தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!!

சங்க காலத் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பில் மிதந்தார்கள் என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன. நூற்றுக் கணக்கான பாடல்களில் பொன்னும் மணியும் (இரத்தினங்கள்) பேசப்படுகின்றன.

அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.

யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.

வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.

முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.

ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.

இரத்தினக் கேடயம்

மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்

பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்

-அகம் 369, நக்கீரர்


யானக்கு தங்கச் சங்கிலி

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்

யானைபிணித்த பொன்புனை கயிற்றின்

-ஐங்குறு - 356

காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).


வயிரக் குறடு
வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி

-புறம் 365 - மார்க்கண்டேயனார்

முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.

இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை

நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுத்தா உதிர

-நற்றிண 249 - உலோச்சனார்


இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.


பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:

திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்

வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர

-ப.பத் 16

முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்

வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி

- கலி 40


சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.


பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்

விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்

புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்

உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற

-நற்றிண 110 - போதனார்


தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.

ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.

1 மறுமொழிகள்:

vin சொல்வது...

உங்கள் உழைப்பிற்க்கு நன்றி