ஐம்பெருங் காப்பியங்களுள் நான்காவதான வளையாபதி

முன்னுரை

பெரியண்ணன் சந்திரசேகரன் (perichandra@yahoo.com) அட்லாண்டா, அமெரிக்கா.

ஐம்பெருங் காப்பியங்களுள் கடைசி இரண்டான வளையாபதியும் குண்டலகேசியும் கிடைக்கவில்லை யென்று படித்து அவற்றில் ஒன்றும் கிடைக்கவில்லையே என்று வருந்தும் பலருக்கும் வளையாபதியில் மதுரைத் திட்டத்தின் கீழ் வலையில் ஏற்றுவதற்கு என்ன இருக்கிறதென்று ஐயம் எழலாம். ஆம், வளையாபதியில் ஒன்று கூடக் கிட்டாமற் போகவில்லை.


முதலில் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் கருத்து எவ்வளவு தொன்மையானது என்று காண்போம். செக்கோசுலோவாகியத் தமிழ்ப் பேரறிஞரான கமில் சுவெலெ'பில் "Companion Studies to the History of Tamil Literature" (1992) என்னும் தம் நூலில் சொல்கிறார் (பக்.70):


"தமிழ் இலக்கியத்தில் "ஐம்பெருங்காப்பியங்கள்" என்னும் தொடரை முதலில் ஆண்டவர் மயிலைநாதர் ஆவர்; அவர் சொற்றொடரைத் தமிழ் இலக்கண நூலான நன்னூலின் 387-ஆம் நூற்பாவின் உரையில் ஆள்கிறார்; ஆயினும் அவர் எந்தெந்த நூல்கள் அதில் அடங்குமெனக் குறிப்பிடவில்லை; 19-ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த கந்தப் பையரின் திருத்தணிகைத் தல புராணத்தொகையில் ஒன்றான திருத்தணிகை யுலாவின் 11:526-7 ஆம் செய்யுளில்தான் அவ் வைம்பெருங் காப்பியங்களும் யாவை என நிரைக்கப் படுகிறது!"


வளையாபதி என்னும் பெருங்காப்பியம் முழுதும் கிடைத்திலது. அது சென்ற 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தொலையாமல் முழுதும் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் திருவா வடுதுறை ஆதீன மடத்தின் நூலகத்திற்குத் தாம் சென்றபோது வளையாபதியின் சுவடி யொன்றைத் தம் கண்ணாலே கண்டதாகவும் அப்போது பழங் சுவடிகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாததால் அதைப் புறக்கணித்துவிட்டதாகவும் பிற்காலத்தில் அவைபோலும் சுவடி களைக் காக்கும் விருப்போடு மீண்டும் அங்குச் சென்றபோது அது காணவில்லையெனவும் “என் சரித்திரம்" நூலில் குறிப்பிட்டுள்ளார்.


வளையாபதியின் ஆசிரியர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை என்பன யாதொன்றும் நமக்கு இப்போது தெரியவில்லை. இக்காவியத்தின் சில செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இப்போது 72 செய்யுள்கள் தாம் நமக்குக் கிட்டியுள்ளன.


அந்த 72 செய்யுள்களில் 66 செய்யுள்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு என்னும் தொகைநூலிலும், 3 செய்யுள்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற் கோளாகவும், 2 செய்யுள்கள் யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல் காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துச் செய்யுளென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 செய்யுள் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிட்டின.


இது சமண சமய நூல் என்பதில் ஐயமில்லை. வளையாபதி தனியழகுள்ள நூலென்றும் ஒட்டக்கூத்தரும் அவ்வாறு கருதியதாகவும் தக்கயாகப் பரணியின் பழைய உரையாசிரியர் கூறுகிறார்.


வளையாபதியின் காலம்:

வையாபுரிப் பிள்ளை அவர்கள் விருத்த யாப்பில் இயற்றப் பட்ட நூல்களில் இது மிகப் பழையது என்று சாற்றி அது கி.பி. 10-ஆம் நுற்றாண்டின் முற்பாதியதாக இருக்கலாம் என்று சொல்வார். ஆனால், மு.அருணாசலம் அவர்களோ அது கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பாதியதாகுமெனச் சொல்வார்.


வளையாபதியின் கதை:

வளையாபதியின் கதையைப் பற்றி நமக்கு உறுதியாக ஏதும் தெரியவில்லை. அதைப் பற்றிச் சில கருத்துகள் எழுதப் பட்டுள்ளன. அவற்றை நாம் இங்கே காண்போம்.

கமில் சுவெலெபில் அவர்களின் மேற்சுட்டிய நூலினின்று சில செய்திகளைத் தருகிறேன்.

வைசியபுராணம் சொல்லுவது:

சில அறிஞர்கள் 1855-இல் சூடாமணிப் புலவர் எழுதிய வாணிகபுராணம் எனப்படுகின்ற வைசிய புராணம் என்னும் நூலின் 35-ஆம் படலத்தில் வளையாபதியின் கதை சொல்லப் பட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால் அ•து ஐயப்பாட்டிற்குரியதே.

அதன் படி:

வைரவாணிப மகரி*சிக் கோத்திரத்தைச் சேர்ந்தவனும் சிவ அன்பினனும் ஆகிய நவகோடி நாராயணச் செட்டி என்பானுக்கு இரண்டு மனைவியர் இருந்தனர்; அவருள் ஒருத்தி அவனுடைய வைசியச் சாதியினள்; மற்றொருத்தி பிறிதொரு சாதியினள். வேற்றுச் சாதிக்காரியை மணந்ததை எதிர்த்து நவகோடி நாராயணச் செட்டியின் சாதியினர் அவனை ஒதுக்கம் (excommunication) செய்ய அச்சுறுத்தவும், அவன் தன்னுடைய இரண்டாம் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறான், அவள் கருப்பமாக இருந்தபோதும்.


அந்தச் செட்டியும் வீட்டை விட்டுச் சென்று கடற்பயணத்தை மேற்கொண்டு மேலும் பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனையாளுடன் இன்பமாக இல்லறம் நடத்துகின்றான். சில மாதங்கட் கழித்து அவன் இரண்டாம் மனைவி ஒரு மகனை ஈந்தாள்; அவனை வளர்த்தும் வருகிறாள்; ஆனால் அவனுடைய விளையாட்டுத் துணைப் பையன்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்துகின்றனர். காளியின் ஒரு வடிவமாகிய நாளி யென்னுந் தெய்வத்தின் மீது அன்புகொண்ட அவன் தாய் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவிக்கிறாள்.

அந்த மகனும் தன் தந்தையைத் தேடிச் சென்று தந்தைச் செட்டியின் முன் தான்றான் அவனாற் கைவிடப் பட்ட மனைவியின் மகனென்று சொல்லித் தோன்றுகிறான். தந்தையோ அவனை நம்பாமல் அவன் கூற்றை மறுத்து அவனைத் துரத்துகிறான். அவன் மீண்டும் வந்து தந்தையை வீதிக்கு இழுத்துக் காளியைக் கரியாக (சாட்சியாக) அழைக்கிறான். அப் போது அவன் தாயின் கற்பை நிறுவுமாறு கேட்கப் படவும் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். தந்தையும் அப்பையனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீர வாணிபன் என்னும் பெயரும் இட்டு அவனை வாணிகனாகத் தொழில் தொடக்கவும் உதவுகிறான்.


வைசியபுராணமானது “பஞ்சகாவியங்கள்" என்னும் தலைப்பில் மேற்கண்ட செய்தியை 49 செய்யுள்களில் கூறிவிட்டு “இதுதான் வைர வாணிகன் வளையாபதி என்னும் கதையின் சுருக்கம்" என்று சொல்கிறது. ஆனால் வளையாபதி யென்னும் பெயர் அப்பாடல்களில் காணவே யில்லை. “அறிஞர் மு.அருணசாலம் சொல்வதுபோல் காப்பியங்கள் இதுபோலும் சாதாரணக் கதைகளைக் கருவாகக் கொள்வதில்லை" என்று சுவெலெபில் சொல்லுவார். கதையின் தலைவன் சைவ ஐந்தெழுத்தைத் தன் இறைவணக்க மந்திரமாக மேற்கொள்கிறான்; காளியும் ஒரு மையமான பாத்திரத்தை வகிக்கிறாள். ஆனால் வளை யாபதியின் கிடைத்துள்ள செய்யுள்களோ அக்காவியம் ஒரு சமண நூலென்று ஏறக்குறைய முழுவுறுதியுடன் தெரிவிக்கின்றன. ஆகவே வைசிய புராணத்திற் சொல்லியுள்ள கதை தமிழ்ச் சைவ வைசியச் செட்டியார் பாரம்பரியத்தில் இருந்து தோன்றியதென்றும் அதற்கும் வளையாபதிக்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்றும் சொல்லலாம்.


வளையாபதி காத்தவராயன் கதையைப் புராணவடிவில் சொல்லியதென்று கருத்துத் தெரிவிக்கப் படுகிறது; மலையாளத்திலும் தமிழிலும் வழங்கும் காத்தவராயன் என்னும் சைவச் செவிவழிக் கதையின் கரு சாதி வரம்பை மீறி மணப்பதால் ஏற்படும் தீய விளைவுகளே, ஆதலால் அது சமணக் காவியத்தின் கதையாக இருக்குமென்பது ஐயத்திற் குரியதே.


கிட்டியுள்ள செய்யுள்கள் சொல்வது:

மேற்சுட்டிய நூலில் கமில் சுவெலெபில் சொல்கிறார்: “நமக்குக் கிடைத்துள்ள வளையா பதிச் செய்யுள்களை வைத்துப் பார்த்தால், அவற்றிற் பாதியில் உலகவாழ்க்கையின் இன் பங்களை மறுத்துத் துறவறத்தைப் போற்றுவது தெரிகிறது; பெண்களின்மேல் குறிப்பாக வெறுப்புக் காட்டுகிறது; கற்பு ஒன்றைமட்டுமே போற்றுவதாகத் தெரிகிறது. பல செய்யுள் கள் திருக்குறளை எதிரொலிக்கின்றன. வளையாபதியின் சொல்லாட்சியும் நடையும் மிக உயர்ந்த தரத்தின. அதை அடியார்க்கு நல்லாரும் உணர்ந்தார் என்பது அவர் சிலப்பதி காரத்தின் உரையில் வளையாபதியை மேற்கோள் காட்டியுள்ளதிலும் அதில் அந்நூலைப் புகழ்வதிலும் தெற்றெனத் தெரிகிறது.

“பெண்மறுப்பு, சிற்றின்பத் துறவு, புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை - ஆகியவையும் இன்ன பிற கூறுகளிலிருந்தும் ஒன்று தெளிவு:

வளையாபதியின் ஆசிரியர் ஒரு கற்றுத் துறைபோகிய திறம்மிக்க சமணத் துறவியர் ஆவர் ”

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுடைய “மறைந்து போன தமிழ் நூல்கள்" என்னும் நூல் இதற்குப் பெரிதும் உதவியது. அந்நூலை எமக்கு இரவல் தந்து பேருதவி செய்த •ஊ^ச்டன் விண்கலவியற் பொறியாளர் தமிழ்ப் பேரறிஞர் நாகமாணிக்கம் கணேசன் அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.


மார்ச்சு 19, 2000, பெ.சந்திரசேகரன்

அட்லாண்டா, அமெரிக்கா.

வளையாபதியிற் கிடைத்துள்ள செய்யுள்கள

கடவுள் வாழ்த்து


[இளம்பூரனர் தொல்காப்பிய உரையில் செய்யுளியல்:98-அம் நூற்பாவுக்கும், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் எடுத்த நூற்பெயரைக் குறிப்பிடாமல் இதை மேற்கோளாகக் காட்டுகிறனர்; நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148-ஆம் நூற்பாவின் உரையில் இதைக் காட்டி வளையாபதிச் செய்யுளென்று சொல்வதால் இது வளையாபதி என்று தெளிகிறது]
*
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
டிலக மாய திலறறி வனடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்(று)யான்.

புறத் திரட்டில் தொகுக்கப் பட்ட 66 செய்யுள்கள் பின்வருமாறு:
*
1.
வினைபல வலியி னாலே வேறுவே(று) யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய(து) ஆகும் தோன்றுதல், தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்.
*
2.
உயர்குடி நனியுள் தோன்றல் ஊனமில் யாக்கை யாதல்
மயர்(வு)அறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரி(து)உணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்(கு)
அரி(து)இவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்.
*
3.
நாடும் ஊரும் நனிபுகழ்ந்(து) ஏத்தலும்
பீ(டு)உ றும்மழை பெய்கெனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்(கு) ஆவதே.
*
4.
பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்(பு)உறூஉம்
கள்அவிழ் கோதையர் காமனொ(டு) ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ.
*
5.
உண்டியுள் காப்(பு)உண்(டு) உறுபொருள் காப்புண்டு
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப(து) இலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்(று)அறிந் தோரே.
*
6.
எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனி உக்க மரத்(து)இலை நுண்மயிர்
அத்துனை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்
புக்கனம் என்று பொதியறைப் பட்டார்.
*
7.
தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்(று) ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார்.
*
8.
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வசன வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.
*
9.
ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;
போக்கப் படுக்கும்; புலைநகரத்(து) உய்ப்பிக்கும்;
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்(கு)அல்ல(து) இல்லை நனிபேணும் ஆறே.
*
10.
தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்(பு)எதிர் கொள்பவே.
*
11.
பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன(து) ஆயினும் ஏதில்பெண் நீக்குமின்.
*
12.
பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன் மின்;வடி(வு) அல்லன சொல்லிநீர்
உய்யன் மின்;உயிர் கொன்(று)உண்டு வாழும்நாள்
செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின்.
*
13.
கள்ளன் மின்,கள(வு) ஆயின யாவையும்;
கொள்ளன் மின்,கொலை கூடி வரும்அறம்;
எள்ளன் மின்,இலர் என்றெண்னி யாரையும்;
நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.
*
14.
துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த(து)
எற்றுக்(கு)அ•(து) என்னின் இதுவதன் காரணம்
அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணி(வு)என்னும் ஆறே.
*
15.
ஆற்று மின்,அருள் ஆருயிர் மாட்டெலாம்;
தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின்
மாற்று மின்கழி மாயமும் மானமும்
போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர்.
*
16.
பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா(து)
அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்
அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்
இருளியல் பெய்தாத(து) என்னோ நமரங்காள்.
*
17.
தகா(து)உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையின் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொருதுபிற ஊன்கொன்(று)
அவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும்.
*
18.
பிறவிக் கடலகத்(து) ஆராய்ந்(து) உணரின்
தெறுவதிற் குற்றம் இல்லார்களும் இல்லை
அறவகை யோரா விடக்கு மிசைவோர்
குறை(வு)இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர்.
*
19.
உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்(து) உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்(து)ஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்.
*
20.
பொருளடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்(று) இனிஇவண் வாரீர்
தெருளுதல் உறினும் தெருண்மின் அதுவே.
*
21.
தவத்தின் மேலுறை தவத்(து)இறை தனக்(கு)அல(து) அரிதே
மயக்கு நீங்குதல் மனமொழி யடுமெயிற் செறிதல்
உவத்தல் கய்தலொ(டு) இலாதுபல் வகைஉயிர்க்(கு) அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ.
*
22.
எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;
உள்நின்(று) உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம்
நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்;
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும்.
*
23.
சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;
ஆன்(று)ஆங்(கு) அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;
வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்
தாந்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால்.
*
24.
மாஎன்(று) உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;
யஎன்(று) எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே
பேய்என்(று) எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்ப; காம
நோய்நன்(கு) எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால்.
*
25.
நக்கே விலாஇ றுவர்;நாணுவர்; நாணூம் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையு மேற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்;நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்பம் ஆக்கும்.
*
26.
அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவலை முன்கைப் புனையிழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.
*
27.
பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்(து)
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே.
*
28.
பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்(டு)
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்(து)உறல் ஒன்(று)இன்றிக்
கௌவை இல்உல(கு) எய்துதல் கண்டதே.
*
29.
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலி(வு) உண்மையும்
பொய்யில் பொய்யடு கூடுதற்(கு) ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்(து) ஓம்புமின்.
*
30.
உல(கு)உடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும்
அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார்.
*
31.
வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை ஒட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வ மிகப்பவே.
*
32.
ஒழிந்த பிறவறன் உண்டென்பார் உட்க
அழிந்து பிறரவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தா(து) ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் பிலரே.
*
33.
இன்மை இளிவாம் உடைமை உயிர்க்(கு)அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரையில் அரும்பொருளைத்
துன்னா(து) ஒழிந்தார் துறவோ விழுமிதே.
*
34.
ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டா(து) ஒழிந்தார் விறலோ விழுமிதே.
*
35.
இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லையுண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வது மன்றே.
*
36.
வேற்கண் மடவார் விழை(வு)ஒழிய யாம்விழையக்
கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற்(று) உழையதா
நாற்ப(து) இகந்தாம் நரைத்தூதும் வந்த(து)இனி
நீத்தல் துணிவாம் நிலையா(து) இளமையே.
*
37.
இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையும் அ•தேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.
*
38.
மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்(பு)அறுக்கல்
உற்றார்க்(கு) உடம்பு மிகையவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலு மறுத்தற் கரிதே.

*
39.
உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னொக்கும்
பற்றினான் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்(கு)உறும் ஆறே.
*
40.
தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கழி வெய்தினம்
நானம் தோய்குழல் நமக்(கு)உய்தல் உண்டோ
மானம்தீர் கொள்கையார் மாற்றம்பொய் அல்லவால்.
*
41.
பருவந்து சாலப் பலர்கொல்என்(று) எண்ணி
ஒருவந்தம் உள்ளத்(து) உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்(கு) உளன்என்னும் ஆறே.
*
42.
உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும்
யுய்த்தவம் இல்லான் பொருளடு போகங்கட்
கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே.
*
43.
செந்நெலங் கரும்பினொ(டு) இகலும் தீஞ்சுவைக்
கன்னலம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.
*
44.
குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ.
*
45.
கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரி(து)இகழ்ந்(து) ஆற்றவும்
எட்டவந் தோர்இடத்(து) ஏகிநிற்பவே.
*
46.
தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்(டு) ஈட்டற்(கு) இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்(து) ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்(பு)எண்ணும் ஆறே.
*
47.
நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற்
பேணலும் அன்பும் பிறந்(து)உழிப் பேதுசெய்(து)
ஆணைப்பெண் ணைய வணைக்குறு மாறே.
*
48.
அந்தகன் அந்தகற்(கு) ஆறு சொலல்ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்(கு)அறி(வு) இல்லான் அதுவறி யாதவற்(கு)
இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.
*
49.
யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை
வேறோர் இடத்து வெளிப்பட நன்றாம்.
*
50.
ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி
யாரவர் அடைந்தவர்க் கவையும் புரைப.
*
51.
வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறவறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.
*
52.
எங்ஙனம் ஆகிய(து) இப்பொருள் அப்பொருட்(கு)
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்(கு)
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.
*
53.
கரணம் பலசெய்து கையுற்(று) அவர்கட்
கரண மெனுமிலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்திற் றிரண்பொருள் கோடற்
கரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப.
*
54.
நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்(வு)எய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப.
*
55.
வனப்பிலர் ஆயினும் வன்மையி லோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப,
*
56.
தங்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வண்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்(கு)
அங்கண் பரப்பகத் தாழ்கல மொப்ப.
*
57.
ஒத்த பொருளான் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்(டு) ஒழுகலின்
பைத்தர அல்குல்பொற் பாவையி னல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.
*
58.
வீபொரு ளனை அகன்று பிறனுமோர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோற் புலம்புகு
மாவும் புரைப மலரன்ன கண்ணார்.
*
59.
நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்பிள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.
*
60.
முருக்(கு)அலர் போற்சிவந்(து) ஒள்ளிய ரேனும்
பருக்கர டில்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொ லவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.
*
61.
மக்க்ள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்க(து) அறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்(து)அர(வு) அல்குல் படிற்(று)உரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்(று) இன்றே.
*
62.
நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
இவைமிகு பொருளென்(று) இறத்தல் இலரே
வகைமிகு வானுல(கு) எய்திவாழ் பவரே.
*
63.
பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினின் அ•குப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.
*
64.
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ.
*
65.
தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.
*
66.
பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்(சு)இல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையி தென்றே
மருள்இல் புலவர் மனம்கொண்(டு) உரைப்ப.

சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருவன:
*
67.
[சிலம்பு: கனாத்திறம்: 13-க்கு]

துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்(து) இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்(து) உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்(டு) அமைவரப் பண்ணி.
*
68.
[சிலம்பு: கனாத்திறம்: 14-க்கு]

பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்(று) அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணா(று) இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.
*
69.
[சிலம்பு: ஆய்ச்சியர்குரவை: 3-க்கு]

அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற்
கன்றின் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழற் கோவலர் ஆம்பலு
மொன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.

யாப்பருங்கல உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டுவன:
[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு]
*
70.
நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலம் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே
காலக் கனலெரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவ(து) என்வாழி நெஞ்சே.
*
71.
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே
உத்தம நன்னெறிக்கண் நின்(று)ஊக்கஞ் செய்தியேற்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.
*

வளையாபதியிற் கிட்டியுள்ள செய்யுள்களின் தொகை முற்றிற்று.
*
*
*