மனோன்மணியம் சுந்தரனாரின் நூற்றொகை விளக்கம்

முப்பால் மணி

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அன்றைய சென்னை மாகாணத்தில் கல்வித் துறையில் புகழ்பெற்று விளங்கிய சான்றோர்களில் முதல்வர். தமிழ் உலகில் புதிய சிந்தனையின் முன்னோடி இவர். தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மனோன்மணியம் என்னும் காப்பியம் தவிர 38 சூத்திரங்கள் கொண்ட நூற்றொகை விளக்கம் என்னும் நூலையும் தந்தவர். இந்நூல் பாக்களால் ஆனது. எல்லாம் தமிழில் முடியும் என்னும் பிற்கால எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும், இந்த நூல் வித்திட்டது எனலாம். 1885ஆம் ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய அறக்கட்டளை நூல் இது. அவரே உரை வரைந்து வெளியிட்டார். 38 சூத்திரங்களைக் கொண்ட இந்த நூல் அக்கால உயர்கல்விப் பாட நூல்கள் பற்றியதொரு தொகுப்பு எனவும் கொள்ளலாம்.

அன்று சமஸ்கிருதமும், பாரசீகமும் கல்வித்துறையில் கோலோச்சி வந்தன. ஆங்கில ஆட்சியில் மாணாக்கர்கள் Hamilton, Rhead, Mancil, Lekeey, Bakil, Stephan, Pane, Collin போன்ற ஸ்காட்லாந்து சிந்தனையாளர்கள் Hume, T.S.Mill, Spencer, Lekeey, Bakil,Stephen, Pane, Collin என்னும் நேர்காட்சியாளர்கள் Alfred Rushall, Valess, Hassli போன்ற உயிர் அறிவியலார், கான்ட் பார்க்கிலி, அலெக்சாண்டர் கேம்பர் பிரேசர், ஜேம்ஸ் மார்ட்டினோ போன்ற கிறித்துவ சிந்தனையாளர் யெகல் போன்ற மெய்யியலாளர், காப்ஸ் ஸ்பினோசா, புக்னர் போன்ற ஐரோப்பிய உலகாயதவாதிகள் நூல்கள் படிக்கப்பட்டன. இதனால் இளைஞர்களில் பலர் புற மதச் சார்பும், நேர்காட்சி வாத அறிவும் நாடி தம் சுயசமயத்தை நிராகரித்து நாத்திகர்களாக மாறிவருவது கண்டு சுந்தரனார் அஞ்சினார் (பக்கம் 76, 102). இவரைப் போலவே மனம் வாடிய மாயூரம் வேதநாயகனார் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதினார்.

இந்த நூலில் பரம்பொருள் பற்றிய உண்மை கூறும் நூல்களின் சிறப்பும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய சிற்றிதழ் நூல்களின் தேவையையும், நுண்ணறிவு உடையார்க்கு கலை நூல்களும் இன்றியமையாதது என கூறுகிறார். பரம்பொருள் பற்றிய பேரறிவு - பிரம்ம நிலை அடையக் கூடியதே என்று எடுத்துச் சொன்னதோடு இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதனின் அறிவு வளர கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என்று பல்வேறு துறைகளை அக்காலத்தில் வழங்கிய சொற்களைக் கொண்டு விளக்குகிறார். இது மட்டுமல்லாமல் மனிதனை மகிழ்விக்கும் இசை, ஓவியம், கவிதை போன்ற பலவற்றையும் விளக்குகிறார்.

மேல் உலக வாழ்வே உண்மையானது என்று வாதிக்காமல் இவ்வுலக வாழ்வில் மனிதன் பெறவேண்டிய அறிவு பற்றி நூற்றொகை விளக்கத்தில் விளக்குகிறார்.

தமிழக தத்துவ மரபில் நூற்றொகை விளக்கத்தின் நிலை

பண்டைய தமிழ் நிலத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலம், வேட்டை, கால்நடை மேய்ச்சல், அடிப்படையாகக் கொண்ட இனக் குழுவானது இருந்தது என்பதை அகமும், புறமும் காட்டுகின்றன. அகத்திலிருப்பது புறத்திலும், புறத்திலிருப்பது அகத்திலும் பிரதிபலிக்கக் கண்டன. மெய்யியல் அக்காலத்தில் இருந்திருக்கலாம். தொல்காப்பியம் காட்டும் அறமும், புறமும் புறநானூற்றில் "மண் தினிந்த நிலமும், நிலன் ஏந்திய விசும்பும்....." என்னும் பாடலும் இவ்வுண்மையை உணரச் செய்கின்றன. எனவே இயல் உலக - இவ்வுலக வாழ்வின் அடிப்படையிலேயே தத்துவமும் அமைந்து, அக்காலத்தில் இருந்த இனக்குழு சமூகத்தில் விளக்கம் பெற்றிருந்தது.

எனினும் தொல்காப்பியத்தில் காணும் அகப்பொருள் விளக்கம் தமிழனின் அறிவு வளர்ந்து மேல்நிலை அடைந்ததை புலப்படுத்துகிறது. இனக்குழுக்கள் இணைந்தும், அடக்கப்பட்டும் உழவுத் தொழிலும் அதனோடு உறவுடைய சில செயல்பாடுகளும் உருவாயின. அரசு அமைந்தது அடுத்து கடல்வழித் தடங்களும் கண்டு தமிழர் வாணிபம் செய்ய தலைப்பட்டனர். ஒருபுறம் கங்கை, மறுபுறம் மத்திய தரைக்கடல், வேறு ஒருபுறம் தென்கிழக்காசிய நாடுகள் இணைந்த வாணிபம் தமிழகத்தில் செழித்தது. நிலம், நீர்வழிப் பொருள்கள் சென்றன; வந்தன. இதே சமயத்தில் வடபுலத்தில் இருந்து சமணமும் பௌத்தமும் தமிழகம் வந்து இனக்குழு வாழ்வு நிலைக் கட்டத்தில் வினை நீக்க கருத்தை நீக்கி "விளக்கிப் பிறவா நிலை என்னும் இலக்கை மக்களிடை பரப்பின. தமிழக தத்துவ சிந்தனை மரபு முன்னேற்றம் அடைந்தது. பின் வந்த வேத மரபு அதுகாறும் இருந்து வந்த இனக்குழு கடவுள் வழிபாட்டை விளக்கிச் சொன்னது. ஆனால் தத்துவம் ஏதும் உருவாகவில்லை.

சமணமும் பௌத்தமும், வைதிகமும், இகவாழ்விலேயே உளவின. பின் இயற்கைக்கு அப்பாலான பரம்பொருள் (பேரறிவு) பற்றிய சிந்தனை தோன்றிற்று. காரணம் தமிழகத்தோடு வாணிபம் செய்து வந்த யூதர், எகிப்தியர், கிரேக்கர், எவனர், சிரியர், அப்பொழுது இயற்கைக்கு அப்பாலான பரம் பொருளைப் பற்றி பேசியதோடு அப்பாலைத் தத்துவ கருத்தியலையும், வடிவமைத்தனர். இந்த பின்புலத்தில் தான், இவ் உறவுகளின் பயனாகத்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள்,.... பிற பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எழுந்தன. அப்பாலை மரபு சார்ந்து தழுவி வைதிகமும், சைவமும், வைணவமும் வளர்ந்து, நிலைபெற்றன. குறிப்பாக பூதப் பொருள்களின் சேர்க்கை, பரம் பொருள்களின் கருத்தியல் வினைநீங்கிய பிறவா நிலை, என்னும் கருத்தமைவுகள் உருவாயின. (மணிமேகலை, காதை, 21, வரி, 92-102)

சங்ககாலத்தில் புவிமைய்யம் கண்ட இக் கொள்கை பிற்காலத்தில் விரிநிலை கண்டது. யூதர், எகிப்தியர், சிந்தனைகளும், கிரேக்கர் யவனர்களுடைய, பிளேட்டோ, கருத்தியலும் ஊடுருவின. வைதிக சிந்தனைகள் தாக்கப்பெற்றன. இதன் விளைவாக மயக்கவாதம் எனும் சங்கரின் அத்வைதம் பிறந்தது.

அதேபோது உலகாயதக் கருத்துத் துறையில் உலகாயுத சிந்தனைகளும், பௌத்தமும், சமணமும் இடம்பெற்றன. இவ்விரு பகுதியினரின் ஊடாட்டத்தால், வினை நீக்கத்திலிருந்து சிந்தனை, இம்மை, மறுமை என்னும் இருமை நீக்கத்துக்குச் சிந்தனை முன்னேறியது. இதன் விளைவாக உலக வாழ்வு பாவம் என்ற கருத்தும் உலகம் உண்மை என்ற கருத்தும், மோதத் தலைப்பட்டன. வினை நீக்கம் சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நாயன்மார்களும் நம்மாழ்வார்களும் வினை நீக்கத்திற்கு முதல் நிலை தந்தனர்.

இகவாழ்வு என்பது பாவத்தின் பார்ப்பட்டது பொய்யானது, மாயையன்று என்னும் கருத்து ஒருபுறமும், உண்மையானது என்பது மறுபுறமும் நின்று போராடின. இப்போராட்டம், ஆசிவகம், நியாய வைசேடிகம், சாங்கியம், என்பனவற்றைத் தாங்கிய சைவ, வைணவ, சங்கர நெறிகளும், நேர் எதிரான உலகாயுதமும், எதிர், எதிர் நின்றன.

இந்நிலையில் கி.பி. 1200-ற்றுக்கு பிறகு தென்னகத்தில் சித்த நெறியும், வடபுலத்தில், ஆசிவகமும் தோன்றின. மதுரை சேமமா நகர் சார்ந்த பட்டனார் பகவத்கீதையை மொழி பெயர்த்து உலகப் பொருள் அனைத்தும் பரம்பொருளின் சாயலே என்றக் கருத்தைப் பரப்பினார். இது வலிமையான அப்பாலை இயலுக்கு அடித்தளம் அமைத்தது. எல்லாம் மாயை என்னும் கருத்து வலுப்பெற்று ஆண்மீகத் தத்துவம் உருப்பெற்றது.

இந்தப் பின்புலத்தில் தான், 16ஆம் நூற்றாண்டில் தத்துவராயர் தோன்றி பரமாத்விதம் என்னும் கருத்தைப் பரப்பினார். அவர் கருத்துப்படி பரம்பொருள் ஒன்றே ஒன்று அதுவே பொருள்களில் எல்லாவற்றிலும் ஊடுருவி நின்று அவை தத்தம் பெயரையும், பண்பையும், தோற்றுவிக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் ஆவுடையக்காள் என்பார் பிறந்து சங்கர அத்வைதத்தை வெறுத்து அனுபூதி அத்வைதத்தைப் போதித்தார்.

தத்துவராயரும், ஆவுடையம்மாளும் பிறப்பால் பிராமணர்களே இருப்பினும் பொதுநோக்கு உடையவர்களாகவே கருதப்படுகின்றனர். பரம்பொருள், பிரம்மம் என்பதனை மறந்து உலகப் பொருள்கள் தற்சுதந்திரம் வேண்டி நிற்றலே, இயங்குதலே மாயை என்றன இவை. இருமை நீக்கத்திலிருந்த தமிழ் மெய்யிலானது முரண் இயக்கத்திற்கு முன்னேறியது.

இந்தப் பின்னணியில் தான் ஆங்கில ஆட்சி இங்கு நிலைக் கொண்டது. நேர்க்காட்சி வாதம் புதிய நிலைகளைத் தோற்று வித்தது. பரம்பொருளுக்கு முரணானது புறப்பொருள் என்னும் கருத்தியல் பயனியியல் வாதத்திற்கு இட்டுச்சென்றது. அதேப் போது இப்பிரபஞ்சத்தில் தோன்றும் அனைத்துக்கும், இயக்கவியல் விளக்கமளித்தது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இதனை விளக்குகிறார்.

1885ஆம் ஆண்டு இந்த நூல் வெளிவந்த நேரத்தில் வேதியியல் அறிவியலால், 47, மூலகங்களைக் கண்டறிந்திருந்தனர். இவற்றுக்கு மூலம் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தது. பஞ்சபூதங்களும், பல மூலகங்களால் ஆனவை, தீ அடிப்படையானது அன்று எனவும் அறியப்பட்டது. இப்பின்புலத்தில் தான் நீராவி, மின்சாரம் மின்தந்து, ஆகியவை கண்டறியப்பட்டன. சூரியக் குடும்பத்தையும், அது இயங்கும் விதிகளையும் கண்டறிந்தார். அதே போன்று உயிர் நூலாரும் உலகில் பல்வேறுப் பகுதிகளுக்குப் பயனம் சென்று புதிய புதிய உயிரினங்களைக் கண்டறிந்தனர். பல்வேறு மொழிகளும் கண்டறியப்பட்டு பயிலப்பட்டன. வடமொழி, தென்மொழி என வகுக்கப்பட்டதுடன் மொழியியல் என்னும் அறிவியல் துறைப் பயில வழிபிறந்தது.

உளநூல், தத்துவநூல், பயிற்சி வடிவமைந்தது. உள்ளம் வேறு, கடவுள் வேறு, என்னும் ஐரோப்பிய கருத்தியல் பரவிற்று இதனால் பிரம்மம், பரமிரம்மம், கடவுள், பரம்பொருள் என்பன பற்றிய அய்யப்பாடுகள் தோன்றின. எனவே மேலைய நாட்டு இயலுக்கும், இந்திய நாட்டு இயலுக்கும், இடையே மோதல் ஏற்பட்டதோடு இந்திய மாணவர்கள், இந்தியத் தத்துவக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள். இது பற்றிய குறிப்புக்கள் நூற்றொகை விளக்கத்தில் காணக் கிடைக்கின்றன.

வடமொழி, தென்மொழி, பூர்வவீமாம்சை, பல்வேறு வகை வேதங்கள் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டு விசாரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.

உலகப் பொருள்கள் இயக்கத்தில் உள்ள என்றுக் கூறுகிறார் இதன் வழி விஞ்ஞானங்கள், எல்லாவற்றின் வளர்ச்சிக்கும் வித்திட்டார். ஆன்ம அறிவு என்பது நியாய வைசேடிகம், பௌத்தம், சமணம் ஆகியவற்றால் போற்றப்படுகிறது. தான் பிறர் என்னும் கருத்தியல், நம்மாழ்வார், தருமகீர்த்தி, அகளங்கர் என்னும் அறவை வாதிகள் கூறியுள்ளது கருதத்தக்கது. நேர்காட்சி வாதிகள் கூறிய சுயசுதந்திரம் என்பது அகவய ஆன்மக் கருத்தியலுக்கு நேர் எதிரானது. அதே போது சுந்தரம் பிள்ளை ஆதரிக்கும் ஆத்ம அறிவு விரிந்து பரந்த தன்மையது, தன்னலமற்றது, தமிழக தத்துவ வரலாற்றில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பொதுநூல், மதநூல், கலைநூல் என்னும் மூன்றும் இணைந்து இந்நூலில் ஒன்றாகமைகின்றது. தருக்க நூல் பற்றிக் கூறும்போது அதனை உண்மையைக் காண்பதற்கான ஓர் வழி என்று மதிப்பிட்டு பிரத்தியட்சத்தைப் பின் தள்ளி அனுமானத்தைச் சிறப்பிக்கிறார். 1920-க்குப் பிறகு தமிழ்த்துறை சிக்கெடுக்கப்படாத இயக்கமற்ற கல்லாகிவிட்டது.

இந்த நிலை மாற்றம் காணும் படியாகச் சிக்கறுத்து சீர்திருத்தப் படவேண்டும் என்பதைச் தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் நிறுத்தப்பட வேண்டியது ஆகும்.

எதைப் பற்றியேனும் ஆய்தல் யார்க்கும் பழியன்று. ஆய்தற்குரிய ஆள்வினையின்மை பழி என இவர் இடித்து உரைத்ததானது பிற்காலத்தில் நாட்டார் வழக்காற்றியல் தமிழ் நாட்டில் வளர்வதற்கு ஊற்று ஆகும்.

இதனாலெல்லாம் நூற்றொகை விளக்கம் என்னும் இந்த நூல் சகாப்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பேரா. பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய ஒப்பற்ற நாடகம் மனோன்மணீம், தமிழ் மக்களால் நன்கு பயிலப்பட்டது. அதில் அவர் எழுதிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் தமிழ் விழாக்களில் நாள்தோறும் இசைக்கப்படுகின்றது. இந்த நூற்றொகை விளக்கும் நூலானது அந்த அளவிற்குப் பயிலப்படாதது தமிழ் மக்களின் தவக்குறைவே ஆகும். இந்த நூல் மேலும் மேலும் ஆழ்ந்து கற்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் சுதேசியப் பண்பாட்டினை வளர்ப்பதற்கான ஆற்றல் உடையது.

பொருளை தாமஸ் ஹப்ஸ் (1588-1679) நூற்றொகை விளக்கத்தில் 34 ஆம் சூத்திர விளக்கவுரையில் குறிக்கப்படும் ஆங்கில நூலோரில் தலைமையானவர்.

பொருளை முதன்மையாகக் கொண்ட பூதவாதி புலன் அறிவே ஆன்ம அறிவு ஆகிறது என்ற கருத்தியல் கொண்டவர். அவரைப் பற்றிய தமது ஆய்வுரையைப் பேரா. சுந்தரம் பிள்ளை 1885-இல் இங்குப் பதிவு செய்தார். அப்போதைய பொருண்மை வாதம் யாந்திரிக வயப்பட்டு இருந்ததைச் சரியாகவே மதிப்பிட்டார்.

ஹெடோனிசமும், சர்வாதிகாரமும் நீங்கிய உள்ளார்ந்த அகவயநியதி உடைய ஆட்சியை முன்னுரைக்கிறார். இந்தியச் சொற்களில் கருணை அருள்மயமான பூரணத்தின், தெய்வத்தின் வழி அமைந்த ஆட்சி ஆகும். இது மனோன்மணீயத்தின் செய்தியும் கூட ஆகும். இது போன்ற ஓர் ஆய்வுரையை அப்போது பேரா. பெ. சுந்தரம் பிள்ளை அளித்ததானது தமிழகத்தின் வியப்பார்ந்த அறிவு மலர்ச்சி ஆகும். உலகத்தரம் வாய்ந்தது.

1 மறுமொழிகள்:

நந்தினி மருதம் சொல்வது...

அறிஞர் முப்பால் மணியின் ஆய்வுகள் தமிழ் தத்துவ வரலாற்றில் புதிய திசைகளைக் காட்டுபவை . இந்தக் கட்டுரை அவருடைய ஆழமான தேடலைக் காட்டுகிறது