இப்போது புத்தகத்தைப் பற்றி:

விடுதலை ஆப்செட் ப்ரிண்டர்ஸ் வெளியீடான இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப் பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் அதே உயிர்ப்புடன் மாறாமல் இருப்பது தான் வேதனை.
`
கற்பு என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது நூல். கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக இல்லாமல் வெறும் பெண்ணுடைமையாக்கப் பட்ட விதத்தின் சுலபமான விளக்கம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தெய்வத் திருமறை என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளும் இந்த விசயத்தில் சறுக்குவதைப் படிக்கும் போது, ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் ஊட்டப்பட்டு வந்த பெண்ணடிமைச் சிந்தனைகளைத் தாண்டி இந்த இராமசாமிப் பெரியாரால் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்க முடிந்தது என்ற எண்ணம் எழுந்தது. முதல் அத்தியாயத்தில் சும்மா கோடிக் காட்டும் பெரியார், அடுத்தடுத்த அத்தியாயங்களில், வள்ளுவரைக் கிட்டத்தட்ட துவைத்துக் காயப் போட்டு விடுகிறார்.
`
வள்ளுவர் இன்றைக்கு இருந்து இதைப் படித்தால், உலகப் பொதுமறையிலும் மூன்றில் ஒரு பாகத்தை வாசுகி அம்மையாரை எழுதச் சொல்லி இருப்பார் என்பது திண்ணம்.
`

வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்
- பெரியார்
`
கற்பின் இலக்கணத்தைக் காலிசெய்தபின்னர், காதலையும் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாக்கி விடுகிறார். இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் பெரியாரின் இந்த அத்தியாயத்திலிருந்து தான் கருத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்குமளவு, நடைமுறையில் காதல் எப்படி ஒரே ஆணுக்கும் ஒரே பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவதில்லை என்ற விளக்கத்தை மறுக்க ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.
`
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் 'கற்பு பெண்ணடிமை அடையாளம், காதல் வெறும் ஆசை, என்றானால், கல்யாணத்தை மட்டும் எதற்குப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?'என்று பெரியார் கேட்பது பதிலில்லாத கேள்வியாகிவிடுகிறது. பிடிக்காத திருமண பந்தத்தை உதறிவிட்டு வெளியேற வேண்டிய அவசியத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வைக்கிறார் பெரியார். இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை "வாழாவெட்டி",போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தி யிருக்கிறது. கௌதம புத்தர், மரணத்துக்குச் சொன்னது போல் குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒரு விவாகரத்தாவது இல்லாத வீடுகள் இன்னும் சில நாட்களில் நிச்சயம் அரிதாகிவிடும்.
`
விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட. எங்கேயோ அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை 'அவள் விகடன்' முதலான பத்திரிக்கைகள் பேட்டி கண்டு பிரசுரித்து பாராட்ட வேண்டிய அளவில் தான் இன்றைக்கு மறுமணம் பார்க்கப்படுகிறது. அது போன்ற பேட்டிகளிலும் கூட அந்தப் பெண் நிச்சயமாக "இவர் ரொம்ப நல்லவர்.. பெரிய மனசு இவருக்கு. என்னையும் குழந்தையையும் ரொம்ப சந்தோஷமா வச்சிக்கிறார்" என்ற சொற்களைச் சொல்லியிருப்பார், அல்லது, சொல்லாவிட்டாலும் எழுதி இருப்பார்கள். கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச் சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப் பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்?
`
சமுதாயத்தைச் சீரழிப்பதில் இன்றைய பெண்கள் பெயர் தாங்கிய சீரியல்கள் அடுத்த குற்றவாளிகள். ஊரெல்லாம் சுத்தி, வியாபாரம் செய்யும் அபி, மறுமணம் செய்யாமலேயே கஷ்டப்படுவாளாம், அவள் முன்னாள் கணவன் பாஸ்கர் சுலபமாகத் திருமணம் செய்து கொண்டு விடுவானாம்(கோலங்கள்)!
`
விதவைகள் எண்ணிக்கை இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில் குறைந்திருந்தாலும்,குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிட்டாலும் இருக்கிற விதவைகளின் நிலை மட்டும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இன்றும் பெரிதும் மாறாமல் இருந்திருக்கிறது, என்பதை திருவின் இந்தக் கட்டுரையிலும் காணலாம்.
`
இன்றைய நிலையில் பெண்களின் சொத்துரிமை ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறது, இந்த விஷயத்தில் கொடுமைக்கார மாமியார்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாக வேண்டும். அப்படியும் சில படிப்பறிவில்லாத பெண்களை ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்ட பெண்களும், சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து ஏமாறுவது மற்றொரு விதம். இவை எல்லாம் தவிர பல்வேறு சட்டங்களின் மூலம் பெண்கள் பெற்றோர் சொத்தில் உரிமை பெறுவது இன்றைக்கு நடக்கக்கூடியதாகவே இருக்கிறது.
`
விடுதலை பெற்ற இந்தியாவில் அமலுக்கு வந்தக் கர்ப்பத்தடை பற்றியும் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பேசி இருக்கிறார் பெரியார். "நான் உழைக்கிறதெல்லாம் இந்தக் குழந்தைக்காகத் தான்", "இந்தப் புள்ளைங்க இருக்குதேன்னு தான் எல்லா அவமானத்தையும் பொறுத்துப் போறேன்" என்பன போன்ற சீரியல், சினிமா டயலாக்குகளை எல்லாம் தூள் தூளாக்கி, "அவமானத்தை உண்டு பண்ணும் பிள்ளைகளை எதுக்குப் பெத்துக்கிறீங்க?" என்று ஒரே போடாகப் போடுகிறார். குழந்தைகள் என்றிருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தானே உருவாகிறது, அதெல்லாம் எதுக்கு? என்று அவர் கேட்கும் போது, சும்மாவேனும் சண்டை போட சாக்கு தேடி குழந்தைகளின் மீது சுமத்திக் கொள்ளும் கணவன் மனைவிக்கு நல்ல இடி தான்.
`
இறுதியாக, இந்தப் புத்தகத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த அத்தியாமுமான விபச்சாரம் பற்றிப் பேச வரும்போது, தமிழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே. இன்றைக்குக் 'கண்ணியத்துக்கும்' 'மரியாதைக்கும்' கட்டுப்பட்டு மனதால் மட்டும் விபச்சாரம் செய்யும் ஆண் விபச்சாரிகள் இல்லையா என்ன?
`
குடித்துவிட்டு ரோட்டில் மனைவியைப் போட்டு அடித்துக் கொண்டிருந்த ஒரு புருஷன், தன் குற்றங்களை முன்வைத்ததற்காக, "ஏண்டீ தே..." என்று திட்டியதைப் பார்த்தபின், ஆண்களின் மிகக் கேவலமான ஆயுதமாக இன்றும் அந்தச் சொல் இருப்பது அழிக்க முடியாத உண்மையாக இருக்கிறது!
`
இன்று தொழிற்நுட்ப வல்லுனர்களான, இணையத்தில் திட்டும் படித்தவர்கள் கூட, திட்டு வாங்குபவனின் தாயாரை/மனைவியைத் தானே இந்த வார்த்தைகள் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்பாவையோ அல்லது எதிரியையோ நேரடியாக 'விபச்சாரன்' என்று திட்டவேண்டியது தானே!
`
'எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது' என்ற சொற்கள் உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே புரிந்துவிட்டது. இருந்தாலும் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகத்தில் தன் தங்கை மகளான ஒரு இளம் விதவைக்குத் திருமணம் செய்து வைத்து வெறும் வாய்ச்சொல் வீரர் ஆகாமல் செயலிலும் காட்டிய பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம். பெண்விடுதலை பற்றி யாருமே யோசிக்காத, யோசிக்கவும் தயங்கிய காலத்தில் இப்படியெல்லாம் யோசிக்கும் எண்ணம் ஒருவனுக்கு உண்டானதென்றால், அந்த மனிதரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும்!
`
நன்றி: முத்தமிழ் கூகுள் குழுமம்.