காலம் காட்டும் மணம்


சங்க கால மகளிர் மாலைப் போதை அறிய மலர்மலர்ந்து மணங்கூட்டுவதை நுகர்ந்தறிந்து கொண்டனர்! என்பதற்கு, 'நெடுநல் வாடை' சான்றாக அமைகிறது. இதோ அவ்வரிகள்.


'வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பனைத்தோள்
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழ, பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்த்தி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர' - (நெடுநல்வாடை 36 - 44)

விளக்கம்:
மகளிர், வெண்ணிறச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் செறிந்த முன்கையுடையவர், மெத்தென்ற, மூங்கில் போன்ற தோள்களையுடையவர், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாலும் உணர்ப்படும் மென்மைத் தன்மையாகிய சாயலையுடையவர்; முத்துப்போன்ற பல்லினை உடையவர்; பொலிவுடைய மகரக்குழை அணிந்த காதின் அழகிற்குப் பொருத்தமாக விளங்கும் குளிர்ந்த நோக்கம் கொண்ட அழகிய கண்களையுடையவர். பெண்களுக்கு இயல்பாகிய மடமைக் குணத்தைக் கொண்டவர். இம்மகளிர், பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் அரும்புகளை, அழகிய பூந்தட்டுகளில் இட்டு வைத்திருப்பர். அவை, மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு, மாலைக் காலம் வந்தமையை அறிவர். இவ்வந்திப் போதில், இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய் தோய்த்த திரியைக் கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவிக் கை கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுவர். வளம் நிறைந்த ஆவண வீதிகளில் மாலைக் காலம் இவ்வாறு கொண்டாடப் பட்டது.