வாழ்க சுதந்திரம் - பாரதி பாடல்கள்.



என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும்வாடுதல் நன்றோ?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

அஞ்லென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!


-பாரதியார்

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே_ இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு_ உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு_ நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு_ தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி_ என
மேவிய யாறு பலவோடத்_ திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே_ நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில்_ நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை_ வட
மாலவன் குன்றம் இவற்றிடையே_ புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு_ புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு_ நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின்_ மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்_ மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி_ அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்_ எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்_ சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார்_ தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்_ இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)


-பாரதியார்


பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்_ மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைகொல்லு வார்

சரணங்கள்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் வீடுவோம்;பள்ளித்
தலமனைத்தும் கோயில்செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்;
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்குநல்லியற்
கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

8. பட்டினியில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தில் கண்டுதெளிவோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

12. காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றேத
மிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத)

-பாரதியார்