சங்க காலம்
ஆ. சிவசுப்பிரமணியன்
தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய (FEUDAL) முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.
நிலப் பாகுபாடு
மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.
மக்களும் பண்பாடும்
குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.
ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.
மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.
நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.
வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.
சங்ககால அரசியல்
சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.
மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.
சமயம்
ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர்வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பெளத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஆர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.
பொருளியல்
நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.
இலக்கணம்
தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.
இலக்கியம்
தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஆர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஆர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஆர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.
சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.
பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.
பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)
சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.
சமயம்
சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பெளத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.
பெளத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பெளத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.
பல்லவர் அரசு
சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.
கலை
பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.
பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பெளத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.
சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)
பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை - காவல் - வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.
கலை இலக்கியம்
சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.
சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.
ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.
சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பெளத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.
சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.
கிராமசபை
சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.
பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.
சமூகம்
சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.
பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.
தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.
ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.
அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.
சமயம்
சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் - கன்மம் - மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.
தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.
பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)
சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மா.பாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.
என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 - 274).
விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)
பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.
நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தின ர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை-. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.
நாயக்கர் காலம்
கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.
நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.
நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.
நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்-டி-நொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.
சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஆர்களாவர்.
ஐரோப்பியர் காலம் (1533- 1947)
கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.
வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.
கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆ ங்கிலேயரிடம் தந்தனர்.
மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781-இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.
சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.
சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.
ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,
ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்
என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.
1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859இல் இந்திய சிவில் சட்டமும், 1860இல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861இல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.
பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857ம் ண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880இல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.
தமிழ்நாட்டை ண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876- 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.
காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
என்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.
தமிழர் வரலாறு
26.07.1004 திங்கள் 1. வரலாறு குறித்த வரையறைகள் - வரலாற்று அணுகுமுறைகள் - தமிழர் வரலாறு - தமிழர் வரலாற்றுக்கான தரவுகள்
2. இனக்குழு வாழ்க்கை
27.07.2004 செவ்வாய் 3. மேய்ச்சல் நில வாழ்க்கை
4. அடிமை முறை
28.07.2004 புதன் 5. நிலவுடைமையின் தோற்றமும் வளர்ச்சியும்
29.07.2004 வியாழன் 6. காலனியத்தின் வருகை - அதன் விளைவுகள்
7. விடுதலை இயக்கமும் தேசிய இயக்கமும்
30.07.2004 வெள்ளி 8. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
31.07.2004 சனி 9. சமூக மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் (பார்ப்பனிய
எதிர்ப்பு, அதன் பல்வேறு வடிவங்கள்- தலித் எழுச்சி)
தமிழ்ச் சமூக வரலாறு
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
. "தமிழ் மன்றம்" .: தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை நிறுவுதல்#comments
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
9
மறுமொழிகள்
தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை நிறுவுதல்
தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சி, தமிழ் மருத்துவத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குரிய சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ் மருத்துவத்தின் துறைப்பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரையாகும்.
தமிழ் மருத்துவம், பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பழந்தமிழ் மருத்துவப் பாடல்கள் ஒரு சில கிடைத்தாலும் அதன் மருத்துவ நூல்கள் கிடைத்தில. சங்க காலத்து ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இயற்றிய ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட நூல் இருந்ததற்கான சான்றும், அந்நூல் ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு, தமிழ் மருத்துவச் சுவடிகளும் தமிழ் இலக்கியச் சுவடிகளும் சுமார் 87 நாடுகளின் நூலகங்களில் இருப்பதாக, உலக நாடுகளின் நூலக ஆய்வு தெரிவிக்கிறது.
மருத்துவ நூல் உரையாசிரியர்கள் மேற்கோளுக்காக எடுத்தாண்டுள்ள இடைக்காடர் மருத்துவம், அகத்தியர் - 81 000, அகத்தியர் – 51 000, அகத்தியர் 30 000, அகத்தியர் 21 000, அகத்தியர் 18 000, அகத்தியர் 8 000, பரஞ்சோதி 8 000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கரமுனி கிரந்தம், மாபுராணம் போன்றவை தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. இது, மேற்கோளுக்காகக் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பாடல்களினால் தெரியவருகிறது.
தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் எனக் கருத்தப்பெறும் திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூலின் அருமையை வடலூர் வள்ளலார் போற்றுகிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் இருந்ததைக் கண்டதாக, உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளார்.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கும் மங்கோலியம், திபெத்தியம், அரபி, மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன. அவை, இன்றும் தமிழ் நூல்களாகவே வழங்கியும் வருகின்றன.
வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர் வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள், கேரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் வேத கல்லூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற மருத்துவ நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடமொழியிலுள்ள இரச சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற நூலைப் பார்த்து எழுதியதாகத் தெரிவிக்கிறது.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அனைத்தும் திருவிதாங்கூர் மன்னரின் தூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அவை, நொய்யாற்றங்கரை என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த ‘தமிழ் மருத்துவ ஆய்வு மையம்’ என்னும் அமைப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர் பெயரில் மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.
அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டதே ‘ஆயுர் வேத மருத்துவம்’ ஆகும்.
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-
1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்
என்பன.
மேற்காணும் நூல்களில் பல, சங்கரன் கோயில் அருகிலுள்ள ‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊரில் அமைந்துள்ள ‘பால் வண்ண நாதன்’ திருக்கோயிலில் கருவூலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும் பெயரில் மலையாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருக்கிறது. (அந்நூல் என்னிடம் இருக்கிறது)
“இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து சித்த மருத்துவம்” (திசம்பர் 2000)
ஆசிரியர். Dr. சே.சண்முகராஜா M.D. (Siddha)
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம்,
கந்தரோடை, சுன்னாகம், இலங்கை.
என்னும் நூல், சித்த மருத்துவத்தின் தாயகமாக இலங்கையில் யாழ்ப்பாணம் விளங்குகிறது என்றும், இராவணன் இயற்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றும், சிங்கள மொழியில், இராவணன் இயற்றிய நூல்களில் சில வழக்கில் இருந்து வருகிறது! என்றும் குறிப்பிடுகிறது. மேலும், 15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும்! என்றும் குறிப்பிடுகிறது.
இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மனோஷ் பப்ளிகேஷன், புதுதில்லி – 110084 லிருந்து வெளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.
தமிழில் வழங்கி வந்துள்ள சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை உ.வே.சா. போன்றவர்களால் சேகரிக்கப் பட்டன. ஆனால், மருத்துவக் கலைநூல், 64 வகை கலை நூல்கள், நிகண்டு, வானியல், கணிதம், வர்ம நூல்களும் சேகரிக்கப் படவில்லை.
விலங்கு, பறவை மருத்துவம், மருத்துவம் சார்ந்த அறிவியல் சுவடி நூல்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் மிகுதியாக இருக்கின்றன.
மைய அரசின் பண்பாட்டுத் துறையின் தேசிய ஓலைச் சுவடிகள் மையமும் தமிழ் நாடு அரசும் இணைந்து நட்த்திய கணக்கெடுப்பில் (பிப்ரவரி, 2006) நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் சுவடிகள் இருப்பதாக்க் கண்டறியப்பட்டுள்ளது. சங்கரன் கோயில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் பிற மொழிகளிலும் மறைந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் மருத்துவம் சிறப்படையவும், தமிழ்க் களஞ்சியத்தை மீட்டெடுக்கவும் வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் பணிகளைச் செயலாக்க வேண்டும்.
1. தமிழகத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொண்டு, அவற்றை ஆவணப் படுத்திப் பட்டியலிட வேண்டும்.
2. அரிய நூல்களைப் பதிப்பித்து உரையுடன் வெளியிட வேண்டும்.
3. தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள இராவணன் நூல்களைத் திரட்டி வெளியிட வேண்டும்.
4. பிற மொழிகளிலும் பிற நாடுகளிலும் உள்ள மருத்துவ நூல்களைப் படியெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. பரம்பரை மருத்துவர்களிடமுள்ள எழுத்து வடிவம் பெறாத மருத்துவ முறைகள், மலைசாதி வகுப்பினரிடமுள்ள மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திரட்ட வேண்டும்.
மேற்காணும் பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற, தமிழ் மொழிக்கு வலுவூட்ட “ தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை “ நிறுவிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
2
மறுமொழிகள்
திருவானைக் கோயில் – சித்தர் தத்துவ விளக்கம்.
காவிரி தோன்றுமிடம் குடகுமலை. காவிரி இரண்டாகப் பிரியுமிடம் 'முக்கொம்பு'. பிரிந்த காவிரி மீண்டும் கூடுமிடம் 'கல்லணை'. கல்லணையிலிருந்து ஐந்து கிளைகளாகப் பிரிந்து பல பெயர்களைக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது, காவிரி. காவிரியின் முதற்பெயர் பொன்னி. பின்பு காவிரி எனப்பெயர் பெற்றது. கல்லனைக்கு அருகில் காவிரி நதித்தீவில் அமைந்துள்ளது, திருவானைக் கோயில்.
தத்துவம்: குடகுமலை பிரம்ம நிலையைக் குறிக்கும். பிரம்மம் என்பது ஒன்றே. முக்கொம்பில் இரண்டாகப் பிரிவது ஒன்று இடகலை. மற்றொன்று பிங்கலை. நடுவிலுள்ள தீவு சுழிமுனை. கல்லணையில் ஐந்தாகப் பிரிவது ஞானேந்திரியங்கள், ஐந்து. இவை நம்மை நோக்கிச் செலுத்துவதால் ஆற்றோடு போகாது நாம் எதிர் நீச்சலிட்டு மேலே சென்று பிரம்மத்துடன் கலக்க வேண்டும் என்பதை விளக்குவதே திருவானைக் கோயில்.
நாம் உள்ளே இழுக்கும் போது பன்னிரண்டு அங்குலம் உள்ளே செல்கிறது. மூச்சை வெளியே விடும்போது நான்கு அங்குலம் வெளியேறுகிறது. நான்கு அங்குலம் வீணாகிறது. ஒவ்வொருமுறையும் நான்கு அங்குலக் காற்று வீணாவதனால், ஆயுள் குறைவு ஏற்படுகிறது. நான்கு அங்குலம் வெளியேறி வீணாவதைத்தடுத்தால் ஆயுள் கூடும் என்பதால், வீணாவதைத் தடுத்து அது உடலோடு சேர்க்கச் சொல்லிக் காட்டுவதுதான் நான்குகால் மண்டபம்.
முதல் கோபுரத்தைக் கடந்து இரண்டாவது கோபுரம் நுழையும் போது ஒரு படி இறங்கிச் செல்லவேண்டும். அது, நமது மனம் யோக நிலையில் கீழிறங்கிச் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும். அக்கோபுரத்தின் இரண்டு பக்கமும் வினாயகர் சுப்பிரமணியர் உள்ளனர்.
மூன்றாவது கோபுரம் கடந்து ஒருபடி இறங்கியதும் வலப்புறம் சுந்தரேசர், மீனாட்சி சன்னதி தனித்தனியே உள்ளது. இடப்புறம் சம்புகேசர், அகிலாண்ட நாயகி சன்னதி தனித்தனியே உள்ளது. அடுத்து ஊஞ்சல் மண்டபம் உள்ளது. வடபகுதியில் ஒரு தூணில் காளை, யானை சிற்பம் உள்ளன. ஒரே நேரத்தில் அவை இரண்டையும் காண முடியாது. ஏதேனும் ஒன்றைத்தான் காண முடியும். காளையைக் காணும் போது யானை தெரியாது. யானையைக் காணும் போது காளையைக் காண முடியாது.
தெற்குப் பக்கத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் லிங்கவடிவில் உள்ளனர். மூவரும் ஒருவரே என்பது இதன் கருத்து.
கோவில்கள் எல்லாம் தரை மட்டத்திற்கு மேல் படிப்படியாக உயர்ந்து செல்வதுபோல் இருக்கும். ஆனால், திருவானைக்காவல் சிவன் நீரில் இருக்கிறது. இக்கோயில் படிகளில் இறங்கிச் சென்றால் காவிரி நீர் மட்டத்திற்குச் சென்று விடலாம். அங்கே லிங்கம் இருக்கிறது. மழைக்காலங்களில் லிங்கம் நீரில் மூழ்கிவிடும். ஆகவே, இக்கோயில், ' சுவாதிட்டானம்' கோயில் என்பர்.
அது ஏன்? நம் உடலில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் பகுதி சுவாதிட்டானம் ஆகும்.
ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் இருக்கும். அதுபோல், இக்கோயிலில் இருக்கும் தலவிருட்சம் 'வெண்நாவல்' மரம். அது, ஜெம்பு மகரிஷி என்னும் முனிவர் அடக்கமான இடத்தில், சுமார் 500 ஆண்டுகளாக உள்ளது! என்பர். யோகம் செய்பவர்கள், தங்கள் உடலில் ஏற்படுகின்ற வெப்பத்தைத் தணிக்க வில்வம் சாப்பிட வேண்டும் என்பதைக் குறிக்க இங்கே விலவம் தலமரமாக இருக்கிறது.
இக்கோயில், சோழன் கோச் செங்கண்ணனால் கட்டப்பட்டது. இக்கொயிலுள் யானை நுழைய முடியாத அளவுக்கு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனம் என்பது மதம்கொண்ட யானை போன்றது. இக்கோயில் அமைந்துள்ள முறையில் வழிபட்டால் மனம் அடங்கிவிடும் என்பது பொருள்.
இக்கொயிலில் முக்கிய கோபுரங்கள் ஐந்து. அவை 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிக்கிறது. உயிர்க்குறிய குணங்கள் ஐந்து. அவை, அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகியவை. இவற்றையும் இக்கோபுரங்கள் குறிக்கின்றன.
அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குச் செல்லும் வழியில் 12 தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இது சூரிய கலையைக் குறிக்கிறது. அடுத்து, 16 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இது, சந்திர கலையைக் குறிக்கிறது.
அம்மன் சன்னதிக்கு முன் உள்ள இரு கதவுகளில் ஒவ்வொரு கதவிலும் 48 + 48 = 96 குமிழ்கள் உள்ளன. அவை உடம்பிலுள்ள 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. யோகம் செய்பவர் 96 தத்துவங்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதற்கு இவை அடையாளமாக விளங்குகின்றன.
யோகமும் வாகனமும்
காளை வாகனம். இது தருமத்தைக் குறிக்கும். உழைப்பின் சின்னம்.
சூரிய பிரபை வாகனம். அக இருளை நீக்கும் என்பதாகும்.
சந்திர பிரபை வாகனம். குளிர்ச்சியைக் குறிக்கும்.
அன்ன வாகனம். பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கிவிட்டு தண்ணீரை அருந்தும் அன்னத்தைப் போல, உலக பந்தங்களுக்கு அடிமையாகாது யோகத்தினால் கிடைக்கும் இன்பமாகிய அமுதப்பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கைலாச வாகனம். இராவணன் சாமகானம் (பிராணாயாம்ம்) பாடி இறைவன் அருளைப் பெற்றான். அது போல் நாமும் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பூதவாகனம். யோகத்தினால் உலகப்பற்று நடுங்கும் என்பதாகும்.
சர்ப்பவாகன. குண்டலினி சக்தியால் யோக நிலையில் சித்தி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
யானை வாகனம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கினால், அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
சிம்ம வாகனம். ஆணவத்தை அடக்கு என்பதைக் குறிக்கிறது.
குதிரை வாகனம். பஞ்ச இந்திரியங்களின் (பூதங்கள்) வேகத்தைக் குறிக்கிறது. குதிரையை அடக்குவது போல புலன்களை அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பல்லக்கு. மனிதர்கள் நன்னிலை அடைய வேண்டுமானால், மனதை அலைய விடக்கூடாது என்பதைக் குறிக்கிறது.
தெப்பம். நீரில் மிதப்பது போல வாழ்க்கையின் கரை தெரியாமல் தத்தளிப்பவர்கள் பிராணாயாமம் செய்தால், கரை சேர்வார்கள் என்பதைக் குறிக்கிறது.
தேர். உலகத்தையே அடக்கிக் காட்டுகிறது. அதில் சிற்றின்ப பேரின்ப துன்பக் காட்சிகள் சிற்பமாக இருக்கும். புருவமாகிய தேரில் ஏறினால், இறைவனைக் காணலாம். புருவமே பத்தாவது வாசலாகும். இந்த வாசலைத் திறக்க யோக அக்னியாகும். இந்த சாவியை உடையவரே இறைவன் காட்சி அளிக்கும் வாசலைத் திறக்க முடியும்.
பலி பீடத்திலிருந்து முருகன் சன்னதிக்குச் செல்லும் வழியில், வலப்புறம் நான்கு தூண்கள். ஒவ்வொரு தூணிலும் பேரின்பத்தை உண்டு பண்ணக்கூடிய சிற்பங்கள். சிற்றின்பச் சிற்பங்கள். விந்து தத்துவத்தை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் முறையில் அமைந்துள்ளது. விந்துவை மேல் நிலைக்குக் கொண்டுவருபவன் தெய்வமாகலாம்! என்று விளக்கப்பட்டுள்ளது. தூண்களுக்கு மேல் 12 இராசிகள் அமைந்துள்ளன.
இதன் விளக்கமாக, ஓக சாதகர் மும்மலத்தையும் கடந்து முதுகுத் தண்டின் வழியாக சுழிமுனை நாடி வழியாக பிராண சத்தியை மேலேற்றி உச்சியை அடைந்தால், அதன் பின் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று பொருள்.
அடுத்து, பலிபீடம். அது, மும்மலத்தை பலியிடவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கொடிமரம், முதுகுத் தண்டைக் குறிக்கும். கொடிக்கம்பத்தில் 32 அங்கங்கள் உள்ளன. முதுகுத் தண்டிலும் 32 பகுதிகள் உள்ளன.
முதுகுத் தண்டினுள் உள்ள துவாரத்தில் ஈக முறையில் உயிர்மூச்சைச் செலுத்தினால், மரணமற்ற வாழ்வு கிட்டும்.
ஆறுநிலைகளைக் கடந்து ஏழாவது நிலையை அடைந்தால் தெய்வ நிலையை அடையலாம் என்பதைக் குறிக்க, ஆறு படிகளைக் கடந்து ஏழாவது நிலையில் சம்புகேசர் உள்ளார்.
சம்புகேசர் முன்பு ஒன்பது துவாரங்களைக் கொண்ட கல் சன்னல் உள்ளது. ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஒன்பது துவாரங்களும் ஒன்பது தீர்த்தங்களும் நம் உடலில் உள்ளன.
ஒன்பது துவாரங்களின் வழியாக வெளியேறும் உயிர்காற்றை (பிராணன்) வெளியேறாமல் நிறுத்தினால், நாம் பறக்க முடியும். இவ்வாறு பிராண சத்தியை நிறுத்தி காற்றுபோல வானில் பறந்து செல்வதைக் குறிக்கிறது, ஆஞ்சநேயர்.
இந்த நிலையை அடைய நடுவிடமாகிய ஆக்ஞை பூட்டிக் கிடக்கிறது. அதைத் திறந்துவிட்டால், பல அதிசயங்களைக் காணலாம்.
கோவில்கள் எல்லாம் தரை மட்டத்திற்கு மேல் படிப்படியாக உயர்ந்து செல்வதுபோல் இருக்கும். ஆனால், திருவானைக்காவல் சிவன் நீரில் இருக்கிறது. இக்கோயில் படிகளில் இறங்கிச் சென்றால் காவிரி நீர் மட்டத்திற்குச் சென்று விடலாம். அங்கே லிங்கம் இருக்கிறது. மழைக்காலங்களில் லிங்கம் நீரில் மூழ்கிவிடும். ஆகவே, இக்கோயில், ' சுவாதிட்டானம்' கோயில் என்பர்.
அது ஏன்? நம் உடலில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் பகுதி சுவாதிட்டானம் ஆகும்.
ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் இருக்கும். அதுபோல், இக்கோயிலில் இருக்கும் தலவிருட்சம் 'வெண்நாவல்' மரம். அது, ஜெம்பு மகரிஷி என்னும் முனிவர் அடக்கமான இடத்தில், சுமார் 500 ஆண்டுகளாக உள்ளது! என்பர். யோகம் செய்பவர்கள், தங்கள் உடலில் ஏற்படுகின்ற வெப்பத்தைத் தணிக்க வில்வம் சாப்பிட வேண்டும் என்பதைக் குறிக்க இங்கே விலவம் தலமரமாக இருக்கிறது.
இக்கோயில், சோழன் கோச் செங்கண்ணனால் கட்டப்பட்டது. இக்கொயிலுள் யானை நுழைய முடியாத அளவுக்கு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனம் என்பது மதம்கொண்ட யானை போன்றது. இக்கோயில் அமைந்துள்ள முறையில் வழிபட்டால் மனம் அடங்கிவிடும் என்பது பொருள்.
இக்கொயிலில் முக்கிய கோபுரங்கள் ஐந்து. அவை 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிக்கிறது. உயிர்க்குறிய குணங்கள் ஐந்து. அவை, அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகியவை. இவற்றையும் இக்கோபுரங்கள் குறிக்கின்றன.
அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குச் செல்லும் வழியில் 12 தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இது சூரிய கலையைக் குறிக்கிறது. அடுத்து, 16 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இது, சந்திர கலையைக் குறிக்கிறது.
அம்மன் சன்னதிக்கு முன் உள்ள இரு கதவுகளில் ஒவ்வொரு கதவிலும் 48 + 48 = 96 குமிழ்கள் உள்ளன. அவை உடம்பிலுள்ள 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. யோகம் செய்பவர் 96 தத்துவங்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதற்கு இவை அடையாளமாக விளங்குகின்றன.
யோகமும் வாகனமும்
காளை வாகனம். இது தருமத்தைக் குறிக்கும். உழைப்பின் சின்னம்.
சூரிய பிரபை வாகனம். அக இருளை நீக்கும் என்பதாகும்.
சந்திர பிரபை வாகனம். குளிர்ச்சியைக் குறிக்கும்.
அன்ன வாகனம். பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கிவிட்டு தண்ணீரை அருந்தும் அன்னத்தைப் போல, உலக பந்தங்களுக்கு அடிமையாகாது யோகத்தினால் கிடைக்கும் இன்பமாகிய அமுதப்பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கைலாச வாகனம். இராவணன் சாமகானம் (பிராணாயாம்ம்) பாடி இறைவன் அருளைப் பெற்றான். அது போல் நாமும் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பூதவாகனம். யோகத்தினால் உலகப்பற்று நடுங்கும் என்பதாகும்.
சர்ப்பவாகன. குண்டலினி சக்தியால் யோக நிலையில் சித்தி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
யானை வாகனம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கினால், அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
சிம்ம வாகனம். ஆணவத்தை அடக்கு என்பதைக் குறிக்கிறது.
குதிரை வாகனம். பஞ்ச இந்திரியங்களின் (பூதங்கள்) வேகத்தைக் குறிக்கிறது. குதிரையை அடக்குவது போல புலன்களை அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பல்லக்கு. மனிதர்கள் நன்னிலை அடைய வேண்டுமானால், மனதை அலைய விடக்கூடாது என்பதைக் குறிக்கிறது.
தெப்பம். நீரில் மிதப்பது போல வாழ்க்கையின் கரை தெரியாமல் தத்தளிப்பவர்கள் பிராணாயாமம் செய்தால், கரை சேர்வார்கள் என்பதைக் குறிக்கிறது.
தேர். உலகத்தையே அடக்கிக் காட்டுகிறது. அதில் சிற்றின்ப பேரின்ப துன்பக் காட்சிகள் சிற்பமாக இருக்கும். புருவமாகிய தேரில் ஏறினால், இறைவனைக் காணலாம். புருவமே பத்தாவது வாசலாகும். இந்த வாசலைத் திறக்க யோக அக்னியாகும். இந்த சாவியை உடையவரே இறைவன் காட்சி அளிக்கும் வாசலைத் திறக்க முடியும்.
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
3
மறுமொழிகள்
கபிலர் அகவல்
நான்முகன் படைத்த நானாவகை உலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண்முதிதோ பெண்முதிதோ அன்றி அலிமுதிதோ
நாள்முதிதோ கோண்முதிதோ நல்வினை முதிதோ
தீவினை முதிதோ
செல்வச் சிறப்போ அறிவு சிறப்போ
தொல்லை மாஞாலம் தோற்றமோ படைப்போ
எல்லாப் பிறப்பும் இயற்கையோ செயற்கையோ
காலத்தால் சாவரோ பொய்ச்சாவு சாவரோ
நஞ்சுறு தீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
துஞ்சும்போது அந்தப் பஞ்சேந்திரியம்
என்செயா நிற்குமோ எவ்விடத்து ஏகுமோ
ஆற்ற லுடையீர் அருந்தவம் புரிந்தால்
வேற்றுடம்பு ஆகுமோ தமது உடம்பாகுமோ
உண்டியை உண்குவது உடலோ உயிரோ
உலகத் தீரே உலகத் தீரே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்
எழுபது போக நீக்கு இருப்பன முப்பதே.
அவற்றுள்
இன்புறு நாளும் சிலவேயதா அன்று
துன்புறு நாளும் சிலவே யாதலால்
பெருக்காறு ஒத்தது செல்வம் பெருக்காறு
இடிகரை யொத்தது இளமை இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும் இன்னும்
நாளை நாளை என்பீராகில்
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்
அப்போது அந்த கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்
நல்லார் என்னான் நல்குரவு அறியான்
தீயார் என்னான் செல்வர் என்று உன்னான் 40
தரியான் ஒருகணம் தருகணாளன்
உயிர்கொடு போவான் உடல்கொடு போகான்
ஏதுக்கு அழுவீர் ஏழை மாந்தர்காள்
உயிரினை இழந்தோ உடலினை இழந்தோ
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீராகில்
உடலினை அன்றுஅலாது இன்றும் காண்கிலீர்
உயிரினை இழந்த உடலது தன்னைக்
களவுகொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
கூறை களைந்து கோவணம் கொளுவி
ஈமத்தீயை எரி எழ மூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம் எனப் படுமோ சதுர் எனப்படுமோ.
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
இறந்தவராய் உமை இல்லிடை இருத்திப்
பாவனை மந்திரம் பலபட உரைத்தே
உமக்கு அவர் புத்திரர் ஊட்டின போது
அடுபசியால் குலைந்து ஆங்குஅவர் மீண்டு 60.
கைஏந்தி நிற்பது கண்டதுயார் புகலீர்
அருந்திய உண்டியால் ஆர் பசி கழிந்தது?
ஒட்டிய மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்
பற்பலர் நாட்டினர் பார்ப்பார் இலையால்
முற்படைப்பு அதனில் வேறாகிய முறைமையால்
நால் வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்
மேல்வகை கீழ்வகை விலங்குவது ஒழுக்கால்
பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் 70
கலந்து கருப்பெறல் கண்டது உண்டோ?
ஒருவகைச் சாதியா மக்கட் பிறப்பில் ஈர்
இரு வகையாக நீர் இயம்பிய குலத்து
ஆண் பெண் மாறி அணைதலும் அணைந்த பின்
கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின்றிலீரோ?
எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ
அந்நிலத்து அந்தவித்து அங்கு உரித்திடும் அல்லால்
மாறி வேறாகும் வழக்கம் இன்றில்லையே
பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திரர் ஆயினோர் பூசுரர் அல்லரோ 80
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல் போல்
மாந்தரில் பேதமாய் வடிவு எவர் கண்டுளார்
வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமை ஆவதும் வெளிப்படல் இன்றே
தெந்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகில்
பழுது அற ஓதிப் பார்ப்பான் ஆவான்
வடதிசைப் பார்ப்பான் தெந்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்
அது நிற்க,
சேற்றில் பிறந்த செங்கழுநீர் போலப் பிரமற்குக்
கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச்
சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும், சத்தியர்க்குப்
புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசருக்கு மீன்
வாணிச்சி வயிற்றில் பிறந்த வியாசரும் இந்நால்வரும்
வேதங்கள் ஓதி வேன்மைப் பட்டு
மாதவராகி வயங்கினர் அன்றோ?
அருந்தவ மாமுனியாம் பகவற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கண்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினில் அன்று அவதரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே 100
என்னுடன் பிறந்தவர் எத்தனை பேர் எனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
யாம்வளர் திறம் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக்காடு எனும் ஊர் தனில் தங்கியே
வண்ணார் அகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்
சான்றார் அகம்தனில் உறுவை வளர்ந்தனள்
நரம்புக் கருவியோ ந்ண்ணிடு சேரியில்
பாணர் அகத்தில் ஔவை வளர்ந்தனள்
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறையர் இடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன் 115
பாரூர் நீர் நாட்டு ஊர் தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.
ஆதலால்,
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ 110
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்குச் சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறிலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
வழிபடு தெய்வமும் ஒன்றே ஆதலால்
முன்னோர் உரைத்த மொழி தவறாமல் 120
எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டுப்
புலையும் கொலையும் களவும் தவிர்த்து
நிலைபெற அறத்தில் நிற்பதை அறிந்து
ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து
பேணி உரைப்பது பிழைஎனப் படாது
சிறப்பும் சீலமும் அல்லது
பிறப்பு நலம் தருமோ பேதையீரே! 127
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல வேண்டுமால், சரியானபடி அறிய இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இந்த விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும் இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முன்னால் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.
சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ஏகலோடி என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்பு படுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவில் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவர். இந்த வான் நடுவரையை இன்னொரு விதமாய் விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்று கூடச் சொல்லுவதுண்டு.
விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களுமாய்ச் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ஒருக்களித்தல் / ஒருக்கணித்தல் என்ற வினைச்சொல் சாய்ந்து இருத்தல் என்ற பொருளைக் கொள்ளும். ஒருக்களித்துப் படுத்தான் என்றால், மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக் குறையப் போகிறது" என்று உணர்த்துகின்ற நாளாகும். அந்த நாள் வரும் போது, "இனிமேல் வருவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.
இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.
ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் ஒத்த (=ஒரே அளவுள்ள) நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.
இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும், இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22 ஆம் நாள்) நாம் சொல்லுகிறோம்.
புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்த ஒக்க நாட்கள் என்பவை சிறிது சிறிதாக முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.
இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் ஏற்படுகிறது (=விழுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் வந்து சேரும்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.
இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;
இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு உடன் அயன முறை (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தைக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பது விதப்பாகப் பின்பற்றப்படுகிறது. நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவை நில்லயன முறையின் படி சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது உடன் அயன முறையின் படி, இந்த வடசெலவு தொடங்குவது இந்தக் காலத்தில் திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது. இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த ஆண்டு கி.பி. 285 ஆகும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் முற்செலவச் சுற்று தொடங்கிய நாளும் இந்திய வானியலின் படி கி.பி.285 க்கு அண்மையில் தான்.
இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த நிலையை நினைவு படுத்தி, பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் ஒன்று சேர்ந்திருந்தன என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவார்கள். மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)
பொங்கல் நாள் என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.
அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் பொங்கல் விழாவைத் தமிழர் அதற்கு முன் என்ன சொல்லிக் கொண்டாடினர் என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்விக்கான விடை, விழாவைக் கொண்டாடும் முறையில் இருக்கிறது. பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.
இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். அந்த வேறு எது என்பது அடுத்த கேள்வி. [இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]
[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும் முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியல்காரர்.)
கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.
அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப்பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம். இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]
சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும் என்பதை இனிப் பார்ப்போம்.
கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.
இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலில் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)
சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும். இனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் (இது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று sine ஆகி நிற்கிறது.) கூட நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும்.
பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது. ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பருவங்களுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.
பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.
பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----
என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.
அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.
சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]
இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!
கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]
பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.
இராம.கி.
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
இலக்கியத்தில் வீடு பேறு!
வாழ்க்கையின் குறிக்கோள் வீடு பேற்றை அடைவதாகும். உலகியலிருந்து முற்றிலும் மாறுபட்டது வீடு பேறு. உலகியலைத் துறந்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பாரும், உலகியலில் இருந்து கொண்டே வீடு பேற்றை அடைய முடியும் என்பாரும் உளர். இவ்விருவரின் கருத்தும் இரண்டு துருவங்களாக இருந்தாலும், உலகியல் வாழ்க்கைக்கும் வீடு பேற்றிற்கும் கருவியாக அமைவன பொருளியல் நூல்கள். அப்பொருளியல் நூல்களில் சிறந்தவை அகப்பொருள், புறப்பொருள் என்பவையாகும். அவற்றுள், அகப்பொருள் செய்யுள்கள் உலகியல் வாழ்வை இனிதுரைக்கிறது. உலகியல் என்பது நிலையாத்து! என்பதை நன்குணர்த்தி வீடு போற்றின்பத்தை நுகரச் செய்யும் கருவியாக அமைகிறது.
காதலியைக் காதலித்தால் உலகின்பம்
கடவுளைக் காதலித்தால் வீட்டின்பம்
காதலர்களாகிய தலைவனையும் தலைவியையும் தனித்தனியே இருவர் என்றோ இரண்டு உடல் என்றோ இரண்டு உயிர் என்றோ சொல்லாமல், ‘இரு வேறு உடல்களில் வாழ்கின்ற ஓர் உயிர்'
“இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே” - (அகம். செய். 12)
என்கிறது, தமிழ் இலக்கியம்.
தமிழ்ப் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் நிலைக்கலனாக விளங்கும் தொல்காப்பியம்,
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொழ்டு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
- தொல்காப்பியம். கற்பியல்.1138
(இல்லற வாழ்க்கையினை நிகழ்த்திய தலைவன் தலைவி என்னும் இருவரும் தாம் விரும்பிய இன்பங்களையெல்லாம் நுகர்ந்து மனநிறைவு பெற்று இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்து அதன் வழி நடந்து நன்னெறியில் பழகுதல் என்பது, இதுகாறும் மேற்கொண்டிருந்த மனையறத்தினால் அடையக்கூடிய முடிந்த பயனாகும் என்பர் உரையாளர்கள்.)
சிறந்தது பயிற்றல் என்பது – இல்லத்தின் வாயிலாக, நிலையாதவற்றைத் துறத்தல் என்பது பொருளாகும். இவ்வொழுக்கம் தலைவனும் தலைவியும் ஒருங்கிருந்து மேற்கொள்ளும் ஒழுக்கமாகும். எனவே, பண்டைத் தமிழர் கூறிய துறவறம் என்பது மனைவி, மக்கள், பொருள்கள் போன்றவற்றைக் கைவிட்டு நீங்குவது அன்று. பொருள்கள் நிலையாதவை என்பதை உணர்ந்து அவற்றின்பால் கொண்ட அவாவைத் துறப்பதே துறவறமாகும்.
பண்டைய தமிழ்ச் சான்றோர்கள் அறத்தை உரைத்தார்கள். அவர்கள் கூறிய அறத்தில் இல்லறமும் துறவறமும் இருக்கின்றன. அறத்தினால் பெறக்கூடியதே இன்பம் என்றனர். அந்த இன்பமே உலக இன்பத்தையும் வீட்டின்பத்தையும் தருவதாகும். நிலையில்லாத உலக இன்பத்தை அடைந்து, வாழ்வாங்கு வாழ்ந்து, மெய்யுணர்வுப் பெற்று பேரின்ப நிலைக்குச் செல்ல வேண்டும்! என்று, அறிந்திருந்தார்கள்.
“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்”
என்னும் குறள், வீடு பேற்றை, பேரின்பத்தை உணர்த்துகிறது.
இருதலைப் புள்ளின் ஓருயிர் போலத் தலைவனும் தலைவியும் அன்புற்று காதலால் முதிர்ந்து இன்புற்று எய்தும் நிலையே பேரின்பமாகும்.
தமிழ் மொழியிலமைந்த அகத்துறை செய்யுள்கள் அனைத்தும் மேலெழுந்த வாரியாக நோக்கும் போது, உலகியலாகிய சிற்றின்பத்தைக் கூறுவன போலத் தோன்றும். ஆழ்ந்து அகன்று நோக்கி உணர்ச்சியுடன் உணர்ந்தால் அவை பேரின்பம் தரும் திருவருள் பாக்களாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.
“அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை”
- (நாலடியார். 381)
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
திராவிடர் - ஆரியர் உண்மை - தந்தை பெரியார்
தோழர்களே! நான் இந்த ஊர்களுக்கு பலதடவை வந்திருக்கிறேன். எத்தனையோ தடவை பொதுக்கூட்டங்களிலும் பேசி இருக்கிறேன். பல தடவை இந்த ஊர்த் தெருக்களில் நடந்திருக்கிறேன்.
அந்தக் காலத்திலெல்லாம் இல்லாத மாதிரி இப்பொழுது மாத்திரம் எனக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் ஆன வரவேற்பு நடக்கவேண்டும்? நான் உங்களுக்குப் புதியவனா? வெளிநாட்டிலிருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வரப்பட்டவனா? அல்ல. உங்களுக்கு இது செய்கிறேன், அது செய்கிறேன்; மழையை வரவழைக்கிறேன்; தரித்திரத்தையும் நோயையும் ஓட்டுகிறேன்; வெள்ளையனை விரட்டுகிறேன்; 8-நாள் 10-நாள்களில் சுயராஜ்யம் கொண்டு வருகிறேன் என்று ஏதாவது உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி மயக்கினவனா? ஒன்றும் இல்லையே.
சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு
உங்களில் பலர் அதிருப்தி அடையும் படியும் அரசியல்,சமுக இயல் ஆகியவைகளில் உங்களுடைய பழக்கவழக்க நம்பிக்கைகளுக்கு மாறாகவும் பேசுகிறேன்; சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு
என்கிறேன்; இந்தியா என்பது. கற்பனை என்றும் சொல்லுகிறேன்; காங்கிரஸ் என்பதும், தேசீயம் என்பதும் ஆரியருக்கு அரண் என்றும் சொல்லுகிறேன்; இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும்,
அப்படிச் சொல்லுவது தமிழர்க்கு இழிவு என்றும் கூட சொல்லுகிறேன்; இன்னமும் பல உங்களுக்கு புதிதாயிருக்கும் படியாகவும், காதுக்கு இனிப்பைக் கொடுக்கக்கூடியதாக இல்லாததாகவும் பேசுகின்றேன்.
இப்படியெல்லாம் பேசுகிற ஒருவனை, நான் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொள்ள தயங்குகிற நீங்கள் இவ்வளவு ஆடம்பரமுடன், உற்சாகத்துடன் வரவேற்பதை நான் எனக்காக என்று எண்ணமுடியுமா? ஒரு நாளும் அப்படி நான் நினைக்கவில்லை. இந்த ஆடம்பர வரவேற்புகளால் நான் பெருமை அடையவில்லை.
ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம்.
ஆனால் பின்னை யாருக்கு? எதற்காக? என்பதை நான் சொல்ல வேண்டாமா? அதைச் சொன்னால்தானே என்னை உண்மையை அறிந்தவன் என்று நீங்கள் கருத முடியும். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தேசீயத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால், காங்கிரசின் பேரால் காந்தியைக் காட்டி உங்களிடம் ஓட்டு பெற்று மந்திரிப் பதவி அடைந்த 25 மாதத்தில், அவர்கள் உங்களுக்குச் செய்த கொடுமையையும் அட்டூழியங்களையும் பொறுக்கமாட்டாமல் உங்களுடைய வயிறு எரிந்து நெஞ்சம் குமுறி ரத்தம் கொதித்து... ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம் என்றே கருதுகிறேன்.
இந்த வெறியாட்டம் என்னை வைத்து நீங்கள் ஆடுவதற்குக் காரணம் நான் அ.தக் காலத்தில் அதாவது நீங்கள் பார்ப்பனப் புரட்டுக்கு மயங்கி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கொடுக்கப் போகும் காலத்தில் அவர்கள் (காங்கிரஸ்காரகள்) உங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று புட்டுப்புட்டு விளக்கமாக விளக்கிய காலத்தில், நீங்கள் வேசியின் மையலில் மயங்கிய மைனர்களுக்குச் சொல்லும் புத்திமதியை அடையும் கதிபோல் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு கண்மூடித்தனமாகய் நடந்து கொண்டதைத் தவறு என்று என்னிடம் ஒப்புக் கொள்ளும் பாவனையாய் என்னை முன்னிறுத்தி ஆத்திரம் கொண்டாடுகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன்.
இந்த ஆத்திரக் கொண்டாட்டத்தில் மஞ்சள் பெட்டிக்கு மக்களின் தரம் தெரியாமல் ஓட்டளித்த உங்களில் அனேகரை வெட்கப்படச் செய்திருக்கிறம் என்பதையும் நான் உணருகிறேன்.
தோழர்களே! உலகத்தில் இவ்வளவு பெரும்பான்மையான மெஜாரிட்டியாரின் ஆதரவுடன் அதிகாரம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் பொதுமக்களின் மனக் கொதிப்புக்கு ஆளாகி பொது ஜனஆதரவிழந்து வீழ்ச்சியடைந்ததாக சரித்திரத்தில்கூட பார்ப்பது அரிதாகும்.
ஆணவம் எங்கே?
இன்று அவர்களுடைய, காங்கிரஸ்காரர்களுடைய, பார்ப்பனர்களுடைய ஆணவம் எங்கே? அகம்பாவம் எங்கே?
சட்டசபைகளில் நம் தலைவர்களை சிறிதுகூட மதிக்காமல் "எங்களைஅனுப்பிய பொது ஜனங்களைப் போய்க் கேளுங்கள்" என்று அவர்கள் கூறிய திமிரான பேச்சு எங்கே? இன்றைய வீழ்ச்சி எங்கே? என்று
பாருங்கள்.
என்ன வீழ்ச்சி என்று யாராவது தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள்.
தமிழ்நாட்டுத் தலைவரென்றவரும், காங்கிரஸ் முதன் மந்திரியும், காந்தியாரின் அடுத்த பதவியில் இருப்பவருமான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் செல்லுமிடங்களிலெல்லாம் பல நூற்றுக்கணக்கான கறுப்புக் கொடியும், போலீஸ் உதவியில்லாமல் நடக்க முடியாத நிலையும், காவலோடு காரிலிருந்து இறங்கி காவலோடு காரில் ஏற்றி மூடாக்குப் போட்டு காரை ஓட்ட வேண்டிய
நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருப்பதும் - காங்கிரசுக்கு எதிரி, தேசத்துக்கு எதிரி, மனித சமுகத்திற்கு எதிரி, காந்தீயத்துக்கு எதிரி என்று தப்பட்டை மூலம் பறை அறிவிக்கப்பட்ட எனக்கு இப்படி 50ஆயிரம் பேர், லட்சம் பேர் வரை கூடி ஊர்வலம் செய்வதும், வானம். இடிபட வாழ்த்துக் கூறுவதும், நூற்றுக்கணக்கான வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிப்பத்தும், அய்ந்நூற்றுக்கணக்கான மாலைகள் போடுவதும்,
ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுப்பதுமான இந்தக் காரியங்கள் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் பார்ப்பனீய வீழ்ச்சிக்கும் அறிகுறியல்லவா என்று கேட்கின்றேன்.
எதைக் குறிக்கிறது?
நீங்கள் வாசித்தளிக்கும் வரவேற்பின் ஒவ்வொரு எழுத்தும், புள்ளியும், கமா குறியும் எதைக் குறிக்கின்றன? "இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை, காங்கிரசை, காந்திப் புரட்டை உடையுங்கள்; அழியுங்கள்; அழித்து கொளுத்திப் புதையுங்கள்" என்று கட்டளை இடுகிறது போலல்லவா காணப்படுகின்றன. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் காசும் என்ன கூறுகின்றன? "அய்யனே! இந்தப் பார்ப்பனீயக் கொடுமையிலிருந்தி. எங்களை விடுதலை செய்தி, மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு வகை செய்யுங்கள்" என்று கெஞ்சி, அபயம். கொள்ளுவது போலல்லவா வந்து குவிகின்றன.
உங்கள் வாழ்த்திப் பேரொலிகள் எதைக் குறிப்பிடுகின்றன?
என்னை வாழ்த்துக் கூறுவதன் மூலமே உங்கள் எதிரிகள் ஒழிந்தேபோய்விட்டதாகக் கருதி. வெற்றி முழக்கம் செய்வது போலவே காணப்படுகின்றன.
இவைகளுக்காக நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய பதில் என்ன?
தோழர்களே! இந்த 15 வருஷ காலமாக நான் கூறி வந்ததை இப்பொழுதாவம் நீங்கள் மெய் என்றும், சரி என்றும் கருதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு உங்களுடைய ஆசைக்கும் எதிர் நோக்கத்திற்கும் ஒரு உண்மையான - மெய்யான தொண்டனாக இருந்து, நீங்கள் சிறிதும் மனக்குறை அடையாத வண்ணம் என்னாலான தொண்டைச் செய்கிறேன் என்று வாக்களிப்பதுதான் என்று கருதுகிறேன்.
நம்மை மிருகமாக நடத்த காரணம் என்ன?
தோழ.களே! இன்று நாம் அதாவது, இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந்நாட்டை ஆண்டுவந்த அரச பின்வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரீகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக் காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்கவந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும் பிறராலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருகமாய் நட.தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால், அதற்காகவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் - திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும்,
பல்வேறு மேல்-கீழ் ஜாதி வகுப்புகளாகவும், பல்வேறு லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல்,தன்முயற்சி இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால் கத்தி, துப்பாக்கி உள்ளவருக்கெல்லாம் பயந்து அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்கு கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.
ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிகூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமுக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியது முதல், தமிழர் தோன்றியது முதல் இப்படித்தான் இருந்ததா என்று கேட்கிறேன்.
உண்மையைப் பாருங்கள்
சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச்சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள் உலகிலேயே முதல் முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனித வர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரிப் பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும், இழிவான தன்மையிலும் இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டாமா என்பதற்காகவே இவற்றைக் கூறினேன்.
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான்.
இப்போது, தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து. என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும் கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும்,வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.
இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும் அதைப்
பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. நான் கூறி வந்தவை களும், இப்போது. கூறுவனவற்றிற்கும் ஆதாரமாகச் சரித்திரமும், அரிய ஆராய்ச்சி ஞானம் பெற்ற சரித்திர ஆசிரியர்களும் கூறி இருப்பதில்
சிலவற்றை மாத்திரம் எடுத்துக் காட்டிவிட்டு, இதுபற்றிய என் பேச்சை முடிக்கிறேன். மற்றவர்களைப் பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.
ஆராய்ச்சியாளர் அபிப்பிராயம்
"தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும், ராமாயணக் கதையில் எழுதி.வைக்கப்பட்டிருக்கிறது."
இது ரோமேஸ் சந்திரடட் C.I.E.C.S எழுதிய "புராதன இந்தியா" என்னும் புத்தகத்தில் 52வது பக்கத்தில் இருக்கிறது.
"திராவிடர்கள் தங்கள் மீது.. படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."
இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார், எம்..ஏ., யின் "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்" என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்"
இது பி.சிம்பரம்பிள்ளை எழுதிய "திராவிடரும் ஆரியரும்" என்னும் புத்தகத்தின் 24 வது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில்
உள்ளவர்களை ஆரியரால்லாதவர்களைக் குறிப்பதாகும்"
இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரீகம்" என்ற புத்தகத்தின் 139-141வ. பக்கங்களில் இருக்கிறது.
"தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தின் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்."
இது "சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்" என்ற புத்தகத்தில் "ராமாயணம்" என்னும் தலைப்பில் 587-589வ. பக்கங்களில் இருக்கின்றது.
"ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்"
தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்
.
இது 1922 ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் "பழைய இந்தியாவின் சரித்திரம்" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.
பகைமைக்குக் காரணம்.
"ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும் தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருஎது கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்."
இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ, எம்.ஏ.,பிஎச்.டி., எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 69வது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரீகத்திற்கும் ஆரியரல்லாத நாகரீகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் - ராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட
போராகும்."
இது ராதா குமுத் முக்கர்ஜீ எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 141வது பக்கத்தில் இருக்கிறது.
"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும். பாஷை".
இது சர்.ஜேம்ஸ் மர்ரே எழுதிய புதிய "இங்கிலீஷ் அகராதி"யின் பக்கம் 67 இல் இருக்கிறது.
"ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு அவர்களது. நாகரீகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தன".
இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்க. 10இல் இருக்கிறது.
"தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைர்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்,"
இத் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ.,பி.எச்.டி., அவர்கள் எழுதிய "தென் இந்தியாவும் இந்திய கலையும்" என்ற புத்தகத்தின் 3வது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே
நாகரீகமடைந்தவர்களாய் இருந்தார்கள்."
இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய "இந்திய சரித்திரம்" முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10வது பக்கத்தில் இருக்கிறது.
"ராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்."
இது ஷோஷி சந்தர்டட் எழுதிய "இந்தியா அன்றும் இன்றும்" என்னும் புத்தகத்தின் 15-வது பக்கத்தில் இருக்கிறது.
அசுரர்கள் யார்?
"ஆரிய கடவுள்களாகிய இந்திரனையும் இதர கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே வந்தது".
இது ஏ.ஸி.தாஸ், எம்.ஏ.,பி.எல்., எழுதிய "ரிக் வேதகாலத்து இந்தியா" என்னும் புத்தகத்தில் 151-வது பக்கத்தில் இருக்கிறது.
"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள்
என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்".
"ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆடிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி
எழுதினார்கள்".
இது C.S.சீனிவாசாச்சாரி, M.A., & M.S. ராமசாமி அய்யங்கார்,M.A ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய "இந்திய சரித்திரம் முதல் பாகம்" என்னும் புத்தகத்தில் "இந்து இந்தியா" என்னும் தலைப்பில்
16,17-வது பக்கங்களில் இருக்கிறது.
"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைர்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்".
இது ஏ.எ. வெல்ஸ் எழுதிய "உலகத்தின் சிறு சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்".
இது "New Age Encyclopedia"(wiyuu ஏஜ் என்சைக்ளோபீடியா Vol.II (1925) பக்கம். - 273ல் இருக்கிறது.)
இராமாயணம் எதைக் காட்டுகிறது?
"இராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்".
இது முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் C.J.வர்க்கி, M.A., எழுதிய "இந்திய சரித்திர பாகுபாடு" என்னும் புத்ததகத்தின் 15-வது பக்கத்தில் இருக்கிறது.
சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்திடன் சாமர்த்திய மாகப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தி தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவைகளாகும்".
இது "பார்ப்பன துவேஷி" ராமசாமியால் எழுதப்பட்டதல்ல. பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865இல் எழுதின புவிரிவான இந்திய சரித்திரம் முதற் பாகம்" என்னும் புத்தகத்தில் 15-வது பக்கத்தில் இருக்கிறது.
"விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்ட.தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது."
இது கி.பி. 1918இல் ஹாவெல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 32-வது பக்கத்தில் இருக்கிறது.
"பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்."
இது ஜி.எச். ராபின்சன், சி.அ..ஈ. யால் எழுதின "இந்தியா" என்னும் புத்தகத்தின் 155வது. பக்கத்தில் இருக்கிறது.
வட இந்திய திராவிட கலை
"வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரீகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை."
இது தமிழ்ப் பேராசியர் கே.என்.சிவராஜ் பிள்ளை, பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு" என்னும் புத்தகத்தின் 11 12 4ஆம் பக்கத்தில் இருக்கிறது.
"பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித்துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்."
இது நாகேந்திரநாத்கோஷ், பி.ஏ., பி.எல்., எழுதிய "இந்திய ஆரியரின் இலக்கியமு கலையும்" என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும் குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது"
இது ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய "சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்" வால்யும். 2இல் பக்கம் 521இல் இருக்கிறது.
"இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல 'பிராமணர்கள்' வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர்,பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரீகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்."
இது வின்சென்ட் ஏ.ஸ்மித் ஆக்ஸ்போர்ட் எழுதிய "இந்திய சரித்திரம்" 14வது. பக்கத்தில் இருக்கிறது.
"இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்."
இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1இல் 405வது பக்கத்தில் இருக்கிறது.
ஆரியரல்லாதார் பட்ட பாடு
"ஆரியரல்லாத இந்நாட்டு பழங்குடி மக்கள் ஆரியர்களால் காட்டுக்கும் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூ., ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் பெயர்களாக மாறிவிட்டன".
இது சர்.வில்லியம் வில்சன் ஹண்டர் K.C.S.I.C.I.E., M.A., ஆக்ஸ்ன்,L.L.T., எழுதிய "இந்திய மக்களின் சரித்திரம்" என்னும். நூலின் 41வது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்"
இது பண்டித. டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட "மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.
"நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூ.க் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை, ஒன்றையுமே நம்புவதில்லை, அவர்களுடைய பழக்க வழக்கங்களே
வேறாக இருக்கின்றன. ஓ! இஎதிரனே அவர்களைக் கொல்லும் தாசர். வம்சத்தை அழித்து விடுவாயாக."
இது "ரிக் வேதம்" அதிகாரம் 10 சுலோகம். 22.......8 இல் இருக்கிறது.
"ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும். சூதாடுவது.மாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன."
இது ராகோசின் எழுதின "வேதகால இந்தியா" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.
"இந்திய அய்ரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு. மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும், வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது".
இது பால்மாசின் அவர்கள் எழுதிய "புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்" என்ற புத்தகத்தில் 19வது பக்கத்தில் இருக்கிறது.
"மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி முதல் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில்
நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்".
இது சர்.ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எ..ஜி., கெ.சி.இ., 1913 இல் எழுதி.ய "இந்தியாவில் அன்னியர்கள்" என்ற புத்தகத்தின் 19வது. பக்கத்தில் இருக்கிறது.
நிச்சயம்
தோழர்களே! இந்த மாதிரியாகவே ஆரியர் வேறு, தமிழர். வேறு என்பதற்கும், இந்தியாவென்பதற்கும் தமிழ் நாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கும், ஆரியர். சமயத்திற்கும் மதத்திற்கும் அவர்களது. கடவுள்; வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி, சாஸ்திரங்களுக்கும் அவர்களது பழக்க வழக்க நாகரீகம் ஆகியவைகளுக்கும் தமிழர்களுடைய சமயம், கலை, பழக்க வழக்க நாகரீகம் முதலியவற்றிற்கும் சம்பந்தமும், ஒற்றுமையும் இல்லை என்பதற்கும் ஆரியர்கள் தமிழ் மக்களாகிய திராவிட மக்களை இழித்து தாழ்த்தி அடக்கி ஆதிக்கம் செய்து வந்தார்கள், வருகிறார்கள் என்பதற்கும், தமிழர் பழக்க வழக்கங்கள் வீரமெல்லாம் ஆரியரால்
அழிக்கப்பட்டுவிட்டன என்பதற்கும் இனியும் இவை போன்ற ஆயிரக்கணக்கான ஆதாரங்களையும், ஆராய்ச்சியாளர் கருத்துக்களையும், சரித்திரச் சான்றுகளையும் ஏராளமாக எடுத்துக் காட்டக்கூடும்.
இவைகளை பொய் என்றோ, மாறுபடுத்தியோ, திருத்தியோ
கூறப்பட்டவை என்றும் சொல்லுவதற்கோ, மெய்ப்பிப்பதற்கோ நாளது.
வரை எந்த ஆராய்ச்சியாளரும் எந்தப் பார்ப்பனரும் முன் வந்தவர்கள்
அல்ல என்பதோடு நாம் மேலே எடுத்துக் காட்டிய அனேக
விஷயங்களை ஆதரிக்க, மெய்பிக்க இன்றும் ஆரிய
பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடமாக
வைக்கப்பட்ட சரித்திர புத்தகங்கள் ஏராளமாய் இருக்கின்றனவென்று.,
அவைகள் இன்றும் முதல் பாரம் முதல் காலேஜ் வகுப்புகள் ஈறாக
பாடமாக வைக்கப்பட்டு பிள்ளைகள் படிப்பிக்கப்படுகிறார்கள் என்றும்.
துணிவோடு கூறுவேன். ஆனால் இவைகளை நான் கூறும்போது.
மாத்திரம்தான் நம். எதிரிகளுக்கு வகுப்புத் துவேஷமாயும், ஜாதி
.வேஷமாயும் காணப்படுவதுடன் நம் தமிழர்களுக்குக்கூட ஏதோ
வெறும் குற்றம் குறை கூறுபவனாகவும் காணப்படுகிறேன். அவர்கள்
நடுநிலைமையில் இருந்து ஆராராய்ந்து. பார்ப்பார்களேயானால் தங்கள்
தவறுதல்களை உணர்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு.
நான் ஏன் இவைகளை எடுத்துக் காட்டுகிறேன் என்பதை எனது
தமிழ் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நான் கூறுவதெல்லாம் இந்தியா, இந்துமதம், இந்தியர்கள்
என்பது நம் நாடும், நம் சமயமும்., நம் சமுகமும் அல்ல வென்பதற்கும்ர்.
ஆரியர் வேறு, தமிழர் வேறு இவ்விருவர்களுடைய நலனும்
லட்சியமும் வேறு வேறு என்பதற்கும் ஆகவே இவற்றை இவ்வளவு
வலியுறுத்திக் கூறுகிறேன். இவற்றை இன்று மாத்திரம் நான்
கூறவரவில்லை. 1926ஆம் வருஷம் முதல் "குடி அரசில்" வால்யூம்
வால்யூமாக எழுதி வந்திருக்கிறேன். மேடைகளிலும். கூறி
வந்தி`ருக்கிறேன்.
இந்த விஷயங்கள் தெளிவுபட்டு ஒரு நிலை ஏற்பட்டாலொழிய
தமிழனுக்கு விடுதலை இல்லை, உரிமை இல்லை, மானம் இல்லை
என்பதை உண்மையாக உணர்கிறேன். ஆதலாலேயே இவற்றைக்
கூர்ந்து. கவனிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.
( தமிழ்நாட்டுச் சுற்றுப் பிராயணத்தில் திருச்சி, சேலம். முதலிய பல
இடங்களில் பெரியாருக்கு வரவேற்பும், பணமுடிப்பும் அளிக்கப்பட்ட
கூட்டங்களில், வரவேற்புகளுக்கும் பணமுடிப்புகளுக்கும் தந்தை பெரியார்
அளித்த பதில்களின் தொகுப்பு.)
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
