இன்று மிதவாதம் பற்றிய ஒரு கட்டுரையை ( http:// en.wikipedia. org/wiki/Pacifism) விக்கிபீடியாவில் வாசித்துக்கொண்டிருந்த போது தான் அவர் ஆரம்பித்த "குதாய் கித்மத்கர்" இயக்கத்தை பற்றி அறிய நேர்ந்தது.
ஒருங்கினைந்த இந்தியாவின் வட மேற்கு எல்லைப் பகுதியில் (North-West Frontier Province [NWFP]) பஷ்துன் இனத்தில் 1890 பிறந்தார் கான் அப்துல் கஃபார் கான்.
கானின் சமுதாயப்பணி, பாஷ்துன் இன மக்களுக்குக் கல்வியைச் சேர்ப்பதில் தான் தொடங்கியது. பல்வேறு வெளிக்காரணிகளாலும், பழியுணர்ச்சியும் வன்முறையும் இயல் பானதாகி விட்ட பாஷ்தூன் கலாச்சாரத்தாலும் பாஷ்தூன் இன மக்கள் மிகவும் பின் தங்கியிருந்ததை உணர்ந்த கான், தனது 20ஆவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற ஊரில் துவக்கினார்.
மக்களுடனான நெருக்கம் கூடக் கூட கானின் பார்வையும் அகல விரிய ஆரம்பித்தது. இக்காலக்கட்டத்தில் கான், பல சமூக சீர்த்திருத்த அமைப்புகளை உருவாக்கினார். அஞ்சுமன்-இ-இஸ்லா உல்-அஃப்கானியா (1921), அஞ்சுமன்-இ-ஜமீந்தாரன் என்ற உழவர் அமைப்பு (1927) மற்றும் பாஷ்துன் ஜிர்கா என்ற இளைஞர் அமைப்பு (1927) ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.
ஒரு கட்டத்தில், தனது பணி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க உதவுவதே என உணர்ந்த கான், 1929ஆம் ஆண்டு நவம்பர் குதாய் கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) என்ற அமைப்பைத் தொடங்கினார். கான், காந்தியின் மிதவாத,அஹிம்சை கருத்துக்களால் கவரப்பட்டது குதாய் கித்மத்கர் அமைய முக்கிய காரணமாக இருந்தது. இஸ்லாம் மற்றும் பாஷ்தூன் மரபின் ஆதாரம் அஹிம்சை தான் என தீவிரமாக நம்பினார் கான். தனது அமைப்பின் அங்கத்தினரிடம் இவ்வாறு கூறினார்:
"நான் உங்களுக்குத் தரப்போகும் ஆயுதத்திற்கு எதிராகக் காவல்துறையும் இராணுவமும் எதுவுமே செய்ய இயலாது. இது இறைதூதரின் ஆயுதம், ஆனால் உங்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. சகிப்புத்தன்மையும் அற உணர்வுமே அவ்வாயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதை எதிர்த்து நிற்க முடியாது." வழக்கமாக வன்முறையையே வாழ்க்கை முறையாகக் கொண்ட பதான்களிடமிருந்து அகிம்சையைப் பிரித்தானியர்கள் எதிர் பார்க்கவில்லை. குதாய் கித்மத்கர் இயக்கத்தினரின் போராட்டங்களை அடக்க பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையான வழிமுறைகளைக் கையாண்டது. பெஷாவரில் 1930ல் நடந்த மோசமான தாக்குதலில் 200 குதாய் கித்மாத்கர் உருப்பினர்கள் கொல்லப்பட்டனர். மிதவாத அகிம்சா வழிகளைப் பற்றி ஆராய்சி செய்த ஜீன் ஷார்ப் இந்நிகழ்வைப் பற்றி இவ்வாறு எழுதினார்:
"முன்வரிசையில் இருந்தவர்கள் குண்டு பாய்ந்து சரிந்து விழுகிறார்கள். பின்னால் நிற்பவர்கள் வெற்று மார்புடன் முன்னால் வந்து நின்று துப்பாக்கி சூடுக்கு தயாராக நிற்கிறார்கள். சிலர் மார்பில் 21 குண்டுகள் துளைத்தெடுக்கிற அளவுக்கு தாக்குதல் நடக்கிறது. கண்முன் சரிந்து விழுவதைக் கண்டும் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்களே தவிர யாரும் பயந்து ஓடவில்லை. அரசு சார்பான லாகூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பத்திரிகையே, ' மக்கள் ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி சூட்டின்போது வரிசையாக வந்து நின்றார்கள். சரிந்து விழுந்தவர்களை இழுத்துப் போட்ட பின் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்கள். இப்படி பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடந்தது. சடலங்கள் குவிந்த பிறகு அரசாங்கத்தின் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து அவற்றை அள்ளிச் சென்றன' "
இந்தியப் படையினரில் ஒரு சாரார் இனிச் சுட மாட்டோம் என மறுத்த பிறகே இவ்வன்முறை நின்றது. உத்தரவை மீறியமைக்காக இவ்வீரர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர்.
இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்த கான், இந்தியப் பிரிவினையை வன்மையாக எதிர்த்தார். இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவதை அவர் வன்மையாகக் கண்டித்தார். மேலும் பாகிஸ்தான் என்ற சிறிய நாட்டின் கீழ் இருப்பதைக் காட்டிலும், அகண்ட இந்தியாவின் கீழ் இருப்பதே பாஷ்துன்களுக்கு நல்லது என அவர் கருதினார். பாகிஸ்தான் உருவானதும், பாஷ்தூன் களுக்குத் தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இந்நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு கித்மத்கர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கியது.
கான் அப்துல் கஃபார் கான், 1988ல் தனது 98வது வயதில் பெஷாவரில் உயிர்நீத்தார். காந்தி,மார்ட்டின் லூத்தர் கிங் வரிசையில் அகிம்சை போரட்ட முறையின் நடைமுறை பயன்பாட்டையும் திரனையும் எடுத்துக்காட்டிய 20ஆம் நூற்றாண்டு தலைவர்களும் மிக முக்கியமானவர் கான் அப்துல் கஃபார் கான்.