விபுலாநந்தர்

இன்று ஜூலை 19 ஆம் திகதி (1947) சுவாமி விபுலாநந்த அடிகளின் அறுபதாவது நினைவு தினம்.

சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர்.

ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன.

அடிகளார் 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். இவரே தமிழ்நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றின் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்று கூறப்படுகிறது.

1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு "இராமகிருஷ்ண விஜயம்" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு "செந்தமிழ்" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

ஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் சிறீ இராமகிருஷ்ண பரம?ம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தராவார்.

"சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்" என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

"சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்" – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. "ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் கவி வனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்" என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.

அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார்.

1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

அன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் (classical language ) முயற்சியில் ஈடுபட்ட அதே வேளை சுப்ரமணிய பாரதியை "மகாகவி" என்ற அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்பதிலும் இவர் முனைப்பாக இருந்தார் என்று ஒரு தகவல் கூறுகின்றது.

யாழ் நூல் அரங்கேற்றம்:

சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி. எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.

பாரிசவாத்தினால் தாம் பீடிக்கப்பட்டிருந்தும் தமது 45 வருடக்குறிக்கோள் நிறைவேறிய திருப்தியில் இருந்த சுவாமி விபுலானந்தர் "யாழ் நூல்" அரங்கேறிய அடுத்தமாதமே முடிவுற்றது. 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி அவர் விண்ணுலகம் அடைந்தார்.

மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட

"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி: விக்கிபீடியா கட்டுரை