நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் -- முகில்

பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது. பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப் படுத்தியுள்ளனர்.ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததின் விளைவாய் கற்றுக் கொண்ட மொழி,கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர். உணவு, உடை,திருமணம் செய்கிற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, ருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்.
பண்பாடுகளை வெகுஜனப் பண்பாடு, செவ்வியல் பண்பாடு, மற்றும் நாட்டார்பண்பாடு என்று பிரித்துப் பார்க்கிற முறைமை ஆய்வாளர்களால்முன்வைக்கப்படுகிறது. ஒரே பண்பாடுள்ள மக்கள் குழுவை நாட்டார் என்றுஅழைக்கிறார்கள். இவர்களிடம் புழங்குகிற அல்லது புழங்கிய பாடல்கள், நிகழ் கலைகள், வாய்மொழி இலக்கியங்கள், பழமொழிகள், சொலவடைகள், நாட்டார் தெய்வங்கள், சடங்குகள் போன்றவற்றை உற்று நோக்குவதன் மூலம் தமிழர் வாழ்வியலின் அடிப்படை அடையாளங்கள் சிலவற்றையும் நம்மால் கண்டு கொள்ள முடியும். 'ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல்' என்று அழைக்கப்படும் வாய்மொழி இலக்கியங்களில் மக்களின் ஏக்கங்கள்,எதிர்பார்ப்புகள், கோபங்கள்... எல்லாம் பட்டுத் தெறிக்கின்றன.


பத்துகாணி நஞ்ச புஞ்ச இங்க இருக்க
பண்ருட்டிக்கி போனானாம் ஒண்ணுக்கிருக்க

வாய்த்திருக்கிற சூழலில் வாழத் தெரிய வேண்டும். அதை விட்டுவிட்டு வேறுஇடம் போவது ஏற்புடையதல்ல என்பதைக் கிண்டலாகச் சொல்கிற வாய்மொழி இலக்கியம்இது.

கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுந்தம் போனானாம்.

அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு அருவாளாம்

புள்ள தெரத்த பேலவுட்டுப் பாத்தா
புல்ல புடிச்சிகிட்டு தர்ருபுர்ருங்குதாம்


போன்ற சொலவடைகளும் இதே மதிப்பீட்டை வெவ்வேறு வார்த்தைகளில் பதிவுசெய்துள்ளன. காலம்காலமாய் சொல்லப்படுவதைப் பழமொழி என்கிறார்கள்.

போன்ற சொலவடைகளும் இதே மதிப்பீட்டை வெவ்வேறு வார்த்தைகளில் பதிவுசெய்துள்ளன. காலம் காலமாய் சொல்லப் படுவதைப் பழமொழி என்கிறார்கள்.

இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. வளரும் வயதிலேயே நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அது காலத்துக்கும் நின்று நிலைக்கும் என்ற எதிர்பார்ப்பு இதில் வெளிப்படுகிறது.

நடு ஏரியில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட

சம்மந்தமில்லாதவற்றில் தலையிட்டால் கேடு வந்து சேரும் என்பதை அழகாகச் சொல்கிறது இந்தச் சொலவடை.

தாலாட்டுப் பாடல், ஒப்பாரிப் பாடல், நலுங்குப் பாடல், நடவுப் பாடல், விளையாட்டுப் பாடல், வண்டிக்காரன் பாடல், கும்மிப் பாடல், ஒயில் பாடல்,வாழ்த்துப் பாடல், பிரச்சனைப் பாடல்... இப்படி பலவகைப் பாடல்கள் இருக்கின்றன.

கொம்பூதிக் கொட்டடிச்சி குனிஞ்சி கும்மியடிப்போம்
கொலவ போட்டு பாட்டுப் பாடி ஒயிலாட்டம் நடிப்போம்.
நம்மூரு அய்யனாருக்கு அர்ச்சன பண்ணப் போவோம்
எல்லா பேரும் நல்லாருக்க ஏகவிரதம் இருப்போம்


ஒயில் பாடலில் மகிழ்ச்சி மட்டும் பொங்க வில்லை; எல்லோரும் நல்லாயிருக்க வேண்டுமென்ற ஆசையும் பொங்கி வழிகிறது. நாட்டார் கலைகளின் சிறப்புகளில் ஒன்று கூட்டாக நிகழ்த்தப் படுவதாகும். அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாஷைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் பாங்கைக் கீழ்க்கண்ட கும்மிப்பாடலில் காணலாம்:


கத்தரிக்கா அண்ணாவே
கூடையில அண்ணாவே
கொண்டுவந்தேன் அண்ணாவே
ஓம்பந்தலுக்கு அண்ணாவே
எனக்குன்னுதான் அண்ணாவே
பொறந்த பொண்ண அண்ணாவே
எதிராளிக்கி அண்ணாவே,
நீதரலாமோ அண்ணாவே,
நீ தாரும் நல்ல அண்ணாவே,
பணமும் சரி அண்ணாவே
ஏந்தலகடத்தான் அண்ணா
வேகல்லுஞ்சரி அண்ணாவே
எண்ண கொடம் அண்ணாவே
றான் ரெண்டெடுத்து அண்ணாவே
எல்லையில அண்ணாவே
நான் போட்டுடைப்பேன் அண்ணாவே
ஓடையில ஏம்மாமா,
நான் அறுப்பறுத்து ஏம்மாமா
ஒழுங்கியில ஏம்மாமமா,
நான் கட்டு கட்டி ஏம்மாமா
கட்டு கட்டி ஏம்மாமா,
நான் தூக்கையிலே ஏம்மாமா
கண்ண கண்ண ஏம்மாமா,
நீ காட்டுறியே ஏம்மாமா


ஒரு பெண் தன் மகனுக்குப் பெண் கொடுக்காத தன் அண்ணன் மீதுள்ள வருத்தத்தைப்பாடுகிறாள். இன்னொரு பெண் தன் மாமன் மீதுள்ள காதலைப் பாடுகிறாள்.இரண்டுசெய்திகளையும் பார பட்சமின்றி கும்மியடிக்கும் பெண்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
'ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவதில்லை மாநிலத்தில்'என்றொரு பழைய பாடல் உண்டு.அழுவதால் இழந்தது எதுவும் திரும்ப வராது.ஆனால் இழப்பினால் ஏற்படும் துயரத்திற்கான மிகப்பெரிய வடிகால் அழுகையாகத் தான் இருக்கிறது.தமிழில் உள்ள ஒப்பாரிப் பாடல்கள்,துயரத்தோடுதமிழர் வாழ்வு சார்ந்த செறிவான மதிப்பீடுகளை இனங்காட்டுகின்றன. இறந்ததாயின் முகத்தைக் காண மகள் ஓடோடி வருகிறாள். அவள் வருவதற்குள் பிணத்தைஎடுத்து விடுகிறார்கள். இதையறிந்து மகள் கதறியழும் ஒப்பாரிப்பாடல்:

தங்க அரிசி கொண்டு
தனியா ரயிலேறி
தங்க மக வரும் வரைக்கும்
சவமிருந்தால் ஆகாதோ
பொன்னு அரிசி கொண்டு
புதுசா ரயிலேறி
பொன்னுமக வரும் வரைக்கும்
பொணமிருந்தால் ஆகாதோ


பிறந்த பெண் வரும் வரை இறந்தவர்களை இடுகாட்டுக்கு எடுத்துப் போகக் கூடாது என்று இன்றைக்கும் வலியுறுத்தப் படுவதைக் காணலாம். அது பிறந்த பெண்ணுக்கு இந்த சமூகம் தரும் மரியாதையின் அடையாளம். பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, றங்காலிலிருந்து பிடுங்கி நட்ட பயிரைப் போல் புருஷன் வீட்டுக்குப் போன பெண்ணுக்கு உயிர்ப்பின் தொடர்ச்சியாக மிச்சமிருப்பது தாயும் தந்தையும். ஆகவே அவர்களது மரணம் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதை இட்டு நிரப்ப முடியாத இயலாமையின் வெளிப்பாடாகத்தான் பிறந்த பெண் தனது ஒப்பாரியில் உலகத்து சோகங்களை யெல்லாம் அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறாள்.

கண்ணுக்கெதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும்கோபப்படுவதும் கொதித்தெழுவதும் தமிழ் வாழ்வின் வீரியமிக்க அடையாளங்களில்ஒன்றாகும்.


பத்துமூட அரிசி வந்தா பாதிதானே போடுறாக
அஞ்சி மூட அரிசியத்தான் ராசாக்கா - மக்களுக்கு
அடையாளமே காட்டலியே அய்யாக்கா.

அதிகாரிங் கமிசன்தானே கமிசந்தானே
நம்ம ஊரு கணக்கப்புள்ளையுங்
கமிசன்தானே ராசாக்கா மக்களுக்கு
கடமையோடு ஒழைப்பாரில்ல அய்யாக்கா.
முயற்சியெடுக்க வேணும் முடிவு பண்ணி பாக்க வேணும்
மக்களெல்லாம் ஒண்ணா சேந்து ராசாக்கா - மந்திரிகிட்ட
மனுகொடுத்து பேச வேணும் அய்யாக்கா


திருநெல்வேலி மாவட்டத்தில் பால்-வண்-ணத் தேவருடைய மகள் பாலம்மாளின் அழகைப் பார்த்து மயங்கி அவளைத் தனது கோட்டைக்குத் தூக்கிவரச் சொல்கிறார், பாளையக்காரர். பதறிப்போன பாலம்மாளின் தந்தையும் சகோதரர்களும் பாளையக்காரரால் பாலம்மாள் சூறையாடப் படுவதை அனுமதிக்கக் கூடாது என்றுவீட்டுக்குள்ளேயே ஒரு குழி தோண்டி பாலம்மாளை உயிரோடு புதைத்து விட்டார்கள். அவளை இன்றைக்கும் மக்கள் பாலம்மாள் தெய்வம் என்று வழி படுகிறார்கள். பெண்களின் ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற பண்பாட்டின் அடையாளம் இது. மகாபாரதத்தின் சரடாய் புதிதுபுதிதாய் உருவான அல்லி அரசாணி, ஆரவல்லி சூரவல்லி, பவளக்கொடி போன்ற ஏராளமான கிளைக் கதைகள் பெண்களின் ஆளுமையை உயர்த்திப் பிடிக்கின்றன.


அநியாயத்தை எதிர்த்தவர்களை மக்களுக்காகப் போராடி உயிர் நீத்தவர்களை வீரமரணமடைந்தவர் களை,மரபு மீறிய காதலில் ஈடுபட்டதால் கொலையுண்டவர்களை சிறுதெய்வங்களாக மக்கள் வழி படுகிறார்கள். பெருந் தெய்வங்களை விட சிறு தெய்வங்களோடு தான் தமிழ் மக்கள் வாழ்வு பின்னிப் பிணைந் திருக்கிறது. சிறு தெய்வங்களை நன்மை செய் தெய்வங்ளென்றும் தீமைசெய் தெய்வங் களென்றும் மக்கள் தரம் பிரித்து வைத்திருக்கிறார்கள்


தங்கள் வாழ்வை ஒத்த தன்மைகளோடுதான் தங்கள் தெய்வங்களையும் மக்கள் உருவாக்கி யிருக்கிறார்கள். அதனால்தான் சிறு தெய்வங்களுக்கு கறி, சாராயம், சுருட்டு போன்றவைகள் படைக்கப் படுகின்றன. இப்படிப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் மக்களிடம் ஊடாடியிருப்பதால்தான் தெய்வங்களை வணங்குகிற அதேநேரத்தில் நடைமுறை வாழ்வுக்கு உதவாத தெய்வங்களை கிண்டலடிக்கிற பாடல்களையும் காணமுடிகிறது.உதாரணத்திற்கு ஒரு பாடல்,


நூத்தப் பத்த செலவு செஞ்சி
நூதனமா குதர செஞ்சி
தூக்கி தூக்கி தோளசந்து போனோமே - சாமி
தொரத்தியே சவாரி செய்ய காணோமே
காணி மண்ணு கல்லு மரம்
தன்னால் ஒரு பொம்ம செஞ்சி
கட்டடமும் வீடும் கட்டி வச்சோமே - ஒரு
காலணாவும் வாடகையக் காணோமே
கண்ட கண்ட இடமெல்லாம்
கையெடுத்து கும்புட்டாலும்
கல்லுசாமி புள்ள தருமா - ராத்திரிக்கி
கணவனாக மாறி வருமா


உழைப்புதான் போற்றப்பட வேண்டிய உன்னதமான விஷயம் என்பது நம் உயர்ந்தமதிப்பீடுகளில் ஒன்று. இதை அழகாகச் சொல்லுகிற பாடல் ஒன்றைக் கீழேபாருங்கள்:


மழ வருது மழ வருது
நெல்ல வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கச் சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையிங்க
சும்மாருக்குற மாமனுக்கு
சூடு வையிங்க


சடங்குகளின் தொகுப்புதான் மதம் என்பார்கள். ஆனால் மதம் சாராதகணக்கிலடங்கா சடங்குகள் தமிழ் மக்கள் வாழ்வில் இருக்கின்றன. இவற்றில் சிலகாலமாற்றத்தால் வீரியம் இழந்துள்ளன. புதிய சடங்குகளும் சிலஉருவாகியுள்ளன. ஆனால் எல்லா சடங்குகளிலும் மரபும் மூடநம்பிக்கையும்பின்னிப் பிணைந்துள்ளன.

நன்றி : கீற்று
நன்றி : புத்தகம் பேசுது

2 மறுமொழிகள்:

ஜகதீஸ்வரன் சொல்வது...

மதத்தினைப் பற்றிய உங்கள் புரிதல் எனக்கு வியப்பளிக்கிறது..

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொல்வது...

சடங்குகள் தானே மதத்தின் அடையாளம்! வற்றை நீக்கிப்பாருங்கள் எந்த மதமும் கண்ணுக்குத் தெரியாது.

அறிவை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ஒரு மதம் தமிழகத்தில் இருந்தது! அதில் சடங்குகள் இல்லை! அதனால், அது இருந்தது என்பதற்கு இருந்த அடையாளமும் இல்லை! அது தான் மதம். அதன் ஆசீவகம்.