இலக்குவன் தியாகம்!

இராமாயணத்தில் பரதனின் உயர்ந்த தியாகத்தை மெச்சி, அனைவரது உள்ளமும் அவனைத் தொழுவது இயல்பு தான்!

பரதன் துறந்தது கைகேயி தன் வரத்தினால் பெற்ற, அயோத்தி சிம்மாசன உரிமையைத் தான். ஆனால் இலக்குவனோ தன் வாழ்வையே இராமனுக்காகத் துறந்து விடுகிறான்- என்பதை உணரும் போது நம் உள்ளம் இன்னும் உருகி விடும்!

உத்தரகாண்டத்தில் இலக்குவனின் முடிவில் அவன் தியாகத்தைநாம் காண்கிறோம்.
இராமனுடன் வனம் புகுந்த இலக்குவன் இராமனையும் சீதையையும் காவல் காப்பதி லிருந்து அனைத்துப் பணிகளையும் விரும்பி மேற்கொள்கிறான்.

சித்ரக்கூடத்தில் பலவிதமான மரங்களைக் கொண்டு பர்ணசாலை அமைக்கிறான். அதில் இராமர் வாஸ்து சாந்தி செய்த பின்னர் சீதையுடன் புகுகிறார். இராமனுக்கே தன் வாழ்வு என்பதைப் போல இயங்கும் இலக்குவனை, வால்மீகி இராமனின் வெளியே உலாவும் பிராணன் என்கிறார். (பஹிர் பிராண இவாபர: பாலகாண்டம் 18-28)

வால்மீகியின் இந்தக் கூற்று மிக்க பொருள் பொதிந்தது என்பதை அவன் முடிவின் மூலம் உணர முடிகிறது.

யுத்தத்தின் போது இராவணன், பிரமன் கொடுத்த வேல் ஆயுதத்தால் இலக்குவனை அடித்து வீழ்த்துகிறான். களத்திலே மூர்ச்சித்துக் கிடக்கும் இலக்குவனை நோக்கி எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்த இராவணன், இலக்குவனின் உடலைத் தூக்கிச் செல்ல முயல்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை.

எவ்வளவு முயற்சி செய்த போதும் இலக்குவனின் பொன் உடலை வெள்ளிக் கயிலை மலையைத் தூக்கிய இராவணனால் தூக்க முடியவில்லை!

அப்போது எங்கிருந்தோ வந்த அனுமன் எளிதாக இலக்குவன் உடலைத் தூக்கிச் செல்கிறான். பின்னர் இலக்குவன் காப்பாற்றப் படுகிறான்.

(இடுக்கில் நின்ற அம்மாருதி புகுந்து எடுத்து ஏந்தி -கம்பன்: யுத்த-முதல் போர்புரி படலம்)

வெளி பிராணன் போலவே இருக்கும் இலக்குவனும் இராமன் போலவே, பக்தன் அல்லாத அயலாருக்கு பாரம்; பக்தருக்கோ பாரமற்ற எளியன என்பதை இந்த சம்பவத்தால் பார்க்கிறோம். அரக்கனான இராவணனுக்குப் பாரமாக இருந்த இலக்குவன் பக்தனான அனுமனுக்கு மயிலிறகு போல எளியனாக ஆகி விட்டான். இது போன்ற பல சம்பவங்கள் மூலம் இராம -இலக்குவ தொடர்பை நுணுக்கமாக வால்மீகியும் கம்பரும் எடுத்துக் காட்டும் பாங்கே அலாதி சுவையுடன் அமைகிறது.

இலக்குவனின் முடிவைப் பார்ப்போம்.

நீண்ட காலம் அயோத்தியை அரசாண்ட ராமனின் அவதார காலத்தின் முடிவு நெருங்குகிறது. இதை பிரம்மா காலனுக்கு உணர்த்த, காலன் இராமரை ஒரு முனிவர் வேடத்தில் அணுகுகிறான்.

வாயிலில் இருந்த இலக்குவனிடம், “ஒரு முக்கியமான விஷயமாக இராமரைப்பார்க்க வந்திருக்கிறேன்” என்று கூறிய முனிவரைரிடம், இராமனின் அனுமதிபெற்று அவரை உள்ளே அனுமதிக்கிறான்.

தங்க ஆசனத்தில் அமர்ந்த காலன், "நாம் இருவரும் தனியே பேச வேண்டியவிஷயம் இது. நாம் பேசுவதை வேறு யாரேனும் கேட்டாலோ, தனித்துநாம் இருப்பதைப் பார்த்தாலோ கூட அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்"என்று கூறுகிறான்.

இதற்கு இணங்கிய இராமர், இலக்குவனிடம் வாயிற்காப்போனை அனுப்பி விடு;நீயே அங்கு இரு; யார் என்னைப் பார்க்கிறானோ அல்லது எங்களின்பேச்சைக் கேட்கிறானோ அவன் என்னால் கொல்லப்படுவான்" என்றுகூறுகிறார்.

இலக்குவன் வெளியே வாயிலுக்குச் செல்ல காலன் இராமரிடம் பிரம்மா தன்னை அனுப்பியதாகச் சொல்லி, இராமன் தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டகாலம் முடிவுக்கு வருவதை பிரம்மா நினைவூட்டச் சொன்னதை விரிவாகவிளக்கிக் கூறுகிறான். இராமர் அமைதியாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்வேளையில் வெளியே துர்வாச முனிவர் வருகிறார்.

அவரைத் தடுத்த இலக்குவன், இராமர் மிக முக்கியமான வேலை நிமித்தம்இருப்பதைச் சொல்லி சிறிது காத்திருக்க வேண்டுகிறான். இதை கேட்டதுர்வாசர்ம் பெரும் கோபம் கொள்கிறார்.

"உடனே உள்ளே சென்று நான் வந்ததைச் சொல்!. இல்லாவிடில் இராமரையும்உன்னையும் பரத, சத்ருக்க்கனரையும், ஏன்!, இந்த நாட்டில் உள்ளஅனைவரையும் உங்கள் சந்ததி யினரையும் சபித்து விடுவேன்!"என்கிறார்.

சற்று யோசித்த இலக்குவன் தன் வாழ்வைத் தியாகம் செய்வதே சிறந்தது; அதனால் மற்றவரைக் காப்பாற்ற முடியும், என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்று துர்வாசரின் வரவை அறிவிக்கிறான்.

இராமர் உடனே காலனுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு வெளியேவந்து துர்வாசரை வரவேற்கிறார்.

“ஆயிரம் ஆண்டுகள் உண்ணாமல் இருந்துத, ஒரு தவத்தை முடித்து விட்டுநேராக இங்கு வருகிறேன்.உண்ணுவதற்கு ஏற்பாடு செய்” என்கிறார் துர்வாசர்.இராமன் அளித்த விருந்தால் மனம் மகிழ்ந்து விடை பெறுகிறார் அவர்.இப்போது இராமன் மனம் மிகவும் துயரம் அடைகிறது.

அவனை நோக்கிய இலக்குவன்,

" காகுத்ஸரே! எனக்கு உங்கள் பிரதிக்ஞையின்படி உரிய தண்டனையை வழங்குங்கள். என்னைக் கொல்லுங்கள்" என்று தானே முன் வந்து கூறுகிறான்.

உடனே இராமன் வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து முனிவர் (காலன்)வந்ததையும் இடையில் குறுக்கே புகுந்ததால் பிரதிக்ஞையின் படிஇலக்குவனைக் கொல்ல வேண்டியிருப்பதையும் கூறுகிறான்.

இராமன் இலக்குவனை நோக்கி,

" சுமித்ரையின் புதல்வனே! இனி உன்னை நான் ஒதுக்குகிறேன். ஏனெனில் நாணயமானோருக்கு ஒதுக்குவது என்பதும் மரணமும் ஒன்று தான்" என்கிறான்.

அற நூலின் படி அமைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட இலக்குவன் கண்களில் நீர் மல்க சரயு நதி நோக்கிச் செல்கிறான். அங்கே கூப்பிய கைகளுடன்தன் புலன்களை ஒடுக்கி தன் மூச்சை நிறுத்துகிறான்.'

இலக்குவனின் இந்தத் தியாகம் நம்மை உருகச் செய்கிறது!

வெளி பிராணனான இலக்குவன் "போன" பின் உள் பிராணனுக்கு என்ன வேலை?
வால்மீகியின் ஆழ்ந்த வார்த்தைகளுக்கு கடைசியில் அர்த்தம் புரியும் வகையில்,இராமன் அனைவரையும் அழைத்து, " இன்றே நான் வனம் ஏகச் செல்கிறேன்"என்று கூறி தன் அவதார காரியத்தை முடித்து தன் நிரந்தர இருப்பிடமானவைகுண்ட வாசத்திற்குப் புறப்படத் தயாராகிறான்.

இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சிறு சிறு சம்பவமும் மனதில் பதிந்து அறநெறிகளை உணர்த்துவதோடு உள்ளத்தை உருக்குவதாகவும் அமைகிறது!