"உடல் சோதனை" 'Muscle testing'


*************************************************************************************
ஒவ்வொரு மனிதனின் உடலும் அவன் வாழ்க்கை குறித்த பல அரிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். இத்தகவல்களைச் சரியாகப் பயன்படுத்தி குணப்படுத்துவது எளிது என்கிறது applied kinesiology.

தசை சோதனை எனப்படும் muscle testing இத்தகவல்களைத் திரட்ட பயன்படுகிறது. இந்த சோதனை மிக எளிதானது. நமக்கு நாமே இந்த சோதனையை செய்துகொள்ளலாம் என்பது இதன் விசேஷம். ஒரு வாக்கியத்தை வாய்விட்டுச் சொல்லி அல்லது மனதில் நினைத்துக் கொண்டு குறிப்பிட்ட தசையின் பலத்தை சோதிக்கவேண்டும். நம் எண்ணம் சரி என்றால் தசைகள் பலமாகவும் தவறு என்றால் பல்வீனமாகவும் எதிர்வினை காட்டும்.

இந்த சோதனையின் மூலம் உடலுக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பதையும் அலர்ஜி விளைவிக்கும் பொருட்களையும் அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதே போல ஆழ்மனதிலுள்ள பிரச்சனைகளை இந்த muscle testing மூலம் கண்டறிந்து
மன அழுத்தத்தையும் குணமாக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த செயல்முறை அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனினும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது (மாற்று சிகிச்சை எதையுமே இன்னும் அறிவியல் ஒப்புக் கொள்ளவில்லை)

தசை சோதனை நடத்த பல வழிமுறைகள் இருந்தாலும் எளிதான ஒன்றை இங்கு பார்க்கலாம். இதனை நம்பாதவர்கள் இதனை ஒரு விளையாட்டாக செய்துபாருங்கள். நம்புகிறவர்கள் தயவு செய்து உங்கள் மருத்துவ சிகிச்சையைக் கைவிட்டுவிடாதீர்கள்.

இனி சோதனையின் செயல் முறை இங்கே:

இந்த சோதனை நம்பகரமாக அமைய உடலில் நல்ல நீரோட்டம் இருக்கவேண்டும். ஒரு கிளாஸ் நீரைக் குடித்துவிட்டு ஆரம்பிக்கலாம். உண்மையான சோதனைக்குச் செல்வதற்கு முன் சோதனை முன்னோட்டம் செய்து உடலின் நீரோட்டம் ஏதுவானதாக இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.

சோதனை முன்னோட்டம்:

1. வடக்கே பார்த்து நில்லுங்கள். உடம்பை நன்கு ஓய்வாகவும் தளர்வாகவும் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்

2. வாய்விட்டு 'என் முடியின் நிறம் பச்சை' என்று சொல்லுங்கள். (அதாவது ஏதாவது ஒரு பொய்யான கூற்றை வாய்விட்டு சொல்லுங்கள்)

3. உடல் முன் பக்கம் நகர்ந்தால்(சாய்ந்தால்) நீங்கள் முன்பு சொன்ன வாக்கியம் சரி என்கிறது உங்கள் உடல். பின்புறம் நகர்ந்தால் தவறு என்கிறது. எந்தப்பக்கம் நகர்கிறது என்று கவனியுங்கள்.

4. உங்கள் முடியின் நிறம் பச்சை இல்லை என்பதால் உங்கள் உடலில் சோதனைக்கு ஏதுவான சூழல் இருந்தால் உடல் பின்புறம் சாய்ந்திருக்கவேண்டும். அப்படி சாய்ந்திருந்தால் அதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள இதே போல மற்றொரு வாக்கியத்தைச் சொல்லி சோதித்துக் கொண்டு உண்மையான சோதனைக்கு முன்னேறுங்கள்

5. உங்கள் உடல் தவறாக எதிர்வினை காட்டியிருந்தாலோ அல்லது எந்த வித அசைவும் இல்லாதிருந்தாலோ நீங்கள் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு முறையில் உடலின் நீரோட்டத்தை அதிகரிக்கலாம்:

1. நீர் அருந்துதல்
2. கீழ் முதுகில் முதுகுத்தண்டின் இருபுறமும் நன்கு மசாஜ் செய்தல்
3. சிறிது உப்பைச் சுவைத்தல்
4. வாழைப்பழம் சாப்பிடுதல்

இவற்றைச் செய்துவிட்டு மீண்டும் முன்னோட்டச் சோதனையை நடத்துங்கள்

சோதனையின் பயன்பாடு:

நன்கு தெரிந்த விடைகளுக்கு உடல் சரியான எதிர்வினையை உருவாக்கி இருந்ததென்றால், உங்கள் உடல் மற்றும் வாழ்க்கை முறை குறித்த சோதனைகளை இப்போது நீங்கள் செய்து பதில்களை அறியலாம். உதாரணமாக,

1. உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களைக் கண்டறிய '.------- என் உடலுக்கு நல்லது' என்ற வாக்கியத்தை உபயோகிக்கலாம். உடல் முன்னே நகர்ந்தால் அந்தப் பொருள் நல்லது எனவும் பின்னே நகர்ந்தால் அது ஒவ்வாது எனவும் அறியலாம். '..... என் உடலுக்கு நல்லதல்ல' போன்ற எதிர்மறை வாக்கியங்களை உபயோகித்தல் குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். அதனால் நேர்மறை வாக்கியங்களையே உபயோகியுங்கள்

2. உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு தனக்கு என்ன செய்கிறதென்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதனை 'எனக்குத் தலை வலிக்கிறது' போன்ற வாசகங்கள் சொல்லச் சொல்லி சோதனை செய்யலாம்

3. ஆழ்மனதிலுள்ள எண்ணங்களை அறிய, 'நான் என்னை நேசிக்கிறேன்' போன்ற வாசகங்களை பயன்படுத்தலாம். உங்களை நீங்கள் நேசிக்கவில்லை என்று அறிந்தால் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த முறையின் மூலம் அறியலாம்.

செய்து பாருங்கள். பயனளித்தால் லாபம். இல்லாவிட்டால் ஒன்றும் நஷ்டமில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - இது உங்கள் ஆழ்மனத்தோடு உரையாடும் ஒரு முறையே. எதிர்காலம் பற்றியோ அடுத்தவர் எண்ணங்கள் பற்றியோ இந்த முறை மூலம் அறிய முற்படுதல் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மிக முக்கியமாக, தசை சோதனை காரணமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முறையான சிகிச்சை எதையும் கைவிட்டுவிடாதீர்கள்.

*************************************************************************