நகைச் சுவை


வாழ்வில் நகைச்சுவை
===============

சின்ன வயசுலேருந்து சமையல் எனக்கு சுட்டுப் போடாலும் வராதுங்க.
அம்மாவுக்கு காய்கறி வெட்டிக்கூட கொடுத்தது இல்ல. மிஞ்சி மிஞ்சிப் போனா வீட்டில் தேங்காய் உறித்துக் கொடுப்பேன். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் திடீர் சமையலுக்கு கோழியை விறட்டிப் பிடித்து வெட்டி குழம்பு செய்வார்கள். கோழியை வெட்டுவது ஆட்டை வெட்டுவது இதெல்லாம் பார்க்க எனக்கு பிடிக்காது. அந்த இடத்தைவிட்டு ஒரே ஓட்டம்தான்.

வெந்நீர் சுடவைக்கக் கூட தெரியாமல் வளர்ந்தேன். இதான் குண்டான்.. இதான் தண்ணீர், விறகை இப்படி போட்டு கொளுத்தனும்னு யாரும் சொல்லிக் கொடுக்கலை.
எனக்கும் வெந்நீர் சமைச்சு(?) பாக்கனும்னு தோணாமலேயே போய்டுச்சி. அப்றம் மத்தவங்க செய்றத பாத்து படிப்படியா கத்துக் கொண்டேன். அதுக்கப்றம் சோறு எப்டி காய்ச்சுறதுன்னு கத்துக்க நெனைச்சேன். காய்ச்சறதுன்னு சொன்னதும் நம்ம நண்பர்கள் வாயில சிரிப்பு தானா வருது பாருங்க.

அரியை கழுவி பாத்திரத்தில் போட்டு ஒன்னுக்கு ரெண்டு தண்ணி ஊத்தி அடுப்புல வெச்சி வேக விட்டு நல்லா கொதிக்கும்போது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறை எடுத்து அமுக்கிப் பாத்து பதம் கண்டுபுடிச்சி வடிக்கனும்னு காலேஜ்ல படிக்கும்போது நாங்க படிக்க எடுத்திருந்த வாடகை ரூமில் நண்பர் பாஸ்கர் சொல்லிக் கொடுத்தார். சோறு, கறி(குழம்பு) எல்லாம் அவர்தான் வைப்பார்.

நான் இந்த வெங்காயம், கத்தரிக்கா டிபார்ட்மெண்ட்தான். சாமான் கழுவி கொடுப்பேன். வேற ஒன்னும் தெரியாது. நல்லா தின்னுவேன். தினமும் சமையல் இல்லை. எப்பவாச்சும் நெனைச்சுண்டாதான் சமையல். மற்றபடி தினமும் கடையில்தான்.

சாப்பாடுன்னதும் எனக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது. காலேஜ்ல படிக்கும்போது தினமும் காலை-மாலை இருவேளையும் எக்சர்சைஸ்லாம் செய்து உடம்பை பீமன்போல வளர்த்து வெச்சிருப்பேன். அதுக்கேத்த மாதிரி சாப்பாடும் நல்லா இழுக்கும். எங்க நண்பர் கூட்டத்துல நான் மட்டும் இல்ல. பாஸ்கர், அஜய், குண்டு ஆனந்து, ஒல்லி ஆனந்து, சேகர் இப்படி எல்லாருமே நல்லா சாப்பிடுவோம். ஒரு நாள் மத்தியானம் நல்ல பசி. எங்கிட்ட காசு இருந்துச்சு.

வாடா மாப்பிள்ளை.. போயி கடைல சாப்பிட்டு வரலாம்னு எல்லாரையும் கூப்பிட்டேன். சரசரன்னு எல்லா பயலும் கெளம்பிட்டாய்ங்கெ.

எந்தக்கடைல சாப்பிடுறதுன்னு யோசிச்சோம். நம்ம பசங்களுக்கு அளவு சாப்பாடு கட்டுப்படியாகாது. சரின்னு அன்லிமிட்டடு கடையான கற்பகம் ரெஸ்டாரண்டுக்கு போனோம். சாப்பிடுவதற்கு முன்பு சீட்டு வாங்கனும். ஏங்க அன்லிமிட்டடு தானே, எவ்ளோ சாப்பிட்டாலும் போடுவீங்களான்னு கேட்டோம். கடைக்காரன் எங்களை மேலயும் கீழயும் ஒரு மாதிரியா பாத்துட்டு ஆமாம்னான். அவன் நெனைச்சது சின்ன பசங்க, எங்க அவ்ளோ சாப்பிடப் போறாங்கன்னு! நல்லா மூக்கெலையா போட்டு சாதம் வெச்சாங்க. காய்கறி, அப்பளம்னு இலை நிறைந்துச்சு.முதலில் கோழிக்குழம்பு போட்டு சாப்பிட்டோம். அதுக்கப்றம் ஆட்டுக்கறி குழம்பு போட்டு, அதுக்கப்புறம் மீன்கறி குழம்பு போட்டு. பிறகு வத்தக் குழம்பு.

அப்றம் சாம்பார் கொண்டு வரச்சொல்லி ஒரு பிடி பிடிச்சோம். நாங்க அடிக்கடி கூப்பிடுறதப் பாத்து எங்க பக்கத்துலயே சோத்துக் குண்டானை வெச்சிட்டுப் போயிட்டான் சர்வர். அதுக்குப் பிறகு ரசம் போட்டு, கடைசியா மோர் கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டோம். எல்லாம் முடிஞ்சு ஏஏஏஏவ்வ்வ்வ்வ்னு ஏப்பத்தோட கடைய விட்டு வெளிய வந்தப்ப திரும்பி கடை முதலாளிய ஒரு லுக்கு விட்டேன்.

ரொம்ப ரொம்ப பாவமா வடிவேலு கணக்கா பாத்தாரு. எவ்ளோ கேட்டாலும் போடுறாண்டா.. இவன் ரொம்ப ரொம்ப நல்லவண்டான்னு அஜய் சொல்லிட்டு சிரிச்சான். அந்தக் கடைல அதான் கடைசி. அதுக்கப்றம் அந்தக் கடை ஊத்திக்கிச்சுன்னு கேள்விப் பட்டேன். பின்னே இந்த மாதிரி சாப்பிட்டா!!!

அதுக்கப்றம் சிங்கைல 10 வருஷம் இருந்தப்பகூட சமைச்சு சாப்பிடனும்னு தோணலை. எல்லாம் கடை சாப்பாடுதான். அங்கிருந்து மலேசியாவுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு ஆறுமாசம் சமைச்சு சாப்பிட்டேன். சமைச்சுன்னா நான் சமைச்சு இல்ல. நண்பன் மதி சமைச்சு கொடுப்பான். நான் நலா¡ தின்னுவேன். அங்கயும் இந்த மாதிரி காய்கறி வெட்டிங், கட்டிங்கில் உதவி அம்புட்டுதான். சும்மா சொல்லக் கூடாது. சமையலில் மதிய¨ தட்டிக்க ஆளே இல்லை. அவ்ளோ அருமையா சமைப்பான்! நான் எவ்ளோ சண்ட¨ போட்டாலும் மனம் கோணாம சமைச்சு வெச்சிடுவான். சிக்கனம்னா என்னன்னு எனக்கு வாழ்க்கையில் முதன் முதலா சொல்லிக் கொடுத்த ஆசான் மதி. வாழ்க்கையில் எப்டி முன்னேறனும்னு கட்டிங் போடாமலேயே அறிவுரை சொல்லி என்னை மாற்றிய அருமையான சிநேகிதன். சாப்பாட்டுல அவனை அடிச்சுக்க முடியாது. காப்பில்லாம் போட்டான்னா ஒரு ரெண்டு லிட்டர் குவளைலதான் குடிப்பான்.

இப்பல்லாம் அந்த மாதிரி சாப்பிட முடில. சாப்பிடுறவங்களப் பாத்து ஏக்கமா ஒரு பெருமூச்சு மட்டும் விட்டுக்குவேன். கொஞ்சூண்டு சாதம் போட்டு தின்னதுமே வயிறு கம்முன்னு ஆயிடுது. அதுக்குமேல தண்ணி வேனா குடிக்கலாமே தவிர மேற்கொண்டு சாதம் நுழைக்க முடில. அதுக்கு காரணம் நம்ம தொப்பைதான்னு நெனைக்கிறேன். முன்னுக்கு இப்ப பரவால்ல. கல்யாணத்துக்கு அப்றம் தொப்பை ரொம்ப ரொம்ப கரைஞ்சு இருக்கு. நானும் செய்யாத எக்சைஸ் இல்லஸ திங்காத நாட்டு மருந்து இல்ல. ஒன்னுக்கும் சரியாகாமப் போகவே அது கெடக்குது கழுதைன்னு விட்டுட்டேன். ஆனா கல்யாணத்துக்கு பிறகு அது தானாகவே குறைஞ்சி இருக்கு. கல்யாணத்துக்கும் தொப்பைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குன்னு நெனைக்குறேன். விஞ்ஞானிகள் கவனிக்கனும்!

சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு எங்கயோ போய்ட்டேன் பாருங்க. இப்ப வீட்ல மனைவி இல்லையா.. சரி கேஸ், அடுப்பு, அரிசிதான் இருகே சமைச்சு பாப்போம்னு ஒரு விஷப் பரீட்சையில் இறங்கினேன். என் மனைவி அப்பவே சொன்னாங்க.

வானாம்யா.. கடைல சாப்டுய்யா.. விட்ருய்யான்னு.. நாந்தேன் கேக்கலை. சமையல் செய்வது எப்படின்னு பல புத்தகம் படிச்சு இருக்கேன். அத மன்றத்துல கூட எழுதி இருக்கேன். ஆனா சமையல்னு வரும்போதுதான் அதன் கஷ்ட நஷ்டம் புரியுது!

மொத நாள் அரிசிய போட்டு தண்ணிய ஊத்தி வேகவெச்சி வடிச்சேன். அதுக்கப்றம் சட்டில வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு எண்ணெய் ஊத்தி பொடியெல்லாம் கொஞ்சம் தூவி உப்பு காய்கறி போட்டு கறி வெச்சேன். சாப்பிட உக்காந்தா சாதம் களி மாதிரி இருந்துச்சி.. குழம்பில் உப்பும் பத்தலை, உரைப்பும் இல்ல, காய்கறி வேகலை. குழம்பு நல்லா கொதிக்காம ஒருவித வாடை அடிச்சுது.

என்னோட முயற்சியில் கொஞ்சமும் மனம் தளராமல் அடுத்த நாள் மீகோரெங் பன்ன முயற்சி பன்னினேன். அதேபோல எண்ணெய், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு முட்டை உடைச்சி ஊத்தி மீயை அள்ளிப் போட்டேன். எல்லாத்தையும் கிண்டி கிளறி வெச்சா அதை சாப்பிட எனக்கே புடிக்கலை. அந்த நேரம் பாத்தா பக்கத்து வீட்டுக் குழந்தைங்க வரனும்? அங்கிள் அங்கிள் நானும் டேஸ்ட் பாக்றேன்னு சொல்லிட்டு எடுத்து வாயில போட்டுச்சுங்க. அடுத்த நொடியே தரைல துப்பிட்டு அம்மான்னு அழுதுட்டே அவங்க வீட்டுக்கு ஓடிச்சுங்க. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவங்க அம்மாவும் வந்துட்டாங்க.

"ஏந்தம்பி.. எத்தனை நாளா எம்புள்ளய கொல்லனும்னு உனக்கு ஆசை? இனிமே இந்த விபரீத வெளையாட்டெல்லாம் எம்புள்ளைகிட்ட வெச்சுக்காதே, ஆமா!"ன்னு எங்கிட்ட கோபமா பேசிட்டு வெளியாயிட்டாங்க.

சரி அவங்களுக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நெனைச்சு நானும் விட்டுட்டேன்.இந்த சம்பவத்துக்கு முன்னாடி எங்க ஏரியால சின்னப் புள்ளைங்க தப்பு செஞ்சா "அதோ.. தலை வெட்றவன் வந்துட்டான்!"னு சொல்லி அழும்பு பன்ற புள்ளைங்கள அடக்குவாங்க. நேத்திக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்கு போறேன். அந்த பக்கத்து வீட்டு பாப்பா ரொம்ப அழும்பு செஞ்சு தரைல கெடந்து புரண்டுச்சி. அவங்க அம்மா, "தோ பாரு.. இனிமே நீ அடங்கலைன்னா மூர்த்தி அங்கிள்கிட்ட குழம்பு வாங்கி ஊத்தி உன்னை கொன்னுடுவேன்!"ன்னு மெரட்டினாங்க. அதுக்கு மேல அந்த குழந்தை ஏன் அழுவுது? கப்சிப்தான்!

சரி அதோட விட்டாங்களா? அப்டியே நம்ம புகழ் ப்ளோக்கின் கடைசி எல்லைவரை பரவி இப்ப எங்க ப்ளோக்ல யார் வீட்டில் குழந்தை அழுதாலும் என் குழம்பை சொல்லித்தான் அடக்குறாங்க. எனக்கு இனிமே குழம்பு வைக்க பயமா இருக்குது.

எங்கே மாமியார் மருமகளைக் கொல்லவும், மருமகள் மாமியாரைக் கொல்லவும் குழம்பு வாங்க என்கிட்ட குண்டாஞ்சட்டியோட வந்துருவாங்களோன்னு!!!

என் கஷ்டத்தை நான் சொல்றேன்! அட நீங்க ஏங்க விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க???

பிகார் வெள்ளத்தில் தொலைக்காட்சி

அறிவிப்பு

இனிய நண்பர்களே!

தமிழ் மன்றத்தில் செயற்பாடுகள் அனைவர்க்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருப்பதை அறிவீர்கள். தமிழ் மன்றம் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகத்தைக் கொண்டுள்ளது. அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது! இது எங்களது செயற்பாட்டிற்குச் சான்றாகும்.
நூலகத்தைக் கொண்ட மட்டும் கொண்டது தமிழ் மன்றமாகாது என்பதைக் கருத்திற் கொண்டு, நண்பகல் சொற்பொழிவைத் தொடங்கினோம். பல் வேறு தலைப்பு களில் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந் நிகழ்ச்சிக்கு அன்பர்களிடையே ஆதரவு பெருகியது. சிறப்பான முறையில் நூறாவது நிகழ்ச்சியை நிறைவு செய்தோம். இப்பொழுது, இருநூறாவது நிகழ்ச்சியை நோக்கி வீறு நடை போட்டு சென்று கொண்டிருக்கிறோம்.
இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் ஒரு மைல் கல் போல சென்ற ஆண்டு "தமிழ் மன்றத்தின் வெள்ளி விழா" கொண்டாடினோம். அதேபோல் இவ்வாண்டு, "பொங்கல் விழா" வைக் கொண்டாடினோம். தமிழ் மன்றத்தின் நீண்ட கால நோக்கத்தைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டோம். அதன் பயனாக வெளி மாநிலத்திலிருந்து வருகை புரிந் திருக்கும் அதிகாரிகளுக்கும் பிற ஊழியர்களுக்கும் "தமிழ்மொழிப் பயிற்சி" அளிக்கிறோம். தமிழ்மொழியைப் பேசவும் எழுதவும் பயிற்றுவிக்க 'அமெரிக்கப் பல்கலைக் கழகம்' தயாரித்துள்ள பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி யளிக்கிறோம்.
வங்கியில், இரண்டு வெண்பலகைகள் நிறுவியுள்ளோம். அதில் 'தினம் ஒரு திருக்குறள்' வரைகின்றோம். திருக்குறள் கருத்துகள் அனைவர்க்கும் சென்றடையுமாறு 'தமிழ்' 'ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகளில் G.U.போப் உரையை வரைகின்றோம். ரிசர்வ் வங்கியின் துறை தோறும் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை நிறுவும் முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
தற்போது தமிழ் மன்றம், 'இந்திய ரிசர்வ வங்கி' இணைய தளத்திலிருந்து வங்கி ஊழியர்கள் பயன்படும் விதத்தில் அரிய தகவல்களை வழங்க முன்வந்துள்ளது! என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறோம்.வாரந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரிய சொற்பொழிவைப் போல வாரந்தோறும் அரிய தகவல்களை இணையத்தில் பதிந்து வைக்க எண்ணியுள்ளோம். வங்கி ஊழியர்கள் தங்கள் படைப்பு களைத் தமிழ் மன்ற நிருவாகிகளிடம் அளிக்க முன்வந்தால் அவை இணையத்தில் வெளியிடப்படும்.
தமிழ் மன்றத்தின் சிறப்புக்கும் செயற்பாட்டிற்கும் வங்கி நிருவாகமும் உறுப்பினர்களும் அளித்துவரும் ஆதரவுமே காரணம்!என்று கூறிப் பெருமை கொள் கின்றோம். தமிழ் மன்றத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் அனைவர்க்கும் எங்களது பணிவான நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறோம்.
வாழ்க தமிழ்! வளர்க உறவு!