நான்முகன் படைத்த நானாவகை உலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண்முதிதோ பெண்முதிதோ அன்றி அலிமுதிதோ
நாள்முதிதோ கோண்முதிதோ நல்வினை முதிதோ
தீவினை முதிதோ
செல்வச் சிறப்போ அறிவு சிறப்போ
தொல்லை மாஞாலம் தோற்றமோ படைப்போ
எல்லாப் பிறப்பும் இயற்கையோ செயற்கையோ
காலத்தால் சாவரோ பொய்ச்சாவு சாவரோ
நஞ்சுறு தீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
துஞ்சும்போது அந்தப் பஞ்சேந்திரியம்
என்செயா நிற்குமோ எவ்விடத்து ஏகுமோ
ஆற்ற லுடையீர் அருந்தவம் புரிந்தால்
வேற்றுடம்பு ஆகுமோ தமது உடம்பாகுமோ
உண்டியை உண்குவது உடலோ உயிரோ
உலகத் தீரே உலகத் தீரே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்
எழுபது போக நீக்கு இருப்பன முப்பதே.
அவற்றுள்
இன்புறு நாளும் சிலவேயதா அன்று
துன்புறு நாளும் சிலவே யாதலால்
பெருக்காறு ஒத்தது செல்வம் பெருக்காறு
இடிகரை யொத்தது இளமை இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும் இன்னும்
நாளை நாளை என்பீராகில்
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்
அப்போது அந்த கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்
நல்லார் என்னான் நல்குரவு அறியான்
தீயார் என்னான் செல்வர் என்று உன்னான் 40
தரியான் ஒருகணம் தருகணாளன்
உயிர்கொடு போவான் உடல்கொடு போகான்
ஏதுக்கு அழுவீர் ஏழை மாந்தர்காள்
உயிரினை இழந்தோ உடலினை இழந்தோ
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீராகில்
உடலினை அன்றுஅலாது இன்றும் காண்கிலீர்
உயிரினை இழந்த உடலது தன்னைக்
களவுகொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
கூறை களைந்து கோவணம் கொளுவி
ஈமத்தீயை எரி எழ மூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம் எனப் படுமோ சதுர் எனப்படுமோ.
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
இறந்தவராய் உமை இல்லிடை இருத்திப்
பாவனை மந்திரம் பலபட உரைத்தே
உமக்கு அவர் புத்திரர் ஊட்டின போது
அடுபசியால் குலைந்து ஆங்குஅவர் மீண்டு 60.
கைஏந்தி நிற்பது கண்டதுயார் புகலீர்
அருந்திய உண்டியால் ஆர் பசி கழிந்தது?
ஒட்டிய மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்
பற்பலர் நாட்டினர் பார்ப்பார் இலையால்
முற்படைப்பு அதனில் வேறாகிய முறைமையால்
நால் வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்
மேல்வகை கீழ்வகை விலங்குவது ஒழுக்கால்
பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் 70
கலந்து கருப்பெறல் கண்டது உண்டோ?
ஒருவகைச் சாதியா மக்கட் பிறப்பில் ஈர்
இரு வகையாக நீர் இயம்பிய குலத்து
ஆண் பெண் மாறி அணைதலும் அணைந்த பின்
கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின்றிலீரோ?
எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ
அந்நிலத்து அந்தவித்து அங்கு உரித்திடும் அல்லால்
மாறி வேறாகும் வழக்கம் இன்றில்லையே
பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திரர் ஆயினோர் பூசுரர் அல்லரோ 80
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல் போல்
மாந்தரில் பேதமாய் வடிவு எவர் கண்டுளார்
வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமை ஆவதும் வெளிப்படல் இன்றே
தெந்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகில்
பழுது அற ஓதிப் பார்ப்பான் ஆவான்
வடதிசைப் பார்ப்பான் தெந்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்
அது நிற்க,
சேற்றில் பிறந்த செங்கழுநீர் போலப் பிரமற்குக்
கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச்
சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும், சத்தியர்க்குப்
புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசருக்கு மீன்
வாணிச்சி வயிற்றில் பிறந்த வியாசரும் இந்நால்வரும்
வேதங்கள் ஓதி வேன்மைப் பட்டு
மாதவராகி வயங்கினர் அன்றோ?
அருந்தவ மாமுனியாம் பகவற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கண்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினில் அன்று அவதரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே 100
என்னுடன் பிறந்தவர் எத்தனை பேர் எனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
யாம்வளர் திறம் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக்காடு எனும் ஊர் தனில் தங்கியே
வண்ணார் அகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்
சான்றார் அகம்தனில் உறுவை வளர்ந்தனள்
நரம்புக் கருவியோ ந்ண்ணிடு சேரியில்
பாணர் அகத்தில் ஔவை வளர்ந்தனள்
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறையர் இடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன் 115
பாரூர் நீர் நாட்டு ஊர் தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.
ஆதலால்,
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ 110
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்குச் சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறிலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
வழிபடு தெய்வமும் ஒன்றே ஆதலால்
முன்னோர் உரைத்த மொழி தவறாமல் 120
எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டுப்
புலையும் கொலையும் களவும் தவிர்த்து
நிலைபெற அறத்தில் நிற்பதை அறிந்து
ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து
பேணி உரைப்பது பிழைஎனப் படாது
சிறப்பும் சீலமும் அல்லது
பிறப்பு நலம் தருமோ பேதையீரே! 127
கபிலர் அகவல்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...