"'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம். நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்... நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்.நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்! "
Annexure - Tamil Names for Girls and Boys
[see also 1.தமிழ்ப்பெயர்க் கையேடு and2. Tamil Names - Sachi Sri Kantha, August 1992]
சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்.
நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே' என தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.
தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.
'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.
நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்.
முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.
தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.
கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கன் ஆகின.
முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.
சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வட மொழிப்பெயர்களை நீக்கி தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப்பெற்றது.
குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.
சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி-அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன்- பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி-கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருட்டிணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களை சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.
மிக அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரை தொல்காப்பியன் என மாற்றினார்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரோஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.
தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உறுதி, உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. இந்தப் பெயர்கள் தமிழ் அல்லாதன மட்டுமல்ல, அவை பொருளற்றதாகவும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக கஜன், டிலஷ்சனா, டில்ஷான், டிலக்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிஷானி, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, வர்ஷன்போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும்.
தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டை சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும்.
ஒரு யூதனை அல்லது ஒர் ஆங்கிலேயனை அவனது பெயரை வைத்துக் கொண்டே கண்டு பிடிக்கலாம். தமிழர்களை அப்படிக் கண்டு பிடிக்க முடியாது.
பெற்றோர்கள் தமிழ் அல்லாத பெயர்களை வைப்பதற்கு அவர்களுக்கு தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரியாததே காரணமாகும்.
தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அர்ச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும்.
நிரோஜன் நிரோஜினி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள்.
தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட,ண ற,ண,ன,ர,ல,ழ,ள என்ற எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் எண்சாத்திரம் அல்லது பஞ்சாங்கம் பார்த்து இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள். எண்சாத்திரம் பஞ்சாங்கம் பார்ப்பது மூடநம்பிக்கையாகும்.
தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.
முடிந்த மட்டும் அன் விகுதியில் முடியும் பெயர்களை வைத்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தனித் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்று இத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இதனை உங்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்துத் தனித் தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட ஊக்குவியுங்கள்.
ஏற்கனவே அறிவித்தபடி 1999-2004 ஆண்டு காலப் பகுதியில் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இரண்டாயிரம் வெள்ளி (கூ2,000) பரிசு அடுத்த ஆண்டு பொங்கல் நன்னாளில் (தை 14, 2005) வழங்கப்படும்.
இந்தப் பரிசுத் தொகை தமிழீழம், இலங்கை, கனடா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதி பெற்றால் குடவோலை முறையில் பரிசுக்குரிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.
கழகத்தின் முடிவே இறுதியானது. கழக உறுப்பினர்கள் இதில்பங்கு கொள்ள முடியாது.
நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!
--~--~---------~--~----~------------~-------~--~----~
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...