தமிழகம் கண்ட சமயப் பொறை

உலக மொழிகளுள் காலத்தால் வரையறுக்கப்படாதும், உயர்தனி மொழியாய் விளங்குவதும், இனிய நம் தமிழ்மொழியே ஆகும்.

தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியநூல்கள் பற்பல.அவற்றில் சமயத் தொடர்பான இலக்கியங்கள், பல்வேறுசமயப் புலவர்களால்காலந்தோறும் சமைக்கப்பட்டுள்ளன. இப்பரந்த உலகிடைத் தோன்றிய மனிதன் தான் வாழும்சூழ்நிலைக்கு ஏற்பப் பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தான்.

அவற்றுள் சில நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. சிறப்பு அடைந்துள்ள மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று.
சமய இலக்கியங்கள் நிரம்பிய சுந்தர மொழி, தமிழ் மொழி.

'' உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே...''

என்று தொல்காப்பியம் கூறும்.
சாதாரண மனிதன் - உயர்ந்தவனாக சிறந்தவனாக மேம்பட்டவனாக ஆவதற்கு ஆவன செய்வது சமயம்.

அதோடு சமயத்தின் அறநெறி - உலக வாழ்க்கையோடு மத வாழ்க்கையும் அணைத்து மேற் செல்ல உய்கதி பெறவழி காட்டுகிறது.
சமூகத்தில் மனிதன் சில கொள்கைகளை ஏற்பதினாலும் அவற்றில் நம்பிக்கை வைப்பதினாலும் ஒரு மேலான நிலைக்கு ஆளாகிறான்.
அதற்குக் காரணமாக அமைவது சமயமே. சமயத்தினை சார்ந்து வாழ்பவன் ஆதலால் சமயத்தினைச் சார்ந்து ஒழுக்கமானவன் ஆகின்றான். இன்ப துன்பங்களை ஏற்பதால் அவனது மனம் மாறுகிறது. ஒவ்வொருவனும் கொள்கைவாதியாக மாறுவதால் ஒழுங்கான மனிதனைச் சமயம் உருவாக்கிக் காட்டுகின்றது.

நமது சமயம் விஞ்ஞானத்தால் உணரமுடியாத மெய்ப்பொருளாகத் தனது மெய் ஞானத்தால் இனிது இயம்புகிறது. தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப் பதால் அது மறை எனப் பெயர் பெற்றது. நமது சித்தாந்தம் அறிவியல் நோக்கில் மெய்ப் பொருளை நிலைநிறுத்தம் உண்மைகளின் முடிபு. அறிவால் உண்மைகளை பூவினுள் மணம் போல் கொண்டுள்ளது.

''அண்டப் பகுதியின் உண்டைப்பிறக்கம் அளப்பருந்தன்மை வளப் பெருங்காட்சி ''
என்று மாணிக்க வாசகர் கூறுகிறார்.

முன்னோர்களின் அனுபவத்தில் தோன்றிய நெறிகள் பின்னோரின் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டின..

சமயம் என்னும் சொல் பொருளுடையது. சமைத்துப் பக்குவப்படுத்தல் என்னும் பொருளில் சமயம் என்னும் சொல் தோன்றியது. கொள்கை, கோட்பாடு, குறிக்கோள் என்னும் பொருளில் சமயம் அமைந்தது. மனித வாழ்க்கைப் பயணத்திற்கு வழியாக அமையக்கூடிய காரண அடிப்படையில் நெறி, வழி ஆகிய சொற்கள் அமைந்தன. சமுதாயக் கூட்டுவாழ்க்கைக்கு மனிதன் பண்படவேண்டும். தனி மனித வாழ்க்கையாகிய விலங்கு வாழ்க்கையிலிருந்து மனிதன் பண்பட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துக் காட்டிய நெறிகள் துணையாக அமைந்தன.

உணவு பொருளை நேரடியாக உண்ணாமல் சமைத்த பிறகே அவற்றை அவித்து,வேகவைத்து உண்ணுகிறோம். அது போல் பக்குவ மில்லாத-பண்பில்லாத விலங்காக வாழும் மனிதனைச் சமைத்துப் பக்குவப்படுத்த தோன்றியவை சமயம்.

'' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ''

என்பது திருமுலர் வாக்கு.

மனிதன் தன் வாழ்வு வளம் பெறவும், மாக்கள் தன்மையிலிருந்து விடுதலை பெற்று ,மக்கள் தன்மை பெறவும் செய்யப் பட்டது.அதனை வேறு வகையில் சொன்னால் , மனிதனை பண்பாடு உடைவனாக ஆக்குவது சமயம்.
அனைத்திற்கும் ஆணி வேராய் அமைந்த ஒன்றை அறிகிறான். அவ்வறிவுக்கு அப்பாற்பட்ட ஒருபொருள் உண்டு என்பதையும் அறிகிறான். ஐம்பூதங்களை வணங்கியவர்களை அவைகளுக்கு அப்பாலும் இறைவன் உண்டு என்று நெறிப்படுத்தியதே சமயம். அவை அனைத்தும் ஒரு வரன் முறைக்கு உட்பட்டு இயங்குவதையும் காண்கிறான். சமயம் என்பது வெறும் குறிகளும் , அடையாளமும் அன்று. சமயம் என்பது அவற்றை கடந்து நிற்பது.

குறிகள், அடையாளங்கள் என்று எதனையும் போற்றாமல் ஒருவன் சிறந்த சமயவாதியாக வாழ முடியும். மனித மனத்தின் மாசை அகற்றி, பண்புடையவனாய், ஒழுக்கம் உடையவனாய், பிறர்க்குப் பயன்படுபவனாய் வாழ முற்படுவதே சமய வாழ்க்கையாகும். அவற்றிக்கும் அப்பால் அனைத்தையுங் கடந்து நிற்கின்ற ஒன்றை - கடவுள் என்ற ஒன்றை மனதில் கொண்டு வாழ்பவனே சமயவாதியாவான்.எனவே, கடவுள்- மனித வாழ்வு என்ற இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு ,வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறி மார்க்கங்களை தெளிவுப்படுத்துவதே சமயம். மனிதரை நெறிப் படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய சமயநெறி. அவற்றின் நடைமுறையால் மாறுபட்டு முரண்பட்டுபோயின.

உண்மையில் சமயம் என்பது தூயவாழ்க்கை முறை. மனிதனை நெறிப் படுத்திப் பக்குவப் படுத்தும் வாழ்வியல் அனுபவமுறை.மனிதனுடைய குறை நீக்கத்திற்கும்,நிறை நல பேற்றிக்கும் சமய வாழ்க்கையே துணை செய்யும். புலன்களை பக்குவப்படுத்தும்; தூய்மை யடையச் செய்யவும்; இன்ப அன்பு கனியும், அருள் பெருகும். ஆகவே, சமயங்கள் அன்பை மையமாக் கொண்டது.

"ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்னும் வள்ளலார் காட்டிய வாழ்வு நெறி. ''

அன்பு சிவம் ரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தார் [ திருமந்திரம் -270]

என்னும் திருமந்திரப் பாடல் இவ்வுண்மையை உணர்த்தும். சமயங்கள் பல.

''பொங்குபல சமயமெனும் நதிகள் எலாம்புகுந்து கலந்திட நிறைவாய்ப்
பொங்கி ஓங்கும்கங்குகரை காணாத கடலே ..''—

என்பது வள்ளாலார் வாக்கு.

ஆறுகள் எல்லாம் எங்குத் தோன்றினாலும். எத்திசை நோக்கி ஓடினாலும், முடிவில் கடலினையே சென்றடைவது போல உலகத்தில் தோன்றிய சமயங்கள் எல்லாம் முடிவில் பரம்பொருளினிடத்தே சென்றடைகின்றன.என்பது அவ்வருளாளர் தம் கருத்து.

சைவம், வைணவம், பெளத்தம், கிறித்தவம், சமணம், இஸ்லாம் என்னும் பற்பல சமயங்கள் தமிழிலக்கிய உலகில் காணப்படுகின்றன. அவை காட்டும் நெறிவழிச் சென்றால்,முடிவில்

''பரம்பொருள் ஒன்றே ''

என்ற கருத்திலேயே நிறைவுறுகின்றன.

மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு இச்சமயங்கள் எல்லாம் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கின்றன. இலக்கியங்களும் சமயங்களும் சமுதாயத்தில் இருந்து முகிழ்க்கின்றன;சமுதாய வாழ்வியலிருந்து வெளிவருகின்றன. இதனால் அந்தந்தக் காலத்து மக்களின் ஒழுக்க முறைகளை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளைத் தெற்றென விளக்குவன இலக்கியங் களூள் சமயங்களுமே என்பதை அறியலாம். பெரும்பாலான இலக்கியங்கள் காட்டும் சமயப் பொறையினைக் கண்டு தெளிந்து, வாழ்வியலைமேற்கொள்ள வேண்டியது இக்கால இளையர் களுக்கு இன்றியமையாத தேவையும் சேவையுமாகும்.

தொல்காப்பியர் காலத்துச் சமயப் பொறை.வேறுபாடுகளைக் கடந்து மனித குலப் பொதுமையை நமது சமயம் வலியுறுத்தியது.

''யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா ''

என்னும் கணியன் பூங்குன்றனார் பாடல் உண்மை சமய நெறியை உணர்த்துவது.

அடுத்து திருக்குறளிலும் தனியரு சமயத்தின் சாயல் இன்றிக் கடவுள் கொள்கையும்,சமயமும் பேசப்படுகிறது.குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றி பேசும் ஆதி நூல் தொல்காப்பியம். அதில் சமயம் இடம் பெறுகிறது. மக்கள் வாழ்வினை ' அகம் 'என்றும் ' புறம் ' என்றும் வகுத்துப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து சொல்வதால் வாழ்வியல்கூறும் இலக்கிய மாகவும் இருக்கிறது.
தொல்காப்பியர் காலத்தும், அவர்க்கு முந்தைய காலத்தும் இறைவனை வழிபடும் முறை இருந்துள்ளது. அக்காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை முதலான வழிபாடு செய்தனர் என்பதையும்..,

'' மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் ''( தொல். அகத் .5)

இப்பாடல் மூலம் அக்காலத்தில் பல கடவுளரை வணங்கும் நிலை இருந்தது என்பதையும், அவர்களுக்குள் ' சமயக்காழ்ப்புணர்ச்சி ' இல்லை என்பதையும் அறியலாம்.சமயக் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் மக்களை, அறவழிக்குட்படுத்த எழுந்தவையே நீதி இலக்கியம்.

அவ்வகையில் ' திருக்குறள் ' முதன்மையானது. ''ஆதி பகவன் முதற்றே உலகு'' என்னும் திருக்குறள் ' இறைவன் ஒருவனே ; அவன்தான் பரம்பொருள் ; முழுமுதற் பொருள் '' என்று குறிப்பிடுகிறது. ' கடவுள் வாழ்த்து' ப்பகுதியில் சமயப் பொதுமை நிலையில் இறைவனின் திருவடிச் சிறப்பையே சுட்டுக்காட்டியுள்ளார். திருவடி வழிபாடு, திணை, பால் கடந்த பொதுமை வழிபாடாகும்.

ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பாடிய 'திருவடித்தாண்டமும்''பதினைந்தாம் நூற்றாண்டில், அருணகிரி பாடிய 'சீர்பாத வகுப்பும் ' பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் பாடிய ' திருவடிப் புகழ்ச்சியும்' அமைந்து சமயப் பொறையை வலியுறுத்துகின்றன. இறைவனிடத்து மனிதன் வேண்டுவது என்ன என்பதை பரிபாடல் ஒன்று சிறந்த முறையில் கூறுகிறது.

''பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால் அருளும் அன்பும் அறனும் ஒலி தாரோயே '' – என்கிறது.
பயன் கருதாத வழிபாட்டை வேண்டி, ' அன்பும், அறனும் அருளும் ' மூன்றும் வேண்டும் என வேண்டி விழைவது சமயம் .

தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் அளவை களின் உதவி கொண்டு சமயத்தை நிறுவுவதைக் காட்டிலும் அகத்தே நிகழும் உணர்வுகொண்டே சமயத்தைப் பரப்பும் நூல்களே மிகுதியாகும்.

அதனால்தான் போலும்,சமய இலக்கியம் என்ற பெயரில் பக்தி இலக்கியங்களே தமிழில் மிகுதியாக தோன்றின. உலக மொழிகளில் பக்தி இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், முதல் இடம் தமிழுக்குத்தான். இரண்டாவது இடம் ஹீப்ரூ மொழியும்,மூன்றாவது இடத்தை சமஸ்கிருதமும் இடம் பெறுகிறது. வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்த சில நூல்களும் உண்டு.

அன்பின் வழியே , ஆண்டவனை அடையமுடியும் என்கிறது நமது சமயம். அந்த அன்பென்னும் பிடியுள் அகப்படும் மலையே! அடிப்படையை மனத்தில் கொண்டு பார்த்தால் , தோத்திரங்கள் அதிகம் தோன்றியதற்கு உரிய காரணத்தை ஒருவாறு அறிய முடியும். என்றாலும் தமிழில்தோன்றிய பேரிலக்கியங்கள் அனைத்தும் சமயத் தொடர்புடையது.

பிறமொழிகளில் பல்வேறு துறையில் இலக்கியம் உண்டு. அவற்றுள் சில சமயம் பற்றியும் இருக்கும். ஆனால், தமிழ் மொழியில் இலக்கியம் என்ற பெயரைப் பெறக்கூடியவை அனைத்தும் சமயத் தொடர்பு உடையனவாய் இருத்தல் அரிதற்குரியது.சமயத் தொடர்பற்ற நூல்கள் தமிழிலும் தோன்றி இருக்கலாம்.ஆனால், அவற்றிக்குக்காலத்தை வென்று நிலைபெறும் வன்மை இல்லைபோலும். பேரிலக்கியங்கள் ஒரு புறம் இருக்கச் சிற்றிலக்கியங் களாகிய பிள்ளைத்தமிழ் , குறவஞ்சி , பள்ளு , உலா ஆகியவைகள் சமயத் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது. ஆதலால்தான் 'சமயமின்றி தமிழில்லை ' என்று கூறுவது பொருள் பொதிந்த மொழியாக அமையக் காண்கிறோம். காப்பிய இலக்கியங்கள்.காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போன்ற குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் அந்தந்தக் காலத்துச் சமய பொறையினை எடுத்துக் காட்டுகிறது எனக்கூறலாம்.

சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழையும் எடுத்துக்கூறும் தலைமை காப்பியமாகும்.அதன்சிரியர் ஒரு இளங்கோவடிகள், ஒரு சமணர். ஆனால், சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம், பெளத்தம் முதலிய சமயங்களையும் எடுத்து கூறுவதன் மூலம் சமயச் சார்பற்ற காலமாகச் சிலப்பதிகாரம் இருந்துள்ளமையை அறியலாம். சைவ சமயக் கடவுள் சிவனைப் பற்றிப் பல இடங்களில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மதுரை காண்டத்துள் வேட்டுவ வரியில், ''சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு என்பதையும்,தேவர்களுக்காக நஞ்சுண்டு நீலகண்டன் ஆனான் என்பதையும், வாசுகியை நாணாகவும், இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான் என்றும், கொன்றை மாலையைத்த்ரித்தவன் '' என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவனை..,'' பிறவா யாக்கை பெரியோன்...'-என்று போற்றுகிறது.வைணவ சமயக் கடவுள் திருமாலைப் பற்றிச் சிலம்பில், ஆய்ச்சியர் குரவையிலும், காடுகாண் காதையிலும் காணலாம். ஆய்ச்சியர் குரவையுள்,'' கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்...''என்ற குறிப்பும், திருமாலின் பெரிய கோயில் எனப்படும் ' திருவரங்கம் ' பற்றிய குறிப்பும்,திருமால் திசேடன் மீது பள்ளி கொண்டுள்ளான் என்ற குறிப்பும் 'காடுகாண் காதை 'யில்காணப்படுகிறது.மேலும் அவனுடைய திருவுருவ நலன்களும், அவன் யுதங்கள் ஏந்தி நிற்கும்திறமும்,நின்ற கோலமும்,கிடந்த கோலமும் கூறப்பட்டுள்ளன.சிலம்பின் கதை மாந்தர் சிலர் சமணக் கதை மாந்தர் களாகவே வந்துள்ளனர்.கவுந்த அடிகள், மாங்காட்டு மறையோன் முதலானோரைக் குறிப் பிடலாம். சமயத்தால் சமுதாயம் வேறுபாடு கொள்ளாமல் வாழமுடியும் என்று காட்டி யுள்ளார்.வைணவக் காப்பியமான கம்ப இராமாயணத்தில் பிற சமயக் கடவுள் பற்றியும் கூறுகின்றது.இக்காப்பியத்துள் இராவணன்,வாலி முதலானோரைச் சைவ சமயக் கடவுளான சிவனின் பக்தர்களாகவே படைத்துள்ளார். வாலியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,'' பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும்அஞ்சலித்து அறியாச் செங்கை '' உடையவன் என்றும், ' அட்டமூர்த்தி தாள் பணியும் அன்பன் ' என்றும் குறிப்பிடுகிறார். இராவணைனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ' சிவபெருமானால் முக்கோடி வாழ்நாள் வழங்கப் பெற்றவன் ' என்றும், ' துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் 'என்றும் குறிப்பிடுகிறார்.மேலும் சிந்தாமணி,மணிமேகலைமுதலிய காப்பியங்களும், சமயக் காழ்ப்பற்ற நிலையினை விளக்க பல தெய்வங்களைக் குறிப்பிடுகின்றன. காப்பிய உலகில், குறிப்பிட்ட ஒரு சமயச் சார்பற்ற நிலையினை உணர்த்தி,புதிய சமுதாயமாக, சமய காழ்ப்பற்ற சமுதாயத்தை ஏற்படுத்தவே நமது முன்னோர்கள் முயன்றுள்ளார்கள்.அருளாளர்களின் சமயப் பொறைமனித இனத்தைத் தீமைகளிலிருந்து விலக்கி நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் அருளாளர் கள், பெரியோர்கள் பலர் தோன்றியுள்ளனர்.அவர்கள் எல்லாம்சமுதாயத்திற்குச் சமயம் தேவை என்றும் ' பரம்பொருள் ஒன்று, அதனை அடையும் வழிகளே இச்சமயங்கள் ' என்றும் எடுத்துரைத்துள்ளனர்.'' ஒன்றே குலமும் , ஒருவனே தேவனும்ஒன்றது பேரூர், வழியாறு அதற்குள...''என்று திருமூலரும்....,'' யாதொரு தெய்வம் கொண்டீர் ;ஆங்கே அத் தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவர் ..''--என்று அருணந்திச் சிவாச்சாரியாரும்..,'' அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ஆனந்த பூர்த்தி யாகி அருளடு நிறைந்தது...''- என்று தாயுமானவரும்...,'' சாதியிலே மதங்களிலே சமய நெறி களிலேசாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் !அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே ..''-- என்று வள்ளலாரும்..,'' அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாற னார்க்கே...''-என்று அப்பர் பெருமானும்,'' அரியும், சிவனும் ஒண்ணுஅறியாதவன் வாயில் மண்ணு..''என்ற பழமொழியாலும்,அரியையும்,சிவனையும்,சங்கரநாயாரண மூர்த்தமாகவழிபடும் முறையாலும் காணலாம்.தற்கால இலக்கியங்களில் என்றதும் பாரதி , பாரதிதாசன் நினைவு நமக்கு வருகிறது.'' எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பாயானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்..'எனப் படுவதால் அவரும் தம் ன்றோர் நெறிவழியே சமயச் சார்பற்ற உலகினை உருவாக்க நினைத்தார் என்பதனை,''ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள் !'' -- என்பதன் வாயிலாக அறியாலம்.இவ்வாறு பாடலால் சமய வேறுபாடற்ற சமயப் பொறையுடைய சமுதாயத்தை உருவாக்கியவர்களாக திகழ்ந்துள்ளனர். இவைகளை தொல்காபியர் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரைசமய வேறுபாடற்ற ஒரு சமூகத்தினை நாம் தமிழிலக்கியங்களில் வாயிலாக அறிய முடிகிறது.