பிச்சாவரம் போயிருக்கிறீர்களோ? குறைந்தது அரை நாளாவது பார்க்க வேண்டிய இடம்; குறிப்பாக அங்கே உள்ள கழிக்கானல் (`=mangrove). அது அசையாத நீர்ச் சேர்க்கையால் ஆன வெறும் உப்பங்கழி அல்ல. அதற்கும் மேலானது. ஓயாத அசைவு இருக்கும் "ஓதக் கழி" (tidal backwaters) என்றுதான் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஓதம் என்ற சொல்லைக் கண்டு மருள வேண்டாம். உயர்ந்து வருவது ஓதம்.
உயர் ஓதம் (high tide) இருக்கும் போது, கழியில் (backwaters) நீர் பெருகும். தாழ் ஓதத்தில் (low tide) நீர் வடிந்து போகும். இந்தக் காலத்தில், கழிக் கானலை, அலையாத்திக் காடுகள் என்று சொல்லுகிறார்கள். (கேட்பதற்குக் கொஞ்சம் செயற்கையாய், அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்லிப் பழகுவதைப் போல, எனக்குத் தோன்றுகிறது. பழைய பெயரை மீட்டுக் கொண்டுவரலாம்.
தலையாலங் கானம் (கானம் = காடு), ஆலங் கானம், கானப்பேர் போல இதைக் கழிக் கானம் என்றும் சொல்லலாம். மாமல்லைக்கும் தெற்கே மரக்காணம் என்று சொல்லப்பட்டு வரும் மரக் கானமும் ஒருகாலத்தில் கழியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னென்ன மரங்கள் அங்கிருந்தன என்று தான் சொல்லத் தெரியவில்லை; ஆய்ந்து பார்க்க வேண்டும். சங்க காலத்து எயிற் பட்டினம் தான் (சிறுபாணாற்றுப் படை) மரக் கானம் ஆயிற்று என்று சொல்லுவார்கள். பார்த்தீங்களா, வரலாற்றைச் சொல்லத் தொடங்கி எங்கேயோ போய்விட்டேன்.
பொதுவாகக் கானலில் நிறைந்து கிடக்கும் புன்னை மரம் பற்றிப் பலருக்கும் தெரியும்; [ஓடங்கள், நாவாய்கள், கப்பல்கள் எனப் பலவும் நாவலந்தீவிலும், சுமேரிய நாகரிகத்திலும் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தப் புன்னை ஒரு முகன்மையான மரம் தான். ஆனால் அதை இன்னொரு முறை பார்க்கலாம்.] இப்பொழுது, தில்லை பற்றி முதலிற் பார்க்கலாம்
பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அந்தப் பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று.
பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்து கொள்ளாமல், சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெல்லாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்து முதல்வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.
தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என்பவை தமிழரை எப்பொழுதுமே கட்டிப் போடுபவை. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேல் ஒரு பட்டியல் உண்டு. (நடிகர் சிவகுமார் அடுத்தடுத்து அந்தப் பூக்களின் பெயரை அப்படியே ஒப்பித்துப் பல மேடைகளில் பெயர் வாங்குவார்.) அந்தப் பட்டியலில் தில்லைப் பூவும் உண்டு.
ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் 2.5-7.0 நுறு மாத்திரி (centi meter; நூறு என்பதின் குறுக்கம் நுறு. தென்மொழி ஆசிரியர் இறைக்குருவன் இதை அறிமுகப் படுத்தினார்.) அளவுக்கு பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயை (shade) உடைய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர் - சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகசுடு - அக்டோபர் மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.
அந்த மரத்தின் இரண்டு செய்திகள் தமிழரை ஈர்த்தவை. ஒன்று அச்சம் தரும் மரம் என்ற செய்தி; இன்னொன்று மனத்தைக் கவரும் குழல் போன்ற பூந்தளிர் பற்றிய செய்தி; குறிப்பாக ஆண்பூந்தளிர். ஆண்மயிலின் தோகை போலத் தில்லையின் ஆண் பூந்தளிர்கள் நம்மை ஈர்க்கும். சற்றுத் தொலைவில் இருந்தும் நம்மைக் கவர்ந்து, அகவை கூடிய முனிவரின் நரைத்த சடை போல இந்தப் பூங்கதிர்கள் தோற்றமளிக்குமாம். தில்லைத் தளிருக்கு முனிவர்சடை உவமையா, முனிவர்களின் திரண்டு கிடந்த
சடைக்குழல்களுக்குத் தில்லைப் பூந்தளிர் உவமையா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. புறநானுறு 252ல் மாரிப் பித்தியார் என்ற பாடினி பாடுகிறார். இந்தப் பாடலை 251ம் பாடலோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்டு, பிள்ளைகளோடும், சுற்றத்தாரோடும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வீடுபேறு பற்றிய கருத்தில் ஆட்பட்டுத் தவம் மேற்கொண்டு, காட்டில் உறைகிறான். அவன் துறவு நிலை பற்றி வியக்கின்ற புலவர், இந்தப் பாடலில் தில்லையை உள்ளே கொண்டு வருகிறார்.:
கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே
"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூடன்னு புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூட இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினாதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறி போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி டால் அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை வுழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."
இதுவரைக்கும் சரி, இனி மூன்றாவது வரியில் தான் இந்தக் கவிதைக்கே ஆன முரண் இருக்கிறது; தில்லையின் தளிர் போல விளங்கும் சடை கொண்ட இந்த முனிவர் என்ன இலை பறிக்கிறார் தெரியுமோ? "அள்ளிலைத் தாளி." மூலிகை அறிவு இருந்தால் தான் இங்கு பொருள் விளங்கும். அல் என்றால் "நெருங்கிய" என்று அருத்தம். "நெருங்கிய இலை கொண்ட தாளி" என்னும் செடியில் இருந்து முனிவர் இலை பறிக்கிறார்; சிரிப்பு வருகிறது மாரிப் பித்தியாருக்கு.
ஏனென்றால் "தாளிச பத்திரி" என்று இன்று சொல்லப் படும் (Flacourtia Calaphracia) அள்ளிலைத் தாளி பொதுவாகப் பசியைத் தூண்டுவதற்கும், கழிச்சல், சுரம், நாட்பட்ட இருமல் போன்றவற்றைப் போக்குவதற்குமாக உள்ள மூலிகை; கருப்பினிப் பெண்கள் நல்ல மகப் பேறு (சுகப் பிரவசம்) ஏற்படுவதற்காக உட்கொள்ளும் மூலிகையும் இதுவாகும்.
வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பினி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார். (முனிவர் பசியில்லை என்று பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஊறால் பறித்திருக்கலாம்; நமக்குக் காரணம் தெரியாது. பாடினியாரும் காரணம் சொல்லவில்லை. உரையாசிரியரும் முரணைப் போட்டு உடைக்கவில்லை; பொதுவாக, முரண் என்பது இப்படித்தான். ஒன்று கிடக்க இன்னொன்றாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது.
அடுத்த இரண்டுவரிகளில் பாடினியின் கேலி இன்னும் கூடுகிறது. "துறவு கொள்ளுவதற்கு முன்னால், வீட்டுக்கார அம்மா பேச்சை அப்படியே கேட்டு, வேண்டப் பட்டதைத் தேடிக் கொண்டுவந்த ஆள்தானே இவருன்னு" ஒரு போடு போடுகிறார்..
கவிதை ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கு முகன்மையான செய்தி தில்லைப் பூந்தளிரை முனிவர்களின் புரிசடைக்கு இணையாக ஒப்பிட்டது.
தில்லை என்ற மரத்தின் பெயரே அந்தத் தளிர் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டது. துல்லுதல் என்பது தோன்றுதல்; தோன்றுவது கொஞ்சம் மஞ்சளாய்த்தான் தெரியும். துலங்குதல் என்ற சொல் கூட துல் என்னும் வேரில் தோன்றியது தான். மஞ்சளாய் ஒளி நிறைந்ததாய், தெரிவதைத் துலங்குதல் என்று சொல்கிறோம். ஏனத்தின் கழிம்புகளையும், கறைகளையும் போக்கி விளக்குவதைத் துலக்குதல் என்று சொல்லுகிறோம். துல்லுவது துள்ளுவது என்றும் ஆகும். துள்ளுவது பின் துளிர்க்கும்; அது சற்றே திரிந்து தளிர்க்கும். துல்லுவது தில்லையானதும் இதே போல் தான்.
அந்தப் பூந்தளிர் ஒன்றே தில்லை மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று காண்பவர் மனத்தில் தைக்கும் காட்சி. "தளிர்க்குழல் - முனிவர் சடை" என்ற இரட்டைப் பிணை, நெய்தல் நிலத் தமிழனை அப்படியே ஈர்த்திருக்க வேண்டும். கலித்தொகை 133 ல் முதலைந்து வரிகள் இன்னொரு காட்சியைக் காட்டுகின்றன.
(நெய்தற் கலி; ஆசிரியர் நல்லந்துவனார்; அந்துவன் = அப்பன்; இந்தக் காலத்தில் அப்பன் என்று எத்தனை பெயர்கள் முடிகின்றன; அது போல அந்துவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்தன் = தலைவன், பெரியவன், பெருமான். மலையாளத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரை அச்சன் என்று சொல்லுகிறார்களே, குமரியில் ஆசான் என்று சொல்லுகிறார் களே, அது போலப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தனர் = பெருமானர். அந்தனர்>அந்தணர் என்று ஆகும். ஆக அந்தனர் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். அது ஒரு குலத்தை, சாதியைச் சுட்டும் சொல் அல்ல. பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட இந்தச் சொல் பற்றி நிறையச் சொல்லலாம். எனினும் விடுக்கிறேன்.)
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்
நெய்தலில் காற்று அடித்துக் கொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாய் மணல் மேடுகள் மாற்றி மாற்றி ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த மணல் மேடுகளை எக்கர் என்று சொல்லுவார்கள். இந்த மணல் மேடுகளுக்கு அருகில் கடலோதக் கழி இருக்கிறது. கழியின் கரையில் இருக்கும் முள்ளியின் மலர் கருப்பு. மா நிறம் என்பது கரிய நிறம் தான். (அதே பொழுது மிகக் கருப்பு என்று பொருள் கொள்ளக் கூடாது.)
மாமலர் முண்டகம் என்பது அந்த முள்ளியைத் தான் குறிக்கிறது. கூடவே அருகில் தில்லை மரங்கள்இருக்கின்றன; முனிவன் சடை போலப் பூந்தளிர்கள் தொங்குகின்றன; கொஞ்சம் தள்ளினாற் போலக் கல்லால மரமும் (Ficus tomentosa) இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டில் அது நேரடியாகக் கூறப் படவில்லை. பொதுவாக, நெய்தற் கழியில், வறண்ட உதிர்புக் காடுகளில், பெரும் பாலும் பாறை விரிசல்களுக்கு நடுவில்) இருப்பது இயற்கையே.
கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லைமரமும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்தக் கடற்கரைச் சோலையில், மணல் மேட்டில், தோற்றம் எப்படித் தெரிகிறதாம்? சீர்மிகு சிறப்பினோன் உடகார்ந்திருப்பது போல் தெரிகிறதாம். "யார் அந்தச் சீர்மிகு சிறப்பினோன்?" பொதுவாகப் பார்த்தால் தென்னாட்டு முனிவன்; விதப்பாகப் பார்த்தால் "தக்கண முகத்தோன்". என்ன இது புதுச்சொல் என்று மருள வேண்டாம். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்கிறோம் அல்லவா? தக்கணத்தில் தோன்றியவன் தக்கண முகத்தோன். (தக்கு = தாழ்வு. இமைய மலையைப் பார்த்தால் நாவலந்தீவின் தென்பகுதி தாழ்ந்து கிடக்கிறது. தாழ்ந்து கிடக்கும் பகுதி, தக்கிக் கிடக்கும் பகுதி, தக்கணம் எனப்படுகிறது; மேலே கிடக்கும் மலையைப் பார்த்தால் கீழே கிடக்கும் பகுதி கிழக்குப் பகுதி ஆனது போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தக்கணம் என்ற சொல் தமிழ் தான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். முகத்தோன் = தோன்றியவன்; முகத்தோனை மூத்தோனாகிப் (மூத்தோர் என்பவர் நமக்கு முன்னால் தோன்றியவர் என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா?) பின் வேறு ஈற்றால் மூத்தி என்று சொல்லி, பின்னால் வடமொழிப் பலுக்கிற்காக, ரகரத்தை நுழைத்து மூர்த்தி ஆக்குவர். தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷ¢ணா மூர்த்தி ஆவார். நாம் அதன் தொடக்கமே தெரியாமல் மருளுவோம். தென்னாடுடைய சிவனுக்கு வடபுலத்துப் பெயரா இருக்கும்?) இந்தத் தக்கண மூத்தியின் மயிர்க்குழல்கள் நரை தட்டிப் போய் தில்லைப் பூந்தளிர் போலக் காட்சியளிக்கின்றன. முண்டக மலர் அவன் கண்டம் (கழுத்து) போலக் காட்சியளித்திருக்கலாம். மறுபடியும் தொண்டைக்குள் நஞ்சு என்ற உருவகத்தை இங்கு பொருத்திப் பாருங்கள்.
இவன் முனிவன் என்றால், இந்த முனிவனுக்கு அருகில் ஒரு குண்டிகை (கலசம் அல்லது செப்புக் கலம்) இருக்க வேண்டுமே? எங்கும் நாம் தேட வேண்டாம். கழியில் உள்ள வளைந்து கிடக்கும் தாழையின் பழம், குடம் எனத் தொங்குகிறது. தாழையின் வளைசலைக் குறிக்க, கொக்கின் கழுத்தையும் நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் உவமை சேர்க்கிறார். இந்த வரிகள் முழுக்க ஒரே உவமை மயம். ஆனாலும் காட்சி தெளிவாகப் புலப்படுகிறது. சொல்லுக்குள் சிவனை, தக்கண முகத்தனை, முழுதாகக் கொண்டுவந்து விடுகிறார் இந்தப் பாடலாசிரியர். "இப்பேர்ப்பட்ட துறைவனே! நான் சொல்லுவதைக் கேள்" என்று மேற்கொண்டு போகிறார்.
"தக்கண முகத்தோனை முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் தில்லையோடு தொடர்வுறுத்திப் பதிவு செய்த இடம்" நானறிந்த வரை இது தான். இந்த நெய்தற் கலிதான். அதுவரை அவன் "ஆல் அமர் செல்வன், நுதல்விழியோன், கொன்றை விரும்பி" இப்படித்தான் பலவாறாக சங்க இலக்கியங்களில் வழுத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த வெவ்வேறு தோற்றங்கள் என்ற கேள்வி நமக்குள் இனி அடுத்ததாக
எழும்.
இன்றைய மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் என்பது முன்னாளில் பெரும்புலியூர் தான் என்றாலும், சிவநெறி பற்றிக் குறித்தது இன்னொரு பெரும்புலியூராம். இந்தப் பெரும் புலியூரானது, திருவையாறு - கல்லணை, திருக்காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் தில்லைத் தானத்திற்கு வலப்புறமாகப் பிரியும் கிளைச் சாலையில் 4 கி.மீ சென்றால் இருக்கின்ற ஊர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
{பெரும்புலியூர்க் குழப்பத்தை மேலும் ஆய்ந்து, நான் தெளிவு பெற வேண்டும்.]
பெரும்பற்றப் புலியூரோடும், பெரும் புலியூரோடும் சேர்த்து காவிரியின் வடகரைப் பகுதியில் இருக்கும் இன்னொரு புலியூர் ஓமாம் புலியூர். (அது என்னமோ தெரியவில்லை எல்லாப் புலியூர்களும் காவிரிக்கு வடபாலே இருக்கின்றன. கொள்ளிடக் கரையில் ஓமாம் புலியூர் உள்ளது.] காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச் சாலை உள்ளது. இங்கு தக்கண மூத்தியாய் உமாதேவிக்கு ஓங்காரப் பொருளை இறைவன் உரைத்ததாய் ஒரு தொன்மம் இருக்கிறது. ஓமம் என்பது வேள்வி தான்; ஓமம் நடக்கின்ற, ஓமம் ஆகின்ற புலியூர் = ஓமம் ஆம் புலியூர். ஒமமாம் புலியூர் என்பது ஓமாம் புலியூர் என்று திரிந்திருக்கிறது.
இனி நடுநாட்டில் இருக்கும் புலியூர்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று கடலூரின் ஒரு பகுதியாய் இன்று இருக்கும் திருப்பாதிரிப் புலியூர். [வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. குழலி சட்டென்று சொன்னார். அது முற்றிலும் சரி. கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியது தான். கடையாழல் ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் > கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம். சிவனுக்கு வேண்டிய மரம். கடை என்பது கொல்லை என்பதைக் குறிக்கும்; புழைக்கடை என்று சொல்லுகிறோம் அல்லவா?] "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற அப்பர் பாடல் இங்கு தான் எழுந்தது. அப்பருக்குச் சிறப்பான தலம். சமணம் பெரிதும் ஓங்கி இருந்து பின் அழிந்த தலமும் இது தான்.
நடுநாட்டில் இன்னொரு புலியூர், எருக்கத்தம் புலியூர்; இன்றைய மக்கள் வழக்கில் இது இராசேந்திரப் பட்டணம் என்று அழைக்கப் படுகிறது. விருத்தாசலம் - செயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.
சென்னை - தஞ்சை நெடுஞ் சாலையில் சேத்தியாத் தோப்பை அடுத்து திரு முகிழ்நம் (ஸ்ரீ முஷ்ணம்) - விருத்தாசலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள ஊர். வெள்ளெருக்கம் இங்கு தல மரம்.
"வெள்ளெருக்கந் தலைமுடியான் வெப்பெடுத்த திருமேனி" என்ற பாடலை நினைவு கொள்ளுங்கள்.
இந்த ஐந்து புலியூர்களையும் இணைப்பது இறைவனின் தக்கண மூத்தித் தோற்றம். நரைத்த சடை (தில்லைப் பூந்தளிர், பாதிரிப் பூ, வெள்ளெருக்கம் பூ என எல்லாமே இதைக் குறிப்பது தான்.) இந்த ஐந்து புலியூர்களிலும் வேள்வி என்பது பெரிதாகப் பேசப்படுகிறது.
இவை போகத் தொண்டை நாட்டில் உள்ளதாகச் சென்னைக் கோடம்பாக்கத்தைப் பற்றி நண்பர்கள் கமலும், KVR-உம் தில்லை - 1 என்ற வலைப்பதிவுக்கு வந்த பின்னூட்டில் சொல்லியிருந்தார்கள். அது தொண்டைநாடு என்பதாலும், அங்கு பாடல் பெற்ற சிறப்பான சிவன் கோயில் இல்லாது போனதாலும், கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன்.
இறைவன் என்பவன் ஒருவன் தான்; ஆனாலும் அவனைப் பலவாறாக உருவகம் செய்து அழகு பார்ப்பது நாவலந்தீவில் பலருக்கும் உள்ள பழக்கம். சேயோனும், மாயோனும் இன்னபிற உருவகங்களும் ஒன்றுதான் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் சேயோனை நுணுகிப் பார்த்து ஒரு காலத்தில் அப்பன், மகன் என இருவராய் உருவகம் செய்வர்; பின் அவர்களின் தோற்றங்கள் பலவகை வடிவங்களைக் காட்டும்; கூடவே இன்னொரு ஆனைமுகன் வந்து சேருவான். கொற்றவை என்பவள் தாய் ஆவாள்; இது போல மாயோனும் பல்வேறு தோற்றரவுகள் (அவதாரங்கள்) கொள்ளுவான்; இப்படி எல்லாமே நம்மை ஈர்க்கும் பல்வேறு கருத்தீடுகள்; ஒன்றை, ஈராக, நாலாகப் பலவாக விதப்பிப் பரவுவது (பரவுதல் = to pray) தமிழரில் பலரும்
செய்யும் ஒன்று. அந்த வகையில் நடவரசன் என்று கருத்தீடு, தென்னாடுடைய சிவன் என்ற கருத்தீட்டில் இருந்து, களப்பிரர் காலத்திற்கு அப்புறம் உருவாக்கப் பட்டது என்றே ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இது எதில் இருந்து குறிப்பாக எழுந்தது என்னும் போது தான் தில்லை வனம்.
இன்றையக் கோயிலின் உள்ளே இருக்கும் மூலத் தானமும் [நடவரசன் பொன்னம்பலத்திற்கு வெளியே வடக்கில் (ஆனால் கிழக்குப் பார்த்தாற் போன்ற திருமுகம்) உள்ளது] நம் சிந்தனைக்கு வருகின்றன.
இறை பற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகளும் தான்.
இறை பற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகளும் தான்.
சிவச் சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம் : பதி - பசு - பாசம்), சரணாகுதி மெய்யியல் (விண்ணெறிச் சிந்தனை), அல்லிருமை [அத்வைதம் - குறிப்பாக மரபாளர்கள்(ஸ்மார்த்தர்) பின்பற்றுவது], இருமை (துவைதம் - மாத்வர்கள் பின்பற்றுவது), விதப்பு அல்லிருமை (விசிஷ்ட அத்வைதம் - பெரும்பாலான விண்ணவர்கள் பின்பற்றுவது) போன்ற புரிந்துணர்வுகள் எல்லாம் மிக நெடுங்காலம் தமிழர்கள் எண்ணிப் பார்க்காதவையே. அந்நாளில், சமயம் பற்றிய கேள்விகளைக் கொள்கை வழியாகக் கேட்கத் தொடங்கியவர்கள் உலகாய்தர்களே (உலகை ஆய்பவர்கள் உலகாய்தர்கள் = materialists, rationalists. பலரும் தவறாக லோகயுதர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆயுதம் என்பதும் ஆய்தல் என்பதும் வெவ்வேறானவை. ஆய்தல் = தேடுதல்) பின்னால் உலகாய்தச் சிந்தனையின் எழுச்சியில் கேள்வி கேட்கத் தொடங்கியவர்கள் சாங்கிய நெறியாளரும், விதப்பிய (விஷேசிஷம்) நெறியாளரும், ஆசீவக நெறியாளரும், செயின நெறியாளரும், புத்த நெறியாளரும் தான். இந்த மாற்றுச் சிந்தனையாளரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லும் முகத்தான் வடபுலத்தில் உபநிடதங்களும், மீமாஞ்சையும் (பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை) எழுந்தன. நம்மூரில் ஆகம வழி சாற்றங்கள் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) எழுந்தன (குறிப்பிடத் தக்க எடுத்துக் காட்டு திருமூலரின் திருமந்திரம்; இந்தக் கருத்துக்கள் முளைவடிவில் திருவாசகத்திலும் இருக்கின்றன.).
பொதுவாக நம்பா மதங்களின் எதிர்வினைகள் கி.மு.6ம் நூற்றாண்டில் மிகுந்து இருந்தது மகதப் பேரரசில் தான். தமிழகம் சற்று காலம் இந்த மெய்யியல் உரையாடல்களில் உள்நுழையாமல் தொய்வில் இருந்தது உண்மையே. இந்தக் கேள்விகள் கேட்பதற்கு முன்னால், வட புலத்தில் வேத நெறிப் பழக்கங்கள் இருந்தன; சடங்குகள் இருந்தன; கூட்டம் கூட்டமாக விலங்குகள் வேள்விகளுக்கு ஆகுதிகள் ஆக்கப் பட்டன. ஆனால் மெய்யியல் என்பது அப்போது ஏற்படவில்லை. என்னதான் இன்றைய வேத நெறிக் காரர்கள் காலத்தைக் குழப்பி உபநிடதங்களை முன்கொண்டு போக முயற்சித்தாலும், அவை பெரிதும் ஏற்பட்டது நம்பா மதங்களின் எதிர்வினைக்கு மறு மொழியாகவே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்பும் மதங்களை, நம்பா மதங்களும், மரபு எதிர்ப்பு மதங்களும் கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், அரசனையும் பொதுமக்களையும் தங்கள் பக்கம் பெருத்த அளவில் அணி திரட்டத் தொடங்கினார்கள். பேரரசுகளும், குடியரசுகளும் வேத நெறியில் இருந்து மாறத் தொடங்கின. இதனால், அதுவரை அரசச் சார்போடு இருந்த வேத நெறி பெரிதும் ஆடி போயிற்று. சாரி, சாரியாக வேத நெறியாளர்கள் இடம் பெயரத் தொடங்கினார்கள். இனி வேத நெறியாளர் தெற்கே வந்த வழியைப் பார்ப்போம்.
கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதுமாய் ஆட்கொள்ளவில்லை. அந்த மாநிலங்கள் எல்லாம் பெருங்காடுகளாய்த் தான் அன்று இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் மக்களின் நகர்ச்சியும், வணிகமும் நடந்தன. முகன்மையாக இருபாதைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகத்தில் (Rajgir) இருந்து பாடலி, வேசாலி, குசிநாரா, கபிலவத்து, சாவத்தி, அத்தினாபுரம், தக்கீலம் (= தக்கசீலம் = பெஷாவர்) வரை போகின்ற பாதைக்கு உத்தர பாதை என்று பெயர். இதே போல கிட்டத்தட்ட நேபாள எல்லையில் இருக்கும் சாவத்தியில் (saavatthi) இருந்து அயோத்தி, கோசம் (kosam), பில்சா (Bhilsa), விஞ்சை (Ujjain - உச்சயினி), எல்லோரா (இந்தப் பாதையில் இருந்து அசந்தா வெகு தொலைவு
இல்லை.) வழியாக கங்கை, தொழுனை (=யமுனை), நருமதை, தபதி ஆகிய ஆறுகளைக் கடந்து, கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானம் (prathisthana>paithan) வரை வந்து சேருவது தக்கணப் பாதை. (இந்தி, மற்றும் மராத்தியில் படித்தானம் என்பது பைத்தான் என்றே சொல்லப் பெறும்; வடமொழியில் இது பிரதித்தானம் ஆகும். இந்தக் கால அவுரங்காபாதிற்கு அருகில், கிட்டத்தட்ட 50 கி.மீ.யில் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஊர் படித்தானம். சிலம்பில் வரும் நூற்றுவர் கன்னர் - சதகர்ணி - களின் தலைநகர். இன்றைக்கும் சுற்றுலா முறையில் அவுரங்க பாத், தவளகிரி, பைத்தான், எல்லோரா, அசந்தா போன்றவற்றை பார்ப்பது நன்றாக இருக்கும்.)
இது தவிர கங்கைக் கரையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசியின் வழி கோசத்தை அடைய முடியும். இதே போல இன்னொரு நீட்சி, தெற்கே படித்தானத்திற்கு நேர் மேற்கே இருக்கும் துறைமுகமான சோபாரா. [இன்றைய மும்பைக்கு மிக நெருக்கமாய்ச் சற்று வடக்கே வந்து சேரும்.

சோபாராவுக்குச் சற்று முன்னே வட மும்பையில் இருப்பது கன்னேரிக் குகைகள்.] மகதத்தின் துறைமுகங்களில் சோபாராவும், நருமதையின் புகர் முகத்தில் இருக்கின்ற பாருகச்சையும் (Bhaarukaccha>Broach) முகன்மையானவை. நாவலந்தீவின் வடபுல அரசியல், வணிக, பண்பாடு, கலை, மொழி மற்றும் மெய்யியல் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மேலே சொன்ன இரு பெரிய பாதைகளையும், பாடலியில் இருந்து வாரணசி போகும் சிறு தொலைவையும், படித்தானத்தில் இருந்து கடல்நோக்கி சோபாரா / பாருகச்சை செல்லும் வழியையும் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். படித்தானத்தின் முகன்மை நமக்கும் பெரிது தான். நம் சிலப்பதிகாரத்திலும் நூற்றுவர் கன்னரைப் பார்த்து, உதவி பெற்றுச் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்றதும் முடிவில் கங்கையின் தென்கரையை முட்டியதும் தக்கணப் பாதை வழியே தான்.
மகதமும், அதைச் சுற்றியுள்ளவர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வேத நெறியில் இருந்து மற்ற நெறிகளுக்கு மாறியதால், வேத நெறியாளர் பலரும் தக்கண பதம் (தெற்குப் பாதை) வழியாக தக்கணம் வரத் தொடங்கினார்கள். தென்னகத்திற்குள் வேத நெறியாளர் படித்தானம் வழியாகத் தான் நுழைந்தனர். (படித்தானத்திற்கு அருகில் சிலகாலம் தங்கி வாழ்க்கையைக் கழித்த காரணமாகத் தான், கங்கைக்கு அடுத்து கோதாவரி நம்மூர்ப் பெருமானர்களின் பரவுதலில் நிறைந்திருக்கும். கோதாவரியும் அவர்களால் மிகப் புனிதமான ஆறாகக் கொள்ளப் படும். இன்றைக்கும் வேத நெறியாளர்களின் பெண்களின் புடவைக் கட்டு, மாராட்டியக் கட்டிற்கு ஒப்பாகத்தான் அமைந்திருக்கும். படித்தானத்திற்கு அருகில் ஓரிரு நூற்றாண்டுகளாவது தங்கியிருந் திருக்க வேண்டும். விசுவாமித்திரர் கதை, பரசுராமர் கதை, சுக்கிராச்சாரியர் கதை, அகத்தியர் தெற்கே மக்களைக் கூட்டி வந்த கதை போன்றவை, வேத நெறியாளர் தக்கணத்திற்கு வந்து சேர்ந்து தென்குமுகாயத்தில் ஒன்று கலந்த செய்திகளைத் தொன்மங்கள் வழியாக உறுதி செய்கின்றன.)
படித்தானத்தில் இருந்து கருநாடக மாநிலம் (கடம்பர்களின் அரசு - முதல் அரசன் மயூர சன்மன்; இவனே நம்பூதிகளைத் தெற்கே கொண்டுவர உறுதுணையாக இருந்தவன்.) வழியாகத் தகடூர் வந்து சேரும் பாதையையும், தகடூரில் இருந்து காஞ்சி வரும் பாதையையும், அதே போலத் தகடூரில் இருந்து கரூர் வரும் பாதைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரை தொடங்கும் போதே தயங்கித் தயங்கித் தான் எழுதத் தொடங்கினேன். படிப்பவர்கள் தயவு செய்து சொல்லும் பொருளைத் தவறாகப் புரிந்து திசை திருப்பாமல், பொதுநலம் நோக்கிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் சொன்னது போல பெருமானர்கள் மூன்று பெரும் அலையாய் தக்கணத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்களின் உட்பிரிவுகளும் தமிழர் வரலாற்றைப் புரிந்து கொள்ளத் தேவையானவையே.
பெருமானர்களின் மூன்று அலைகளைப் பற்றியும், தக்கண மூத்தி என்னும் கருத்தீடு, ஆடலரசனாய் மாறியிருக்கக் கூடிய வாய்ப்பையும் இனி அடுத்துப் பார்ப்போம்.
பெருமாள் கோயிலுக்குப் போகிறோம்; மாயவனைச் சேவித்த பின்னால், அங்குள்ள பட்டர், நாம் குனிந்து ஏற்றுக் கொள்ள, சடாரியையை நம் தலையில் வைக்கிறார்; பின்னர் துழாயும், நீரும் தருகிறார். நீரை என்ன செய்கிறோம்? கொஞ்சம் போல வாய்க்குள் குடித்து விட்டு, மிஞ்சியதை நாமே நம் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம். சிவன் கோயிலுக்குப் போனாலும், அங்கே சிலபோது கொடுக்கும் திருநீரை (தெளிநீர் = ஆராதனை செய்யப்பட்ட தூய்மையான நீர்) தலையில் தெளித்துக் கொள்ளுவது உண்டு. (சிவனை முழுக்கு விழைந்தோன் - அபிஷேகப் பிரியன் - என்று கூடச் சொல்லுவார்கள்.) சிவன் கோயிலில் ஏன் இப்படித் திரு நீர் (திரு நீறு அல்ல) போன்றவற்றைத் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம் என்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா?
வீட்டில் பூசை செய்கிறோம். பூசை முடிவதற்குச் சற்று முன்னால், இறைப் படிமத்திற்கு முன் வைத்திருந்த பூசை நீரை நம் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம். அது ஏன்?
கோயில் குட முழுக்கு நடக்கிறது; கும்பத்தில் சொரிந்தது போக மீந்த தெளிநீரை, குருக்கள் மேலே கோபுரத்தில் இருந்த வாக்கில் தெளிக்கிறார். கூட்டம் அந்தத் துளிகள் தம் மேல் படாதா என்று முட்டி, மோதி, வாங்கிக் கொள்ளப் பார்க்கிறது. அது என்ன அந்தத் தெளிநீரைத் தம்மேல் பெற்றுக் கொள்ள அவ்வளவு முனைப்பு?
இப்படி வழிபாடு ஒட்டிய பல நிகழ்வுகளில் நீருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?
இந்தக் கால வேத - ஆகமக் கலவை நெறியில் (இதை இந்து மதம், சனாதன தருமம் என்றே பலர் சொல்லுகிறார்கள்; நான் வேதாகம நெறி என்றே சொல்ல விழைகிறேன்.), வேத நெறிப் பழக்கங்களும், ஆகம நெறிப் பழக்கங்களும் பிரித்துப் பார்க்க இயலாத வகையில், பின்னிப் பிணைந்து, கிடக்கின்றன. எவை ஆகம நெறியில் இருந்து வந்த பழக்கங்கள், எவை வேத நெறியின் வழி வந்தன என்று நாம் அடையாளம் காண முடியும் என்றாலும், முற்றிலும் செய்வது சரவல் தான்.
பொதுவாக (வேத நெறி மதங்களுக்கு மாறாக இருக்கும்) சிவநெறி, விண்ணெறி போன்ற ஆகம வழி மதங்களில் நீருக்கு மேலான உரிமை கொடுப்பார்கள். ஆனால், ஊற்றுகை (original) வேத நெறிக்காரர்களோ, தெய்வத்திற்குப் படைக்க வேண்டும் என்றால், வேள்விக் குண்டத்தில் "ஆகுதி" யாகப் போட்டு விடுவார்கள். (இன்றைய மரபாளர்களில் - ஸ்மார்த்தர்களில் - ஊற்றுகை வேத நெறிக் காரர்களாய் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. பலரும் ஏதோ ஒரு கலவை நெறியைத்தான் பின் பற்றுகிறார்கள். பழம் போக்கில் பார்த்தால், ஊற்றுகை மரபாளர்கள் சிவன் கோயில், விண்ணவன்
கோயில் என எந்தக் கோயிலுக்குள்ளும் வர மாட்டார்கள். இவர்கள் உத்தர மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்கள்; கேரளத்து நம்பூதிகள் பூருவ மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்கள்.) (ஆகுதி = ஆகியது, ஆகிப் போனது = ஹோ கயா; வேறு எந்தப் பொருட்பாடும் இதற்கு இல்லை. துருவித் துருவி வடமொழிக்குள் அருத்தம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.) நெருப்பு என்னும் இடையாளி, நாம் வேண்டும் தெய்வத்திடம் அதைக் கொண்டு செல்வதாக வேதக்காரர்கள் விளக்கம் சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாமே நெருப்புத் தான். நெருப்பே எல்லாவற்றையும் தூய்மை செய்கிறது என்பது அவர்களின் புரிதல்.

ஐம்பூதங்களில் நெருப்புக்குக் கொடுக்கும் முதன்மை வேத நெறிக்கே உள்ளது.
ஆகம நெறியிலோ, நெருப்போடு மற்ற பூதங்களும் வழிபாட்டில் புகுந்து வரும். ஐம்பூதங்களையும் விடாமல் அவர்கள் வழிபாட்டில் கொண்டு வருவார்கள். குறிப்பாக நீர் என்னும் பூதம். ஒரு படையல் செய்தால் அதைத் தெய்வப் படிமத்தின் முன்னே காட்டி கொஞ்சமாய் நீரைத் தெளித்து வைத்து விடுவார்கள். நாம் விழையும் அந்தத் தெய்வம் நம் ஈடுபாட்டைப் பார்த்து அதை மனப் பூருவமாய் எடுத்துக் கொள்ளுவதாய் ஆகமக் காரர்களுக்கு ஓர் ஐதீகம். பிறகு அந்தப் படையலை பத்தர்கள் (ஒன்றைப் பற்றி நிற்பவர்கள் பற்றர்கள்> பத்தர்கள்> பக்தர்கள். இந்தச் சொல்லின் தமிழ்வேரைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது போல இது இறைப் பற்று.) எல்லோரும் பங்கு போட்டுக் கொள்ளுவார்கள்.
கருப்பர் சாமிக்கு ஆடு வெட்டினாலும் கூட ஆட்டைப் பலிபீடத்திற்கு (பலி பீடங்கள் உண்மை யிலேயே நம் கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதற்குத் தான் இருந்தன. இன்றைக்குச் சில கோயில்களில் கால மாற்றத்தால், விலங்குகளைப் பலியிட வேண்டாம் என்ற எண்ணத்தால் உந்தப் பட்டு, சோற்றையும், மற்றவற்றையும் வைத்துப் "பலி" தருகிறோம்; அவ்வளவு தான். சில நாட்டுப் புறக் கோயில்களில் இன்றைக்கும் விலங்குகளைப் பலிகொடுக்கும் பழக்கம் உண்டு.) முன் கொண்டு வந்து காட்டி சற்று நீரைத் தெளித்து அது சிலிர்த்துக் கொண்டவுடன், பலி கொடுப்பார்கள். பலிகொடுத்த விலங்குக் கறியை பின் வெட்டி வேகவைத்து, கூடவே கூட்டாஞ்சோறும் வடித்துக் கருப்பருக்கோ, சூலாயுதத்தின் முன்னோ, படையல் செய்து, பின் படையல் கொடுத்த எல்லோருமாய்ப் பங்குபோட்டுச் சாப்பிடுவார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளியும் சென்னைக்கு வடமேற்கே, பெரிய பாளையத்தில், ஆரணி ஆற்றுப் படுகையில், கிடா வெட்டிப் பவானி அம்மனுக்குப் பலியிட்டுக் கூடியாக்கி உண்ணும் காட்சி பரவலாக நடப்பது தான். [கூட்டம் கொள்ளாது; ஒரு தடவை போய்ப் பாருங்கள். நாட்டாரியல் பழக்கங்கள், பண்பாடுகள் என்ன, என்று விளங்கும். பெருமானப் பழக்கம் (braminized practices) இல்லாத கோயில்கள் நாளாவட்டத்தில் பெருமான ஆக்கத்துள் வந்து சேருகின்ற நடைமுறைகளைக் காணலாம். திருவேற்காடும், மாங்காடும் இப்படியாக முழுதும் மாறி விட்டன. பெரிய பாளையம் மிக விரைவில் மாறிக் கொண்டிருக்கிறது. கிடா வெட்டுவது
இப்பொழுது கோயிலுக்கு வெளியில் வெகு தொலைவில் தான்; இன்னும் சிறிது நாளில் இந்தப் பழக்கம் நின்றே போகக் கூடும். யாருக்குத் தெரியும்?] அது ஏன் ஆட்டின் மேல் நீரைத் தெளிக்கிறார்கள்? (ஒரு சிலர் குறும்புத் தனமாய் ஆட்டின் ஒப்புதல் கேட்பதற்காக தண்ணீர் தெளிப்பதாகச் சொல்லுவார்கள்.
வேறொன்றும் இல்லை; இறை வழிபாட்டில், ஆராதனை (ஆலுதல் = மேலும் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றுதல்; தீவம், நீர், இன்னும் மற்ற பொருட்களை இப்படித்தான் இறைப்படிமம் முன்னால் வட்டமாய்ச் சுற்றிக் காட்டுகிறோம். ஆலாதனை>ஆராதனை ஆகும். இசைக் கச்சேரியில் ஆலாவனை செய்பவரும் இப்படி ஏற்றி இறக்கி வட்டமாய்ச் சுரங்களைப் பாடுகிறார். கோயில்களில் நாம் கருவறையைச் சுற்றிவரும் வழி சுற்றாலை - சுற்றும் வட்டம் - ப்ரகாரம் - எனப்படும்.) செய்யப் பட்ட நீரைத் தெளித்தால், அது இறைவனுக்கு நேர்ந்து கொண்டதாக அருத்தமாம். அவன் அருளுக்கு நாம் ஆளாகி விடுகிறோமாம்.
இறைப்பணியில் ஈடுபடும் போது, நீர் தெளிப்பது என்பது ஒரு குறியீடு. சில போது, எதற்கும் ஒப்பாமல், விட்டேற்றியாக இருப்பவரைப் பார்த்து "அவரைத் தெளிச்சுவிட்டாச்சுப்பா?" என்று சொல்லுகிறோம் அல்லவா? அதன் உட்பொருளைக் கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.
இறைமையை ஒட்டி ஒரு பொருளுக்குப் புனிதம் கற்பிக்க நீர் தெளிப்பது முழுக்க முழுக்கத் தென்னாட்டுப் பழக்கம். [இன்றைக்கு வடபுலத்திலும் இது பரவிக் கொண்டு வருகிறது. காட்டாக வடநாட்டு இலிங்கங்களின் மேல் இடைவிடாது நீர் ஒழுகிக் கொண்டு இருப்பதாக வைத்திருப்பார்கள்.] கோயிலுக்கு அருகில் குளம் வெட்டுவது, கோயில் குளத்தில் முழுகி எழுந்திருப்பது, நீரில் குளித்துப் பின் சாமியைக் கும்பிடுவது, ஈரத்தோடு கோயிலுக்குள் போவது, என இறை வழிபாட்டில் நீருக்கு நாம் மிகவும் முகன்மை கொடுப்போம்.
நீரின் குணங்கள் பல. நீருக்கு அமைந்த பெயர்ச் சொற்களும் கூட ஒவ்வொரு குணத்தால் தான் அமைந்தன.
காட்டாக, நீர் என்ற சொல் ஈர்க்கின்ற குணத்தால், ஈரம் என்ற சொல்லின் நீட்சியாய் ஏற்பட்ட சொல். (இதே போலப் பல குணங்களால் எழுந்த நீர்ப்பெயர்களைச் சொன்னால் நான் சொல்ல இங்கு வருவது தவறிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.) ஒரே ஒரு விலக்காய், நீரின் இன்னொரு குணத்தால் ஏற்பட்ட சொல்லை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.
நீரின் மேற்பரப்பு என்பது ஏனத்தின் வடிவத்திற்குத் தகுந்தாற் போல் உருவம் கொள்ளும்; தவிர அது மேலே ஏற்படும் அசைவிற்குத் தக்கவும் துள்ளும்; துள்ளல் கூடினால் தளும்பும்; பின் தெறிக்கும். துள்ளுவது என்பது குதிப்பது. துள்ளும் போது துள்ளித்ததால், பரப்புத் தந்த விசையால் (பரப்புத் தந்தம் = surface tension; தந்து = நூல், கயிறு. தந்தித்தல் = நூற்றல்; நூற்கும் போது கொடுக்கும் இழுவிசையைத் தந்த விசை - tensile force - என்கிறோம். tensile force என்பதை மிக எளிதாகத் தந்த விசை என்று கூறலாம். compressive force = அமுக்கு விசை.) நீரைத் தெளிக்கும் போது பல்வேறு பரப்பு விசை, ஈர்ப்பு விசைகளால் அது துளியாகிப் போகும். துள்ளுவதில் இருந்து துளி பிறக்கும் கதை இது தான்.
துள்ளுவது தளும்புவதற்கும், பின் தொள தொளப்பதற்கும் வழி வகுக்கும். தந்த விசை கூடக் கூட இழுபடும் கம்பி, நூல், இன்னும் இது போன்றவை, தொளுங்கிப் போகும். எப்படி நெகிழ்வது நீளுதற்குக் காரணம் ஆகுமோ, அதே போல தொள்ளுவதும் இந்த தந்த விசையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுவது தான். துளித்தம்>தெளித்தம் என்ற ஆக்கம் ஒரு இருபிறப்பிச் சொல். துளிக்கக் கூடிய பொருள் என்று பொருள்.
துளுத்தம்>தூள்த்தம்>தூத்தம் என்று பலுக்கப் படும். பொத்தகம் புஸ்தகம் ஆனது போல், மீத் திருத்தத்தில் (hyper correction)அது தூத்தம்>தீத்தம்>தீர்த்தம் என்று ஆகும்
தெளிப்பது என்பது பிறவினை; தெறிப்பது என்பது தன்வினை. (தெறி என்பதன் வேர் துல்>துறு> தெறு என்றும், தெளி என்பதன் வேர் துல்>துள்>தெள்>தெளி என்றும் விரியும்.) இப்படித் துண்டு துண்டாகப் பிரிவுதும், பின் பிரிந்தவை கூடி பெரியதாய் ஆவதும் நீருக்கும், நீரைப் போன்ற நீர்மங்களுக்கும் உள்ள குணம்.
இன்றைக்குத் தீர்த்தம் என்றால் தான் பலருக்கும் புரிகிறது. அதன் தமிழ் ஆழம் முற்றிலும் புரிபடாமல் போகிறது. வேத நெறியில் தெளிக்கின்ற பழக்கமே கிடையாத போது, தெளித்தம்>தீர்த்தம் என்று அல்லாது, வேறு எப்படித் தீர்த்தம் என்ற சொல் தோன்றியிருக்க முடியும்?
தீர்த்தம் கிடைத்தால் இறைவனின் அருள் பெற்றவராய், அவன் பணியில் இணைகிறவராய் ஆகிவிடுவதாய், நம்மூர்த் தொன்மம் நவில்கிறது. எனவே consecrete பண்ன வேண்டுமானால், (மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலியில் வெறுமே consecrete என்று மட்டுமே போட்டிருக்கும். அதன் மரபுவழித் தொடக்கங்கள் தென்னாட்டில் அல்லது இந்த நாவலந்தீவில் எங்கணும் கிடையாது.) தெளித்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆகம வழியில், எல்லாச் சடங்குகளிலும் தெளிப்பது இல்லாமல் இல்லை. ஒரு குருவிடம் மாணக்கன் படிப்பு முடிந்தவுடன் தெளிவிக்கப் பெற்று (இங்கே உள்ள இரண்டு பொருட்பாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.) தெளிவிக்கை (தீக்ஷை) பெறுகிறான். தெளிவிக்கப் பட்டவன் தீக்ஷிதன் ஆகிறான். தெளிவித்த பின்னால் தான் எல்லாச் சடங்கும் உரைகளும் முற்று முழுதாகின்றன.
தீர்க்கம் என்ற சொல்லிற்கு "முற்று முடிவு" என்ற பொருள் சடங்குகளை ஒட்டியே எழுந்தது. (கவனிக்க: தீர்க்க சந்தி, தீர்க்க விராமம் என்ற வடமொழிச் சொற்கள்.)
இவ்வளவு தூரம் தீர்த்தம் பற்றிச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. தீக்ஷிதர்கள் என்பவர்கள் வேத நெறியையும் ஆகம நெறியையும் கலந்த சமய நெறியில் உருவானவர்கள். அந்தக் கலவை வடபுலத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது தென்புலத்தில் எல்லை நகரான படித்தானத்தில் உருவாகி இருக்கலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அதன் வளர்ச்சியின் உச்ச கட்டம் தில்லையில் தான். அந்த வளர்ச்சியின் முகடு (mode) நடவரசன் என்ற கருத்தீடு ....... நாம் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும்.
"தென்னாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை, குறிப்பாகத் தில்லையில் பலரும் கூறும் வாசகத்தின் உட்பொருளைப் பார்த்தால், "அது என்ன, எந்நாட்டவர்க்கும்? யார் அந்த எந் நாட்டவர்?" என்ற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறது. இதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.
அன்புடன்,
இராம.கி.
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...