திருக்குறளில் பயங்கரவாதம் (அ) தீவிரவாதம்



திருக்குறளில் வெருவந்த செய்யாமை என்றொரு அதிகாரம் இருக்கிறது. வெரு என்றால் அச்சம். வெருவு, வெருவந்தம் என்றாலும் அச்சந்தான். வெருவந்த செய்யாமை என்றால் அச்சமூட்டாமை, அச்சந்தரும் செயல்களைச் செய்யாமை. சிகாகோவில் இயங்கும் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை (International Tamil Language Foundation) வெளியிட்டிருக்கும் திருக்குறளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறள்களுக்குப் பொருள் சொல்லப் பட்டிருக்கிறது. வெருவந்த செய்யாமை அதிகாரத்தை Terrorism என்று இந்நூல் தமிழாக்கியிருக்கிறது. Non-terrorism என்பதே சரியாயிருந்திருக்கும் என்றாலும் terrorism என்ற தலைப்பும் மோசமில்லையென்றே படுகிறது.
*
தமிழிணையப் பல்கலைக் கழக அகராதி terror என்பதற்கு அச்சந்தரும் செயல் என்றும் terrorism என்ற வார்த்தைக்கு வன்முறை, கொடுங்கோன்மை என்றும் பொருள் தருகிறது. அப்படியென்றால் திருவள்ளுவர் Terrorism பற்றி எழுதியிருக்கிறார் என்றுதான் அர்த்தம். மக்களிடம் போய் அகிம்சை வழியில் போராடிக்கொண்டேயிருங்கள் அல்லது போராடாதீர்கள், அரசன் சொன்னபடி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பாரோ? என்னதான் எழுதியிருக்கிறார் என்று பார்த்தேன். 10 குறள்களும் அரசனுக்குப் போதனை செய்பவை. மக்களுக்கல்ல. அவற்றைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. Terrorism என்பது அரசனுக்குச் சுலபமாய்க் கைப்படும்.
*
அவனிடத்திலேயே terrorism பிறக்கிறது. Anti-terrorism குறித்த போதனைகள் அரசனுக்கே தேவையாய் இருக்கின்றன. இன்றைய உலகிலும் அரச வன்முறை என்பது இலங்கையிலிருந்து, லெபனான் வரை சுலபமாகக் காணக்கூடியதாகவே இருக்கிறது. பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்ட மக்கள் போராட்டங்கள், அரச கொடுங் கோன்மைக்கு எதிராக முளைத்துக் கிளைத்தனவேயன்றி ஒரு மக்கள் கூட்டத்தின் வெறிச்செயலல்ல. அதே அரசு இன்னொரு மக்கள் கூட்டத்தை 1983 இதே ஜூலையில் இலங்கையில் கிளப்பிவிட்டது போன்றோ அல்லது 2002 குஜராத்தில் தூண்டிவிட்டது போன்றோ தூண்டிவிட முடியும். இதில் ஈடுபடும் மக்கள் அரசனின் கைகள். இவர்களே கொடுங்கோன்மையின் ஆயுதங்கள்.
*
இவர்களையும் அரசனுக்கெதிராகப் போராடும் மக்களையும் ஒரேவிதமான கூட்டமாகப் பார்க்கக் கூடாது. இருவருக்குமான காரணங்கள் வெவ்வேறு. எனவே பயங்கரவாதம், வன்முறை என்பது மக்கள் மீது அரசன் ஏவுவதேயன்றி மக்கள் அரசன் மீது ஏவுவது அன்று.
*
சுலபமான உதாரணம் ஒன்றைச் சொல்வதென்றால், அன்பாகவும், அரவணைப்பாகவும் இருங்கள் என்று பெற்றோர்கள்தாம் போதிக்கப்படுகிறார்களேயன்றிக் குழந்தைகள் போதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் குறும்பு செய்வோராயிருந்தாலும் அவர்களை அச்சுறுத்தி வன்மையாகத் தண்டிக்கும் உரிமை பெற்றோர்களுக்கு இல்லை. (அறியாதவர்களுக்காக ஒரு செய்தி - அமெரிக்காவில் குழந்தைகளை யாரும் அடிக்கக்கூடாது, பெற்றோர் உட்பட. அப்படி அடித்து, குழந்தை போலீசைக் கூப்பிட்டால் போலீஸ் வந்து அம்மாப்பாவைப் பிடித்துக் கொண்டு போகலாம், போகும்.) மாறாக அந்தக் குழந்தை ஏன் அவ்வாறு செய்கிறது, அதற்கான சரியான சூழலை நம் வீடு கொண்டி ருக்கிறதா என்று பார்த்து அதனைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, குழந்தையை வெருட்டு வதால் அங்கு சமாதானம் நிலவப் போவதில்லை. குழந்தை அடித்துவிட்டது என்று சொல்லி எந்தப் பெற்றோரும் போலீசைக் கூப்பிடுவதில்லை, அல்லது திருப்பிச் சாத்துவ தில்லை. இன்றைய அரசுகளின் terrorism குறித்த நிலைப்பாடுகள் பெற்ற பிள்ளைகளைப் போட்டுப் பெற்றோர் நசுக்குவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
*
இனி குறட்பாக்களும் (நன்றி விக்கிபுக்ஸ்) பொருளும் (நன்றி திருக்குறள், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை வெளியீடு)
*
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
*
561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
*
-குற்றத்துக்குத் தக்க தண்டனையை ஆராய்ந்து, அக்குற்றத்தைச் செய்தவன் தொடர்ந்து அதைச் செய்யாதவகையில், அவனை உலகமும் ஏற்கும் வண்ணம் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டிப்பவனே அரசனாவான்.
*
562. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
*
-தமது ஆட்சிச் செல்வம் தம்மை விட்டு நெடுங்காலம் நீங்காது நிலைபெறுதலை விரும்புகின்ற அரசர்கள், தண்டனையை நிறைவேற்றத் தொடங்கும்போது அளவு கடந்து தண்டிக்கப் போகின்றவர்போலக் கடிதாக ஓங்கி, தண்டிக்கும்போது அடி மெல்ல விழுமாறு அளவு கடவாமல் தண்டிப்பார்களாக!
*
563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
*
-குடிமக்கள் துணுக்குற்று வெருவும்படியான செயல்களைச் செய்யும் வெங்கோலனாக இருந்தால் அவ்வரசன் உறுதியாக விரைந்து கெட்டுப் போவான்.
*
564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
*
-தனது குடிமக்களால் ‘நம் அரசன் கடுமையானவன்’ என்று பேசும்படியான இன்னாத பழிச் சொல்லையுடைய மன்னன், தான் உறையும் நாட்டையும் இழந்து தானும் விரைந்து கெடுவான்.
*
565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
*
-தன்னைக் காண விழைவார்க்கு எளிதில் காணமாட்டாதவனாய், கண்டவழி கடுகடுவென இன்னாத முகத்தையும் உடையவனாய் இருப்பவனது பெருஞ்செல்வம், பேயைக் கண்டாற் போல, அச்சந்தரும் தன்மையுடையதாகும்.
*
566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
*
-அரசன் கடுமொழிகளையே பேசுபவனாய், கண்ணோட்டமும் இல்லாதவனாயின், வழிவழியாக வருகின்ற அவனது பெருஞ் செல்வம் நிலைபெறுதலின்றி அப்பொழுதே கெட்டொழியும்.
*
567. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
*
-கடுஞ்சொற்களும் குற்றத்தைவிடக் கூடுதலாகச் செய்யும் எல்லை கடந்த தண்டனையும் அரசனது பகையை வெல்லும் வலிமையாகிய இரும்பினைத் தேய்க்கும் அரம் ஆகும்.
*
568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
*
-முன்னதாக ஒரு காரியம்பற்றித் தன் சுற்றமாகிய அமைச்சர் முதலானவர்களோடு கலந்து ஆலோசிக்காது காரியத்தில் இறங்கிவிட்ட மன்னன், பின்பு அது பிழைபடக்கண்டு, சினத்திற்கு ஆட்பட்டு அவர்களைக் கோபித்துச் சீறுவானாகில் அவனது ஆட்சிச் செல்வம் சுருங்கும்.
*
569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
*
-தனக்குப் பற்றுக் கோடாகக் கூடிய பாதுகாப்புக்களை முன்கூட்டியே செய்துகொள்ளாத வேந்தன், திடீரெனப் போர் வந்த காலத்தில், துணுக்குற்று அஞ்சி நொந்து கெட நேரும். தான் அஞ்சி வெருவும்படியான செயல்களையும் செய்து கொள்ளுதல் கூடாது.
*
570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
*
-அரசியலில் கற்கவேண்டியவற்றைக் கல்லாதவர்களைத் தனக்கேற்ற அமைச்சர் முதலானவர்களாகச் சேர்த்துக்கொள்ளும் கொடுங் கோலாட்சியல்லது, இந்தப் பூமிக்குப் பாரமாவது பிறிதொன்றில்லை.
----------------------------------------------------