தமிழ்ப் புத்தாண்டை வாழ்த்துகிறேன்






தமிழ்ப் புத்தாண்டை வாழ்த்துகிறேன்

இடிக்கின்ற வானத்தில் எழுந்து நிற்கும்
எம்மிறைவன் கதிரவனோ வடக்கு நோக்கி
நடக்கின்ற நாள்தன்னை நல்ல நாளாய்
நவின்றவர்கள் நம்மகத்து மூத்தோர் தானே?
படிக்கின்ற ஏட்டையே கிழித்துப் போடும்
பாமரராய் தமிழர்கள் இருந்த தாலே
அடைத்திட்டார் சிறைக்குள்ளே, தமிழ்ப்புத் தாண்டை!
அடைபட்ட சிறைக்கதவை உடைத்துக் கொண்டு,

வீறுநடை போடுகின்ற ஆனின் ஏறாய்
வெஞ்சமரில் நிற்கின்ற அரிமா கன்றாய்
மறுபிறப்பாய் வருகின்ற தமிழ்ப்புத் தாண்டே!
மறுபடியும் மலந்திடுவாய் இல்ல மெல்லாம்!
சிறுதுளியும் சிறுநெருப்பும் பெருப்ப தைப்போல்
சிதைந்திருக்கும் தமிழர்தம் உள்ளந் தன்னை
நிறையாக்கி வைப்பதற்கே வருதல் வேண்டும்!
நீடூழி தமிழாண்டு(தமிழை ஆண்டு) நிலைக்க வேண்டும்!

சங்கத்தார் கண்டறிந்த சூத்தி ரங்கள்,
சதிகாரர் கொண்டுசென்ற சாத்தி ரங்கள்,
எங்கிருந்தும் பார்க்கின்ற வானந் தன்னை
இடிக்கின்ற கோபுரத்துக் கலைகள் தன்னை
பங்குவைத்து வானளக்கும் விண்மீன் தம்மைப்
பகுத்தறிந்த கணிதத்தைப் பகுக்கி வைத்தார்!
எங்குசென்று கேட்டாலும் இல்லை யென்பார்,
ஏதுமில்லை! தமிழர்க்குக் கலைகள் என்பார்!

சுவர்வைத்து தடுத்தாலும் துள்ளிப் பாயும்
சுவையான தேனமுதாம் காவே ரிக்குக்
கரையாத புகழாலே அணையும் கட்டி
காலத்தை வென்றுநின்ற தமிழ கத்தை
உவருக்குள் புதைத்தார்கள்! உடம்பின் வேதம்
உறையாக அமைகின்ற மருத்து வத்தை,
கருவான நாவாய்கள் தத்து வத்தை
கருக்குக்குள் மறைத்துவைத்த கதையைச் செல்வாய்!

கல்லாத பொருளில்லை! தமிழர் தாமும்
காணாத பொருளில்லை, வானம் எங்கும்!
சொல்லாத செயலில்லை, ஏட்டில் எங்கும்!
சூடாத புகழில்லை, உலக மெங்கும்!
செல்லாத இடமில்லை, உலகம் எங்கும்!
சுவைக்காத சுவையில்லை, மண்ணில் எங்கும்!
வெல்லாத நாடில்லை! தமிழர் கைகள்
விளைக்காத பொருளில்லை! என்று சொல்வாய்!

பன்னூறு ஆண்டுகளாய்த் தமிழ கத்தைப்
பார்க்காமல் இருந்தாயோ! தமிழ் வளர்த்த
தொன்னூலில் தடயங்கள் இருந்த போதும்
தூங்காத துயிலோடே இருந்தாய் ஏனே!
மன்னூறு பட்டதனால் மறைந்தே னென்று
மலர்ந்தாலும் மலர்ந்திட்ட புதிய ஆண்டே!
பொன்னூறு கிடைத்திட்ட இன்பம் போலே
போற்றுகின்றேன்! புத்தாண்டே வாழ்த்து கின்றேன்!

இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் பால மாகி
இரவொளிரும் சந்திரனின் நடைய ளந்து
இயங்குகின்ற வான்வெளியின் இயக்கம் தன்னை
இசைக்கின்ற கணிதத்தின் முகமாய்த் தோன்றி
மயக்குகின்ற மயக்கத்தை ஒதுக்கி வைக்கும்
மாமருந்தாய்ப் பிறக்கின்ற தமிழ்ப்புத் தாண்டில்
இயங்கின்ற தமிழினத்தின் அடையா ளத்தை
எழுதிடவே வாழ்த்துகிறேன்! நீடு வாழ்க!

அன்புடன்

இரவா

5 மறுமொழிகள்:

தமிழ் சொல்வது...

இனிய தமிழ்த் திருநாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

முனைவர் இரா.குணசீலன் சொல்வது...

தங்கள் வலைப்பதிவு மிகவும் நன்றாகவுள்ளது

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொல்வது...

முனைவர் மதிப்பீடு கண்டு மகிழ்ச்சி

நன்றி

முனைவர் இரவா

நற்கீரன் சொல்வது...

கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் (www.ta.wikipedia.org) உங்கள் பங்களிப்பை நல்கினால் நன்று.

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொல்வது...

தங்கள் விழைவை நிறைவேற்ற போதிய காலம் கிடைக்க வேண்டும்.

வாய்க்கும் வேளையில் அவ்வேலையைச் செய்வேன்.

நன்றி