"பால் நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப்பரிந்து பாவியேனுடைய
ஊனினை சுருக்கி உள்ளொளி பெருக்கு"
என்ற பாடலை நாளும் நூறு முறை பாடலாம்.
மு.கு:(வெப்பம்: Heat வெம்மை: temperature, வேது: Calorie
கொழுப்பு நிணம் இரண்டும் ஒரு பொருள். நிணம் என்பது கொழுப்பு என்று நாம் பயன் படுத்துவது போன்ற பொருள். கொழுப்பு என்பது நம் தோலின் அடியில் சேர்வது. கொழுத்து காண்பவருக்கு அது கூடுதலாக இருக்கும்.
கட்டுப்பிடி 1:
ஒன்றா இரண்டா....நாம் உட்கொள்ளும் உணவினால் விளையும் வேதுக்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். ஆனால் அதே நேரம் நம் உடம்பில் நிகழும் வளர்சிதை மாற்றம் தங்கு, தடையில்லாமல் தொடர, ஒரு மனிதனுக்கு நாளும் 1600 முதல் 1800 வரை வேதுக்கள் பெறும் வண்ணம் உண்ண வேண்டும். நீங்கள் 200 பவுண்டு இடிச்ச புளியன் என்றால் உங்கள் தசைகளை வலுப்படுத்த நாளும் 75 கிராம் புரதம் தேவைப்படும்.
நீங்கள் எடை தூக்கும் மல்லர் என்றால் இதன் இரண்டு மடங்கு உட்கொள்ள வேண்டும். மற்ற உடற்பயிற்சியாளர்கள் இரண்டும் இடைப்பட்ட ஒரு எண்ணை பிடித்துக் கொள்ளுங்கள்.
எந்துகொண்டு?:
ஒரேயடியாக வேதுக்களை, அதூஉம் புரதம் வாயிலாகக் கிடைக்கும் வேதுக்களைக், குறைத்தால், அது உங்கள் உடம்பை, வேதுக்களை எரிப்பதற்கு மாறாகச், சிக்கனமாக்கிக் கொள்ளப் பழக்கிவிடும். மேலும் உயிரூட்டம் தொடர்ந்து செயல்படுத்த தசை நார்களையே அறுக்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்தத் தசைகள்தான் வளர்சிதை மாற்றத்துக்கு, அதாவது வேதுக்களை ஒரே கதியில் எரிப்பதற்கு, வேர் போன்றவை. எனவே பெரிய தசை என்றால் பெருகிய வளர்சிதை மாற்றம் அல்லது அருகிய கொழுப்பு.
(தசை இல்லாமல் தொப்பை மட்டும் இருந்தால் இரை விழுங்கிய மலைப்பாம்பு போல்; மயிலிறகே! மயிலிறகே வருடுகிறாய் என் அழகை என்று வருடிக் கொண்டு இருக்கலாம்.)
கட்டுப்பிடி 2:
மெதுவா மெதுவா ஒரு.... ஒரு பயிற்சி மேற்கொள்ளுங்கள். உண்ணுகையில் கொஞ்சமாக வாயில் இட்டு நன்றாக மென்று கூழாக்கி விழுங்குங்கள். பின் ஒரு வாய் நீரை உறுஞ்சுங்கள். ஒரு வேளை உண்டிக்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அடுத்த முறை உண்ணும்போது இதே அளவில் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும்போது நிறையவே பேசுங்கள். (ஆயின், வாயில் உணவு இருக்கும்போது பேச வேண்டாம்.) "சாப்பிடும்போது என்ன பேச்சு" என்று யாரையும் வையாதீர்கள்.
எந்துகொண்டு?:
நாம் வேகமாகச் சாப்பிடுகையில், நம் வயிறு 'நான் நிறைந்துவிட்டேன்' என்ற சேதியை மூளைக்கு உணர்த்த நேரம் எடுத்துக்கொள்வதால், வயிறு முட்டி கொள்வதற்குள 'மூடிக்கொள்' என்ற வாய்க்கு ஆணையை எப்போது பிறப்பிக்க வேண்டும் என்று மூளைக்கும் தெரிவதில்லை.
கட்டுப்பிடி 3:
அறுத்த கோழி மிளகு போட்டு..... கிழங்கு வகைகளைக், குறிப்பாக வறுத்தவற்றைக், கூடிய வரையில் தவிர்க்கலாம். கிழங்குகள் குருதியில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துவதாக வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். வெள்ளை ரொட்டி, வறுத்த சீவல்கள், விடியல் உண்டிகளான நார்சத்து குறைந்த சில அவல்கள் போன்றனவும் இதே தன்மையனவாம்.
எந்துகொண்டு?:
முன்கூட்டி அடப்பட்ட ரொட்டி, அவல் போன்றவைகளில் நார் சத்துக்கள் குறைவாக இருப்பதே. இவைகள் வயிற்றை நிறைக்கலாம் ஆனால் வயிற்றைக் கழிக்காது. மேலும் நார் சத்துக்கள் மிகுந்த உணவுகளே குருதில் இன்சுலின் அளவையும் சக்கரையின் அளைவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
கட்டுப்பிடி 4?:
தூங்காத கண் என்று ஒன்று...........ஒவ்வொரு இரவும், எல்லா இரவிலும் மஞ்சத்தில் எட்டு மணி நேரம் துஞ்சவும். அதுவும் வைகலும் ஒரே நேரத்தில், சரியாக சன் செய்திகள் முடிந்த உடனே கட்டிலுக்கு தாவவும். காலையில் எந்த நேரத்துக்கு துயிலுணர வேண்டுமோ அதற்கு எட்டு மணிகளுக்கு முன்னர் பாயலுக்கு பாய வேண்டும். கட்டில் உறவு தனிக்கணக்கு.
எந்துகொண்டு?:
தூக்கம் தவிர்த்தல் நம் உடலின் நிணத்தைத் தகர்ப்பதற்கு மாறாகத் தக்க வைத்துக்கொள்கிறது. நல்ல உடல்நலத்தோடு உள்ள ஆண்களுக்குத் தொடர்ந்து இரவுவேளையில் நான்கு மணி முதல் ஏழுமணி வரையில் உறக்கம் கொண்டிருந்தால் அவர்தம் குருதியில் சக்கரை இன்சுலின் அளவுகள் கூடி இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கட்டுப்பிடி 5:
கல்யாண சமையல் சாதம்... உடல் எடையை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் , எத்தனை முறை வெளியே/ உணவகங்களில் சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து! எவ்வளவு உள்ளே செல்கிறது என்பதும் சாரும். அளவு சாப்பாடு என்றால் பரவாயில்லை. காசு கொடுத்தோம், மொய் வைத்தோம் என்று ஒரு வெட்டு வெட்டினால்? சில பறவைகள் உண்ட உணவை அதன் பார்ப்புகள் தொண்டைக்குள் அலகை செலுத்தி எடுத்துக்கொள்ளும். நம்மால், முடியுமா? ஓய்.
எந்துகொண்டு?:
உடற்பயிற்சி மட்டுமே ஒருவனை ஒல்லியனாக மாற்றாது. ஒரு ஆய்வில் படைவீரர்களை மூன்று ஆண்டுகள் கண்காணித்ததில் அவர்களது வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு மேலாகக் கூடுதல் பயிற்சி செய்தவர்கள் எடை கூடப்பெற்றார்களாம். ஏனென்றால் அவர்கள் எரிப்பதை காட்டிலும் அதிக உணவை உட்செலுத்தியதே என்கிறார்கள்.
கட்டுப்பிடி 6:
சமையல் அறையில், நீ உப்பா, சக்கரையா?......... இது ஒண்டிக்கட்டைகளுக்கு குறிப்பாக பொருந்தும். ஆம்பிள்ளை என்றால் கணினியை பிரித்துமேயத் தெரிந்தால் போதும்; அடுக்களைபற்றித் தெரியத் தேவையில்லை என்றெல்லாம் நினைக்கக்கூடாது. சமையல் குறிப்பை கையில் வைத்துக்கொண்டு சத்தான சாதம் படைத்து, நல்ல பழங்கள் துணை கொண்டு, அமுதம் உண்க.
எந்துகொண்டு?:
நமக்குத் தெரிந்த ஒரே சமையல், அன்னபூரணாவுக்கும் / சரவண பவனுக்கும் நடை கட்டுவதுதான் என்றால் நெய் தூங்கும் உணவு உண்டு நிணம் தூங்கும் மானுடர் ஆவது தவிர்க்க முடியாது தவிக்க வேண்டும்.
கட்டுப்பிடி 7:
தண்ணித் தொட்டித் தேடி வந்த கன்னுக்குட்டி.....: குடி, குடித்துக்கொண்டே இரு. நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடு பட்டவரானால் தண்ணீர் உங்கள் உற்ற துணை. ஆம். உங்கள் உடலில் கொழுப்பு எரிந்து ஆற்றலாக மாறுகையில், அல்லது புரதத்தை பயனாக்கையில், கழிவாகும் வீண்பொருட்களை விரட்டுவதற்கு தண்ணீர் தேவை. மேலும் சத்துக்களை உடலின் எல்லா தசைகளுக்கும் கொண்டு செல்ல தண்ணீர் தேவை. உண்ட உணவு செரித்து, வளர்சிதை மாற்றத்தை சொடுக்கிக்கொண்டே இருக்கவும் தண்ணீர் நமக்கு தேவை. உடற்பயிற்சியாலும் கால நிலையாலும் உடல் வெப்பம் உறும்போது அதன் வெம்மையை தணிக்கவும் தண்ணீர் தேவை.
எந்துகொண்டு?:
எல்லாத்துக்கும் கேள்வி கேட்கப்படாது. சொன்னால் கேட்டுக்கணும்.
கட்டுப்பிடி 8:
யூத நாட்டைபார். ஒரு பத்து பவுண்டை நீங்கள் இழந்து விட்டால் அதை கைப்பற்றிய அயல்நாடுபோல காத்துக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் மீண்டும் படை நடத்தி கைப்பற்ற வேண்டும். எனவே ஒவ்வொரு பத்து பவுண்டு எடை குறைப்புக்கு பின்னரும் அடுத்து என்ன மாதிரி உணவு பழக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சியில் தொடர வேண்டும்.
எந்துகொண்டு?:
ஒரு சிலர் ஒரு 10 அல்லது 20 பவுண்டுகளை இழப்பார்கள். தான் நினைத்தால் அதை மீண்டும் செய்து காட்ட முடியும் என்று பெருமிதம் கொள்வார்கள். உடனே காய்ந்த மாடு கம்பில் பாய்நது போல் பாய்வார்கள். பிறகு என்ன பழைய குருடி என் எடையை பாருடி கதைதான்.
ஊனினை சுருக்கும் வழிகளை சொன்னோம்.
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...