"அய்யாவழி"


தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் பச்சை பசேலாகக் காட்சித் தரும் செழிப்பானப் பகுதியில் சாமித்தோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாகப் பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வருணாசிரமம் என்னும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகத் தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் எனப் பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கச் சாதியினரைச் சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததைப் பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் எனத் தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமித்தோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்தப் பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கச் சாதியினர் கடுமையாக எதிர்த்தனர்.

பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணமானவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார்.

அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்


• பூசை செய்யக்கூடாது.
• பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
• யாகம், ஹோமம் கூடாது
• மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
• எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
• எந்த வழிபாடும் கூடாது
• ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
• காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
• மாலையிடுதல் கூடாது
• யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
• லஞ்சத்தை ஏற்காதீர்கள்
• ஆசைகளை துறந்துவிடுங்கள்.
• உண்மையாக இருங்கள்

இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.

அய்யாவழியின் முறைகள் மற்றும் இறையியல்:

"கலியென்பது எலியல்ல, கணையாழி வேண்டாமே" என கலி பற்றியும் அதை அணுகும் முறை பற்றியும் அகிலம் கூறுகிறது.

கலி (தீமை) என்பது எலி போன்ற உருவ அமைப்பு உடையதல்ல. அதனால் ஆயுதம் வேண்டாம். அன்பை அடிப்படையாக வைத்து ஆயுதமே கூடாது என மக்களுக்கு அன்பு போதனையை உருவாக்கியது தான் அய்யாவின் வழி.

"இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு.

அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில்

"அய்யாவழி" இந்துமதத்திலிருந்து முற்றிலும் எதிர்பாதையை மக்களுக்கு காட்டுகிறது. தாங்களை உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ""இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள்." என அய்யா சொன்னது இந்துமத வர்ணாஸ்ரம மனுதர்மத்தையும், அதன் வேதங்களையும் புறக்கணித்து புதிய பாதையை மக்களுக்கு தந்தது. கொடுமையான பார்ப்பனீய சட்டத்தை உடைத்து மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அய்யாவின் வழி. விடுதலைக்கான பாதைக்கு முதல் நிலை அச்சம் தவிர்ப்பது; அய்யாவழி அதை செய்தது.

தன்மானமும், சுயமரியாதையும்:

"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.
இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக:

அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அரச(அரசியல்) அடக்குமுறைக்கு எதிராக:

திருவிதாங்கூர் மன்னனை 'கலிநீசன்' எனவும், ஆங்கிலேயர்களை 'வெண்நீசன்' எனவும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. கலிநீசனை பிரதான அடக்குமுறையாளனாகவும், அவனே மக்களின் உழைப்பை சுரண்டும் ஊழியம், வரிகள், சாதி அடக்குமுறைகளை கட்டிக்காப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் "மன்னனின் ஆட்சியை அகற்றி விட்டு நாட்டை ஒரே குடையின் கீழ் ஆளப்போவதாக" அகிலத்திரட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றைய திருவிதாங்கூர் மன்னனின் சாதி அடக்குமுறைக்கு எதிராக எழுந்த குரலாக காணலாம். அய்யா வைகுண்டர் மீது மன்னனின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் வழி எங்கெல்லாம் அரச அதிகாரம் மக்களை அடக்குகிறதோ அங்கே மக்களுக்கு அரச அடக்குமுறையை எதிர்க்க மன உறுதியை அய்யாவழி தருகிறது.

பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிராக:

உழைக்கும் மக்களை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும் அய்யாவழியில் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இருந்த உழைப்பு அடிப்படையிலான அடக்குமுறைகளை எதிர்த்து 3 முழு பக்கங்கள் அகிலத்திரட்டில் கண்டிக்கப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் மற்றும் பிற வகைகளில் வாங்கப்பட்ட கொடுமையான வரிகளை எதிர்க்கிறது அகிலத்திரட்டு. "மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் வரி என்ற பெயரில் வசூலிக்கிற கொடுமையான நீசன்" என மன்னனை அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. "யார் உழைத்து வருமானம் சேர்க்கிறார்களோ அவர்களே அதை அனுபவிக்கட்டும்; வேறு யாருக்கும் அதை அனுபவிக்க அதிகாரமில்லை", "எந்த வரியும் இனிமேல் கொடுக்க அவசியமில்லை" என்கிறது அகிலத்திரட்டு. அந்த காலகட்டத்தில் சாணார் சாதி மக்கள் பனையேற பயன்படுத்தும் மிருக்குத்தடி என்கிற துணைக்கருவிக்கு கூட வரி கட்டவேண்டியது இருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக:

அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பூசாரிகளுக்கு கண்டனம்

"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.

விக்கிரக வழிபாட்டை மறுத்தல்:

மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க பூசாரிகளுக்கு உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.

அய்யா வழிமுறை:

அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.

ஆண்பெண் சமஉரிமை:

அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.

அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.

அய்யாவழி ஒரு தனிமதம்:

கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.

இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.

அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.

சமீபகாலங்களாக இந்துமதத்தில் ஒரு பிரிவு தான் அய்யாவழி என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்துமதத்தின்(வைணவ) சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த புதிய சமயங்களையும், வழிபாடுகளையும் (புத்தம், சமணம், நாட்டார் வழக்கியல் வழிபாடுகள், வள்ளலாரின் வழி, அய்யாவழி...) இந்துத்துவவாதிகள் ஒரே குடையின் கீழ் இந்து என முழக்கமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே.

எப்படி ஒரு கையின் விரல்கள் பல வடிவங்களில் பன்முக தன்மையுடன் இருக்கிறதோ அதுபோல பன்முக சமயங்கள் அதன் கூறுகளோடும், காலத்திற்கேற்ற மறுமலர்ச்சியுடனும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.

________

மனோன்மணியம் சுந்தரனாரின் நூற்றொகை விளக்கம்

முப்பால் மணி

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அன்றைய சென்னை மாகாணத்தில் கல்வித் துறையில் புகழ்பெற்று விளங்கிய சான்றோர்களில் முதல்வர். தமிழ் உலகில் புதிய சிந்தனையின் முன்னோடி இவர். தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மனோன்மணியம் என்னும் காப்பியம் தவிர 38 சூத்திரங்கள் கொண்ட நூற்றொகை விளக்கம் என்னும் நூலையும் தந்தவர். இந்நூல் பாக்களால் ஆனது. எல்லாம் தமிழில் முடியும் என்னும் பிற்கால எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும், இந்த நூல் வித்திட்டது எனலாம். 1885ஆம் ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய அறக்கட்டளை நூல் இது. அவரே உரை வரைந்து வெளியிட்டார். 38 சூத்திரங்களைக் கொண்ட இந்த நூல் அக்கால உயர்கல்விப் பாட நூல்கள் பற்றியதொரு தொகுப்பு எனவும் கொள்ளலாம்.

அன்று சமஸ்கிருதமும், பாரசீகமும் கல்வித்துறையில் கோலோச்சி வந்தன. ஆங்கில ஆட்சியில் மாணாக்கர்கள் Hamilton, Rhead, Mancil, Lekeey, Bakil, Stephan, Pane, Collin போன்ற ஸ்காட்லாந்து சிந்தனையாளர்கள் Hume, T.S.Mill, Spencer, Lekeey, Bakil,Stephen, Pane, Collin என்னும் நேர்காட்சியாளர்கள் Alfred Rushall, Valess, Hassli போன்ற உயிர் அறிவியலார், கான்ட் பார்க்கிலி, அலெக்சாண்டர் கேம்பர் பிரேசர், ஜேம்ஸ் மார்ட்டினோ போன்ற கிறித்துவ சிந்தனையாளர் யெகல் போன்ற மெய்யியலாளர், காப்ஸ் ஸ்பினோசா, புக்னர் போன்ற ஐரோப்பிய உலகாயதவாதிகள் நூல்கள் படிக்கப்பட்டன. இதனால் இளைஞர்களில் பலர் புற மதச் சார்பும், நேர்காட்சி வாத அறிவும் நாடி தம் சுயசமயத்தை நிராகரித்து நாத்திகர்களாக மாறிவருவது கண்டு சுந்தரனார் அஞ்சினார் (பக்கம் 76, 102). இவரைப் போலவே மனம் வாடிய மாயூரம் வேதநாயகனார் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதினார்.

இந்த நூலில் பரம்பொருள் பற்றிய உண்மை கூறும் நூல்களின் சிறப்பும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய சிற்றிதழ் நூல்களின் தேவையையும், நுண்ணறிவு உடையார்க்கு கலை நூல்களும் இன்றியமையாதது என கூறுகிறார். பரம்பொருள் பற்றிய பேரறிவு - பிரம்ம நிலை அடையக் கூடியதே என்று எடுத்துச் சொன்னதோடு இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதனின் அறிவு வளர கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என்று பல்வேறு துறைகளை அக்காலத்தில் வழங்கிய சொற்களைக் கொண்டு விளக்குகிறார். இது மட்டுமல்லாமல் மனிதனை மகிழ்விக்கும் இசை, ஓவியம், கவிதை போன்ற பலவற்றையும் விளக்குகிறார்.

மேல் உலக வாழ்வே உண்மையானது என்று வாதிக்காமல் இவ்வுலக வாழ்வில் மனிதன் பெறவேண்டிய அறிவு பற்றி நூற்றொகை விளக்கத்தில் விளக்குகிறார்.

தமிழக தத்துவ மரபில் நூற்றொகை விளக்கத்தின் நிலை

பண்டைய தமிழ் நிலத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலம், வேட்டை, கால்நடை மேய்ச்சல், அடிப்படையாகக் கொண்ட இனக் குழுவானது இருந்தது என்பதை அகமும், புறமும் காட்டுகின்றன. அகத்திலிருப்பது புறத்திலும், புறத்திலிருப்பது அகத்திலும் பிரதிபலிக்கக் கண்டன. மெய்யியல் அக்காலத்தில் இருந்திருக்கலாம். தொல்காப்பியம் காட்டும் அறமும், புறமும் புறநானூற்றில் "மண் தினிந்த நிலமும், நிலன் ஏந்திய விசும்பும்....." என்னும் பாடலும் இவ்வுண்மையை உணரச் செய்கின்றன. எனவே இயல் உலக - இவ்வுலக வாழ்வின் அடிப்படையிலேயே தத்துவமும் அமைந்து, அக்காலத்தில் இருந்த இனக்குழு சமூகத்தில் விளக்கம் பெற்றிருந்தது.

எனினும் தொல்காப்பியத்தில் காணும் அகப்பொருள் விளக்கம் தமிழனின் அறிவு வளர்ந்து மேல்நிலை அடைந்ததை புலப்படுத்துகிறது. இனக்குழுக்கள் இணைந்தும், அடக்கப்பட்டும் உழவுத் தொழிலும் அதனோடு உறவுடைய சில செயல்பாடுகளும் உருவாயின. அரசு அமைந்தது அடுத்து கடல்வழித் தடங்களும் கண்டு தமிழர் வாணிபம் செய்ய தலைப்பட்டனர். ஒருபுறம் கங்கை, மறுபுறம் மத்திய தரைக்கடல், வேறு ஒருபுறம் தென்கிழக்காசிய நாடுகள் இணைந்த வாணிபம் தமிழகத்தில் செழித்தது. நிலம், நீர்வழிப் பொருள்கள் சென்றன; வந்தன. இதே சமயத்தில் வடபுலத்தில் இருந்து சமணமும் பௌத்தமும் தமிழகம் வந்து இனக்குழு வாழ்வு நிலைக் கட்டத்தில் வினை நீக்க கருத்தை நீக்கி "விளக்கிப் பிறவா நிலை என்னும் இலக்கை மக்களிடை பரப்பின. தமிழக தத்துவ சிந்தனை மரபு முன்னேற்றம் அடைந்தது. பின் வந்த வேத மரபு அதுகாறும் இருந்து வந்த இனக்குழு கடவுள் வழிபாட்டை விளக்கிச் சொன்னது. ஆனால் தத்துவம் ஏதும் உருவாகவில்லை.

சமணமும் பௌத்தமும், வைதிகமும், இகவாழ்விலேயே உளவின. பின் இயற்கைக்கு அப்பாலான பரம்பொருள் (பேரறிவு) பற்றிய சிந்தனை தோன்றிற்று. காரணம் தமிழகத்தோடு வாணிபம் செய்து வந்த யூதர், எகிப்தியர், கிரேக்கர், எவனர், சிரியர், அப்பொழுது இயற்கைக்கு அப்பாலான பரம் பொருளைப் பற்றி பேசியதோடு அப்பாலைத் தத்துவ கருத்தியலையும், வடிவமைத்தனர். இந்த பின்புலத்தில் தான், இவ் உறவுகளின் பயனாகத்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள்,.... பிற பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எழுந்தன. அப்பாலை மரபு சார்ந்து தழுவி வைதிகமும், சைவமும், வைணவமும் வளர்ந்து, நிலைபெற்றன. குறிப்பாக பூதப் பொருள்களின் சேர்க்கை, பரம் பொருள்களின் கருத்தியல் வினைநீங்கிய பிறவா நிலை, என்னும் கருத்தமைவுகள் உருவாயின. (மணிமேகலை, காதை, 21, வரி, 92-102)

சங்ககாலத்தில் புவிமைய்யம் கண்ட இக் கொள்கை பிற்காலத்தில் விரிநிலை கண்டது. யூதர், எகிப்தியர், சிந்தனைகளும், கிரேக்கர் யவனர்களுடைய, பிளேட்டோ, கருத்தியலும் ஊடுருவின. வைதிக சிந்தனைகள் தாக்கப்பெற்றன. இதன் விளைவாக மயக்கவாதம் எனும் சங்கரின் அத்வைதம் பிறந்தது.

அதேபோது உலகாயதக் கருத்துத் துறையில் உலகாயுத சிந்தனைகளும், பௌத்தமும், சமணமும் இடம்பெற்றன. இவ்விரு பகுதியினரின் ஊடாட்டத்தால், வினை நீக்கத்திலிருந்து சிந்தனை, இம்மை, மறுமை என்னும் இருமை நீக்கத்துக்குச் சிந்தனை முன்னேறியது. இதன் விளைவாக உலக வாழ்வு பாவம் என்ற கருத்தும் உலகம் உண்மை என்ற கருத்தும், மோதத் தலைப்பட்டன. வினை நீக்கம் சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நாயன்மார்களும் நம்மாழ்வார்களும் வினை நீக்கத்திற்கு முதல் நிலை தந்தனர்.

இகவாழ்வு என்பது பாவத்தின் பார்ப்பட்டது பொய்யானது, மாயையன்று என்னும் கருத்து ஒருபுறமும், உண்மையானது என்பது மறுபுறமும் நின்று போராடின. இப்போராட்டம், ஆசிவகம், நியாய வைசேடிகம், சாங்கியம், என்பனவற்றைத் தாங்கிய சைவ, வைணவ, சங்கர நெறிகளும், நேர் எதிரான உலகாயுதமும், எதிர், எதிர் நின்றன.

இந்நிலையில் கி.பி. 1200-ற்றுக்கு பிறகு தென்னகத்தில் சித்த நெறியும், வடபுலத்தில், ஆசிவகமும் தோன்றின. மதுரை சேமமா நகர் சார்ந்த பட்டனார் பகவத்கீதையை மொழி பெயர்த்து உலகப் பொருள் அனைத்தும் பரம்பொருளின் சாயலே என்றக் கருத்தைப் பரப்பினார். இது வலிமையான அப்பாலை இயலுக்கு அடித்தளம் அமைத்தது. எல்லாம் மாயை என்னும் கருத்து வலுப்பெற்று ஆண்மீகத் தத்துவம் உருப்பெற்றது.

இந்தப் பின்புலத்தில் தான், 16ஆம் நூற்றாண்டில் தத்துவராயர் தோன்றி பரமாத்விதம் என்னும் கருத்தைப் பரப்பினார். அவர் கருத்துப்படி பரம்பொருள் ஒன்றே ஒன்று அதுவே பொருள்களில் எல்லாவற்றிலும் ஊடுருவி நின்று அவை தத்தம் பெயரையும், பண்பையும், தோற்றுவிக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் ஆவுடையக்காள் என்பார் பிறந்து சங்கர அத்வைதத்தை வெறுத்து அனுபூதி அத்வைதத்தைப் போதித்தார்.

தத்துவராயரும், ஆவுடையம்மாளும் பிறப்பால் பிராமணர்களே இருப்பினும் பொதுநோக்கு உடையவர்களாகவே கருதப்படுகின்றனர். பரம்பொருள், பிரம்மம் என்பதனை மறந்து உலகப் பொருள்கள் தற்சுதந்திரம் வேண்டி நிற்றலே, இயங்குதலே மாயை என்றன இவை. இருமை நீக்கத்திலிருந்த தமிழ் மெய்யிலானது முரண் இயக்கத்திற்கு முன்னேறியது.

இந்தப் பின்னணியில் தான் ஆங்கில ஆட்சி இங்கு நிலைக் கொண்டது. நேர்க்காட்சி வாதம் புதிய நிலைகளைத் தோற்று வித்தது. பரம்பொருளுக்கு முரணானது புறப்பொருள் என்னும் கருத்தியல் பயனியியல் வாதத்திற்கு இட்டுச்சென்றது. அதேப் போது இப்பிரபஞ்சத்தில் தோன்றும் அனைத்துக்கும், இயக்கவியல் விளக்கமளித்தது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இதனை விளக்குகிறார்.

1885ஆம் ஆண்டு இந்த நூல் வெளிவந்த நேரத்தில் வேதியியல் அறிவியலால், 47, மூலகங்களைக் கண்டறிந்திருந்தனர். இவற்றுக்கு மூலம் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தது. பஞ்சபூதங்களும், பல மூலகங்களால் ஆனவை, தீ அடிப்படையானது அன்று எனவும் அறியப்பட்டது. இப்பின்புலத்தில் தான் நீராவி, மின்சாரம் மின்தந்து, ஆகியவை கண்டறியப்பட்டன. சூரியக் குடும்பத்தையும், அது இயங்கும் விதிகளையும் கண்டறிந்தார். அதே போன்று உயிர் நூலாரும் உலகில் பல்வேறுப் பகுதிகளுக்குப் பயனம் சென்று புதிய புதிய உயிரினங்களைக் கண்டறிந்தனர். பல்வேறு மொழிகளும் கண்டறியப்பட்டு பயிலப்பட்டன. வடமொழி, தென்மொழி என வகுக்கப்பட்டதுடன் மொழியியல் என்னும் அறிவியல் துறைப் பயில வழிபிறந்தது.

உளநூல், தத்துவநூல், பயிற்சி வடிவமைந்தது. உள்ளம் வேறு, கடவுள் வேறு, என்னும் ஐரோப்பிய கருத்தியல் பரவிற்று இதனால் பிரம்மம், பரமிரம்மம், கடவுள், பரம்பொருள் என்பன பற்றிய அய்யப்பாடுகள் தோன்றின. எனவே மேலைய நாட்டு இயலுக்கும், இந்திய நாட்டு இயலுக்கும், இடையே மோதல் ஏற்பட்டதோடு இந்திய மாணவர்கள், இந்தியத் தத்துவக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள். இது பற்றிய குறிப்புக்கள் நூற்றொகை விளக்கத்தில் காணக் கிடைக்கின்றன.

வடமொழி, தென்மொழி, பூர்வவீமாம்சை, பல்வேறு வகை வேதங்கள் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டு விசாரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.

உலகப் பொருள்கள் இயக்கத்தில் உள்ள என்றுக் கூறுகிறார் இதன் வழி விஞ்ஞானங்கள், எல்லாவற்றின் வளர்ச்சிக்கும் வித்திட்டார். ஆன்ம அறிவு என்பது நியாய வைசேடிகம், பௌத்தம், சமணம் ஆகியவற்றால் போற்றப்படுகிறது. தான் பிறர் என்னும் கருத்தியல், நம்மாழ்வார், தருமகீர்த்தி, அகளங்கர் என்னும் அறவை வாதிகள் கூறியுள்ளது கருதத்தக்கது. நேர்காட்சி வாதிகள் கூறிய சுயசுதந்திரம் என்பது அகவய ஆன்மக் கருத்தியலுக்கு நேர் எதிரானது. அதே போது சுந்தரம் பிள்ளை ஆதரிக்கும் ஆத்ம அறிவு விரிந்து பரந்த தன்மையது, தன்னலமற்றது, தமிழக தத்துவ வரலாற்றில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பொதுநூல், மதநூல், கலைநூல் என்னும் மூன்றும் இணைந்து இந்நூலில் ஒன்றாகமைகின்றது. தருக்க நூல் பற்றிக் கூறும்போது அதனை உண்மையைக் காண்பதற்கான ஓர் வழி என்று மதிப்பிட்டு பிரத்தியட்சத்தைப் பின் தள்ளி அனுமானத்தைச் சிறப்பிக்கிறார். 1920-க்குப் பிறகு தமிழ்த்துறை சிக்கெடுக்கப்படாத இயக்கமற்ற கல்லாகிவிட்டது.

இந்த நிலை மாற்றம் காணும் படியாகச் சிக்கறுத்து சீர்திருத்தப் படவேண்டும் என்பதைச் தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் நிறுத்தப்பட வேண்டியது ஆகும்.

எதைப் பற்றியேனும் ஆய்தல் யார்க்கும் பழியன்று. ஆய்தற்குரிய ஆள்வினையின்மை பழி என இவர் இடித்து உரைத்ததானது பிற்காலத்தில் நாட்டார் வழக்காற்றியல் தமிழ் நாட்டில் வளர்வதற்கு ஊற்று ஆகும்.

இதனாலெல்லாம் நூற்றொகை விளக்கம் என்னும் இந்த நூல் சகாப்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பேரா. பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய ஒப்பற்ற நாடகம் மனோன்மணீம், தமிழ் மக்களால் நன்கு பயிலப்பட்டது. அதில் அவர் எழுதிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் தமிழ் விழாக்களில் நாள்தோறும் இசைக்கப்படுகின்றது. இந்த நூற்றொகை விளக்கும் நூலானது அந்த அளவிற்குப் பயிலப்படாதது தமிழ் மக்களின் தவக்குறைவே ஆகும். இந்த நூல் மேலும் மேலும் ஆழ்ந்து கற்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் சுதேசியப் பண்பாட்டினை வளர்ப்பதற்கான ஆற்றல் உடையது.

பொருளை தாமஸ் ஹப்ஸ் (1588-1679) நூற்றொகை விளக்கத்தில் 34 ஆம் சூத்திர விளக்கவுரையில் குறிக்கப்படும் ஆங்கில நூலோரில் தலைமையானவர்.

பொருளை முதன்மையாகக் கொண்ட பூதவாதி புலன் அறிவே ஆன்ம அறிவு ஆகிறது என்ற கருத்தியல் கொண்டவர். அவரைப் பற்றிய தமது ஆய்வுரையைப் பேரா. சுந்தரம் பிள்ளை 1885-இல் இங்குப் பதிவு செய்தார். அப்போதைய பொருண்மை வாதம் யாந்திரிக வயப்பட்டு இருந்ததைச் சரியாகவே மதிப்பிட்டார்.

ஹெடோனிசமும், சர்வாதிகாரமும் நீங்கிய உள்ளார்ந்த அகவயநியதி உடைய ஆட்சியை முன்னுரைக்கிறார். இந்தியச் சொற்களில் கருணை அருள்மயமான பூரணத்தின், தெய்வத்தின் வழி அமைந்த ஆட்சி ஆகும். இது மனோன்மணீயத்தின் செய்தியும் கூட ஆகும். இது போன்ற ஓர் ஆய்வுரையை அப்போது பேரா. பெ. சுந்தரம் பிள்ளை அளித்ததானது தமிழகத்தின் வியப்பார்ந்த அறிவு மலர்ச்சி ஆகும். உலகத்தரம் வாய்ந்தது.

வாஸ்து



அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!


வாஸ்து சாஸ்திரத்தை போதிப்பவர்களையும் அதை கடைபிடிப்பவர்களையும் நையாண்டி செய்யும் நோக்கம் இந்தக் கட்டுரைக்கு இல்லை. இதை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்களுக்கும் வீணாய் தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கும், தங்கள் பெயர்களில் க்,ச்,ட்,த் என்று சேர்த்துக் கொண்டு புகழ் தேடப் பார்க்கும் புள்ளி ராஜாக்களுக்கும் தான்!


ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஏழாம் வீடு, எட்டாம் வீடு, ஒன்பதாம் வீடு, குரு, சனி, சுக்ரன், அவன் இவனைப் பார்க்கிறான், இவன் அவனைப் பார்க்காமல் இருக்கிறான், அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றெல்லாம் குழப்பப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த மகா ஜனங்கள் இப்போது காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாஸ்து சாஸ்திரத்தைத் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஒரு ஆலமரத்தை சுற்றியோ, கோவிலில் விளக்கேற்றியோ, புற்றுக்குப் பால் வார்த்தோ 'இனி நல்லது நடக்கும்' என்று மனதுக்குள் சமாதானப்பட்டுக் கொண்டவர்கள், வீட்டில் இருக்கிற வாசலை மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிய வாசலை உருவாக்குகிறார்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள், போகிற போக்கில் மேல் மாடிக்கு செல்ல படிகளே இருக்கக் கூடாது என்கிற விதத்தில் இது போய் முடிய வாய்ப்புகள் இருக்கின்றன.


வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான் அது. எப்போதும் இன்பம் இருந்தால் திகட்டிப் போகும் என்பதால் துன்பங்களும் சேர்ந்து அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது தெரிந்த விஷயம் தானே? மேடு இருக்கும் போது மீசை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, பள்ளம் வரும் போது தடுமாறிப் போகிறார்கள். இன்பம் வந்த சமயம் 'துன்ப வேளையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று முன்னேற்பாடாக திட்டங்கள் தீட்டி எந்நாளும் பொன்னாளாய் களியாட்டம் போடுவதை விடுத்து, இன்பத்தில் கண்கள் மூடி அனுபவித்து துன்பத்தில் கண்களையே மூட முடியாமல் உழல்கிறார்கள்.


துன்பம் வரும்போது தான் எல்லோருக்கும் இறைவன் இருக்கும் உண்மையே தெரிய வருகிறது. கோவில் வாசலில் ஒரு அவசர என்.சி.சி. ஸ்டைல் சல்யூட் அடித்து சென்று கொண்டிருக்கிறவர்கள், கோவில் உள்ளே போய் சரியாக எண்ணிப் பார்த்து ஒன்பது தடவை சுற்றுகிறார்கள். எட்டு தடவை அல்லது பத்து தடவை என்றால் கிரகங்கள் ஏமாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன என்று சரியாக 'எண்ணி' கர்மம் 'துணிகிறார்கள்'!


பத்து வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வாஸ்து சரியில்லை என்று காரணம் காட்டி வீட்டில் திருத்தங்கள் செய்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காலம் அதே வீட்டில் நீங்கள் வசித்த போது உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அருமையான பலன்களை ஒரு சில நிமிடங்களில் மறந்து விடுவது ஏன்? 'வருகிற பணம் எல்லாம் எங்கு போகிறது என்று தெரியாமல் போய்விடும். செலவு கையைக் கடிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள ஒரு அறை' என்று சொல்லப் படும் போது, அதற்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்கள். இருக்கிற செலவோடு இதுவும் சேர்ந்து அதிக செலவு என்று மனதிற்குத் தோன்றுவது கிடையாது. வருகிற பணம் எல்லாம் போய்விடுகிறது என்பதற்கு முதல் முக்கிய காரணம் சரியாகத் திட்டமிடவில்லை என்பது தானே? அப்படி ஏதாவது திருத்தம் செய்தால் தான் இந்த நிலை மாறும் என்றால் அதை செய்ய வேண்டியது வீட்டின் மேல் மாடியில் அல்ல, உங்கள் மேல் மாடியில் தான், அதாவது உங்கள் மூளையில்! வீட்டின் மூலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.


"நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உங்கள் பெயர் 'வ' அல்லது 'வா' அல்லது 'வி' என்கிற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் எழுத்து கொடுப்பது போல் சொல்வார்கள். 'பெயரை மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள், உங்கள் புகழ் ஓகோவென உயர்ந்து போகும்' என்பார்கள். நீங்கள் பிறந்து ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் ஒரு பெயருடன் வாழ்ந்த பிறகு, திடீரென்று ஒரு நாள் இந்த மாற்றம் தேவை தானா? பெயர் மாற்றத்தை விடவும் பெயருக்குள்ளேயே செய்யும் மாற்றங்கள்- ஆகா, பெயரில் இருக்கும் எழுத்துகளின் கூட்டுத் தொகையை அதிகமாக்க எழுத்துகளை அதிகமாக்குவார்கள். இதில் வேறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து அதைக் கூட்டும் போது உங்கள் பிறந்த தேதிக்குத் தோதாக அது இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.


எழுத்தாளர்கள் வைத்துக் கொள்ளும் புனைப் பெயர் போல் ஒவ்வொருவருடைய இயற்பெயரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. சில சமயம் நான் நினைப்பதுண்டு - இந்த புனைப் பெயர் என்கிற வார்த்தையில் முதல் எழுத்தை மாற்றி, 'பூனைப் பெயர்' என்று மாற்றினால் அந்த வார்த்தைக்கு இன்னும் மவுஸ் [எலி அல்ல!] அதிகரிக்குமோ என்று!


இந்திய வாஸ்து செய்து அலுத்து விட்டது என்று இப்போது சீனா, ஜப்பான் என்று மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை இறக்குமதியும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.


ஏதோ வாயில் நுழையாத ஒரு பெயரை சொல்லிவிட்டு அதன்படி மீன் தொட்டியை வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் ஓடிப் போகும் என்று ஒருவர் குறிப்பிட்டார். வீட்டில் உள்ள தீயசக்தி என்பதைத் தன் மாமியாருக்கு உருவகப் படுத்திக் கொண்டாரோ என்னவோ, அந்த்ப் பெண்மணி உடனே மீன் தொட்டி வாங்கும் காரியத்தில் இறங்கிவிட்டார். ஏற்கனவே துண்டு விழும் பட்ஜெட்டில் இன்னும் ஒரு பத்து பதினைந்து துண்டுகள் விழ வைத்து மீன் தொட்டி வாங்கிவிடத் திட்டம் போட்டார்.


மேல்மாடியில் படிக்கட்டுகள் முடிகிற இடத்தில் இடப் பக்கம் இது வைக்கப் பட வேண்டும் என்று இடம் குறிக்கப் பட்டது. "வரவேற்பறையில் வைக்கலாமே?" என்று அவர் சந்தேகம் கேட்க, நம் வெளிநாட்டு வாஸ்து வல்லுநர் மறுத்து விட்டார். "அது தான் சரியான இடம். உங்கள் மனதிற்கு இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த எல்லா கவலைகளும் பறந்தோடி விடும். தீய சக்திகள் எல்லாம் படிக்கட்டுகளில் இறங்கி வீட்டை விட்டு மறைந்து விடும்" என்றெல்லாம் சொல்லப் போக, ஒரு குறிப்பிட்ட நாளின் மாலை நேரம் மீன் தொட்டி வீட்டில் வந்து இறங்கியது. மன்னிக்கவும், மேல் ஏறியது.


"ஆகா, என்ன அழகாக இருக்கிறது! இதில் தண்ணீர் ஊற்றி மீன்களையும் விட்டு விட்டால் இன்னும்அழகு கூடிப் போகும்!" என்று திருஷ்டி கழித்தார்.


தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு நேரம் எல்லாம் பார்த்து ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்தார்கள். பார்ப்பதற்கு ஒரு சின்ன தொட்டி போல் தெரிந்த அதில் இவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியுமா என்று வியக்க ஆரம்பித்தது குடும்பம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து லிட்டர் தண்ணீர் ஊற்றப் பட்டதும், தொட்டி நிரம்பிப் போனது.


தீய சக்திகள் இன்றைக்கே போய்விடுமா? அல்லது மீன்கள் தொட்டிக்குள் வந்த பிறகு தான் போகுமா என்று புதிய குழப்பத்துடன் எல்லோரும் தூங்கப் போனார்கள்.


இரவு இரண்டு மணி இருக்கும். டம்மென்று ஒரு பெரும் சத்தம். சலசலவென்று குற்றால அருவிநீர் மேலிருந்து கீழ் விழுவது போல் ஒலி! குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த கோலாகலக் காட்சியைக் கண்டார்கள்.


மீன் தொட்டி விரிசல் கண்டு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் அதிபயங்கர வேகத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்!


விஷயத்தைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம். எல்லோரும் கண்களின் கீழே புதிதாகக் கரு வளையங்கள் மாட்டியிருந்தார்கள்!


"எழுபது லிட்டர் தண்ணீர் இல்லையா? எல்லாம் சுத்தம் செய்து முடிக்க காலை ஏழு மணி ஆகி விட்டது! தூக்கமே இல்லை!" என்று வருத்தப் பட்டுக் கொண்டார் அந்தப் பெண்மணி.


"சும்மாவா? தீய சக்திகள் வெளியேறும் போது இது மாதிரி எல்லாம் ஏதாவது செய்து விட்டுத்தான் வெளியேறும். நான் ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்!" என்று சமயம் தெரியாமல் நான் சொல்ல, என்னையே ஒரு தீயசக்தி போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி!

நன்றி: http://tamil.sify.com/

செம்மொழி

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின், பல பண்பாடுகளின், பல திணை நிலங்களின் சங்கமம்.

திராவிட மொழிகளுக்கென்று குடும்பம் உண்டு. ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளின் மூல மொழிகளுடைய எண்ணிக்கையை ஆய்ந்தால் சில நூறு மொழிகள் பட்டியலிடப்படலாம். அது போன்ற பட்டியலில் இரு பிரிவுகள் காணப்படும்.

1.இயற்கை மொழி
மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி.

2.செயற்கை மொழி
ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி.

இவ்வாறு தான் இன்று நூற்றுக்கணக்கான (மூல மொழிகளிலிருந்து) இயற்கை மொழிகளிலிருந்து கிளைத்து செயற்கை மொழித் தகுதியுடன் இருப்பவை பல்லாயிரம் மொழிகளாகும். திராவிட இயற்கை மொழிக் குடும்பமும் அவற்றில் ஒன்று. உலகின் தொன்மையான மொழிக் குடும்பம் என்ற பெருமையும் இவற்றிற்கு உண்டு.

திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக இருப்பது தமிழ் மொழி. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 22. இதில் இலக்கியத் திறனுள்ள மொழிகள் இலக்கியத்திறன் இல்லா மொழிகள் என இருபிரிவுகள் உள்ளன.

பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் தொடங்கி மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி திராவிட இன மக்கள், தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம், கேரள எல்லைகள் மற்றும் மலைகளின் மீது வாழும் பழங்குடி இன திராவிடர்கள். தெற்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜீ தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கை (ஈழம்) எனப் பல்வேறு பகுதிகளில் திராவிட இன மொழிக் குடும்ப மக்கள் வாழ்கின்றனர்.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பவை இலக்கியத் திறன் பெற்றவை. இலக்கியத் திறன் இன்றி பேச்சு வழக்கில் பயன்பாட்டிலுள்ள திராவிடக் கிளை மொழிகள் கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி, முதலான மொழிகள் பலவும் வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது.

தமிழகம், கன்னட நாடு, தெலுங்கு நாடு மற்றும் மலையாள நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் வாழ்ந்து வரும் பழங்குடி திராவிடர்கள் தோட, கோத், படக, கேடகு, துளு முதலான தமிழின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். இவற்றில் துளு மொழிக்கு தற்போது வரிவடிவமும் இலக்கியங்கள் படைப்பாக்கமும் தொடங்கியுள்ளது.

இவ்வாறு திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழியான தமிழ் தோன்றி நின்று நிலைபெற்று செழிந்திருப்பதால் செம்மொழி எனும் தகுதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே சீனம், ஹீப்ரு, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை இத் தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவில் செம்மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது.

உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன.

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.

தகுதிகள்
செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.
தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.
இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்

நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்

செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர்.

புதுக்கோட்டை சிவகங்கை? இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 96 ஊர்களைத் தங்களின் இருப்பிடமாகக் கொண்ட இவர்கள் தற்போது செட்டிநாட்டில் எழுபத்தைந்து ஊர்களிலும தமிழகம் முழுவதிலும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது மருந்துவணிகம், தாள்வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர்.

இவர்களின் முறைப்பெயர்கள் அனைத்தும் தமிழடியானவை. அம்முறைப்பெயர்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன.
அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.

பொதுப்பெயர்கள்

நகரத்தார் மரபு ஆண்களை- செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும் பெண்களை- ஆச்சி என்றும் பொதுப்பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர்.

இவர்களுக்குள்ளும் இப்பொதுப்பெயர் நிலவி வருகின்றது.அம்மாள் என்று மற்ற குலங்களில் அழைக்கப்பெறும் பெண்பால் பொதுப்பெயர் இக்குலத்தில் ஆச்சி என அழைக்கப் பெறுவது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது.

செட்டியார், நகரத்தார் என்ற ஆண்பாற்பெயர்கள் அவர்களின் குலம் குறித்தமைந்த பெயர்களாகும். ஆனால் ஆச்சி என்ற பெண்பாற்பெயர் பெண்களுக்கு வழங்கப்பெறுவது வரலாற்றறு அடிப்படையானது ஆகும்.

ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம் மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.

இப்படி வேற்று ஆயத்தில் இருந்து பெற்ற பெண் என்ற குறிப்பை உட்கொண்டு வேற்று ஆயத்தாள் என்ற பெயர் அப்பெண்களுக்கு வழணங்கப்பெற்று ஆச்சி என்று மருவி வந்திருக்கலாம் என்பது ஒருவகை. காலப்போக்கில் மருத நில மக்களான வேளாண் குலத்தவரே முல்லை நிலத்தார் செய்யும் தொழில்களான மாடு வளர்த்தல், பால் தயிர் விற்றல் முதலான தொழில்களைச் செய்து வந்ததால் ஆயர், ஆய்ச்சியர் என்ற முல்லை நிலப்பெயர்கள் மருத நிலத்தார்க்கு வழங்கப்பட அக்குலம் சார் பெண்களைப் பெற்றதனால் நகரத்தார் வேளாளப்பெண்களை ஆச்சி என அழைத்திருக்கவேண்டும். இவ்வாறு நகரத்தார் குலப்பெண்கள் ஆச்சி
எனப்பட்டிருக்கலாம் என்பது இன்னொருவகை. எவ்வகையாயினும் ஆச்சி என்ற பொதுப்பெயர் நகரத்தார் இனத்துப் பெண்களுக்கான தனித்த பெயராக வழங்கி வருவது கருதத்தக்கது.

தற்போது ஆச்சி மோர், ஆச்சி சம்பார்பொடி ஆகியன விற்பனைக்கு வருகின்றன.

அவைகள் செட்டிநாட்டு சமையல் கருதி தயாரானவை என்பதை மறைமுகமாகக் காட்டிநிற்கின்றன. ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் குல இதழ் தற்போது வெளிவந்து கொண்டுள்ளது. இவற்றின் வழி ஆச்சி என்றபெயர் பெறும் சிறப்புக்களை உணரமுடியும்.

குடும்பப் பெயர்கள்

இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான கட்டமைப்பின; காரண காரியம் மிக்கன; ஒரே அமைப்பின. அவற்றில் சில பெயர்கள் இங்குக் காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப் பெறுகின்றன.

தந்தை- அப்பச்சி எனவும் தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப்பெறுகின்றனர். மகன், மகள் பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி(மகன் பெண்டிர்) என அழைக்கப்பெறுகிறhள். பெண்டிர் என்ற சொல் பெண்பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும். பெண்டிர் என்றால் பெண் எனப்பொருள்படும் ;. இச்சொல் மரியாதைப் பன்மை கலந்த சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத் தாரிடம் உள்ளது என்பதை உணரமுடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை? மருமகன் எனப்படுகின்றார். இவைபோல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.

அண்ணன்- அண்ணன், அண்ணன்மனைவி- அண்ணமிண்டி(அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பிமனைவி- தம்பியொண்டி(தம்பி பெண்டிர்), பேரன்-பேரன், பேரன்மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான், மாமாமனைவி- அம்மாம்மிண்டி(அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை? அத்தைமகள்- அயித்தியாண்டி( அத்தையாள்பெண்டிர்), கணவனின்தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்- கொழுந்தனாவண்டி(கொழுந்தனார் பெண்டிர்)என்பன ஒரே அமைப்பின. இவற்றில் பெண்டிர் என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றhர்போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இன்னும் சில குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற அம்மா- ஆயா எனவும், அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா ( அப்பனைப் பெற்ற ஆத்தாள்) எனவும் அழைக்கப் பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற தாத்தா- ஐயா என்றே பொதுப்பெயரால் அழைக்கப்பெறுகிறhர்.

மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன எதிர் உறவுமுறையினரைக் குறிக்கும் பெயர் களாகும். இவை தவிர மற்றெhரு பெண்ணின் கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும் உண்டு.

கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன் என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின் திரிபாக இதனைக் கொள்ளலாம்.

மகனுக்கு அவனின் தந்தைவழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா(ஆத்தாள் ) அழைப்பது மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ, வேறு ஒரு பெயர் கொண்டோ அழைப்பது முறைமையாக உள்ளது. அதுபோலவே அப்பத்தா பெயரை மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக்குறைவு என்பதால் வேறுபெயர் கொண்டோ அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.

இதே போல இரண்டாவது மகன், மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப்படுகையில் அதனை அழைப்பது மரியாதைக்குறைவு எனக்கருதுவதால் கணவனும் வேறுபெயர் இட்டு அழைப்பதும் வழக்காக உள்ளது. எனவே நகரத்தார்குல எல்லா பிள்ளைகளுக்கும் இருபெயர்கள் இருப்பது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது.

இவ்விருபெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப்பெறுகின்றன என்பது குறிக்கத்தக்கது.

அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம் பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொதுவழக்காகும். வயதில் குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொதுவழக்காகும். வயதில் மூத்த பெண்பிள்ளைகளை ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண்பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொதுவழக்கிற்கு உட்பட்டதே ஆகும். இவ்வழக்குகள் செட்டிநாட்டுப்பகுதிகளில் வாழும் பிற இனத்தாரிடத்திலும் காணப்பெறுகின்றன.

மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான், மைத்துனன் என அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும், பிற குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மையினவே.

மேலும் முறையினர் பலராக இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்முறை இவர்களிடம் காணப்பெறுகின்றது.

எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய ஆயா; சின்ன ஆத்தாள், பெரிய ஆத்தள் முதலியனவற்றைக் காட்டலாம்.

நெருங்கிய உறவினர் பெரியப்பா, சித்தப்பா போன்ற தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினர்கள் வளவினர் எனப்படுகின்றனர். வளவு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் அனைவரும் ஒரு வளைவிற்குள் வாழ்ந்தனர் என்ற அடிப்படையில் உருவான வளைவு என்ற சொல்லே பின்னர் வளவு என மருவியது என்பர் . இதனடிப்படையில் தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினரைக் குறிக்கும் சொல் வளவினர் ஆயிற்று.

தாய் வழிப்பட்ட நெருங்கிய உறவினர் தாயபிள்ளைகள் என அழைக்கப் பெறுகின்றனர். பெரும்பான்மை இச்சொல் தாய் வழிப்பட்ட உறவினரைக் குறித்தபோதும்- சிறுபான்மை தந்தை உறவினர்க்கும் உரிய தாகின்றது. தாயபிள்ளைகள் என்ற இச்சொல் தூய தமிழ் அடிப்படையில் அமைந்த காரணகாரியமிக்க இணைப்புச்சொல்லாகும். இச்சொல் பங்காளிகள் அல்லாத உறவுமுறையினர்க்குரியதாகும்.

தூரத்து உறவினர்

தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள் உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக்கொள்கின்ற பங்காளிகள் என்பனவாகும்.

பங்காளிகள்

பங்காளிகள் என்போர் தந்தைவழியில் உறவுமுறையினர் ஆவர். இவர்கள் திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குலமுறையினரிடம் நடைபெறhது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் பங்காளிகள்

கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது நகரக்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர், நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில், வேலங்குடி என்பனவாகும்.

இச்சிவன்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். பலஊரினர் ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில்பங்காளிகள் என்னும் உறவாகின்றது.

ஊர்பங்காளிகள்

ஓரூர் சார்ந்த நகரத்தார்கள் தம்மை ஓரூர் பங்காளிகள் எனப் பெருமையோடு அழைத்துக்கொள்ளுகின்றனர். வெளியூர்களில் வேலையில் அமர்ந்த நகரத்தார் பெருமக்கள் ஊர் சார்ந்து ஒருமைப்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது. வழி, வழி மரபாக வாழ்ந்த இவ்வூர் இணைப்பு தவிர, வாழும் ஊர்களிலும் இம்முறை தொடர்கின்றது. எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரில் வாழும் பல ஊர் நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து நகரத்தார் சங்கம் என்ற அமைப்பைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ளும்போது அவர்கள் கோயில், மரபு தாண்டி மற்றொரு உறவுமுறைக்குள் நெருக்கமாகின்றனர். இவ்வுறவுமுறையே தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுத் திகழ்கின்றது. நகரத்தரார் சங்கங்கள் மூலமாக உலக அளவில் கூட பல ஊர்களில் நகரத்தார்கள் ஒருங்கிணைகின்றனர். இச்சங்கங்கள் மூலமாக அவர்கள் பல அறப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இவ்வாறு கூட்டம் கூட்டமாக- வளவு அடியாகவும், கோயிலடியாகவும், மரபூர் அடியாகவும், வாழுமமூர் அடியாகவும் வாழும் முறைமை இச்சமூகத்தாரின் இனக்கட்டுமானத்திற்கு இன உணர்விற்கு எடுத்துக்காட்டாகின்றது. எனினும் இவர்களின் இனஉணர்வு மென்மையானது மேன்மையானது என்பதும் இங்கு எண்ணத்தக்கது.

புள்ளி

புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும். திருமணமான நகரத்தார் ஆண்பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்பெறுகின்றனர். இதன்பின் இவர் ஊர்ப் பொதுக்காரியங் களுக்கான புள்ளிவரி கட்டவேண்டும். திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் தனிக் குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும். அவர் பெயரில் மொய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள் மிகப் பொருளுள்ளதாகின்றது.

புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி வாழும் நிலையில் அவர் அரைப்புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன அரையளவில் பெறப்பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர் ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார். சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும்
இளைஞர்கள் இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது. இவ்வாறு நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரணகாரியமிக்க இனஉணர்வுடைய முறைப்பெயர்களை அமைத்துக் கொண்டு தம் பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக் காத்து வருகின்றனர்.
--

நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்


செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர்.

புதுக்கோட்டை சிவகங்கை? இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள
96 ஊர்களைத் தங்களின் இருப்பிடமாகக் கொண்ட இவர்கள் தற்போது செட்டிநாட்டில் எழுபத்தைந்து ஊர்களிலும தமிழகம் முழுவதிலும் பரவி வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது மருந்துவணிகம், தாள்வணிகம்
முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த் தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர்.

இவர்களின் முறைப்பெயர்கள் அனைத்தும் தமிழடியானவை. அம்முறைப்பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர் களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப்பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.

பொதுப்பெயர்கள்

நகரத்தார் மரபு ஆண்களை- செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும் பெண்களை-
ஆச்சி என்றும் பொதுப்பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர்.

இவர்களுக்குள்ளும் இப்பொதுப்பெயர் நிலவி வருகின்றது. அம்மாள்
என்று மற்ற குலங்களில் அழைக்கப்பெறும் பெண்பால் பொதுப்பெயர் இக்குலத்தில் ஆச்சி என அழைக்கப்பெறுவது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது.

செட்டியார், நகரத்தார் என்ற ஆண்பாற்பெயர்கள் அவர்களின் குலம் குறித்தமைந்த பெயர்களாகும். ஆனால் ஆச்சி என்ற பெண்பாற்பெயர் பெண்களுக்கு வழங்கப் பெறுவது வரலாற்றறு அடிப்படையானது ஆகும்.

ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள்
வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம்
மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.

இப்படி வேற்று ஆயத்தில் இருந்து பெற்ற பெண் என்ற குறிப்பை உட்கொண்டு வேற்று ஆயத்தாள் என்ற பெயர் அப்பெண்களுக்கு வழணங்கப்பெற்று ஆச்சி என்று மருவி வந்திருக்கலாம் என்பது ஒருவகை. காலப்போக்கில் மருத நில மக்களான வேளாண் குலத்தவரே முல்லை நிலத்தார் செய்யும் தொழில்களான மாடு வளர்த்தல், பால் தயிர் விற்றல் முதலான தொழில்களைச் செய்து வந்ததால் ஆயர், ஆய்ச்சியர் என்ற முல்லை நிலப்பெயர்கள் மருத நிலத்தார்க்கு வழங்கப்பட அக்குலம் சார் பெண்களைப் பெற்றதனால் நகரத்தார் வேளாளப்பெண்களை ஆச்சி என அழைத்திருக்கவேண்டும். இவ்வாறு நகரத்தார் குலப்பெண்கள் ஆச்சி எனப்பட்டிருக்கலாம் என்பது இன்னொருவகை. எவ்வகையாயினும் ஆச்சி என்ற
பொதுப்பெயர் நகரத்தார் இனத்துப் பெண்களுக்கான தனித்த பெயராக வழங்கி வருவது கருதத்தக்கது.

தற்போது ஆச்சி மோர், ஆச்சி சம்பார்பொடி ஆகியன விற்பனைக்கு வருகின்றன. அவைகள் செட்டிநாட்டு சமையல் கருதி தயாரானவை என்பதை மறைமுகமாகக்
காட்டிநிற்கின்றன. ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் குல இதழ் தற்போது வெளிவந்து கொண்டுள்ளது. இவற்றின் வழி ஆச்சி என்றபெயர் பெறும் சிறப்புக்களை உணரமுடியும்.

குடும்பப் பெயர்கள்

இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான கட்டமைப்பின;
காரண காரியம் மிக்கன; ஒரே அமைப்பின. அவற்றில் சில பெயர்கள் இங்குக்
காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப்பெறுகின்றன.

தந்தை- அப்பச்சி எனவும் தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப்பெறுகின்றனர். மகன்,
மகள் பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி(மகன் பெண்டிர்) என அழைக்கப்பெறுகிறhள். பெண்டிர் என்ற சொல் பெண்பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும். பெண்டிர் என்றால் பெண் எனப்பொருள்படும் ;. இச்சொல் மரியாதைப்பன்மை கலந்த சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத்தாரிடம் உள்ளது என்பதை உணரமுடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை? மருமகன் எனப்படுகின்றார். இவைபோல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.

அண்ணன்- அண்ணன், அண்ணன்மனைவி- அண்ணமிண்டி(அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பிமனைவி- தம்பியொண்டி(தம்பி பெண்டிர்), பேரன்-பேரன், பேரன்மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான், மாமாமனைவி- அம்மாம்மிண்டி(அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை? அத்தைமகள்- அயித்தியாண்டி( அத்தையாள்பெண்டிர்), கணவனின்தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்-
கொழுந்தனாவண்டி(கொழுந்தனார் பெண்டிர்) என்பன ஒரே அமைப்பின. இவற்றில் பெண்டிர் என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றார்போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இன்னும் சில குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற
அம்மா- ஆயா எனவும், அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா ( அப்பனைப் பெற்ற
ஆத்தாள்) எனவும் அழைக்கப் பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற
தாத்தா- ஐயா என்றே பொதுப்பெயரால் அழைக்கப்பெறுகிறார்.

மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன எதிர் உறவுமுறையினரைக் குறிக்கும் பெயர்களாகும். இவை தவிர மற்றெhரு பெண்ணின் கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும் உண்டு.

கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன் என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின் திரிபாக இதனைக் கொள்ளலாம்.

மகனுக்கு அவனின் தந்தைவழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா(ஆத்தாள் ) அழைப்பது மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ, வேறு ஒரு பெயர் கொண்டோ
அழைப்பது முறைமையாக உள்ளது. அதுபோலவே அப்பத்தா பெயரை மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக்குறைவு என்பதால் வேறுபெயர் கொண்டோ அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.

இதே போல இரண்டாவது மகன், மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப் படுகையில் அதனை அழைப்பது மரியாதைக்குறைவு எனக்கருதுவதால் கணவனும் வேறுபெயர் இட்டு அழைப்பதும் வழக்காக உள்ளது. எனவே நகரத்தார் குல எல்லா பிள்ளைகளுக்கும் இருபெயர்கள் இருப்பது தவிர்க்கமுடியாததாகி
விடுகின்றது.

இவ்விருபெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப்பெறுகின்றன என்பது குறிக்கத்தக்கது.

அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம் பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொதுவழக்காகும். வயதில் குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொது வழக்காகும். வயதில் மூத்த பெண் பிள்ளைகளை ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண்பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொதுவழக்கிற்கு உட்பட்டதே ஆகும்.

இவ்வழக்குகள் செட்டிநாட்டுப்பகுதிகளில் வாழும் பிற இனத்தாரிடத்திலும் காணப்பெறுகின்றன. மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான், மைத்துனன் என
அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும், பிற
குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மையினவே.

மேலும் முறையினர் பலராக இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்முறை இவர்களிடம் காணப்பெறுகின்றது.

எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய ஆயா; சின்ன ஆத்தாள்,
பெரிய ஆத்தள் முதலியனவற்றைக் காட்டலாம்.

நெருங்கிய உறவினர் பெரியப்பா, சித்தப்பா போன்ற தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினர்கள் வளவினர் எனப்படுகின்றனர். வளவு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் அனைவரும் ஒரு வளைவிற்குள் வாழ்ந்தனர் என்ற அடிப்படையில் உருவான வளைவு என்ற சொல்லே பின்னர் வளவு என மருவியது என்பர் .
இதனடிப்படையில் தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினரைக் குறிக்கும் சொல் வளவினர் ஆயிற்று.

தாய் வழிப்பட்ட நெருங்கிய உறவினர் தாயபிள்ளைகள் என அழைக்கப் பெறுகின்றனர். பெரும்பான்மை இச்சொல் தாய் வழிப்பட்ட உறவினரைக் குறித்தபோதும்- சிறுபான்மை தந்தை உறவினர்க்கும் உரியதாகின்றது.

தாயபிள்ளைகள் என்ற இச்சொல் தூய தமிழ் அடிப்படையில் அமைந்த காரணகாரியமிக்க இணைப்புச்சொல்லாகும். இச்சொல் பங்காளிகள் அல்லாத உறவுமுறையினர்க் குரிய தாகும்.

தூரத்து உறவினர்

தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள்
உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக்கொள்கின்ற பங்காளிகள் என்பனவாகும்.

பங்காளிகள்

பங்காளிகள் என்போர் தந்தைவழியில் உறவுமுறையினர் ஆவர். வர்கள் திருமணம்
முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குலமுறையினரிடம் நடைபெறhது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் பங்காளிகள்

கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது
நகரக்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர், நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில், வேலங்குடி என்பனவாகும். இச்சிவன்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். பலஊரினர் ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில் பங்காளிகள் என்னும் உறவாகின்றது.

ஊர்பங்காளிகள்

ஓரூர் சார்ந்த நகரத்தார்கள் தம்மை ஓரூர் பங்காளிகள் எனப் பெருமையோடு அழைத்துக் கொள்ளுகின்றனர். வெளியூர்களில் வேலையில் அமர்ந்த நகரத்தார் பெருமக்கள் ஊர் சார்ந்து ஒருமைப்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது. வழி, வழி மரபாக வாழ்ந்த இவ்வூர் இணைப்பு தவிர, வாழும் ஊர்களிலும் இம்முறை தொடர்கின்றது. எடுத்துக் காட்டாக கோயம்புத்தூரில் வாழும் பல ஊர்
நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து நகரத்தார் சங்கம் என்ற அமைப்பைத் தங்களுக்குள்
அமைத்துக் கொள்ளும்போது அவர்கள் கோயில், மரபு தாண்டி மற்றொரு உறவுமுறைக்குள் நெருக்கமாகின்றனர். இவ்வுறவு முறையே தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுத் திகழ்கின்றது. நகரத்தரார் சங்கங்கள் மூலமாக உலக அளவில் கூட பல ஊர்களில் நகரத்தார்கள் ஒருங்கிணைகின்றனர்.

இச்சங்கங்கள் மூலமாக அவர்கள் பல அறப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இவ்வாறு கூட்டம் கூட்டமாக- வளவு அடியாகவும், கோயிலடியாகவும், மரபூர் அடியாகவும், வாழுமமூர் அடியாகவும் வாழும் முறைமை இச்சமூகத்தாரின் இனக்கட்டுமானத்திற்கு இன உணர்விற்கு எடுத்துக்காட்டாகின்றது. எனினும் இவர்களின் இனஉணர்வு மென்மை யானது மேன்மையானது என்பதும் இங்கு எண்ணத்தக்கது.

புள்ளி

புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும். திருமணமான நகரத்தார் ஆண்பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்பெறுகின்றhர். இதன்பின் இவர் ஊர்ப் பொதுக்காரியங்களுக்கான புள்ளிவரி கட்டவேண்டும். திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் தனிக்குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும். அவர் பெயரில் ய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள் மிகப் பொருளுள்ளதாகின்றது.

புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி வாழும் நிலையில் அவர் அரைப் புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன அரையளவில்
பெறப்பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர் ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார்.

சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் இப்புள்ளி ன்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது.

இவ்வாறு நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரணகாரியமிக்க இனஉணர்வுடைய முறைப்பெயர்களை அமைத்துக் கொண்டு தம்
பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக் காத்து வருகின்றனர்.
--

அடக்கம்

‘அடக்கம் அமருள் உய்க்கும்’ என்று, வள்ளுவம் கூறுகிறது. அடக்கம் மனிதனை உயர்த்தும். அடங்காவிட்டால் அடர்ந்த இருள் ஆழ்த்திவிடும். அடங்க அடங்க வாழ்வு உயரும். அடக்கத்தை அடைந்தவர்கள், வானோருடன் ஒப்பிட்டு கூறத்தக்க அளவுக்குப் புகழ் பெற்று உயர்வார்கள்.

ஆமையைப் போல அடக்கம் வேண்டும். ஆமையின் அடக்கத்தினை ஐந்தடக்கம் என்பர். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புலன்கள் ஐந்தையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதையும் அடக்கமே பாதுகாக்கும். புலன்களின் வழியில் மனம் போனால், புத்தியும் சத்தியும் கெடும். கண் பார்த்ததையும் காது கேட்டதையும் வாய் விரும்பியதையும் மூக்கு நுகர்ந்ததையும் மெய் விரும்பியதையும் அடைய வேண்டுமென்று மனம் அவாவினால், வாழ்க்கையில் துன்பத்தை விட வேறு ஒன்றும் இருக்காது. துன்பத்தைத் தொலைக்க வேண்டுமானால், புலன்களின் அவாவினைக் கட்டுக்குள் கொண்டு வரவே அடக்கம் வேண்டுமென்று கூறப்படுகிறது.

அடக்கத்தைக் கூறும் நூல்களாகிய பகவத் கீதை (2-58), மனு ஸ்மிருதி (பா-105), நாலாயிர திவ்விய பிரபந்தம் (2360) மகாபாரதம் போன்றவை அடக்கத்திற்கு உதாரணமாக ஆமையைக் கூறுகின்றன.

ஆமை, தன் அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கோவது போல, அடக்கத்தை மேற்கொள்வோர்கள் தங்கள் புலன்களை அடக்கி உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள் ஞானநிலை பெற்றதாகிறது என்று, விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஆமையைப் போலப் புலன்களை உள்ளே இழுத்துக் கொண்டு அடக்கு! அடங்கு! என்று, திருமந்திரம் கூறவில்லை. அடக்கு என்னும் கருத்தையே திருமந்திரம் ஏற்கவில்லை. புலன்களை அடக்க முடியாது. அடக்குவதால் எந்த பயனையும் அடைய முடியாது. புலன்களோடு கூடியிருந்து அவை பெற்ற பயனை அடையவேண்டும் என்பது, திருமந்திரம் கூறும் தெளிந்த கருத்து.

“அஞ்சும் அடக்குஅடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடங்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே”

என்பதால், உலக இன்பங்களை நெறிப்பட்ட முறையில் நுகர்ந்து கொண்டே பேரின்பம் பெற முடியும்! என்று, திருமந்திரம் கூறும் கருத்து எத்துணைப் பொருத்தமுடையது என்பதை உணரலாம்.

உலகிலேயே அதிக நாள் உயிர்வாழும் விலங்கு ஆமை ஒன்றுதான். ஆமை, அதிக நாள் வாழ்வதற்குக் காரணம் எதுவாக இருக்கும். ஆமை என்ன யோகநெறியா பயின்றிருக்கிறது! காய கல்பம் சாப்பிடுகின்றதா? பின்பு எப்படி அதனால் அதிக நாள் வாழ முடிகிறது? என்னும் ஆராய்ச்சியினால் கிடைத்த முடிபை உரைக்கிறது, திருமந்திரம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் ஆயுள்
100 ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் ஆயுள்
83⅓ ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் ஆயுள்
750 ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 1 முறை சுவாசித்தால் ஆயுள்
1500 ஆண்டாகும்.

ஒரு நிமிடத்துக்கு 0 முறை சுவாசித்தால் மரணம் என்பதே இல்லை.


இவற்றுக்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு? என்றால், ஆமை ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை மட்டுமே சுவாசிக்கிறது.

ஆக, நீண்ட நாள் வாழ வேண்டுமானால், சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் மூச்சுப் பயிற்சியைச் செய்தோ மானல் நீண்ட நாள் வாழலாம்! என்பது, புலனாகிறது. பெரு மூச்சு விடாதீர்கள். அது ஆயுளைக் குறைக்கும்.

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் - இரா. கலைக்கோவன்



தமிழர் வாழும் இடமெல்லாம் இன்று தழைத்துப் பெருகியிருக்கும் பிள்ளையார் வழிபாடு, தமிழ்நாட்டில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பது குறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எனினும், அவற்றுள் எந்த ஆய்வும் திடமான முடிவுகளை முன்வைக்காமை பெருங்குறையே.

தமிழர் வரலாறு போதுமான சான்றுகளைக் கொண்டு தொடங்குவது சங்க காலத்திலிருந்துதான். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை செழித்திருந்த இச்சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன. இக்காலகட்டத் தமிழர் சமய வரலாறு பல்துறை அறிஞர்களால் தொகுக்கப்பெற்றுள்ளது. சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்(1), பழையோள்(2) (கொற்றவை), முக்கண்ணன்(3) (சிவபெருமான்), பலராமன்(4), உமை(5) எனத் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் இறை சார்ந்த பல தொன்மங்களை விளக்குகின்றன. சங்க காலத்திற்குச் சற்று முற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தொல்காப்பியமும் தமிழர் வழிபாட்டுச் சிந்தனைகளை முன்வைக்கிறது. இவ்விலக்கியங்களுள் ஒன்றுகூட, மறை பொருளாகவேனும் பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி யாண்டும் குறிப்பிடாமை நினைவு கொள்ளத்தக்கது.

'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக் கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.

தமிழ்நாடு முழுவதுமாய் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இக்காலகட்டச் சான்றுகளைப் பலவாய்த் தந்திருந்தாலும், பிள்ளையார் வழிபாட்டைக் குறிக்கும் எத்தகு அடையாளங்களையும் இன்றுவரை தரவில்லை. தமிழ்நாட்டின் இயற்கைக் குகைத் தளங்களில் காணப்படும் இக்காலகட்டத் தமிழிக் கல்வெட்டுகளும் இது குறித்து மௌனமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது(8).

சங்க காலத்தை அடுத்தமைந்த மூன்று நூற்றாண்டுகளில் (கி.பி 200 - கி.பி 500) தமிழ்நாடு தமிழர் கையிலிருந்து மாறிப் பல்லவர், களப்பிரர் வயமாயிற்று. இக்காலகட்ட வரலாற்றை அறிய பல்லவர்களின் பிராகிருத, வடமொழிச் செப்பேடுகளும் இலக்கியங்களும் உதவுகின்றன. பல்வேறு அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, இலங்கை, ஜப்பான் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய இலக்கியங்களை இக்காலகட்டம் சார்ந்தவை என அடையாளப் படுத்தியுள்ளனர். இவ்விலக்கியங்களுள், தமிழர் சமய வரலாறு குறித்து அரிய பல தரவுகளை உள்ளடக்கியிருக்கும் சிலப்பதிகாரம் புகாரிலும் மதுரையிலும் இருந்த இறைக் கோயில்களை வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் காட்டுகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன் (சிவபெருமான்), அறுமுகச் செவ்வேள் (முருகன்), வாலியோன் (பலராமன்), நெடியோன் (திருமால்), இந்திரன், கொற்றவை, உமை, கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சுட்டும் சிலப்பதிகாரம், தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என இறை சார்ந்தவற்றிற்கு அமைந்த கோயில்களையும் காட்டுகிறது(9). சிறு தெய்வ வணக்கம் பற்றியும் விரித்துரைக்கும் இவ்விலக்கியத்தில் பேரூர் சார்ந்தோ சிற்றூர் சார்ந்தோ எவ்விடத்தும் பிள்ளையார் வழிபாடு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, கோயில்களைப் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் கூறினாலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்காமை கருதத்தக்கது(10). இக்காலப் பகுதிக்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டிருக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் பிள்ளையார் சுட்டல் இல்லை(11).

பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர். இக்குறிப்புகளால், பிள்ளையார் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் என்பதையும் கயாசுரனைப் போரில் வென்றவர் என்பதையும் அறியமுடிவதுடன், அவரது தோற்றம் பற்றிய வண்ணனைகளையும் ஓரளவிற்குப் பெறமுடிகிறது.

உமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), 'தந்த மதத்தவன் தாதை' (1:115:2), 'மறுப்புறுவன் தாதை' (1:117:8), 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.

நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் 'கைவேழ முகத்தவனைப் படைத்தார்' (6:53:4), 'வினாயகர் தோன்றக் கண்டேன்' (6:77:8), 'ஆனைமுகற்கு அப்பன்' (6:74:7), 'கணபதி என்னும் களிறு' (4:2:5) எனும் பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).

முருகப்பெருமானைப் பற்றி நாற்பத்தேழு இடங்களில் விதந்தோதும் இவ்விரு சமயக் குரவரும், பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே குறிப்புகள் தந்திருப்பதை நோக்க, இவர்தம் காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் கால் கொண்டதாகக் கருதலாம்.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் காணப்படும் இறைக் கோயில்களுள் காலத்தால் பழமையானவை குடைவரைகளே. குன்றுகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் இத்தகு குடைவரைகள் அமைக்கப்பட்டன. வடதமிழ்நாட்டில் இத்திருப்பணியைத் தொடங்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். இவர் குடைவரைகள் எவற்றிலும் பிள்ளையார் சிற்பம் இடம்பெறவில்லை(12). திருக்கழுக் குன்றத்தில் உள்ள ஒருகல் மண்டபம் முதலாம் நரசிம்மவர்மரின் திருப்பணியாகக் கருதப்படுகிறது. இதிலும் பிள்ளையாரின் வடிவமில்லை. இராஜசிம்மரின் குடைவரைகளிலும் பிள்ளையாரின் சிற்பம் இறைவடிவமாகக் காட்டப்படவில்லை என்றாலும், மாமல்லபுரம் இராமாநுஜர் குடைவரையின் பூதவரியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார்.

இராஜசிம்மர் பணியான மாமல்லபுரம் தருமராஜர் ரதத்தின் பூதவரியிலும் பிள்ளையார் எனக் கொள்ளத்தக்க வடிவங்கள் இடம்பெற்றுள்ளன(13). இராஜசிம்மரின் கற்றளிகளில் கூடுகளிலும் கோட்டங்களிலும் பிள்ளையார் இடம்பெறத் தொடங்குகிறார். சிராப்பள்ளியிலுள்ள கீழ்க்குடைவரை(14), சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில்(15), செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்திலுள்ள கந்தசேனரின் குடைவரை(16), ஆகியவற்றில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாகக்(17) காட்டப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைக் கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியாகக் கொள்ளலாம். இதனால் வடதமிழ்நாட்டு இறைக்கோயில்களில், பிள்ளையாரின் சிற்பங்கள் சம்பந்தர், அப்பர் காலத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இடம்பெறத் தொடங்கியமை தெளியப்படும்.

தென் தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் கைவண்ணமாகப் பிறந்த குடைவரைகள் பலவற்றில் பிள்ளை யாரின் சிற்பம் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பிள்ளையார்பட்டி(18). அங்குள்ள பிள்ளையார் இன்றைக்கு முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும், உருவான காலத்தில் சிவபெருமானுக் கான குடைவரையின் முன், பக்கவாட்டில் விரியும் சுவரில் கோட்டத் தெய்வமாகச் செதுக்கப்பட்டவரே ஆவார். இக்குடைவரையில் இடம்பெற்றுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, 'எக்காட்டூருக் கோன் பெருந்தசன்' எனும் பெயரைத் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை ஆறாம் நூற்றாண்டென்பர் அறிஞர்கள்(19).

இக்கருத்து ஏற்புடையதாயின் பிள்ளையர்பட்டிக் குடைவரையின் காலமும் ஆறாம் நூற்றாண்டாகிவிடும். எனில், தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பமாகப் பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரையே கொள்ளவேண்டிவரும். குடைவரையின் அமைப்பு, சிற்பங்களின் செதுக்கு நேர்த்தி கொண்டு இக்குடைவரையின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாகக் கொள்வாரும் உண்டு. இரண்டில் எதை ஏற்பினும் இப்பிள்ளையாரே தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் என்பதில் ஐயமில்லை.

திருமலைப்புரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாபட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில்(20) பிள்ளையார் சிற்பம் இடம் பெற்றுள்ளமையை நோக்க, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு காலூன்றிய முதல் இடமாகப் பாண்டிய மண்ணையே கொள்ளவேண்டியுள்ளது. கி.பி ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சிராப்பள்ளிக்குத் தெற்கே காலூன்றிப் பரவிய இப்பிள்ளையார் வழிபாடு எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் வடதமிழ்நாட்டிற்குள் குடிபுகுந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றில் முருகப்பெருமானுக்குக் கிடைத்த இடம் பிள்ளையாருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் கோட்டத் தெய்வமாக இடம்பெற்ற பிள்ளையார், தொடக்கக் காலப் பல்லவக் கற்றளிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும், அபராஜிதர் காலக் கற்றளிகளில்தான் உள்மண்டபத் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார்(21). இந்நிலைபேறு சோழர் காலத்தில் உறுதியாக்கப்பட்டது.

சோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் சுற்றாலைக் கோயில்கள் உருவானபோது எண்பரிவாரத்துள் ஒன்றாகப் பிள்ளையாருக்கும் இடம் கிடைத்தது. திருச்சுற்றின் தென்மேற்கு மூலை பிள்ளையாருக்கு உகந்த இடமாக ஒதுக்கப்பட்டு அவருக்கெனத் தனித் திருமுன் அமைக்கப்பட்டது. இத்தகு பிள்ளையார் திருமுன்களைச் சோழர் கற்றளிகளிலும் பின்னால் வந்த பிற மரபுப் பேரரசுக் காலக் கற்றளிகளிலும் இன்றும் காணலாம்.

கோட்டத் தெய்வமாகவோ, சுற்றாலைத் தெய்வமாகவோ மட்டுமே அமைந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும் அதையே உறுதி செய்கின்றன.

குறிப்புகள்

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், நூற்பா எண். 5.

2. திருமுருகாற்றுப்படை, 258-259.

3. புறநானூறு, 6:18

4. கலித்தொகை, அனந்தராமையர் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், ப.144.

5. கலித்தொகை, 38:1-5.

6. நடன காசிநாதன், தமிழகமும் கணபதி வழிபாடும், தாய் நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, பக்.162-170.

7. 4:104:4; 5:95:5

8. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 314-447.

9. சிலப்பதிகாரம், 5:169-173; 9:9-13

10. எ.சுப்பராயலு, எம்.அர். ராகவ வாரியர், பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ஆவணம் 1, பக். 57-69.

11. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 450-537

12. மு.நளினி, இரா.கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, வரலாறு 11, பக். 57-82.

13. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 11-12.

14. மு.நளினி, இரா.கலைக்கோவன், சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, வரலாறு 9,10, பக்.131-179.

15. இரா.கலைக்கோவன், கண்டறியாதன காட்டும் கைலாசநாதர், அமுதசுரபி தீபாவளி மலர் 1997, பக். 303-306.

16. இக்குடைவரை முதலாம் மகேந்திரர் காலத்தில் அவர் அடியாரான வயந்தப் பிரியரைசரின் மகன் கந்தசேனரால் குடைவிக்கப்பட்டது. குடைவரை குடையப்பட்டுள்ள பாறையின் வெளிப்புறத்தே வலப்பக்கம் கோட்டம் அகழ்ந்து பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. தோற்றம், செதுக்குநேர்த்தி கொண்டு இப்பிள்ளையார் வடிவம் குடைவரைக் காலத்ததா அல்லது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கூறக்கூடவில்லை. இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவரின் தொடக்கக் காலக் கட்டுமானப் பணிகளில்தான் பிள்ளையார் வடிவத்தைப் பூதவரிகளில் காணமுடிகிறது. அவர் காலக் கற்றளிகளில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாக இடமாற்றம் பெறுகிறார். பல்லவர் கைவண்ணமான சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை முருகன், கொற்றவை, சூரியன், நான்முகன் ஆகிய தெய்வங்களுக்கு இணையான தெய்வமாகப் பிள்ளையாரைச் சமநிலையில் நிறுத்திப் பெருமைப்படுத்தியுள்ளது. காலநிரலான இப்பரிணாம வளர்ச்சியைக் காணும்போது, வல்லம் குடைவரைப் பிள்ளையாரைக் குடைவரைக் காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டவராகவே கொள்ளவேண்டியுள்ளது. வல்லத்துக் குன்றில் இலக்கசோமாசியார் மகள் எடுத்துள்ள இரண்டாம் குடைவரையின் முகப்பிற்கு முன் விரியும் பக்கச் சுவரில் ஒரு பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதையும் கி.பி எட்டாம் நூற்றாண்டுப் படைப்பாகவே கொள்ளலாம்.

17. 'வல்லத்தில் மகேந்திரவர்மன் காலத்தியதாகக் கருதப்படும் குடைவரைக் கோயிலில், ஒரு சன்னதியின் முன்பாக உள்ள இரு தூண்களில் ஒன்றில் கணபதியின் உருவமும் மற்றொன்றில் சேட்டையின் சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கின்றன' எனும் நடன காசிநாதனின் கூற்று, அவர் வல்லம் குடைவரையைப் பார்க்காமலேயே கட்டுரைத்துள்ளமையைத் தெளிவுபடுத்துகிறது. தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.167.

18. இரா.கலைக்கோவன், பிள்ளையார்பட்டிக் குடைவரை, அமுதசுரபி தீபாவளி மலர், 2000, பக். 82-86.

19. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675; பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரையும் இக்கல்வெட்டையும் பற்றிக் குறிப்பிடும்போது நடன காசிநாதன், 'பிள்ளையார்பட்டியில் காணப்பெறும் குடைவரைக்கோயிலில் ஒரு பழமையான கல்வெட்டும், கணபதியின் புடைப்புச் சிற்பமும் அருகருகே காணப்பெறுகின்றன' என்று தவறான தகவல் தந்துள்ளார். தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.166. பிள்ளையார் சிற்பம் சிவபெருமான் குடைவரையின் வடபுறம் உள்ள பாறைச்சுவரில் ஹரிஹரர் சிற்பத்தை அடுத்துச் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் குடைவரைக்குத் தென்புறம் விரியும் கிழக்குச் சுவரில் உள்ள அரைத்தூணில் பெருந்தசன் கல்வெட்டுக் காணப்படுகிறது.

20. அர.அகிலா, இரா.கலைக்கோவன், திருமலைப்புரம் குடைவரை, வரலாறு 6, பக். 118-134;
சீ.கீதா, இரா.கலைக்கோவன், செவல்பட்டிக் குடைவரை, வரலாறு 4, பக்.25-38;
அர.அகிலா, தேவர்மலைக் குடைவரை, வரலாறு 3, பக். 57-66;
மு.நளினி, இரா.கலைக்கோவன், அரிட்டாபட்டிக் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையக்கோயில் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 159-174;
மு.நளினி, இரா.கலைக்கோவன், பரங்குன்றம் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
ம.ஜான்சி, மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையடிப்பட்டிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 4, பக்.64-115;
அர.அகிலா, மு.நளினி, குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 2, பக். 56-106;
மு.நளினி, இரா.கலைக்கோவன், திருக்கோளக்குடிக் குடைவரையும் கற்றளிகளும், வரலாறு 6, பக். 134-168;
மு.நளினி, இரா.கலைக்கோவன், கோகர்ணம் குடைவரையும் கல்வெட்டுகளும், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

21. மு.நளினி, இரா.கலைக்கோவன், அபராஜிதர் காலக் கற்றளிகள், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

ராவணன் பாலம்?

சர்ச்சைக்குறிய ராமர் பாலம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். என் பங்குக்கு நானும் எழுதாவிட்டால் தமிழினத் துரோகியாகும் வாய்ப்புள்ளது. இதுபற்றி அத்வானியுடன் நடந்த நேர்காணல்!

அதிரைக்காரன்: வாங்க அத்வானி ஜி. நல்லா இருக்கீங்களா?

அத்வானி: நமஸ்தே அதிரைக்காரன்ஜி. நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?

அதிரைக்காரன்: (உங்கள் ஆட்சி போனதிலிருந்து) நல்லா இருக்கிறேன் ஜி.

அத்வானி: பேட்டியை எங்கு வைத்துக் கொள்வோம்? உங்களூர் ராஜாமடம் பாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்று புஷ் பெருமையாகச் சொன்னார். அங்கேயே வைத்துக் கொள்ளலாமா?

அதிரைக்காரன்: இல்லை. உங்களுக்குப் பிடித்த ராமர் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமே.

அத்வானி: (திடுக்கிட்டு) என்ன விளையாடுறீங்களா? ராமர் பாலம் எங்கிருக்கிறது? இருந்தாலும் அதன்மீது எப்படி நடக்க முடியும்?
அதிரைக்காரன்: இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பதாக ஜெயலலிதா அம்மையார், சுப்ரமணியசுவாமி மற்றும் உங்கள் கட்சிக்காரர்கள் சொல்லி வருகிறார்களே?

அத்வானி: அடப்போங்க அதிரைஜி. அவங்களுக்கு அரசியல் பண்ண வேறு விசயம் எதுவும் கிடைக்கவில்லை.அதனால்தான் ராமர் பாலம் விசயத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்.

அதிரைக்காரன்: அப்படியா! நான் கூட ஏதோ உண்மையான பாலம்தான் இருக்குதோ என்று நினைத்து விட்டேன். ஆமா! ராமர் பாலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அத்வானி: இதென்ன கேள்வி. அவர்களுக்கு எதிராகக்கருத்துச் சொல்ல எனக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியா? ராமர் பாலம் 17 இலட்சத்து ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் நாங்களும் ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறோம்.

அதிரைக்காரன்: "இடிக்கக்கூடாது" என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?

அத்வானி: ஆம்! இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதிரைக்காரன்: உங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் நம்நாட்டின் பாரம்பரிய சின்னம் தானே அதை ஏன் இடித்தீர்கள்?

அத்வானி: பழசை ஏன் கிளருகிறீர்கள்? வேறு ஏதாவது புதுசாகக் கேளுங்கள்.

அதிரைக்காரன்: 400 வருடங்களுக்கு முந்தைய பாபர் மசூதியை 15 வருடங்களுக்கு முன் இடித்தது பழைய விசயமா உங்களுக்கு? 17,50,000 வருடப் பாலம் மட்டும் புதிய விசயமா? நானூறு வருடங்கள் பழையதா 17,50,000 வருடங்கள் பழையதா?

அத்வானி: அதிரைஜி. கடலுக்கடியில் பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் சமீபத்தில் உறுதி படுத்தியுள்ளது. தெரியுமா?

அதிரைக்காரன்: விண்வெளியில் தினமும் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும், ஏற்கனவே கண்டு பிடித்தவை மறுக்கப்படுவதும் சகஜம். கடலுக்கடியில் இருப்பது ராமர் பாலம்தான் என்று நாஸா சொன்னதாக யார் சொன்னார்?

அத்வானி: பார்த்தீங்களா! நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். தினமலரில் படங்களுடன் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்களே.

அதிரைக்காரன்: நாஸாவின் குறிப்பின்படி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் மணற்திட்டுகள் முன்பு பாலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றுதானே சொல்லப் பட்டுள்ளது.

அத்வானி: நாஸாவிற்கு ராமாயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் மணல் திட்டு என்று புரியாமல் சொல்லியுள்ளார்கள். நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் நாஸாவில் உள்ள விஞ்ஞானிகள் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்வோம். பாரதத்தின் நன்மைக்காகச் சொல்லப்படும் எதையும் ஒப்புக் கொள்ளலாம்.

அதிரைக்காரன்: சேது சமுத்திரத் திட்டத்தால் பாரதத்திற்கு பொருளாதார நன்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?

அத்வானி:தேவையில்லாமல் அடுத்தவர் மத நம்பிக்கைகளுடன் நீங்கள் விளையாடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட பாலம் அனுமாரால் கட்டப்பட்டது.

அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.


கடலில் இயற்கையாக தோன்றி மறையும் மணல் திட்டுகளை பாலம் என்று சொல்வது சரியல்ல. எங்களூர் கடலில்கூட சில வருடங்களுக்கு முன் ராஜாமடம் ஆறு கலக்குமிடத்தில் மணற்திட்டு ஏற்பட்டு சிறிய தீவு போல இருக்கிறது. உலகின் பெரும்பாலான தீவுகள் மணற்திட்டுகளால்தான் ஏற்படுகின்றன.

அத்வானி: அதிரைஜி, கடலியல் பூகோல மாற்றங்களை நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். பல இலட்சம் வருடங்களுக்கு முன் இலங்கை இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. இடையில் கடல்புகுந்து இலங்கையை தனித்தீவாக மாற்றிவிட்டது.மேலும், பூமித் தட்டுக்கள் நகரும்போது நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்ட மாற்றங்களால்தான் நம்நாட்டின் இமயமலை கூட உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். அப்புறம், உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம். :-(

அதிரைக்காரன்: இதே லாஜிக்படி பார்த்தால் நீங்கள் இடித்த பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் பிறந்திருக்க வாய்ப்பில்லைதானே? பூகோல மாற்றங்களால் நில,நீர்ப்பரப்புகள் மாறும் போது, வட இந்தியாவில் சரயு நதியின் ஓட்டமும் ஏன் மாறி இருக்காது? அதன்படி, நீங்கள் சொல்லும் ராமர் பிறந்த இடம் தற்போதைய சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தி அல்ல என்றுதானே அர்த்தம்.

அத்வானி: நீங்கள் மீண்டும் மீண்டும் பழசைக் கிளறுகிறீர்கள். "ராமர்பாலம் பாதுகாப்பு" இயக்கத்திற்கு வந்துள்ள கரசேவகர்களைச் சந்திக்க வேண்டும். பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அதிரைக்காரன்: கரசேவகர்கள் கரத்தில் கடப்பாறையுடன் வந்துள்ளார்களே? வந்திருப்பது இடிக்கவா அல்லது கட்டவா?

அத்வானி: (திடுக்கிட்டு) தவறு நடந்துவிட்டது! "ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம்" என்றதும் இவர்கள் பாலத்தை இடிக்க வேண்டுமோ என்று தவறாகப் புரிந்துகொண்டு கடப்பாறையுடன் வந்துள்ளார்கள். பேட்டியை சீக்கிரம் முடியுங்கள், அவசரப்பட்டு இடித்து விடபோகிறார்கள்.

***********************************
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களைத் தடுக்கிறார்கள். யாராலும் தடுக்க முடியாத கடல்நீர் ஆதாரங்களை வைத்து மாநிலத்தையும் நாட்டையும் முன்னேற்ற முயலும்போது ராமர் பாலம் என்ற பெயரால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

ராமர் பாலத்தால் நன்மையடைந்தவர்கள் ஜெயலலிதாவும் இலங்கையும் மட்டுமே. ராமர் பாலம் எதற்கும் பயன்படாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜெயலலிதாவுடன் பி.ஜே.பி உறவுப் பாலம் அமைக்க நிச்சயம் பயன்படலாம். தமிழகம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி.

ராமர் சார்! ஒரேயொரு வரம் தரவேண்டும். அதுவும் நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக மறுக்காமல் தர வேண்டும். அதாவது எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம்.

கொஞ்சம் பெரிய மனதுடன் இந்த உதவியைப் பண்ணுங்களேன். ப்ளீஸ்! :-)

அறிஞர் போற்றிய அருந்தமிழ்



குமரிக்கண்டத்திலிருந்து தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளை இந்த வரைபடம் காட்டுகிறது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிப்போன தமிழர் வரலாறாகும்



1. டாக்டர் ஜி.யு.போப் (DR.G.U.POPE) அவர்கள் தமிழைப் படித்து , தமிழிலே உள்ள கருத்துகளை ஆய்ந்தறிந்து, இந்த மொழி உயர்ந்த மொழி; இது ஒரு செம்மொழி என்றெல்லாம் எடுத்துக்கூறினார் . ஜி.யு.போப் அவர்கள் 50 ஆண்டுகாலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர் . அவர் மறையக்கூடிய இறுதி நேரத்தில் தம்முடைய கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதச் சொன்னவர் . கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழ் நாட்டுக்கு வந்தவர் தமிழ்த்திருவாசகத்தைப் படித்துவிட்டு "எலும்பை உருக்கும் பாட்டு திருவாசகம் " என்று உருக்கத்தோடு கூறியுள்ளார்.



2. பெர்சிவல் பாதிரியார் (REV.PERCIVAL) அவர்கள் தமிழைக் கற்றுணர்ந்தபின் "ஆற்றல்மிக்கதாகவும் சொல்லவந்த பல கருத்துகளைச் சில சொற்களால் புலப்படுத்தும் தன்மையும் தமிழ்போல் வேறு எம்மொழியிலும் இல்லை " என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

3. டாக்டர் ரோபர்டு கால்டுவெல் (DR.ROBERT CALDWELL) அவர்கள் தமிழை ஆய்ந்துபார்த்தும் பிறமொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது ; பிறமொழி துணையின்றி இயங்கவல்லது; இந்திய மொழிகளில் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார்.

4. கமில் சுவெலபில் (KAMIL ZVELEBIL) என்பவர் செக்நாட்டுத் தமிழ் அறிஞர். தமிழில் உள்ள ஏடுகளை எல்லாம் ஆய்ந்துபார்த்தும் சிலப்பதிகாரத்தை ஆய்ந்துபார்த்தும் தமிழின் உண்மையை ; மேன்மையை உலகறியச் செய்தவர்.

5. ஈராசுப் பாதிரியார் (FATHER HERAS) என்ற இசுபெயின் நாட்டு அறிஞர் இந்தியாவில் நீண்டகாலமாக வரலாற்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர் . கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம்தான் தென்னாட்டின் திரவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி (அராப்பா - மொகஞ்சதாரோ) நாகரிகமாக மிளிர்ந்து, பின்னர் சுமெரியர் - எகுபதியர் - கிரேக்கர் - உரோமானியர் - ஐரோப்பியர் நாகரிகரிகங்களாக மாறின என்று தம் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார் .

6. ஆல்பர்ட் சுவைட்சர் (ALBERT SWITZER) என்ற செருமானிய மெய்யியல் அறிஞர் ஏசுநாதரின் மறுபிறவி என்ற புகழுடன் வாழ்ந்தவர். அவர் திருக்குறளில் மனம் தோய்ந்து பல குறட்பாக்களை மனப்பாடம் செய்திருந்தார். "சீரிய கோட்பாடுகளின் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும் இல்லை " என்று சொல்லிச் சென்றுள்ளார்.

7. கவியரசர் இரவிந்திரநாத் தாகூர் (RABINDRANATH TAGORE) என்பவர் புகழ்பெற்ற வடநாட்டுப் பாவலர். திருக்குறளைப் படித்தபின் அவர் கூறியதாவது , "பாரத நாடு முழுவதற்கும், ஏன் உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் கோட்பாடு பொருந்தும்". தமிழில் தோன்றிய திருக்குறளை அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் .

8. மாக்சு முல்லர் (MAX MUELLER) என்ற செருமானிய நாட்டுக்காரர் தலைசிறந்த மொழிநூல் வல்லுநராக விளங்கியவர். இவர் "தமிழ் மிகப் பண்பட்ட மொழி; தனக்கே உரிதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.

9. வீரமாமுனிவர் எனும் பெசுகி பாதிரியார் (FATHER JOSEPH BESCHI) என்பார் இத்தாலி நாட்டிலிருந்து வந்த கிறித்துவ மதகுரு. பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், இப்ரு, இத்தாலி, பாரசீகம், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார் இவர் 20 ஆண்டுகள் தமிழ்ப் பயின்றார். இவரே தமிழில் முதன் முதலில் அகராதியை எழுதி வெளியிட்டவர். திருக்குற¨ளைக் கற்று அதன் சிறப்பில் தோய்ந்துபோய் இத்தாலியில் மொழிபெயர்த்தார். தமிழில் உரைநடை இலக்கியம் வளர்வதற்கும்; தமிழில் நிறுத்தக்குறிகள் புகுவதற்கும் இவர்தான் முன்னோடி.

10. மகாத்மா காந்தி (MAHATMA GHANDHI) உலகிற்கு அகிம்சையைக் கற்பித்துச் சென்ற இவருக்கு அந்த அகிம்சையைக் கற்றுகொள்ள தூண்டுகோளாக இருந்தது திருக்குறள்தான் . திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்றவர். அதனைக் அவரே இப்படி கூறியுள்ளார் "திருக்குறளை அதன் மூலத்திலிருந்து கற்பதற்காகவே நான் தமிழைக் கற்றேன் ".

11. சுவாமி விவேகானந்தர் (SWAMI VIVEKANANDA) என்ற ஞானி இளமையிலேயே துறவுகோலம் பூண்டு இந்தியாவின் இமயம் தொடங்கி குமரி வரை பயணம் செய்து பின்னர் அமெரிக்கா வரையில் சென்று ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர் . "ஆரிய இனம் தோன்றுவதற்குத் தாய் இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இரத்தம் நம் உடலில் ஓடுகின்றது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்" என்றும் "இந்திய நாட்டின் ஞானநெறி தென்னாட்டிலிருந்து நமக்குக் கிடக்கப்பெற்றதாகும்" என்றும் இவர் சொல்லியிருக்கிறார்.

12. பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஆர்ட் (Prof. George L.Hart) என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான இவர் அண்மையில் சொல்லியிருக்கும் கூற்றே வாழும் நற்சான்றாக இருக்கின்றது . இவர் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோது " தமிழ் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட செம்மொழியாகும். ஒரு மொழி செம்மொழி (Classical Language) ஆகவேண்டுமானால் அது சில அடிப்படையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் . அந்த அத்தனைத் தகுதிகளையும் தமிழ்மொழி பெற்றுள்ளது" என இவர் கூறியுள்ளார்.

இவர்களோடு

, டாக்டர் வின்சுலோ (DR.WINSLOW), இரைசு டேவிட்டு (RHYS DAVIDS), டாக்டர் பிலியோசா (DR.FILIOZAT), கில்பர்ட்டு இசுலெட்டர் (GUILBERT SLATER), பேராசிரியர் பரோ (PROF.T.BURRO), பேராசிரியர் பானர்ஜி (PROF.R.D.BANERJI) கே.எம்.முன்சி (K.M.MUNSHI), போன்றோர் தமிழைக் கற்றும் - தெளிந்தும் - ஆய்ந்தும் பல உண்மைகளை வெளிப்படுத்திக்காட்டி தக்க ஆய்வுச் சான்றுகளோடு தமிழின் தொன்மை; தலைமை ; தெய்வத்தன்மை; உண்மையை நிறுவியுள்ளனர். தமிழின் சிறப்புகளைத் தமிழர் அல்லாத மேற்கண்டோர் உணர்ந்துள்ளது போல நம் தமிழர்கள் எத்தனைபேர் உணர்ந்துள்ளனர்? அப்படியே உணர்ந்தவர்களில் தமிழுக்காக உண்மையாய் உழைப்பவர்கள்தாம் எத்தனை பேர் ?தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைபடுவோம்! தமிழை வளர்ப்பதற்காகப் பாடுபடுவோம் ! தமிழனால் தமிழுக்கு வாழ்வு உண்டானால்... தமிழால் தமிழனுக்கும் வாழ்வு உண்டாகும் !


முதற்பதிவைக் காண்க:-


தமிழ்ப் பரப்பும் தங்கள் பணிசிறக்க நல்வாழ்த்து!

அன்புடன்;

சுப.நற்குணன்,

திருத்தமிழ் - மலேசியா.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர் ஆய்வு - ஆர். பார்த்தசாரதி




சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்காகப் புலவர் இர. வாசுதேவன் எழுதிய ஆய்வுரை இந்நூல்.

தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.

தமிழில் “சித்தர்” என்னும் சொல் ஏறத்தாழ 15 நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு இயற்கை இகந்த செயல்பாடு, அற்புதம், மனநிறைவு, திடமனம் எனப் பல பொருள் உண்டு. அதாவது மனிதன் புறத்தே உள்ள பொருள்களை மட்டுமல்லாமல் தன் அகத்தே உள்ள மனத்தையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்களைச் செய்து முடிப்பவர். தமிழில் “அபிதான சிந்தாமணி” கூறுவது போல முதலில் நவசித்தர்கள் இருந்தார்கள். பின்பு பதினெட்டு சித்தர்கள் ஆனார்கள். காலப் போக்கில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். இராமலிங்கர், மகாகவி பாரதியாரும் சித்தர் எனக் கருதப் பெற்றனர்.

தமிழகத்தில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் புகமுடியாத மலைகளில், குகைகளில், கானகங்களில் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக தவமிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே பொதுவாகச் “சித்தர்கணம்” என்னும் சொல்லாட்சி தமிழில் இடம்பெற்றது. வித்தகச் சித்தர் கணத்துக்கு வாய்த்த அளப்பரிய வலிமை பற்றித் தாயுமானவர் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

சித்தர் எனப்படுவோர் இந்திய நாடு கண்ட சமணம், பௌத்தம், சைவம் என்னும் சமயங்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். புத்தர் “சித்தர்” எனப்பட்டார். சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களைச் சித்தர், ஆரூகதர்கள், பரமேட்டிகள் என்றனர். சைவத்தில் சிவனைச் சித்தன் எனக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே “சித்தர் சிந்தனை” இந்தியர், தமிழர்களுக்குப் பொதுவானது எனலாம். இதற்கு நிகராக இஸ்லாமில் சூபி இயக்கமும் கிருத்துவத்தில் மெய்ஞானிகளும் இருந்ததாகக் கூறுவர்.

சித்தர்கள் நம் நாட்டில் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரித்து பார்க்கப்படுகின்றனர். முதலாவதாக, இறை நம்பிக்கையில் ஊறித் திளைத்து மனநிறைவு பெற்றவர்கள். இரண்டாவதாக சித்தத்தைச் சிவன் பால் செலுத்திய போதிலும் இயற்கையை எதிர்த்துப் போராடி இயற்கையை வசப்படுத்தி மனித சமூகத்தின் நல்வாழ்வுக்காக இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள். மூன்றாவது இயற்கையை எதிர்த்துப் போராடும் போது கடவுள் நம்பிக்கையில் ஈடுபடாது பொருள் முதல்வாதிகளாக இலங்கியவர்கள்.

இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் “சித்த சிந்தனை உணர்வு” காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.

உலகாயதம் எவ்வாறு சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான வேளாண்மை அரசமைவு, மக்களாட்சி என்னும் ஜனநாயக மரபுகள் வளரத் துணை செய்ததோ அது போலவே சித்த மருத்துவமும் மக்களுடைய நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றி வந்துள்ளது. பல்லவர், சோழர் காலத்தில் இருந்த ஏராளமான கல்வெட்டுகள் இதனை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன என்பதனைக் காட்டுகிறார்.

குறிப்பாக “அகத்தியர், பரிபூரணம்” என்னும் மருத்துவ நூல், சித்த மருத்துவம் மேலோர், கீழோர், செல்வர் - வறியவர் என்னும் சமூக வேற்றுமைகளை, குறிப்பாக நால்வருணப் பாகுபாட்டைப் புறம் தள்ளிப் பாமரமக்களுக்காகச் சித்த மருத்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதையும் செல்வர் பணம் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ளும் வசதி படைத்தவர்கள், ஆனால் கீழ்த்தட்டு மக்கள் வறிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குச் சித்த மருத்துவம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்த்தும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கந்தோறும் அரிய செய்திகளும், விவரங்களும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

மருத்துவத்தின் தேவை சித்த மருத்துவத்தின் சிறப்பு, உடல்நலம் பேண அடிப்படைத் தேவைகள், நோயற்ற வாழ்வு, நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்ய வேண்டிய மருத்துவம், உணவே மருத்துவம், மருந்தே உணவு என்னும் கோட்பாடு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் ஆகிய எல்லாவற்றையும் மிக அருமையாகத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர்.

சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் - அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து - மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை நூல் எடுத்துச் சொல்லுகிறது. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது. சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதனைத் தமிழிலுள்ள சித்த மருத்துவ நூல்கள் துணையுடன் ஆசிரியர் சுவைப்பட எடுத்துச் சொல்லியுள்ளார்.

ஐம்பூதங்களை மருந்தாக மாற்றுதல், நாடி வழி வாதம் பித்தம், ஐயம், நோய் தேர்வு செய்தல், வாயுக்கள் தாதுக்கள் இடையே உள்ள தாக்குறவு, நாடி நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவை பெறும் நிலைமை, மருந்துத்தேர்வு, உறுப்புகளும் அவற்றுக்கான தனி மருந்துகளும், நிலத்தையொட்டிய பாத்திரங்கள், நோய் நீராடல், உண்கலம், நோய், ஆடை, அகமருந்து, புறமருந்து, அவை செய்யும் முறை என்பன பற்றியெல்லாம் ஆசிரியர் ஆய்ந்து தரும் உண்மைகள்-இன்று வாழும் மக்களுக்கும் தேவைப்படும் செய்திகள் ஆகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பு, எலும்பை வளர்க்க உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, கொழுப்பை உண்டாக்கப் புளிப்பு, நரம்பை வலுவாக்கக் கசப்பு, சுரப்பிகளைச் சீராக்கக் காரம் தேவை என்பன போன்ற செய்திகளை விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய பகுப்பாய்வு இன்றைய பல்வேறு பல் மருத்துவ முறைகளிலும் ஏற்கப்பட்டு வருகிறது.

நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவம். மூலிகைகள், அவற்றின் சிறப்பு, மருத்துவப் பயன்கள், மருந்து செய்தல், புடம் போடுதலின் சிறப்பு, அதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள், எரிபொருள்களால் செய்யப்படும் மருந்துகள், மருந்து வகைகள், அவை பயன்படும் காலம் (வயது) என்பன பற்றியெல்லாம் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். பல சித்த மருத்துவ நூல்கள் கூறும் செய்திகள் பல இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது பாராட்டப் படவேண்டியதாகும். நூலின் சிறப்பான பகுதி சித்தர்கள் மனித சமுதாய நலன் மேம்பட ஆற்றிய தொண்டு பணி பற்றியதாகும். சித்த மருத்துவத்தில் பரிணாம வளர்ச்சி - காலம் தோறும் படிப்படியாக அது வளர்ந்தடைந்த நிலைமையைத் திருமூலர் காலம் முதல் இன்றளவும் அவை பெற்ற மாற்றங்கள் உள்ளிட பல செய்திகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் சித்தர் நெறி பெறும் பங்கு - சித்துகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா, அதாவது, இயற்கை கடந்த செயல் தன்மையாலும், இடத்தாலும் வேறுபடுவதால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதனை இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்.

மரணமில்லாப் பெருவாழ்வை வலியுறுத்தும் சித்த மருத்துவம் செத்தாரை எழுப்புதல் பற்றியும் கூறுகிறது. அதே போது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தர்கள் சாதி, சமயம் கடந்தவர்கள் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சித்தர்கள் வகுத்த நெறி வேதங்கள் ஆகா. மக்களுக்கான நல்வாழ்வு, இலக்கியம், ஆனால் பல இடங்களில் சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தும் இலக்கியம் என்பதனைத் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். வரலாற்று அடிப்படையில் நோக்குவோமானால், சித்த மருத்துவம் அடித்தட்டு மக்களுடைய தொழிலாக, பணியாக இருந்து வந்துள்ள பான்மையை அறியலாம். அலோபதி முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பெரும் வாய்ப்புத் தருவதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் உலக மயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சித்த மருத்துவ நோக்கமும் தன்மையும் மாறிவிடுவதற்கான வாய்ப்புண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் சாம்பசிவம் பிள்ளை என்னும் அறிஞர் தொகுத்த சித்த மருத்துவக் களஞ்சியம் முன்னோடி நூல், முனைவர் வாசுதேவன் படைத்துள்ள இவ்வாய்வு நூல் வரும் தலைமுறையினருக்கு அறிவுக் கருவூலமாகச் சித்த மருத்துவர்க்கும் மாணாக்கர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். வாசகர்களுக்கு இவ் உண்மை புலனாகும்.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
- ஓர் ஆய்வு

ஆசிரியர் : முனைவர் இர. வாசுதேவன்,
வெளியீடு : பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,
சென்னை - 4, விலை : ரூ. 240.00