கொண்டார். அவர்கட்கு மக்கள் பின் கண்டவாறு ஐவர்:


1. நச்சினார்க்கினிய நம்பி
2. சிலுவையை வென்ற செல்வராயன்
3. அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
4. மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி
5. மணிமன்ற வாணன்.


பாவாணர் பெற்ற பட்டங்கள்


1. 1921-இல் அவர்தம் ஆசிரியர் 'கவிவாணன்' என்று அவரைப் பாராட்டியதைப் பின்னர்த் தனித்தமிழாக்கிய பாவாணர் என்று தம் பெயருடன் சேர்த்துக் கொண்டார். அதுவே இயற்பெயராகிய 'தேவ நேயன்' என்பதினும் பெரிதாய்ப் பரவி நின்றது.


2. 1947-இல் பாவாணருக்கும் தமிழ்மறவர் புலவர் பொன்னம்பலனார்க்கும் தந்தை பெரியார் வெள்ளிப் பட்டயம் அளித்துப் பாராட்டினார்.


3. 1971-இல்பறம்புமலைப் பாரி விழாவில் குன்றக்குடி அடிகளார் பாவாணருக்குச் 'செந்தமிழ் ஞாயிறு' என்று பட்டம் அளித்து போற்றினார்.


4. 1980-இல் தமிழக அரசு பாவாணருக்குச் 'செந்தமிழ்ச் செல்வர்' என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.


5. பாவாணர் அன்பர்கள் பெயரேதுமின்றி 'ஐயா' என்று குறிப்பின் அது பாவாணர் ஒருவரையே சுட்டுவதாக அமைந்தது. 'மொழிப்பேரறிஞர்' 'தனித் தமிழ்க்காவலர்' 'மொழிநூற் கதிரவன்' 'மொழிநூன் மூதறிஞர்' 'மொழி ஞாயிறு' முதலான பல பட்டங்கள் பாவாணர் அன்பர்களிடையே வழங்குகின்றன.


பாவாணர் நூல்கள்


1. இயற்றமிழ் இலக்கணம் (1934)
2. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம் (1936)
3. செந்தமிழ்க்காஞ்சி (1937)
4. ஒப்பியன் மொழிநூல் (1940)
5. திரவிடத்தாய் (1944)
6. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
7. உயர்தரக் கட்டுரை இலக்கணம் முதற் பாகம் (1950)
8. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951)
9. பழந்தமிழாட்சி (1952)
10. முதல் தாய் மொழி (1953)
11. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954)
12. தமிழர் திருமணம் (1956)
13. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடுகள் (1961)
14. இசைத் தமிழ்க் கலம்பகம் (1966)
15. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (19660
16. The Primary Classical Language of the World (1966)
17. தமிழ் வரலாறு (1967)
18. வடமொழி வரலாறு (1967)
19. The Language Problem of Tamil Nadu and its logical solution (1967)
20. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968)
21. வண்ணனை மொழி நூலின் வழுவியல் (1968)
22. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969)
23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969)
24. தமிழர் வரலாறு (1972)
25. தமிழர் மதம் (1972)
26. வேர்ச்சொற்கட்டுரைகள் (முதற் பகுதி) (1973)
27. மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை (1978)
28. தமிழ் இலக்கிய வரலாறு (1979)
29. An Epitome of the Lemurian Language and its ramifications / Cyclostyled Booklet (1980)


சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட தொல்காப்பிய எழுத்திகாரப் பதிப்பிற்கு உரைக் குறிப்பும் பாவாணர் எழுதியுள்ளார்.


'சுட்டு விளக்கம்' 'கட்டுரை கசடற' 'தமிழர் வரலாற்றுச் சுருக்கம்' ஆகிய இங்குக் குறிக்கப் பெறாதவை மூன்றும் முறையே 'முதல் தாய் மொழி' 'கட்டுரை வரைவியல்' 'தமிழர் வரலாறு' என்னும் விரிவு நூல்களில் அடங்கின. 'சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாகராதியின் சீர்கேடுகள்' என்னும் நூல் 'A critical survey of the Madras University Tamil Lexicon' என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியானது.


பாவாணர் வரைந்த சொற்பிறப்பியல் அகரமுதலியின் முதன் மடல் -முதற் பகுதி அவர் வரைந்த எட்டாண்டுகட்குப் பின்னரும் மறைந்த நான்காண்டுகட்குப் பின்னரும் 1985-இல் வெளியானது. 1940-இல் நூறு சொற்கட்குப் பாவாணர் வரைந்த வேர்ச்சொற்சுவடி எழுபத்து மூன்று சொல்லாய்ச் சிதைந்து புலவர்மணி இரா. இளங்குமரரால் மீட்கப்பெற்று 1986-இல் வெளியாகியுள்ளது.


'சொல்லாராய்ச்சி நெறி முறைகள்' 'இசைத்தமிழ்ச் சரித்திரம்' ஆகிய இரண்டும் பாவாணரால் எழுதப்பெற்று அச்சேறவியலாமல் அழிந்தன. அவர் அரும்பாடுபட்டுத் தொகுத்து ஐம்பது பக்க ஆராய்ச்சி முன்னுரை வரைந்த 'பழமொழி பதின்மூவாயிரம்' அச்சீட்டாளரிடமிருந்து மீள முடியாது அழிந்தது. பாவாணர் தம் நூல்களில் ஆங்காங்கே சுட்டுகின்ற 'தொல்காப்பிய வளம்' 'சிலப்பதிகாரச் சிறப்பு' 'முத்தமிழ்' 'மொழிச்சிக்கல் தீர்வு' எனும் நூல்கள் என்னவாயின என்றும் அறிய முடியாதவாறு அழிந்தன.


பாவாணர் தம் வாணாளில் எழுதி முடிக்க விரும்பியவை 'செ.சொ.பி. அகரமுதலி' பதின்மூன்று படலங்கள், The Lemurian Language and its ramification, 'தம் வாழ்க்கை வரலாறு' ஆகியவை அவற்றை எழுதி முடிக்குமளவு அவர்தம் வாணாள் நீளவில்லை.


இவையேஅல்லாமல் செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப்பொழில், தென்மொழி, தமிழ்ப்பாவை, தமிழம் பல்வேறு பள்ளி கல்லூரி இதழ்கள், சிறப்பு மலர்கள் ஆகியவற்றில் வரைந்த கட்டுரைகள் பல்பொருள் தழுவியவை; பன்னூற்றுக்கணக்கின.


இந்நூல்களும் கட்டுரைகளும் தமிழர்தம் கைகளில் திகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுமா? முடவன் கொம்புத் தேனை விரும்பிய கதையாகுமா?


Brief History of PavanarName: Gnanamuthu Devaneyan.Professional field code: 090 Teacher.Place of birth: Sankaranayinar Koil, Tamilnadu, South India.Date of birth: 7-2-1902.Father's Name: Gnanamuthu.Mother's Name: Paripuranam.Education: C.M.J. High School, Palayankottai, S.S.L.C. (1916-1918) Madras University M.A. Private Study 1952.Married: 1930Children: 4 Sons and 1 daughter, the daughter being 4th child.Brief carrier summary: Tamil teacher in Several High Schools 1922-1944Tamil Professor, Municipal College, Salem. 1944-1956Reader in Dravidian Pilology Annamalai University. 1956-1961.Director Tamil Etymological Project of the Tamilnadu from 1974 till probably in 1987Carrier-related activities:President, International Tamil League, Tamilnadu. (U.Tha.Ka.)Awards and Certifications:-A Silver plate presented to me by the Tamil Peravai, Salem in 1955 in appreciation of my service to Tamil.-A Copper Plate presented to me by the Governer of Tamilnadu 1960 in appreciation of my contribution to the collection of Administrative terms in Tamil.-A Silver Plate presented to me by the South Indian Saiva Sinddhanta Works Publishing Society, Thirunelveli Ltd., in 1970 in appreciations of my research work in Tamil Philology an Etymology.Professional and Association Memberships:Member of the tamil Development an Research Council Govt. of Tamilnadu.Writings and Special Achievements:Author of more than twenty research works in Tamil and English on the Tamil Language literature and culture and compentary on Thirukkural.


பாவாணரின் சிறப்பியல்புகள்


௧. கள்ளமற்ற குழந்தை உள்ளமுடைமை.
௨. கரும்பொன் வண்ண மேனி; எளிய உடை; சிலிர்த்த மீசை; பீடுநடை அகன்று ஏறிய நெற்றியுடன் விளங்கும் அரிமா நோக்குடைமை.
Ž. எங்கும் எப்போதும் செந்தமிழிலேயே அல்லது செழுமையான பிறமொழியிலேயே எழுதிப்பேசிக் கமழச் செய்த தூயமொழியியல் வாழ்வால் தாய் மொழியின்கண் நிகரற்ற கல்விப் புலமையுடைமை.
௪. மதிநுட்பம் பரந்த கல்வி தன்னலமின்மை, நெஞ்சுரம், மெய்யறியவா நடுநிலைமை முதலிய அறுவகைத்தகைமை நிறைந்து, சுருங்கச் சொல்லும் அறிவுச் சால்புடைமை.
௫. மறுப்பச்சமின்றி நடுவுநிலைமையோடு எவரும் ஒப்புமாறு தமிழ்க்கேடுகளைத் தறுகண்மையுடன் தக்காங்கு தகர்த்தெறியும் ஆணித்தரமான கருத்துகளை உடனுக்குடன் வெளியிட்டு உண்மையை விளங்கச் செய்யும் மங்காத உயர்தனித் தமிழ் மொழிமான மதுகைத்திறக் குடிமைப் பண்புடைமை.
•. தன்னல விளம்பர வணிகமற்ற மொழிப்பற்றும், வறுமையிற் செம்மையும், உண்மையும், உண்மையின் பாற்பட்ட அடக்கமான புலமைச் செருக்கும் இழைந்த கருத்தாணையுடன் "எனக்கும் வறுமையுமுண்டு, மனைவி, மக்களும் உண்டு, அத்தோடு (தமிழ்) மானமும் உண்டு" என்று செப்பிய செம்மாப்புடைமை.


–. முப்போதும், எப்போதும் தன்னல மறுப்பால், தமிழ் நல நினைப்பால், படிப்பால் நடமாடும் தனித்தமிழ்ப் பல்கலைக் கழகமாக உயர்ந்து தி.பி. ௧˜˜˜ (கி.பி. 1968) -இல் மொழிச்சரிவை நிமிர்த்த உலகத்தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்து வெற்றி ஈட்டி பொது மக்களின் எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழைக் கமழச் செய்த முற்காணிப்பு அறிவுடைமை (Talent of Featuralogy).


—. எப் பண்ணிலும் பாடல் இயற்றும் பாவண்மையும், 'கித்தார்' (Guitar) இசைக்கும் இசைத்தமிழ்ப் புலமையுடைமை. உரைநடை, செய்யுள் இவற்றைத் தனித்தனியே பாகுபடுத்தி முறையோடு அனைவரையும் தெளிவித்துப் பாடம் புகட்டும் உயர்தனி ஆசிரிய ஒழுக்கப் பண்புடைமை.


˜. கி.பி. 1960-இலேயே சிறப்பாசிரியர் பொறுப்பேற்று தனித் தமிழ் திங்ளிதழான 'தென்மொழி'யில் 'தன்வரலாறு' எழுதி தமிழ் வரலாறு படைத்தமை.


௧௰. சொல்லாய்வு, மொழி நூலாய்வு, பன்மொழி-(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய திரவிடமொழிகள் இலக்கணப் புலமையும்; ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீனம், பாரசீகம், உருது, இந்தி, சர்கசானியம், சமற்கிருதம், மேலை ஆரிய மொழி இலக்கிய விலக்கணப் புலமையும் மிக்கவர்). ஒப்பியன்மொழி நூட்புலமை முதலிய மூவகைத் தெள்ளியவறிவால், மூலம் காண்பதிலும், மூலச்சொல் வடிவ மீட்டமைப்பிலும் மரவுபிறழாத நடுவுநிலையுடன் முதன் முதல்; தமிழ் என்றும் வாழவும், ஒத்த முன்னேற்றம் காணவும்; இன்றியமையாத வேரும் வரலாறும் காட்வதுமான 'கொடி வழி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி' (Etymological Dictionary of Tamil on Genelogical basis) தொகுப்பு நெறிமுறைகள் வகுத்தளித்து அதன்படி 13 மடலங்களுள் முதல் மடலத்தின் முதல்பகுதி 'அகர' ஓரெழுத்தில் தொடங்கும் 6500 சொற்களுக்கு வேர்ச்சொல் பொருள் விளக்கம் 1470 தட்டச்சுப் பக்கங்கள் கொண்ட அளவில் தொகுத்து முடித்த நுண்மான் நுழைபுல ஆள்வினையுடைமை. (அதனை பிற்றைய நாளில் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் வழி அச்சிட்டு தி.பி. ௨௰௧• சுறவம் 2-இல் அரசு சார்பில் வெளியிட்டனர் என்பது அறியத்தக்கது.)
௧௧. புதிய செந்தமிழ் வேர்ச்சொல் உருவாக்கவும், வழக்குவீழ் சொல்லிற்கு வாழ்வளிக்கும் வல்லமையுடைமை.
௧௨. "தமிழே என்பாகவும் தசையாகவும் குருதியாகவும், வழக்குவீழ் சொல்லிற்கு வாய்க்கப் பெற்ற தமிழின முழு உருவம் இவரே" - பாவாணர் என்ற புகழ்த் தோற்றத் தகைமையுடைமை.


தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! "வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையி¢ருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!"-


நன்றி: 'தமிழ்ச்சிட்டு' - குரல்-8, இசை-12.


சுவாமி பித்தானந்தாவின் அருளுரைகள்.

அருளுரை - 1


சிரித்துப் பழகு!

சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

சிரிப்பு ஓர்சிறந்த வரம்!
மானுடப் பிறவிக்கு!


கவலைகள் அதிகமா!
கவலைப் படாதே!

சிரிக்கப் பழகு!

துன்பங்கள் வரும்போதும்
துவளாமல் சிரி!

உள்ளத்து விசனங்களை
வெளியிலே எறி!

சிரித்துப் பழகு


நாளும் நீ சிரித்துப் பழகு!
தினமும் சில நிமிடம்
சிரிக்கும் நேரம்அதிகமாக்கு!

அதுவே பாதிச் சுமை
உன்னிடத்தில் குறைக்கும்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!

தேஜஸ் கண்டுஉன்
பின்னே கூட்டம்
வரக் கூடும்!

திரும்பிப் பார்!
அவர்களும் திரும்பிடுவர்!
அச்சத்தில் அல்ல!

உன்
தேஜஸ்கண்டு
தடுமாறுவர்!


சிலர்
உன்மேல்கல்லெறியக் கூடும்!
உன்னைப் போல்கவலையின்றி
இருக்கஇயலாமையின்
பொறாமை!


மனதார மன்னித்து விடு!
அவர்களையும்பார்த்துச் சிரி!
புரிந்தாலும் ஒதுங்கிக்கொள்வர்!
புரியாவிட்டாலும் கூட!

இப்படியேசில நாள்
பயிற்சியில்சிரிப்பு
உனக்குகை கைகூடிவிடும்!

உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னைதொந்தரவு
செய்யாது!

சுதந்திரமாக உணர்வாய் நீ!

இப்போது இன்னும்
அதிக நேரம் சிரிக்கலாம் நீ!

அப்புறமென்ன ?

வந்துவிடு எங்களுடன்!
சேர்ந்து சிரிப்போம்!


நீ
மறுத்தாலும்
நாங்கள்காத்துக்
கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!

அருளுரை 2 :

நீ நீயாகவும்,

நான் நானாகவும்...!

நீநீயாக இரு!
நான்நானாகஇருக்கிறேன்!
நாம்நாமாகவேஇருப்போம்!
இவர்கள்
இவர்களாகவேஇருக்கட்டும்!

அவர்கள்
அவர்களாகவேஇருக்கட்டும்!

நீநானாக வேண்டாம்!
நான்நீயாக வேண்டாம்!
நாம்நாமாகவேஇருப்போம்!
எவரோஎவராகவோஇருக்கட்டும்!

நமக்கென்ன?
ஒருகுழப்பமும்இல்லை!
நீநானாகவும்நான்நீயாகவும்மாற எண்ணாதவரை!


அருளுரை 3 :



இறைவன்கொடுத்துள்ளான்!
இலவசம் தேடிஓடிடும் மானிடரே!

கிடைக்காமல் போனாலோ
வருந்துகிறீர் வேதனையால்!

இறைவன்கொடுத்தானே
இனியதொருஇலவசத்தை!

யாருக்கும்இன்னலில்லை!
யாருடனும்சண்டையில்லை!

அடுத்தாரைப்பார்க்கையிலே
அன்பாய்ப்புன்னகைக்க

கல்
மனதுஎன்றாலும்

கரைந்திடுமேஅன்பினில்தான்!

இறைவன்கொடுத்துள்ளான்
இலவசமாய்ப்புன்னகையை!

அடுத்தார்க்குக்கொடுப்பதனால்
நமக்கொன்றும்நஷ்டமில்லை!

வீசிடுங்கள்புன்னகையை!
எல்லோர்க்கும்இலவசமாய்!


சுவாமி பித்தானந்தா

கீழ்ப்பாக்கம்.

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு- ச. சாமிநாதன், தமிழ் ஆசிரியர், இலண்டன்

பல்கலைக்கழகம்சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (GEOGRAPHICAL FACTS) படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள்.

'குமரி முதல் இமயம் வரை' என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலந்தூர்க்கிழார், காரிக்கிழார், குறுங்கோழியூர்க்கிழார், முடமோசியார், பரணர், குமட்டுர்க் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.

உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, "இமயம் போல வாழ்க" என்று வாழ்த்தினர்.

உதியஞ் சேரலாதனை முருஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2), விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166), கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு
இமயமும், பொதியமும் போன்றே" (புறம் 2)

நெடுவரைக் கசவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசையானே (புறம் 166)

இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம்
இசை நட்டுத் தீதில் யாக்கையொடு
மாய்தல் தவத்தலையே (புறம் 214)

ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப் புலவர்கள்.
அது மட்டுமல்ல, பரணர் என்ற புலவர் இமயமலைக் காட்சிகளைத் தத்ரூபமாக வருணிக்கிறார்.
அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.

"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன" (பரணர், புறம் 369)

"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து" (பரணர், அகம் 396)

"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயமாகத் தென்னங்
குமரியோ டாயிடை அரசர்" (பரணர், ப.பத் 43)

இதில் "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார்.
குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத் 11)
இதே கருத்தைப் பாடியுள்ளார்.
இமய மலையிலுள்ள அன்னப் பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத் தொடரில்தான் உள்ளது.
இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர்க்கிழார் இவ்வாறு கூறுகிறார் :-

"சான்றோர் செய்த நன்றுண்டாயின் இமயத்து
ஈண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல்
மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே!" (புறம் 34)

"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத் துளிகளைவிடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர்க்கிழார் வாழ்த்துகிறார்.

கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மழை மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.

"மழை கொளக் குறையா புனல்புக நிறையா" (ப.பத் 45)

பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடி நீரைக் கொட்டிய போதிலும் கடல் நிறைவதில்லை. அதே போலக் கடலிலிருந்து எவ்வளவு மழை மேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி.

தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று. கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.

'தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இரவின் குப்பை அன்ன' (அகம் 152)

பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

ஒரு வகைக் கடற்புழுக்கள் கப்பலின் அடியில் ஒட்டிக் கொண்டு கப்பலையே அரித்து அழித்து விடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இரவின் குப்பை' இத்தகைய வகைக் கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.


சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்


"'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம். நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்... நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்.நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்! "

சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்.

நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.

'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே' என தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.
தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.

'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.

நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்.

முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.

தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.

கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கன் ஆகின.

முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.

சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வட மொழிப்பெயர்களை நீக்கி தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப்பெற்றது.

குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.

சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி-அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன்- பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி-கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருட்டிணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களை சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.

மிக அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரை தொல்காப்பியன் என மாற்றினார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரோஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.

தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உறுதி, உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.

அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. இந்தப் பெயர்கள் தமிழ் அல்லாதன மட்டுமல்ல, அவை பொருளற்றதாகவும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக கஜன், டிலஷ்சனா, டில்ஷான், டிலக்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிஷானி, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, வர்ஷன்போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும்.
தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டை சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும்.

ஒரு யூதனை அல்லது ஒர் ஆங்கிலேயனை அவனது பெயரை வைத்துக் கொண்டே கண்டு பிடிக்கலாம். தமிழர்களை அப்படிக் கண்டு பிடிக்க முடியாது.

பெற்றோர்கள் தமிழ் அல்லாத பெயர்களை வைப்பதற்கு அவர்களுக்கு தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரியாததே காரணமாகும்.

தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அர்ச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும்.

நிரோஜன் நிரோஜினி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள்.

தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட,ண ற,ண,ன,ர,ல,ழ,ள என்ற எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் எண்சாத்திரம் அல்லது பஞ்சாங்கம் பார்த்து இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள். எண்சாத்திரம் பஞ்சாங்கம் பார்ப்பது மூடநம்பிக்கையாகும்.

தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.

முடிந்த மட்டும் அன் விகுதியில் முடியும் பெயர்களை வைத்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தனித் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்று இத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இதனை உங்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்துத் தனித் தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட ஊக்குவியுங்கள்.

ஏற்கனவே அறிவித்தபடி 1999-2004 ஆண்டு காலப் பகுதியில் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இரண்டாயிரம் வெள்ளி (கூ2,000) பரிசு அடுத்த ஆண்டு பொங்கல் நன்னாளில் (தை 14, 2005) வழங்கப்படும்.

இந்தப் பரிசுத் தொகை தமிழீழம், இலங்கை, கனடா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதி பெற்றால் குடவோலை முறையில் பரிசுக்குரிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.

கழகத்தின் முடிவே இறுதியானது. கழக உறுப்பினர்கள் இதில்பங்கு கொள்ள முடியாது.
நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்

நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!

--~--~---------~--~----~------------~-------~--~----~
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---