இந்திய ரிசர்வ் வங்கி காலாண்டு கடன் கொள்கை - ஒரு பார்வை

தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர். எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இரண்டு கட்டங்களாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
<>
தற்போது நடைமுறையிலுள்ள ரொக்க கையிருப்பு விகிதம் 5.5 சதவீதம், இது வரும் பிப்.17 முதல் 5.75 சதவீதமாகவும், மார்ச் 3ந் தேதி முதல் 6 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுகிறது. வர்த்தக வங்கிகள் வட்டி எதுவுமின்றி ரிச்ர்வ் வங்கியிடம் ரொக்கமாக வைக்கும் இந்த தொகையால் சுமார் 14,000 கோடி ரூபாய் வங்கி பயன்பாட்டிலிருந்து குறைய நேரும். இதனால் வங்கிகள் இந்த இழப்பை சரிகட்ட வர்த்தக ரீதியில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.
<>
வழக்கமாக, ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை அறிவிப்பு 3 மாதங்களுக்கு ஒரு முறை வெளியாவதும், அப்போது இதுபோன்ற திருத்தங்கள் நடப்பதும் இயல்பு. ஆனால் 2006ம் ஆண்டில் கொண்டுவரப் பட்ட கொள்கை மாற்றத்தின்படி, சந்தை சூழலைப் பொறுத்து ரிசர்வ் வங்கி தேவை என நினைத்தால் எந்த சூழ்நிலையிலும் வங்கிகளின் வட்டி விகிதம் உள்ளிட்ட சிலவற்றை மாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த வகையிலேயே தற்போதைய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கடந்த 3 மாதங்களுக்குள் நடக்கும் இரண்டாவது சி.ஆர்.ஆர்.திருத்த சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
<>
கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி 0.5 சதவீத அளவுக்கு ரொக்க கையிருப்பு விகிதத்தை அதிகரித்தது. அதனால் சுமார் 13,500 கோடி ரூபாய், வங்கி பயன்பாட்டிலிருந்து உறிஞ்சப்பட்டுள்ளது. எனவே இன்றைய நிலையில் பொது மக்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு கடனாக தரப்படும் வாய்ப்பிருந்த சுமார் 27,500 கோடி ரூபாய் ரிச்ர்வ் வங்கி கஜானாவில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது. இதனால் ஏற்படும் பணப்பற்றாக்குறை மற்றும் இந்த பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பை சரிகட்ட வங்கிகள் மேற்கொள்ளும் வட்டி விகித உயர்வு போன்றவற்றால் பொதுமக்களின் செலவழிக்கும் போக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும், இதனால் விலைவாசியும், அதை ஒட்டி பண வீக்க விகிதமும் ஒரு கட்டுப்பாட்டிக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
<>
நன்றி: ஷாரா rmshankarnarayann@gmail.com