பழந்தமிழ்க் கணிதத்தில் ஆண்டின் தொடக்கம்


தமிழ்ப்புத்தாண்டு தைத் திங்களில் தொடங்கிறதா? சித்திரைத் திங்களில் தொடங்குகிறதா? என்பது பெரிய வாதமாக இருக்கிறது. பலரும் பல சான்றுகளைக் காட்டுவர்.  தைத்திங்களே! என்று ஒரு சாராரும் சித்திரைத் திங்களே! என்று ஒரு சாராரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

            தமிழ் மருத்துவர்கள் காலத்தையும் பருவத்தையும் முறையாக அறிந்தவர்கள். காலத்திற்கு ஏற்றவாறு உடம்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. காலத்திற்கும் இயற்கைக்கும் ஏற்ப மருத்துவம் காண்பதே தமிழ் மருத்துவம் என்பதால் காலம் மருத்துவத்தின் தேவை எனக்கருதி காலக்கணிதத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

            ஆண்டு ஒன்று பன்னிரண்டு மாதங்கள்!, இரண்டு மாதங்கள் கொண்டது பருவம் ஒன்று!, ஆறு பருவங்கள் கொண்டது ஆண்டு ஒன்று! எனக்கருதினர்.

முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்,கார், கூதிர் எனும் ஆறும் பருவங்களாம். மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை எனும் பன்னிரண்டு மாதங்களாம்.

                        ”ஈராறு திங்களையும் இவ்விரண்டாய் வில்முதலாய்
                        ஓராறு இருதுவாய் ஓதுவரே – சீரார்
                        இரும்பொழுதின் பேர்தான் இருபனி வேனில்
                        கருமுகிற் காலமெனக் காண்”
            பெரும்பொழுது பனியில்தான் தொடங்குகிறது. பனி என்பது ’வில் முதலாய்’ என்பதால் மார்கழியில் தொடங்குகிறது.

            ஆண்டின் தொடக்கம் மார்கழியில் தொடங்குவதாகக் கொண்டாலும் சூரியனின் வடதிசைச் செலவு தைத்திங்கள் முதல் நாளில் தொடங்குவதால், தைத்திங்கள் முதல் நாள் எனக் கொண்டுள்ளனர்.
           
அயனங்கள் தோன்றும் முறை

            பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும். அவ்வாறு சுற்றும் பூமியானது தன் அச்சில் செங்குத்தாகச் சுற்றாமல் சற்றுச் சாய்ந்து சுற்றுவதால் தான் சூரியன் வடக்கிலும் தெற்கிலும் செல்வது போலக் காணப்படும். இதனைக் கணித நூலார் வரக்குச் செலவு தெற்குச் செலவு என்பர். அவை ஒவ்வோர் ஆண்டிலும் தை, ஆடி மதங்களில் முதல் நாளன்று தொடங்கும்.

                                                ”சுற்றும் பூமி சூரியனைச்
                                                            சுற்றா மற்செங் குத்தாகச்
                                                சற்றுச் சாய்ந்து சுற்றுவதால்
                                                            தானே பானு வடக்கிரிந்தும்
                                                தெற்கிற் சார்ந்துந் தோற்றுமதைச்
                                                            செப்பும் ஆண்டின் இருசெலவாய்
                                                மற்றச் சோதி நூற்கணிதர்
                                                            மகரங் கடகம் அதன்முதலே.”

என்று தெளிவாகத் தெரிவித்திருப்பதால் ஆண்டின் தொடக்கம் தை மாதம் ஆடி மாதம் முதல் நாள் என்பது தெளிவு. ஆடியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளார்! ஏனெனில் ஆடி வித்தைக்கும் காலம். தை அறுவடையெனும் புது வரவுக்காலம். புது வரவை வரவேற்கும் காலமே புத்தாண்டின் தொடக்கம் என்பர்.

                                                            வெளியீடு

                                    ”வைத்தியத் திருப்புகழும் தனிப்பாடல்களும்”                                         
அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
            சித்த மருத்துவநூல் வெளியீட்டுக் குழு
இந்திய மருத்துவத்துறை இயக்குநர் அலுவலகம்
                        சென்னை – 600029

                        முதற்பதிப்பு: 1917

                        இரண்டாம் பதிப்பு: 1975