பாவாணர் வாழ்க்கை குறிப்பு


தோற்றம்: 1902 - மறைவு: 1981

பாவாணர் வாழ்க்கை குறிப்பு (Courtesy:
Tamil Neri Kazhagam )


"தமிழ்ச் சொற்கள் அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அயன்மொழிகளில் சென்று வழங்கினும் அவற்றின் (சொற்களின்) மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச்சொற்களாலும் அவை தமிழ் என்றெ அறியப்படும்," -- பாவாணர், வேர்ச்சொற் கட்டுரைகள், பக்10


7.2.1902 சங்கரநயினார் கோயிலில் ஞானமுத்தர்-பரிபூரணத்தம்மையார் ஆகிய பெற்றோருக்குக் கடைக்குட்டிப் பத்தாம் மகவாகத் 'தேவநேசன்' பிறப்பு.


1918 பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழிய (CMS) உயர் நிலைப்பள்ளியில் பயின்று பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறல். பின்னர் முகவை மாவட்டச் சீயோன் மலை உயர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராதல்.


1921 ஆசிரியர் பண்டிதர் மாசிலா மணி அவர்களால் 'தேவ நேசக் கவிவாணன்' என்ற பாராட்டுப் பரிந்துரையுடன் தமிழாசிரியப் பணியை மேற்கொள்ளல். 1921 முதல் 1944 வரை பணி புரிந்த இடங்கள்.


1.வடார்க்காட்டு ஆம்பூர் உயர்நிலைப்பள்ளி
2.சென்னைக் கிறித்துவக் கலாசாலை
3. மன்னார்குடிப் 'பின்லே' கல்லூரி.
4. திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளி.
5. சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி.
1924 மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் தேர்வில் வெற்றி பெறல்.
1926 தென்னிந்தியத் தமிழ்ச்சங்கப் 'புலவர்' தேர்வில் வெற்றி பெறல். பின்னர் சென்னைப் பல்கலைக் கழக 'வித்துவான்' கீ.க.தே. (B.O.L) தேர்ச்சி பெறல்.
1930 எசுதர் அம்மையாரை மணந்து கொள்ளல்.
1931 'மொழியாராய்ச்சி -ஒப்பியன் மொழிநூல்' எனும் முதல் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வி இதழில் வெளியாதல். சை.சி.நூ.ப. கழகத்துடன் அணுக்கத் தொடர்புண்டாதல்.
1935 'திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே' என்னும் தலைப்பில் கீ.க.மு. (M.O.L.) பட்டத்திற்கான இடுநூலை எழுதத் தொடங்கல்.
1939 அவ் இடுநூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளி விடுதலும், இனிமேல் இந்தியாவுக்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை என்று பாவாணர் முடிவு செய்தலும்.
1944 சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பொறுப்பேற்றுப் பன்னிரண்டாண்டுகள் (1956 வரை) பணிபுரிதல்.
1949 சொல்லாராய்ச்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் பாவாணர் என்று மறைமலையடிகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்.
1952 சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழி தாமே தமித்துப் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெறல்.
1956-1961 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறை வாசகராகப் பணியாற்றுதலும் தமிழ்ப்பகைவர் சூழ்ச்சியால் அங்கிருந்து வெறியேறிக் காட்டுப்பாடியில் குடிபுகலும்.
27.10.1963 மனைவியார் நேசமணி அம்மையார் மறைவால் பாவாணர் வடக்கிருக்கத் துணிதல். நண்பர்கள் பலரும் சூழ்ந்து தடுத்துத் தமிழாய்வுப் பணியில் ஈடுபட்டுத் தமிழை உய்விக்குமாறு வேண்டிய வேண்டுகைக்கு இசைதல்.
1968 உலகத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தல். உ.த.க. தொண்டர்களுக்கான பண்புகளாக எளிமை, உண்மை, தன்னலமின்மை, தொண்டு, ஈகம் ஆகியவற்றை வலியுறுத்தல்.
1974 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியமர்தல்.
15.1.1981 மதுரையில் மாரடைப்பால் பேராவியற்கை எய்துதல்.


இல்லறமும் மக்கட்பேறும்


பாவாணர் தம் ஐந்தாம் அகவையிலேயே பெற்றோர் இருவரையும் இழந்து விட்டாராதலால் அவருக்கு அன்னையாக இருந்து காத்தவர் அவர்தம் தமக்கையார். அவர் மணமுடித்து வைத்த எசுதர் அம்மையார் ஓர் ஆண் மகவை ஈன்றார். அம்மகவுக்கு மணவாளதாசன் என்று பெயர் சூட்டப்பட்டது. சில திங்களில் அவ் அம்மையார் மறையவே தம் தமக்கையார் மகளாகிய நேசமணியம்மையாரைப் பாவாணர் மணந்து கொண்டார். அவர்கட்கு மக்கள் பின் கண்டவாறு ஐவர்:


1. நச்சினார்க்கினிய நம்பி
2. சிலுவையை வென்ற செல்வராயன்
3. அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
4. மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி
5. மணிமன்ற வாணன்.


பாவாணர் பெற்ற பட்டங்கள்


1. 1921-இல் அவர்தம் ஆசிரியர் 'கவிவாணன்' என்று அவரைப் பாராட்டியதைப் பின்னர்த் தனித்தமிழாக்கிய பாவாணர் என்று தம் பெயருடன் சேர்த்துக் கொண்டார். அதுவே இயற்பெயராகிய 'தேவ நேயன்' என்பதினும் பெரிதாய்ப் பரவி நின்றது.


2. 1947-இல் பாவாணருக்கும் தமிழ்மறவர் புலவர் பொன்னம்பலனார்க்கும் தந்தை பெரியார் வெள்ளிப் பட்டயம் அளித்துப் பாராட்டினார்.


3. 1971-இல்பறம்புமலைப் பாரி விழாவில் குன்றக்குடி அடிகளார் பாவாணருக்குச் 'செந்தமிழ் ஞாயிறு' என்று பட்டம் அளித்து போற்றினார்.


4. 1980-இல் தமிழக அரசு பாவாணருக்குச் 'செந்தமிழ்ச் செல்வர்' என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.


5. பாவாணர் அன்பர்கள் பெயரேதுமின்றி 'ஐயா' என்று குறிப்பின் அது பாவாணர் ஒருவரையே சுட்டுவதாக அமைந்தது. 'மொழிப்பேரறிஞர்' 'தனித் தமிழ்க்காவலர்' 'மொழிநூற் கதிரவன்' 'மொழிநூன் மூதறிஞர்' 'மொழி ஞாயிறு' முதலான பல பட்டங்கள் பாவாணர் அன்பர்களிடையே வழங்குகின்றன.


பாவாணர் நூல்கள்


1. இயற்றமிழ் இலக்கணம் (1934)
2. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம் (1936)
3. செந்தமிழ்க்காஞ்சி (1937)
4. ஒப்பியன் மொழிநூல் (1940)
5. திரவிடத்தாய் (1944)
6. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
7. உயர்தரக் கட்டுரை இலக்கணம் முதற் பாகம் (1950)
8. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951)
9. பழந்தமிழாட்சி (1952)
10. முதல் தாய் மொழி (1953)
11. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954)
12. தமிழர் திருமணம் (1956)
13. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடுகள் (1961)
14. இசைத் தமிழ்க் கலம்பகம் (1966)
15. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (19660
16. The Primary Classical Language of the World (1966)
17. தமிழ் வரலாறு (1967)
18. வடமொழி வரலாறு (1967)
19. The Language Problem of Tamil Nadu and its logical solution (1967)
20. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968)
21. வண்ணனை மொழி நூலின் வழுவியல் (1968)
22. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969)
23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969)
24. தமிழர் வரலாறு (1972)
25. தமிழர் மதம் (1972)
26. வேர்ச்சொற்கட்டுரைகள் (முதற் பகுதி) (1973)
27. மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை (1978)
28. தமிழ் இலக்கிய வரலாறு (1979)
29. An Epitome of the Lemurian Language and its ramifications / Cyclostyled Booklet (1980)


சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட தொல்காப்பிய எழுத்திகாரப் பதிப்பிற்கு உரைக் குறிப்பும் பாவாணர் எழுதியுள்ளார்.


'சுட்டு விளக்கம்' 'கட்டுரை கசடற' 'தமிழர் வரலாற்றுச் சுருக்கம்' ஆகிய இங்குக் குறிக்கப் பெறாதவை மூன்றும் முறையே 'முதல் தாய் மொழி' 'கட்டுரை வரைவியல்' 'தமிழர் வரலாறு' என்னும் விரிவு நூல்களில் அடங்கின. 'சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாகராதியின் சீர்கேடுகள்' என்னும் நூல் 'A critical survey of the Madras University Tamil Lexicon' என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியானது.


பாவாணர் வரைந்த சொற்பிறப்பியல் அகரமுதலியின் முதன் மடல் -முதற் பகுதி அவர் வரைந்த எட்டாண்டுகட்குப் பின்னரும் மறைந்த நான்காண்டுகட்குப் பின்னரும் 1985-இல் வெளியானது. 1940-இல் நூறு சொற்கட்குப் பாவாணர் வரைந்த வேர்ச்சொற்சுவடி எழுபத்து மூன்று சொல்லாய்ச் சிதைந்து புலவர்மணி இரா. இளங்குமரரால் மீட்கப்பெற்று 1986-இல் வெளியாகியுள்ளது.


'சொல்லாராய்ச்சி நெறி முறைகள்' 'இசைத்தமிழ்ச் சரித்திரம்' ஆகிய இரண்டும் பாவாணரால் எழுதப்பெற்று அச்சேறவியலாமல் அழிந்தன. அவர் அரும்பாடுபட்டுத் தொகுத்து ஐம்பது பக்க ஆராய்ச்சி முன்னுரை வரைந்த 'பழமொழி பதின்மூவாயிரம்' அச்சீட்டாளரிடமிருந்து மீள முடியாது அழிந்தது. பாவாணர் தம் நூல்களில் ஆங்காங்கே சுட்டுகின்ற 'தொல்காப்பிய வளம்' 'சிலப்பதிகாரச் சிறப்பு' 'முத்தமிழ்' 'மொழிச்சிக்கல் தீர்வு' எனும் நூல்கள் என்னவாயின என்றும் அறிய முடியாதவாறு அழிந்தன.


பாவாணர் தம் வாணாளில் எழுதி முடிக்க விரும்பியவை 'செ.சொ.பி. அகரமுதலி' பதின்மூன்று படலங்கள், The Lemurian Language and its ramification, 'தம் வாழ்க்கை வரலாறு' ஆகியவை அவற்றை எழுதி முடிக்குமளவு அவர்தம் வாணாள் நீளவில்லை.


இவையேஅல்லாமல் செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப்பொழில், தென்மொழி, தமிழ்ப்பாவை, தமிழம் பல்வேறு பள்ளி கல்லூரி இதழ்கள், சிறப்பு மலர்கள் ஆகியவற்றில் வரைந்த கட்டுரைகள் பல்பொருள் தழுவியவை; பன்னூற்றுக்கணக்கின.


இந்நூல்களும் கட்டுரைகளும் தமிழர்தம் கைகளில் திகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுமா? முடவன் கொம்புத் தேனை விரும்பிய கதையாகுமா?


Brief History of PavanarName: Gnanamuthu Devaneyan.Professional field code: 090 Teacher.Place of birth: Sankaranayinar Koil, Tamilnadu, South India.Date of birth: 7-2-1902.Father's Name: Gnanamuthu.Mother's Name: Paripuranam.Education: C.M.J. High School, Palayankottai, S.S.L.C. (1916-1918) Madras University M.A. Private Study 1952.Married: 1930Children: 4 Sons and 1 daughter, the daughter being 4th child.Brief carrier summary: Tamil teacher in Several High Schools 1922-1944Tamil Professor, Municipal College, Salem. 1944-1956Reader in Dravidian Pilology Annamalai University. 1956-1961.Director Tamil Etymological Project of the Tamilnadu from 1974 till probably in 1987Carrier-related activities:President, International Tamil League, Tamilnadu. (U.Tha.Ka.)Awards and Certifications:-A Silver plate presented to me by the Tamil Peravai, Salem in 1955 in appreciation of my service to Tamil.-A Copper Plate presented to me by the Governer of Tamilnadu 1960 in appreciation of my contribution to the collection of Administrative terms in Tamil.-A Silver Plate presented to me by the South Indian Saiva Sinddhanta Works Publishing Society, Thirunelveli Ltd., in 1970 in appreciations of my research work in Tamil Philology an Etymology.Professional and Association Memberships:Member of the tamil Development an Research Council Govt. of Tamilnadu.Writings and Special Achievements:Author of more than twenty research works in Tamil and English on the Tamil Language literature and culture and compentary on Thirukkural.


பாவாணரின் சிறப்பியல்புகள்


௧. கள்ளமற்ற குழந்தை உள்ளமுடைமை.
௨. கரும்பொன் வண்ண மேனி; எளிய உடை; சிலிர்த்த மீசை; பீடுநடை அகன்று ஏறிய நெற்றியுடன் விளங்கும் அரிமா நோக்குடைமை.
Ž. எங்கும் எப்போதும் செந்தமிழிலேயே அல்லது செழுமையான பிறமொழியிலேயே எழுதிப்பேசிக் கமழச் செய்த தூயமொழியியல் வாழ்வால் தாய் மொழியின்கண் நிகரற்ற கல்விப் புலமையுடைமை.
௪. மதிநுட்பம் பரந்த கல்வி தன்னலமின்மை, நெஞ்சுரம், மெய்யறியவா நடுநிலைமை முதலிய அறுவகைத்தகைமை நிறைந்து, சுருங்கச் சொல்லும் அறிவுச் சால்புடைமை.
௫. மறுப்பச்சமின்றி நடுவுநிலைமையோடு எவரும் ஒப்புமாறு தமிழ்க்கேடுகளைத் தறுகண்மையுடன் தக்காங்கு தகர்த்தெறியும் ஆணித்தரமான கருத்துகளை உடனுக்குடன் வெளியிட்டு உண்மையை விளங்கச் செய்யும் மங்காத உயர்தனித் தமிழ் மொழிமான மதுகைத்திறக் குடிமைப் பண்புடைமை.
•. தன்னல விளம்பர வணிகமற்ற மொழிப்பற்றும், வறுமையிற் செம்மையும், உண்மையும், உண்மையின் பாற்பட்ட அடக்கமான புலமைச் செருக்கும் இழைந்த கருத்தாணையுடன் "எனக்கும் வறுமையுமுண்டு, மனைவி, மக்களும் உண்டு, அத்தோடு (தமிழ்) மானமும் உண்டு" என்று செப்பிய செம்மாப்புடைமை.


–. முப்போதும், எப்போதும் தன்னல மறுப்பால், தமிழ் நல நினைப்பால், படிப்பால் நடமாடும் தனித்தமிழ்ப் பல்கலைக் கழகமாக உயர்ந்து தி.பி. ௧˜˜˜ (கி.பி. 1968) -இல் மொழிச்சரிவை நிமிர்த்த உலகத்தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்து வெற்றி ஈட்டி பொது மக்களின் எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழைக் கமழச் செய்த முற்காணிப்பு அறிவுடைமை (Talent of Featuralogy).


—. எப் பண்ணிலும் பாடல் இயற்றும் பாவண்மையும், 'கித்தார்' (Guitar) இசைக்கும் இசைத்தமிழ்ப் புலமையுடைமை. உரைநடை, செய்யுள் இவற்றைத் தனித்தனியே பாகுபடுத்தி முறையோடு அனைவரையும் தெளிவித்துப் பாடம் புகட்டும் உயர்தனி ஆசிரிய ஒழுக்கப் பண்புடைமை.


˜. கி.பி. 1960-இலேயே சிறப்பாசிரியர் பொறுப்பேற்று தனித் தமிழ் திங்ளிதழான 'தென்மொழி'யில் 'தன்வரலாறு' எழுதி தமிழ் வரலாறு படைத்தமை.


௧௰. சொல்லாய்வு, மொழி நூலாய்வு, பன்மொழி-(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய திரவிடமொழிகள் இலக்கணப் புலமையும்; ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீனம், பாரசீகம், உருது, இந்தி, சர்கசானியம், சமற்கிருதம், மேலை ஆரிய மொழி இலக்கிய விலக்கணப் புலமையும் மிக்கவர்). ஒப்பியன்மொழி நூட்புலமை முதலிய மூவகைத் தெள்ளியவறிவால், மூலம் காண்பதிலும், மூலச்சொல் வடிவ மீட்டமைப்பிலும் மரவுபிறழாத நடுவுநிலையுடன் முதன் முதல்; தமிழ் என்றும் வாழவும், ஒத்த முன்னேற்றம் காணவும்; இன்றியமையாத வேரும் வரலாறும் காட்வதுமான 'கொடி வழி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி' (Etymological Dictionary of Tamil on Genelogical basis) தொகுப்பு நெறிமுறைகள் வகுத்தளித்து அதன்படி 13 மடலங்களுள் முதல் மடலத்தின் முதல்பகுதி 'அகர' ஓரெழுத்தில் தொடங்கும் 6500 சொற்களுக்கு வேர்ச்சொல் பொருள் விளக்கம் 1470 தட்டச்சுப் பக்கங்கள் கொண்ட அளவில் தொகுத்து முடித்த நுண்மான் நுழைபுல ஆள்வினையுடைமை. (அதனை பிற்றைய நாளில் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் வழி அச்சிட்டு தி.பி. ௨௰௧• சுறவம் 2-இல் அரசு சார்பில் வெளியிட்டனர் என்பது அறியத்தக்கது.)
௧௧. புதிய செந்தமிழ் வேர்ச்சொல் உருவாக்கவும், வழக்குவீழ் சொல்லிற்கு வாழ்வளிக்கும் வல்லமையுடைமை.
௧௨. "தமிழே என்பாகவும் தசையாகவும் குருதியாகவும், வழக்குவீழ் சொல்லிற்கு வாய்க்கப் பெற்ற தமிழின முழு உருவம் இவரே" - பாவாணர் என்ற புகழ்த் தோற்றத் தகைமையுடைமை.


தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! "வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையி¢ருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!"-


நன்றி: 'தமிழ்ச்சிட்டு' - குரல்-8, இசை-12.